மத நல்லிணக்கம் தவறானதா? சண் தவராஜா!

பிறப்பு : - இறப்பு :

அண்மைய இலங்கைச் செய்திகள், மீண்டும் ஒரு இன மோதலை நோக்கி நாடு செல்கிறதோ என்ற ஐயத்தை தோற்றுவிப்பதாக உள்ளன. ஒரு கொடிய யுத்தத்தைச் சந்தித்த தமிழ்-சிங்கள இன முரண்பாடே இன்னமுமே ஒரு முறையான தீர்வை எட்டாத நிலையில் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் அணி திரள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதே சமயம், கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மீதான தமிழர்களின் அதிருப்தியானது – முஸ்லிம்களின் ஏகபோகத்தை எதிர்ப்பது என்ற தளத்தில் – தமிழ் இனவாதிகள் சிங்கள இனவாதிகளுடன் கை கோர்ப்பது என்ற அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

யுத்தத்தின் பின்னான சூழலில் தீர்வுகாணப்படாத பிரச்சனைகள் பல தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் அவை அரசுக்கு எதிரான போராட்டங்களாக தினமும் வெடித்து வருகின்றன. சிறுபான்மை இன மக்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துக்கொண்ட நல்லிணக்க அரசானது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை படிப்படியாகப் பொய்த்துப் போன நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் ஆத்திரம் அரசின் மீது மாத்திரம் அன்றி புதிய அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்த வாக்குக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் திரும்பியுள்ளது.

நல்லிணக்க அரசைப் பதவியில் அமர்த்திய மேற்குலகத்திற்கு சிங்களத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்த சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வழங்கிய வாக்குறுதியின் ஒரு அங்கமாக அல்லது வேறு வகையில் சொல்வதானால் மேற்குலகம் புதிய அரசாங்கத்திற்கு விதித்த நிபந்தனையின் ஒரு அங்கமாக புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்புடன் கூடிய ஒரு அரசியல் தீர்வை உள்ளடக்கியதாக புதிய அரசியல் யாப்பு அமையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அதற்காக சிறுபான்மை அரசியல் கட்சிகள் ஒருமித்துப் பணியாற்ற வேண்டிய, ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மற்றும் தென்னிலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமக்கிடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

தமிழ், மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமக்கிடையே ஒருமைப்பாட்டுக்கு வருவதில் உள்ள ‘ஆபத்தை” சிங்களப் பேரினவாதிகள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொது பல சேன மற்றும் ராவண பலய போன்ற கடும்போக்கு சிங்கள அமைப்புக்களின் அண்மைக்காலச் செயற்பாடுகள் சிறுபான்மை மக்களைப் பிரித்தாள்வதில் அவர்கள் புதிய தந்திரத்தைக் கையாளுகிறார்கள் என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன.

ஈழப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்தாள்வதில் சிங்கள இனவாதிகள் மத்தியில் பாரிய பிரச்சினை இருக்கவில்லை. ஈழப் போர் ஆரம்பமான காலத்தில் ஒன்றுபட்டு ஆயுதமேந்திப் போராடிய இரு இனங்களும் ஒரு சில வருட இடைவெளியிலேயே பரம எதிரிகளாக மாறி – இன ஐக்கியம் என்ற சொல்லையே உச்சரிக்கக் கூட முடியாத அளவிற்கு பகைச் சக்திகளாக விளங்கி வருகின்றன.

சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத விடுதலை இயக்கங்களும் பொது எதிரியைக் கையாள்வதற்காக தம் கையில் ஏந்திய ஆயுதங்களை முஸ்லிம்களை நோக்கித் திருப்பி வரலாற்றுப் பழியைத் தேடிக் கொண்டன. இதன் உச்சமாக சிங்கள தேசமே செய்ய நினைக்காத ஒரு செயலாக யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம் மக்களை ஒரே நாளில் வெளியேற்றியதன் ஊடாக இரண்டு இனங்களுக்கும் இடையிலான நிரந்தரப் பகைக்கு தமிழர் தரப்பு வித்திட்டுக் கொண்டது.

இதில் முஸ்லிம்கள் தரப்பில் தவறில்லை என்று கூறிவிட முடியாது. ஆரம்பத்தில் விடுதலை இயக்கங்களில் இணைந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களை – தமிழ் இளைஞர்களைத் தமிழ்ச் சமூகம் தோளில் வைத்துக் கொண்டாடியது போன்று இல்லாவிட்டாலும் கூட – முஸ்லிம் சமூகம் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. முஸ்லிம் மக்களின் ஈழப் போராட்டத்திற்கான தார்மீக ரீதியிலான ஆதரவை நிரூபிக்க இதுவொன்றே போதும். சமாதான காலகட்டத்தில், விடுதலைப் புலிகளின் அப்போதைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய கரிகாலன் அவர்கள் ஓட்டமாவடி – நாவலடிப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடாத்திய சந்திப்பில் ‘இந்திய இராணுவம் தமிழர் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் ஓட்டமாவடி முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமற் போயிருந்தால் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே இருந்திருக்காது” எனப் பகிரங்கமாகத் தெரிவித்த போது நானும் அங்கே பிரசன்னமாகி இருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளிவந்த ஒன்று.

1984 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இஸ்ரேல் நலன்பேணும் பிரிவு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தில் திறந்து வைக்கப்பட்ட போது அதனை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தார்கள். வீதி மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு மட்டக்களப்புச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அப்போது தமிழ் இயக்கங்கள் எதுவும் இஸ்ரேலிய நலன்பேணும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து எதனையும் வெளியிட்டதாகவோ, முஸ்லிம்கள் மீதான அரச அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததாகவோ ஞாபகமில்லை.

