மைத்திரியின் 100 நாட்களில் சிறுபான்மைச் சமூகங்களுக்கான இடம்?!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ‘நூறு நாட்களில் புதிய தேசம்’ எனும் கருப்பொருளில் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த 19ஆம் திகதி வெளியிட்டார்.

அதில் அவர், நூறு நாட்களுக்குள் நூறு விடயங்களை செயற்படுத்துவேன் அல்லது அதற்கான ஆரம்பத்தினை குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களாக முன்னெடுப்பேன் என்று உறுதியளித்திருக்கின்றார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் இன்னொருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்னமும் வெளியிடாத நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றது. அந்த விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் தரப்புக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து கவனம் செலுத்தினால், மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது.

அதுவும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் அதிகார பிரச்சினைகள் தொடர்பிலோ, அத்தோடு சம்பந்தப்பட்ட நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்தோ தனியாகக் குறிப்பிடப்பட்டு விபரங்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. மலையகத் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளிலும் இரண்டு விடயங்கள் பற்றிய நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மாறாக, நேரடியாக குறிப்பிடப்பட வேண்டும் என்று சிறுபான்மை சமூகங்கள் எதிர்பார்த்த சில பிரச்சினைகளை பொதுமைப்படுத்திய வார்த்தைகளினூடு சில இடங்களில் குறிப்பிட்டுவிட்டு மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒதுங்கியிருக்கின்றது.

ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்பது பரவலாக நேரடியாக கோடிடப்பட்டிருக்கின்றது. பௌத்த பல்கலைக் கழகங்களை அமைத்தல், பிரிவென கல்வியை சர்வதேச மட்டத்துக்கு உயர்த்துதல், தலதா மாளிகை அமைந்துள்ள பௌத்த புனித பூமிக்கு அண்மித்த பகுதியிலிருந்து மதுபான நிலையங்களை அகற்றுதல் என்ற விடயங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது.

அத்தோடு, பௌத்த அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளில் ஒன்றான ‘மிருக வதையைத் தடுப்பதற்கு சட்டரீதியிலான நடவடிக்கை’ என்ற விடயமும் தனித்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது, அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களை நோக்கிய கடந்த கால அரசியல் களத்தில் பௌத்த அடிப்படைவாதிகளினால் வேறு வடிவில் முன்வைக்கப்பட்டு சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன.

சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்:

*லயன் குடியிருப்புக்களில் இருக்கும் தோட்ட மக்களை அங்கிருந்து மீட்டு காணியோடு தனி வீடு அமைத்துக் கொடுத்தல்.

*மலையகத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதல்.

சிறுபான்மை மதங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள்:

*மத ரீதியிலான பாகுபாடுகள் மற்றும் மத ரீதியிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தல்.

*மத வழிபாட்டு தலங்களுக்கு தேவையான காப்புறுதிகளை வழங்குதல்.

*மத ஒருமைப்பாட்டுக்காக செயற்படும் அல்லது மத பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடும் மதத் தலைவர்களை இணைந்து பிரதேச, தேசிய சபைகளை அமைத்தல்.

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் (அல்லது த.தே.கூ.வின் தொடர்ச்சியான) கோரிக்கைகள் பற்றிய விபரங்கள் தொடர்பாக மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் தேடினால் கீழுள்ள விடயங்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை அதன் அர்த்தத்தில் எடுப்பதற்கு தமிழ் மக்கள் மிகுந்த விட்டுக் கொடுப்போடு எதிர்கொள்ள வேண்டும்.

*வடக்கிலும்- தெற்கிலும் ஜனநாயக ரீதியிலான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல்.

