அமைச்சுப் பதவி – அனந்திக்கு வரமா, சாபமா? சண் தவராஜா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் வட மாகாணத்தின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். அவரது பதவி தற்காலிகமானது, மூன்று மாதங்களுக்கு மட்டுப் படுத்தப்பட்டது.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஜனநாயக அரசியலில் பெண்கள் கலந்து கொண்டு தலைமைத்துவம் வகிப்பதை ஆதரிக்கும் ஒருவன் என்ற வகையில் அவருடைய நியமனமானது தமிழ்ச் சமூகத்துக்குத் தேவையான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நான் நம்புகிறேன். அதிலும், அனந்தி அவர்களைப் போன்று விடுதலை அரசியல் பின்னணியைக் கொண்ட ஒருவர் அமைச்சராக அதிலும், புன்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமானதாகவும், எதிர்பார்ப்பைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை திருமதி அனந்தி சசிதரன் அவர்களுடைய துணிச்சலான செயற்பாடுகள் முன்மாதிரியானவையாகவும், ஆண் ஆதிக்க மனோபாவத்தினால் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் பெண்களுக்கு தைரியத்தை வழங்குபவையாகவும் இருந்து வருகின்றன. காணாமற் போனோர் விவகாரம், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விவகாரம் போன்றவற்றில் அவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருபவர். ஜெனீவாவில் அமைந்துள்ள ஜ.நா. மனித உரிமைச் சபையில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு, ஈழத் தமிழ் மக்களின் அவல நிலையை உலகறியச் செய்து வருபவர். அந்த வகையில் அவருக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பதவி அவரது பணிகளுக்கு மேலும் உத்வேகத்தை வழங்கும் என நம்பலாம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு போதிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் – எப்போதும் போலவே – இழுத்தடிப்புச் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அத்தகைய பின்னணியில் உரிய புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நினைத்தாலும் கூட அவற்றைச் செய்துவிட முடியாத நிலையே மாகாண சபையில் நீடித்து வருகின்றது. ஆனால், புலம்பெயர் தமிழர்களுடன் அதிக அளவில் தொடர்புகளைக் கொண்டுள்ள திருமதி அனந்தி சசிதரன் அவர்களால் – அத்தகைய தொடர்புகளைப் பயன்படுத்தி – பெருமளவிலான புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியும். தனது பதவிக் காலத்தில் அவற்றை நிறைவேற்றுவார் என நம்பலாம்.

தான் பதவியேற்ற செய்தி வெளியாகிய உடனேயே தனக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியிருந்தார். அந்த அழைப்புக்களில் அரைவாசிக்கு மேற்பட்டவை நிச்சயமாக புலம்பெயர் தமிழர்களிடமிருந்தே வந்திருக்கும் என நம்பலாம். அதுவே, உண்மையானால் அவர் வடபுலத்தில் வாழுகின்ற மக்களின் தேவைகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களின் தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு மிக்கவராக உள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தாயகத்தில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாவிட்டால் அடுத்து தேர்தல்வரை காத்திருந்து – தமது வெறுப்பை வெளிக்காட்டி – தேர்தலில் தோற்கடிப்பார்கள்.

ஆனால், புலம்பெயர் தமிழர்களோ காத்திருப்பு எதுவும் இன்றி ஷதுரோகி| பட்டம் வழங்கி அறம் பாடுவார்கள் என்பதை அவர் நினைவில் நிறுத்திச் செயற்பட வேண்டி இருக்கும். அதேவேளை, வட மாகாணசபை ஒரு அரசியல் சுழலில் சிக்குண்டுள்ள நிலையில் திருமதி அனந்தி சசிதரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி யதார்த்தத்தில் அவருக்கான அங்கீகாரமா அல்லது அப்பாவியான அவரைச் சிக்கலில் ஆழ்த்துவதற்காகச் செய்யப்பட்டுள்ள சதியா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தனது பதவியை இழந்த பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு மாற்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி அனந்தி சசிதரன் அவர்கள், கறைபடியாத கரங்களைக் கொண்டவர் என முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் அவர்கள் நினைத்திருக்கக் கூடும். எனினும், பொ. ஐங்கரநேசன் அவர்கள் வைத்திருந்த மொத்த அமைச்சுக்களையும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களுக்கு வழங்காமல் – விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளார். இது திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் மீது முதலமைச்சருக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறதா அல்லது ஒரு பெண்ணுக்கு ஓரளவு பொறுப்புக்களே போதும் என முதலமைச்சர் கருதுகிறார் என எடுத்துக் கொள்வதா எனப் புரியவில்லை.

அடுத்ததாக, அமைச்சர்களைத் தற்காலிகமாக நியமித்தமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், ஷஷதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் – வழங்கிய சிபார்சுகளைக் கருத்தில் எடுக்கும் முகமாக, வெளிநாடு சென்றுள்ள கட்சித் தலைவர் இரா சம்பந்தன் நாடு திரும்பியதும் அவருடன் பேச வேண்டி இருப்பதால் தற்காலிக ஏற்பாடாகவே பதிய அமைச்சர்களை நியமித்துள்ளதாக|| தெரிவித்திருந்தார். அவர் கூறுவது உண்மையானால், இரா சம்பந்தன் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து – தற்காலிக அமைச்சர் நியமனங்களை அவர் ஏற்றுக் கொள்ளாதவிடத்து – புதிய அமைச்சர்களின் பதவி பறிபோகக் கூடும். இதனை வேறு வகையில் சொல்வதானால் திருமதி அனந்தி சசிதரன் அவர்களுடைய அமைச்சுப் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகக் கூடும். இந்நிலையில் அவருடைய பதவியை வரம் என்பதா அல்லது சாபம் என எடுத்துக் கொள்வதா?

என்னைப் பொறுத்தவரை திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் ஒரு அரசியல் சூதாட்டத்தில் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளார் எனவே கருதுகிறேன். உண்மையிலேயே, திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் திறமையில் நம்பிக்கை கொண்டு அவரை ஒரு அமைச்சராக முதலமைச்சர் அவர்கள் நியமித்திருந்தார் என்றால், தற்காலிக நியமனம் என்பது பற்றியோ – அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் மாற்றுக் கருத்துக் கொண்ட – கட்சித் தலைமையோடு பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என்பது பற்றியோ பிரஸ்தாபித்து இருக்க மாட்டார். அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நிலையில் அவருடைய தற்காலிக அமைச்சர் பதவியை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது பற்றி நீதியரசரான முதலமைச்சர் சிந்திக்காமல் செயற்பட்டிருப்பார் என எதிர்பார்க்க முடியாது.

வட மாகாண முதலமைச்சர் அவர்களுடைய அண்மைக்காலச் செயற்பாடுகள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு பாரிய செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தாலும் கூட, அவருடைய செயற்பாடுகள் எவரையோ திருப்திப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காமல் இல்லை. தற்செயலாக அரசியலில் பிரவேசம் செய்த ஒருவர், தன்னை அரசியலில் அறிமுகஞ் செய்து வைத்தவர்களைத் துச்சமென நினைத்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகச் செயற்பட்டு அனைவரையும் ஆச்சரியப்படச் செய்து வருகிறார். கொள்கைப் பிடிப்புடைய ஒருவர் செய்யக் கூடிய செயற்பாடுகளை அவர் மேற்கொள்வது போல் தோன்றினாலும், அவருடைய கடந்தகாலம் என்பது அவரின் செய்கைகள் இதய சுத்தியுடன் கூடியவை என நம்ப மறுக்கிறது. அதே போன்று அவரின் செய்கைகளை நியாயப் படுத்தி, அவரைத் தாங்கிப் பிடிப்போரின் பின்புலமும் அவரின் செய்கைகள் தொடர்பிலான சங்தேகங்களை வலுப் படுத்துபவையாகவே உள்ளன.

