சிறிலங்காவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போர் என்பது பல்வேறு அழிவுகளைக் கொண்டது. உயிரிழப்பு மட்டுமல்லாது, காயங்கள் மற்றும் உடைமை அழிவுகள் போன்ற பல்வேறு அழிவுகளைக் கொண்ட ஒன்றாகும். ஆனால் இந்த யுத்தமானது தொடர்ந்தும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்த யுத்தத்தால் ஏற்படும் வடுக்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இதற்காக தொடர்பாடல்கள், புரிந்துணர்வுகள் போன்றனவும் தவறுகளைச் சரி செய்யும் உணர்வும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வகையில், உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சிறிலங்காவில் இவ்வாறான நடவடிக்கைகள் கைக்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக தனது சொந்த மக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தின் முன் சிறிலங்கா அரசாங்கத்தால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற மூன்று பத்தாண்டு கால யுத்தத்தில் 100,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பலர் காயமடைந்தனர், தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். இந்த யுத்தமானது நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லீம் சமூகங்கள் மற்றும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் இடையில் பாரிய பிளவை உண்டுபண்ணியது.

ஒக்ரோபர் 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படும் என சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு இணங்க 2016ல் இலங்கைத் தீவு முழுவதிலும் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பணிக்காக சிறிலங்கா அரசாங்கத்தால் 11 பேர் கொண்ட ஆலோசனைச் செயலணிக் குழு நியமிக்கப்பட்டது. இதில் பல இன மற்றும் மத, பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டதுடன் இதன் தலைமை உட்பட அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பெண் பிரதிநிதிகளாகவும் இருந்தனர்.

இந்தச் செயலணிக்குழுவின் கலந்தாலோசனையானது மிகவும் சிக்கலானதாக இருந்தது. அதாவது பிராந்திய செயலணிக் குழுவில் உள்ளுர் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல், பால்நிலை சார்ந்த, சுகாதாரத் துறை சார்ந்த மற்றும் மதத் தலைவர்களின் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் குறைந்தளவு ஆதரவுடன் இந்தப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு இடர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பாக பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு காரணமாக மக்கள் கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதில் அச்சம் கொண்டிருந்ததாகவும் பிராந்திய செயலணி உறுப்பினர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தனர்.

சிங்களவர்கள் அதிகம் வாழும் தென்னிலங்கையை சேர்ந்த மக்கள் இக்கலந்துரையாடல்களில் அதிகம் பங்குபற்றியிருந்தனர். சிறிலங்கா இராணுவ வீரர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர் என பிராந்திய செயலணிக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயலணிக் குழுவின் உறுப்பினர்கள் அச்சம் மற்றும் பல்வேறு சவால்கள் எழுந்த போதிலும் புரிந்துணர்வு மற்றும் இடைக்கால நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகப் பணியாற்றினர்.

ஆகஸ்ட் 2016ல் பிராந்திய செயலணிக் குழுவானது தனது கலந்துரையாடல் பணிகளை முடித்துக் கொண்டதுடன் இறுதி அறிக்கைகளைத் தமது மாவட்ட மற்றும் மாகாணப் பிரதிநிதிகளிடம் கையளித்தன. இதன் பின்னர் ஆலோசனைச் செயலணிக் குழுவானது இந்த அறிக்கைகளை வாசித்து அவற்றிலுள்ள முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைத் தொகுத்து மத்திய அறிக்கையைத் தயாரித்து ஜனவரி 3, 2017 அன்று இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளித்தது. இந்த அறிக்கையில் காத்திரமான பல பரிந்துரைகள் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையில், தேசிய மற்றும் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நீதிமன்றிற்கான அழைப்பிற்கு சிங்களவர்களும் குறிப்பாக மூன்று பத்தாண்டுகளுக்கு முன்னர் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் நீதியை எட்டாத சிங்கள சமூகத்தவர்களால் ஆதரவு வழங்கப்பட்டது. காணாமற் போதல்கள், நிதி மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், அரசியல் தீர்வுகள், பல பத்தாண்டுகளாக நிலவும் நிலப் பிளவுகளுக்கான தீர்வு, உளசமூகத் தேவைகளுக்கான தீர்வுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலணிக் குழுவானது பரிந்துரை செய்திருந்தது.

செயலணிக் குழுவால் இறுதி அறிக்கை கையளிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லும் அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிறைவேற்றி வருவதைக் காண்பிப்பதற்காக ஆலோசனைச் செயற்பாடுகள் தொடர்பாக தற்பெருமை பேசுகின்றனர்.

ஆயினும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முற்றிலும் அசட்டை செய்துள்ளது. பேரவையின் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்காணிக்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள் ‘ஏன் சிறிலங்கா அரசாங்கத்தின் பிறிதொரு அறிக்கையும் மௌனமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது?’ என வினவவேண்டும்.

இதேவேளையில், தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைச் செயலணிக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியிலும் குழப்பநிலை காணப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தால் இவ்வாறான பல்வேறு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இவற்றின் அறிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டதாக ஆலோசனைச் செயலணிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிபர் சிறிசேனவின் அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படும் என செயலணிக்குழுவின் உறுப்பினர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கையானது தற்போது அவநம்பிக்கையாக மாறியுள்ளதாக செயலணிக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

‘ஆலோசனைச் செயலணிக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் எவ்வித பக்கச்சார்பற்றதாகவும் காணப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மிகவும் சிறப்பானதாக இருந்தன. ஆனால் ஜனவரி 2017ல், சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத போது இதன் தாக்கத்தை உணர்ந்து கொண்டேன். குறிப்பாக மக்களின் கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என பல ஆண்டுகளாக நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பணியாற்றிய சமுதாயத் தலைவர்கள் கருதுகின்றனர்.

மக்கள் மத்தியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் ஒரு முறை தோல்வியுற்றதாக ஆலோசனைச் செயலணிக்குழுவின் உறுப்பினர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால் இம்முறை இந்த வாக்குறுதிகள் நம்பிக்கைக்குரிய உள்ளுர் தலைவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை’ என ஆலோசனைச் செயலணிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அதிருப்தி தெரிவித்தார்.

‘மக்கள் எம்மீது கோபமாக உள்ளனர். என் மீதான நம்பிக்கையைக் கூட மக்கள் தற்போது இழந்துள்ளனர். தற்போது நானும் எனது நம்பிக்கையை இழந்துள்ளேன்’ என பிராந்திய செயலணிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது ஆலோசனைச் செயலணிக் குழுவால் வழங்கப்பட்ட இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டையும் வழங்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஆலோசனைகளும் பரிந்துரைகளும் நாடு முழுவதிலும் வாழும் மக்களிடமிருந்தும் சகல இன மற்றும் மதம் சார் பிரதிநிதிகளிடமிருந்தும் பெறப்பட்டன. ஆகவே இந்தப் பரிந்துரைகள் வலுவான நீதிப் பொறிமுறைகளின் ஊடாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் சிறிலங்காவானது அனைத்துலக ரீதியில் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவதுடன் நீதி உட்பட அமைதியையும் இன்னமும் யுத்தம் முடியவில்லை எனவும் நம்புகின்ற தனது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் மீளவும் உறுதிப்பாட்டை சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்க முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*