கலாஷ்னிகோவ் (AK – 47) : ஒடுக்கப் பட்ட உலக மக்களின் பாதுகாப்புக் கருவி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tigress

AK – 47 எனும் தானியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்த மிகையில் கலாஷ்னிகோவ் தனது 94 வது வயதில் காலமானார். ஆயுதத்தை கண்டுபிடித்தவரின் பெயராலும் (கலாஷ்னிகோவ்), கண்டுபிடிக்கப்பட்ட வருடத்தினாலும் (AK 47) உலகம் முழுவதும் அறியப் பட்ட துப்பாக்கி, நூறுக்கும் அதிகமான தேசிய இராணுவங்களாலும், போராளிக் குழுக்களாலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. பாவிப்பதற்கு இலகுவானது என்பதால், கோடிக்கணக்கான துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப் பட்டன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கண்டுபிடிக்கப் பட்டாலும், பிற்காலத்தில் அதன் நட்பு நாடுகளுக்கும் உற்பத்தி இரகசியம் வழங்கப் பட்டது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து விடுதலை இயக்கங்களுக்கும், ஆரம்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட AK – 47 கிடைத்து வந்தது.

மிகையில் கலாஷ்னிகோவ் அந்த ஆயுதத்தை கண்டுபிடித்த அதே வருடம் பிரபலமடைந்தாலும், 1950 ல் திருத்தப் பட்ட வடிவமைப்பு இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. அறுபதுகளில் வியட்நாம் விடுதலைக்காக போராடிய வியட்காங் போராளிகள் தான் அந்த துப்பாக்கியை உலகறியச் செய்தார்கள். அவர்களை எதிர்த்து போரிட்ட அமெரிக்கப் படையினர் வைத்திருந்த, அமெரிக்க தயாரிப்பான M – 16 துப்பாக்கிகள், வியட்நாம் காலநிலைக்கு இயங்க மறுத்தன. அதே நேரம், வியட்காங் போராளிகளின் AK- 47 துப்பாக்கிகள் எந்தப் பிரச்சினையும் கொடுக்காமல் ஒத்துழைத்தன. எதற்கும் பிரயோசனமற்ற M – 16 களை போட்டு விட்டு, புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய AK- 47 களை வைத்து போரிட வேண்டி இருந்தது.

சுவீடனில் டைனமைட் கண்டுபிடித்து கோடீஸ்வரனான நோபல், தனது பெயரில் பணப் பரிசில்கள் வழங்கிக் கொண்டிருந்தார். அதே நேரம், உலகப் புகழ் பெற்ற AK- 47 வை கண்டுபிடித்த கலாஷ்னிகோவ், அரசு வழங்கிய வீட்டுடனும், வாகனத்துடனும் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு கிடைத்த ஸ்டாலின் விருது, சோவியத் மக்களின் மரியாதை, இவற்றை தவிர வேறெந்த சொத்துக்களையும் சேர்த்து வைக்கவில்லை. தான் மேற்கத்திய நாடொன்றில் இருந்திருந்தால், கோடீஸ்வரனாக வந்திருக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருந்தும், வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக ஆசைப் படமால் வாழ்ந்தார். அவர் நினைத்திருந்தால், ரஷ்யா முதலாளித்துவ நாடாக மாறிய 1991 ம் ஆண்டே, AK- 47 க்கான காப்புரிமையை கேட்டுப் பெற்றிருப்பார். அதன் மூலம், ரஷ்யாவில் பெரிய பணக்காரனாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று, சாகும் வரை எளிமையாக வாழ்ந்து வந்தார்.

சோவியத் ஒன்றியம் உடைந்து, ரஷ்யா முதலாளித்துவ நாடாகிய பின்னரும், பழைய சோவியத் அரசுக்கு விசுவாசமானவராக வாழ்ந்து வந்தார். சர்வதேச ஊடகங்களுக்கான பேட்டியின் போது கூட, பழைய சோவியத் விழுமியங்களே சிறந்தவை என்று பாராட்டிப் பேசி வந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ், எல்சின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் மீது மதிப்பு வைத்திருந்தார். இவ்வளவுக்கும், சிறு வயதில் அவரது குடும்பமும் “ஸ்டாலினிச கொடுங்கோன்மையினால் பாதிக்கப் பட்டது” என்பது குறிப்பிடத் தக்கது. கலாஷ்னிகோவின் தந்தையும், ஒரு சகோதரரும் சைபீரியா சிறை முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதற்காக, ஸ்டாலின் மேல் வன்மம் கொண்டு வாழவில்லை. ஏனெனில், வர்க்க எதிரிகள் என இனம் காணப் பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட சோவியத் புரட்சிக் காலகட்டத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு பக்குவப் பட்டிருந்தார்.