*சட்டவிரோதமான முறையில் தமது வீடுகள் மற்றும் காணிகளிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

இந்த இரண்டு விடயங்களும் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகள். ஆனால், தென்னிலங்கையிலும் இந்தப் பிரச்சினையினால் மக்கள் அவதியுறுகின்றனர். வடக்கு முற்றுமுழுதாக எனச் சொல்லுமளவுக்கு இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள நிலையில், இலங்கையின் நிர்வாகத்துறையும், வெளிவிவகாரத்துறையும் கூட இராணுவ அதிகாரிகளினால் நிறைந்திருக்கின்றது. இது, நாட்டின் ஜனநாயகச் சூழலுக்கு அச்சுறுத்தலானது. அதன்பிரகாரம் பொதுமைப்படுத்தப்பட்ட விடயங்களே அவை.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அவற்றோடு சம்பந்தப்பட்ட விடயங்கள்:

*யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களுக்கும், அவர்களில் தங்கி வாழ்பவர்களுக்கும் விசேட காப்புறுதித் திட்டம்.

*சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் உருவாக்கிய உரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடாததினால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏற்படுமாயின் அவற்றை தேசிய சுயாதீன நீதிமன்றத்தின் கீழ் கொண்டு வருதல்.

ஆயுத மோதல்கள் மற்றும் சுனாமியினால் வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் குடும்பங்களைத் தலைமை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் பிரதிபலிப்பு தென்னிலங்கையிலும் குறிப்பிட்டளவில் இருக்கின்றது. குறிப்பாக, இராணுவத்தில் கணவனை இழந்த பெண்கள் தென்னிலங்கையில் அதிகம்.

ஆனால், மோதல் காலத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு தருணத்திலும் பொறுப்புக் கூறும் நிலைக்கு இலங்கை(யின் மாற்று அரசாங்கமும்) தன்னைக் கொண்டு செல்வதற்கு தயாராக இல்லை. அதற்கான அர்ப்பணிப்பையே, உரோம் ஒப்பந்தத்தை நிகராகரித்து, உள்நாட்டு விசாரணை என்ற விடயத்தினூடு நிறுவ முற்பட்டிருக்கின்றது. இது, குற்றம் இழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்களைக் காப்பாற்றும் விடயம்.

நாட்டின் நல்லாட்சிக்கு அவசியமான இன்னொரு சிறுபான்மை தரப்பான ஊடகப் பிரிவினர் பற்றிய விடயங்கள்:

*கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்.

*ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் குறுகிய மற்றும் நீண்டகால செயற்திட்டங்களை உருவாக்குதல்.

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டுமொத்தமாக நோக்கினால் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கமொன்று கொண்டிருக்கின்ற கொள்கை கோட்பாடுகளோடு, நாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு அவசியமானவை என்று கருதும் அவசரமான பொருளாதார நலத்திட்டங்களை முன்மொழிந்திருக்கின்றன. குறிப்பாக, மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் அரச, தனியார் சேவையாளர்களை நோக்கி மெல்லிதாக கலர்க் கனவுகளையும் காண வைத்திருக்கின்றது.

அதைத் தவிர்த்துவிட்டு சிறுபான்மை சமூகங்கள் பற்றிய விடயங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என்று கொள்ள முடியும். அத்தோடு, மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பொது எதிரணிக் கட்சிகள் இணைந்து தயாரித்ததாக சொல்லப்பட்டாலும், ஜாதிக ஹெல உறுமயவின் பெரும் பங்களிப்பையே அதில் காண முடிகின்றது. அத்தோடு, எந்தவொரு தருணத்திலும் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும் விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்காமல் தவிர்த்திருக்கின்றார்கள்.

ஆகா, மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மைத் தரப்புக்கள் தமக்கான விமோசனத்தை தேடினால் அங்கு கிடைக்காது. ஆனால், பொது எதிரணி வெற்றி பெற்றால் அது ஆட்சியமைக்க எடுக்கின்ற காலம் அல்லது அதன் போக்கு ஜனநாயக இடைவெளியொன்றை ஏற்படுத்தும். அது, சிறுபான்மை மக்களுக்கான சில நன்மைகளை வழங்கும். அதனைக் கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்கள் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத்திலெடுக்காமல் வாக்களிப்பார்கள் என்று கொள்ளலாம். அதனையே, சிறுபான்மைக் கட்சிகளும் வலியுறுத்தலாம்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*