2014 ஜனவரி மாதத்தில் அனந்தி ஒரு பரிசோதனை எலி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதனை அவர் வாசித்திருந்தாரா என்பதை நானறியேன். இந்தக் கட்டுரைக்காக எனக்கு வரவேற்பும், வசவும் சமமாகக் கிடைத்திருந்தன. வசவு பாடியோரில் ஒருசிலர் விஷபரிசோதனை எலி|| என்ற பதத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அனந்தியைப் போன்ற போராட்டப் பின்புலம் கொண்ட, மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவரை எவ்வாறு ஷஷஎலி|| எனக் குறிப்பிடலாம் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர். தூரதிர்~;ட வசமாக ஷஷபரிசோதனை எலி|| என்றால் என்ன அர்த்தம் என்பது கூடத் தெரியாத பலரே திருமதி அனந்தி சசிதரன் அவர்களைச் சூழ்ந்து இருக்கிறார்கள். அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக உருவெடுக்க வேண்டுமானால் அத்தகையோரின் பிடியில் இருந்து மீள வேண்டும். அவ்வாறு நடப்பதற்கான அறிகுறிகள் கிட்டிய எதிர்காலத்தில் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது என்பதைக் கவலையோடு பதிவு செய்கிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரை இன்றைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது என நான் கருதுவதால் அதன் ஒரு பகுதியை மீள் பிரசுரம் செய்கிறேன். அதுவே இக் கட்டுரையின் முடிவுரையாகவும் அமைகிறது.

ஆனால், அவரின் ஒருசில நடவடிக்கைகள் அவரை வேறு யாராவது பின்னணியில் இருந்து தவறாக வழிநடத்துகின்றார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கமாக உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அந்நிலையில், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு அமைவாகவே அவர் நடந்து கொள்வதுடன், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு முரணாகவோ, கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் முகமாகவோ நடந்து கொள்வதை அவர் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர். அனந்தி ஒர் பெண் என்பதற்காகவோ, விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னைநாள் அரசியல்துறைப் பொறுப்பாளரின் மனைவி என்பதற்காகவோ மாத்திரமன்றி – அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் என்பதற்காகவுமே அளிக்கப்பட்ட வாக்குகள் அவை. இதனை வேறு விதத்தில் சொல்வதானால், அனந்தி சுயேட்சையாகவோ அன்றி வேறு கட்சி சார்பிலோ போட்டியிட்டிருந்தால் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்றிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

எனவே, அவ்வாறு வெற்றி பெற்ற அவர் தனது மக்கள் பணிக்குச் சமாந்தரமாக கட்சியில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் அவர் பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் என்பது ஒரு பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவதற்குத் தேவைக்கும் அதிகமானது ஆகும்.

ஒரு மாகாணசபை உறுப்பினர் என்பதைத் தவிரவும், அவர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரின் மனைவி, யுத்தத்தை பிறர் வாயிலாக அறிந்து கொள்ளாமல் நேரடியாகத் தரிசித்தவர்களுள் ஒருவர், யுத்தத்தின் முடிவில் தனது கணவரைப் படையினரின் கைகளில் ஒப்படைத்து விட்டு நான்கு வருடங்களாக அவர் எங்காவது ஒரு இடத்தில் உயிரோடு இருக்க மாட்டாரா எனத் தினமும் தேடிக் கொண்டிருக்கும் ஒருவர், இதற்கெல்லாம் அப்பால் ஈழத் தமிழ்ப் பெண்களின் ஒற்றைக் குரலாகவும் அவரே விளங்கி வருகின்றார். எனவே, அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவரது சேவை தமிழ் மக்களுக்கு நீண்டகாலத்திற்குத் தேவை என்ற உணர்வுடன் அவரின் செயற்பாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும். பொம்மலாட்டத்தில் மறைவில் இருந்து இயக்கப்படுவதைப் போன்று அவரின் செயற்பாடுகள் தென்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

வரலாறு அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அவற்றுக்குப் பதிலிறுப்பதில் தனது பொன்னான நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிராமல், தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அதேவேளை, வெளியில் இருந்து தனது சென்னெறியைத் தீர்மானிக்க நினைப்பவர்களை விலத்தி வைக்க வேண்டியதும் அவர் பொறுப்பே.

-சண் தவராஜா

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*