பாலஸ்தீனம் என்ற நாட்டை வஞ்சமாக அபகரித்துக் கொண்ட இஸ்ரேல் இன்றுவரை அந்த மக்களின் போராட்டத்தை நசுக்கி வருவது ஒன்றே இலங்கை அந்த நாட்டின் உதவியை நாடக் காரணம். இதன் பின்னான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் – குறித்த வயது இளைஞர்கள் காரணமின்றி பெருந்தொகையில் கைது செய்யப்பட்டமை, இன மோதலை ஊக்குவித்தல், சகோதரப் படுகொலை, இனச் சுத்திகரிப்பு முயற்சி போன்றவை – இஸ்ரேலின் கபடத் தந்திரங்களின் வெளிப்பாடே.

தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் தரப்பும் இந்தத் தந்திரோபாயங்களுக்குப் பலியாகிப் போகியது. சிறு பொறி பெரு நெருப்பைத் தோற்றுவிப்பது போல, தொடர்ந்து வந்த சம்பவங்கள் வரலாறாகிப் போயின.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இரண்டு சிறுபான்மை இனங்களையும் சேர்ந்த சாமான்ய மக்கள் நடப்பு நிகழ்வுகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத அளவிற்கு ஆயுதம் ஏந்தியோரின் கைகள் ஓங்கியிருந்ததே.

பின்னைய நாட்களில் தமது தவறை ஏற்றுக் கொண்ட விடுதலைப் புலிகள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நேசக்கரம் நீட்டி கிளிநொச்சி அழைத்துப் பேச்சுக்களை நடாத்தினர். காலச்சூழல் காரணமாக அந்த முயற்சியில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
யுத்தத்தின் பின்னர் தனித்து விடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரசுடன் உடன்பாட்டுக்கு வந்து ஒரு கூட்டு ஆட்சியை ஏற்படுத்தி இன ஐக்கியத்தை வலுப்படுத்த முனைந்தது. எனினும், தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உரசல் கிழக்கில் தொடர்ந்து நீடித்த வண்ணமேயே உள்ளது.

யுத்தத்தின் பின்னான சூழலில் தமிழர் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னான காலத்திலும் முஸ்லிம் பிரதேசங்கள் தொடர்ச்சியாக செழிப்புப் பெறுவதுவும், மத்தியில் ஆட்சி மாறினாலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள் செல்வாக்குடன் வலம் வருவதும், தமது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதும் இன உரசலை மேலும் உக்கிரம் அடையச் செய்கின்றன. அது மாத்திரமன்றி சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய ஒரு இனம் தற்போது முஸ்லிம் மேலாதிக்கத்திற்கு அஞ்ச வேண்டிய அளவிற்கு தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்படுவதும், போராட்ட காலத்தில் இத்தகைய போக்கு தடுக்கப்பட்டிருந்ததும் தமிழ் இனவாதிகளின் சிந்தனைக்கு உரம் சேர்த்து வருகின்றன.

அனைத்துக்கும் மேலாக, தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் இந்த விவகாரத்தை பொறுப்புடனும், நிதானத்துடனும், பக்கச் சார்பு இன்றியும் கையாளக் கூடிய தலைமைத்துவம் இல்லாமை நிலைமை தொடர்ந்தும் பதட்டமாக நீடிக்கக் காரணமாக இருந்து வருகின்றது. தொடரும் நிலைமைகள் தமிழ் இனவாதிகளின் கரங்கள் ஓங்கவும், இவர்கள் பின்னால் கல்விமான்களும், ஊடகவியலாளர்களும் அணி திரளவும் வாய்ப்பை வழங்கி வருகின்றன. இன நல்லுறவு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு அதிக விட்டுக்கொடுப்பு நடக்கின்றது என்ற பரப்புரையை பொது ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சாமான்ய மக்களுக்கு இது தொடர்பான தெளிவை வழங்க வேண்டியவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது நிலைமையை உக்கிர நிலைக்கு இட்டுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

புதிய அரசியல் யாப்பை சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பான ஒன்றாக அமைத்துக் கொள்வதற்கான முன்நிபந்தனை சிறுபான்மை மக்களின் ஒற்றுமையே. இதனை விரும்பும் யாவரும் இன்றைய தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கான முயற்சியில் அவசியமாகவும் அவசரமாகவும் இறங்கியே ஆக வேண்டும். இரண்டு சமூகங்களுக்கும் இடையேயான மனந் திறந்த பேச்சுக்களே உண்மையான நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லும். அதுவே, இரண்டு தரப்பிலும் உள்ள இனவாத சக்திகள் தலையெடுக்காமல் தடுப்பதுடன் சிங்கள இனவாதிகளின் இச்சைகளுக்கு தமிழ்த் தரப்பு துணைபோவதையும் தடுக்கும்.

இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மதம்” என்னும் உலகளாவிய நச்சுப் பரப்புரை இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய நாடுகளைத் துணைக்கு வைத்துக் கொண்டே இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ளும் மேற்குலகின் கபட நாடகத்திற்கும், பன்னாட்டு ஆயுத வியாபாரிகளின் வியாபார உத்திகளுக்கும் பலியாகாமல் மக்களைக் காக்க அரசியல் தலைமைகள் உடனடி நடவடிக்கையில் இறங்குவது ஒன்றே மத நல்லிணக்கம் தீங்கானது என்பது போன்ற பரப்புரைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit