திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதகா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சென்னை மெரினாக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டு என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் பேரவை, சிவில் அமைப்புக்கள் ,தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் உலக வல்லரசுகளும் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஜேர்மன் பிறைமன் நகரில் நடைபெற்ற நிரந்தர தீர்ப்பாயமொன்றில் கலந்து கொண்டு மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சேர்ந்து தான் இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்பதை நிரூபிப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டவர்.

தன் சொந்த நாடான இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்து விட்டது என்பதை அந்த நாட்டிலிருந்தவாறு எந்தவித தயக்கமுமின்றி அம்பலப்படுத்தி வருபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற போது அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அமர்வுகளிலும் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழுத்தமான வகையில் குரல் கொடுத்து வருபவர்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜெனிவாவில் பக்க அறைகளில் அரசதரப்பினர் கலந்து கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்ற போது அதனை முற்றுமுழுதாக முறியடிக்கும் வகையில் திருமுருகன் காந்தி செயற்பட்டு வருகிறார்.

இவ்வாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைத் தலைமை தாங்கி நடாத்துவது மிகவும் பொருத்தமானது.

தமிழக அரசு இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கின்ற போது அதனையும் மீறி நடாத்துவது பாராட்டுக்குரியது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இவ்வாறான அடக்குமுறையான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் இணைந்து இவ்வாறான அடக்கு முறையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*