“ஒரு கொலைக் கருவியான கலாஷ்னிகோவ்(Ak-47) துப்பாக்கியை ஆராதிக்க முடியுமா?” என்று பலர் கேட்கின்றனர். அப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் மனிதநேய வாதிகள் அல்லர். தீவிர புலி ஆதரவாளர்களும் அந்தக் கேள்வியை எழுப்புவது வேடிக்கையாக உள்ளது. (உண்மையில் அவர்கள் “புலி ஆதரவாளர்கள்” அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் தமிழ் மத்தியதர வர்க்க ஆர்வலர்கள்.)

“Ak- 47 துப்பாக்கியை கண்டுபிடித்ததற்காக என்றைக்காவது வருத்தப் பட்டிருக்கிறீர்களா? உலகில் பல கொலைகளுக்கு காரணமாக இருப்பதால், தூக்கம் வராமல் தவித்திருக்கிறீர்களா?” என்று அதைக் கண்டுபிடித்த மிகையில் கலாஷ்னிகோவிடம், பல ஊடகவியலாளர்கள் நேரடியாகவே கேட்டுள்ளனர். அதனால் தனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்றும், தனது தேசத்தை பாதுகாப்பதற்காகவே அதைக் கண்டுபிடித்ததாகவும் கலாஷ்னிகோவ் பதிலளித்தார்.

உலகில் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆயுதங்களும் கொலைக் கருவிகள் தான். ஆனால், கனரக ஆயுதங்களின் பாவனை பற்றி கவலைப் படாத மேற்கத்திய நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும், AK- 47 போன்ற சிறு ஆயுதங்களை தடை செய்யப் படாத பாடுபடுகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் படுவதற்கு கனரக ஆயுதங்களே காரணமாக இருந்துள்ளன என்பதை, தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கலாஷ்னிகோவ் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உலகில் பல விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதை பயன்படுத்திக் கொண்டன. வல்லமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த தேசிய இராணுவங்களை எதிர்த்து, கெரில்லாப் போர் நடத்தி வெற்றி பெற்றன. இலகுவாக கையாளக் கூடியது, மலிவாகக் கிடைப்பது, பாரம் குறைந்தது என்பன அதன் சிறப்பம்சங்கள்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், கலாஷ்னிகோவ் தான் கெரில்லாத் தாக்குதல்களுக்கு பெருமளவு பயன்படுத்தப் பட்டது. வேட்டைத் துப்பாக்கிகளும், சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ் நிலையங்களை தாக்கி அழிக்க முடிந்தது. ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படைகள் பரவலாக AK- 47 பயன்படுத்துவதற்கு சில வருட காலம் எடுத்தது. அதற்குள், தாராளமான அளவுக்கு AK- 47 பாவித்த ஈழ விடுதலை இயக்கங்கள், கணிசமான அளவு வெற்றிகளை குவித்து விட்டிருந்தன.

பாகிஸ்தானில், ஆப்கானிய முஜாகிதின் குழுக்களிடமிருந்து ரஷ்ய தயாரிப்பு கலாஷ்னிகோவ் வாங்கும் வரையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்ட AK- 47 தான் ஈழப் போராளிகளின் கைகளில் தவழ்ந்தன. (இந்தியத் தயாரிப்பு தரமற்றது என்றும், விரைவில் சூடாவதாகவும் போராளிகள் குறைப் பட்டனர்.) புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கிய காலத்தில், AK- 47 துப்பாக்கிகளின் பாவனை, புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களுக்கு பேருதவியாக இருந்தது.

AK- 47 தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்திருக்கும் இந்தியாவே, தனது படையினருக்கு அவற்றை வழங்காமல், SLR (Self-Loading Rifle) போன்ற துப்பாக்கிகளை வழங்கியது ஏன் என்பது ஒரு புரியாத புதிர். பாகிஸ்தான் எல்லைப் போரில் பயன் மிக்கதாக இருந்த SLR, புலிகளின் AK- 47 தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது.

இன்றைக்கும் உலகம் முழுவதும் “கலாஷ்னிகோவ் மாதிரியான சிறிய துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அதைக் களைய வேண்டும் என்றும்.” அமெரிக்காவும், மனித உரிமை நிறுவனங்களும் கூறி வருகின்றன. மேம்போக்காக பார்த்தால், மனிதர்கள் கொல்லப் படுகிறார்கள் என்ற அக்கறையில், மனிதநேயத்தோடு சொல்லப் படுவதாக தெரியலாம். இது உலக நாடுகளில் நடக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களை அழிப்பதற்கான மறைமுகமான திட்டம் என்பதை பலரால் உணர முடியாது.

உலகம் முழுவதும் கலாஷ்னிகோவ்க்களை அழித்து விட்டால், அமெரிக்கா விற்கும் விலை கூடிய ஆயுதங்களை வாங்கும் வசதி பெற்ற தேசிய இராணுவங்களின் ஆதிக்கம் நிலைத்து நிற்கும். உலகில் உள்ள அனைத்து கொலைக் கருவிகளையும் அழித்து விடும் காலம் வந்தால், கலாஷ்கினிகோவ்களையும் அழித்து விடலாம். அது வரையில், உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக் கருவியாக கலாஷ்னிகோவ் தொடர்ந்தும் இருக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit