
டெல்லி அசோக் விகார் பகுதியில் வசித்து வருபவர் சைலேந்திர சிங்.
52 வயதான அவர் அண்மையில் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சையைத் தொடங்கினர்.
அவரது வயிற்றை அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் மிரண்டனர். வயிற்றுக்குள் இருந்த பொருட்கள்தான் மருத்துவர்களின் மிரட்சிக்குக் காரணம்.
அவரது வயிற்றுக்குள் அப்படி என்னதான் இருந்தது? என யோசிக்கிறீர்களா? தெரிந்தால் நீங்களும் மிரண்டு போவீர்கள்..
2 இரும்புத் தகடுகள், 6 ஊசிகள், பல பிளேடுகள் மற்றும் டியூப் லைட்டுகள் ஆகியவை இருந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள் இதுதொடர்பாக விசாரித்தபிறகு தான் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
யோகா செய்வதில் ஆர்வமுடைய சைலேந்திர சிங், யோகா செய்வதன் விளைவாக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளார். இரும்புத் தகடுகள், ஊசிகளை உண்பதன் மூலம் தனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என நம்பிய அவர், இவற்றையெல்லாம் உண்டுள்ளார்.
சிலர் தங்களுக்கு உள்ள அதீதமான தவறான நம்பிக்கையினால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் எனவும் லட்சத்தில் ஒருவர் இப்படி நடந்துகொள்வதாகவும் இதற்கு ஆங்கிலத்தில் delusional disorder என பெயர் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.