யாழ்ப்பாணக் கலாச்சாரம் சீரழிந்துவருகிறதா…..?

பிறப்பு : - இறப்பு :

இன்றைய திகதியில் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களும் சரி, தம்மை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ள எத்தணிப்பவர்களும் சரி யாழ்ப்பாணத்தையும், யாழ் இளைஞர் யுவதிகளையும் அடையாளப்படுத்தும் விதமாக பயன்படுத்தும் முக்கிய சொல் ‘சீரழிவு’. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்ப்பாடு யாழ்ப்பாண கலாச்சாரம் சீரளிந்துள்ளதாகவும், இளைஞர்களும் யுவதிகளும் கெட்டுப்போவதாகவும் இவர்களது குற்றச்சாட்டு. உண்மைதான்; இவர்களால் யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டப்படுவதில் எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மை உள்ளதோ அதேபோல யாழ்ப்பாணம் வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்து வருவதிலும் அத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது; இதை யாராவது மறுக்க முடியுமா?

ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்கின்ற நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானம் மட்டுமல்ல; அது உண்மையில் வாழ்க்கைத்தத்துவம். இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையும் நியூட்டனின் மூன்றாம் விதியை ஒத்ததுதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி என்பன அதிகரித்துவரும்போது அதன் பக்க விளைவுகளாக சில வேண்டத்தகாத மாற்றங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன, அதை யாரும் மறுக்க இயலாது; அப்படியான சில வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதனால் ஏற்ப்படும் முன்னேற்றகரமான விடயங்களை அப்படியே புறக்கணிக்க முடியுமா??

jaff2

ஆமென்று கூறும் பிற்போக்கான எண்ணம் கொண்டவர்களை நாம் குறைகூற முடியாது; அது அவர்களின் சொந்த உணர்வு. அனால் இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுமிடத்தில் தற்போது உண்டாகிவரும் வசதி வாய்ப்புக்கள்தான் தீய பக்கவிளைவுகளுக்கு காரணம் என்று நோக்காமல்; புதிய வசதி வாய்ப்புக்களால் ஏற்ப்படுகின்ற தீய பக்கவிளைவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கான வழியை ஆராய்வதுதான் புத்திசாலித்தனம்; அதுதான் இன்றைய தேவை. அதை விடுத்து குறை கூறுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்!

யாழ் இளைஞர்களும் யுவதிகளும் பண்பாடில்லாமல் முறைதவறி நடக்கின்றார்கள் என்பதுதான் இன்று முக்கியமாக யாழ்ப்பாணம் சீரழிவதாக கூறுபவர்களால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு; இவைதவிர கல்விப் பெறுபேறுகளில் வீழ்ச்சியும் இன்னுமொரு முக்கிய குற்றச்சாட்டு. இவ்விரண்டு குட்டச்சாட்டுகளும் ஏற்பட காரணமாக குற்றம் சொல்பவர்களால் கூறப்படும் முக்கிய காரணிகளாக தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், வெளிநாட்டுப்பணம், எ-9 பாதை திறப்பு, கட்டுப்பாடு இல்லாமை (புலிகளின் கட்டுப்பாடு) போன்றவை முக்கியமானவை. இக்குற்றச்சாட்டுகளிணை விரிவாக நோக்குவோமாயின்…

jaff3

1991 முதல் 1995 வரை யாழ் குடாநாட்டிலேயே மக்கள் பாவனைக்காக ‘இயங்கும் நிலையில்’ ஒன்றிரண்டு தொலைபேசிகள்தான் இருந்தன; அப்போதைய கட்டணங்களை கேட்டால் இப்போதும் தலை சுற்றும். அதிலும் வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு யாழிலிருந்து கொழும்பிற்கு செல்லவேண்டிய நிலை (அந்த காலப்பகுதியில் கொழும்பு செல்வது சாதாரண விடயமல்ல). 1995 க்கு பின்னர் மெல்லமெல்ல நிலையான தொலைபேசி (Land Line) இணைப்புக்கள் யாழ் குடாநாட்டிற்குள் அதிகரிக்க ஆரம்பித்தது; பெரும்புள்ளிகள், வசதியானவர்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள் போன்ற இடங்களில் நிலையான தொலைபேசி இணைப்புக்கள் இருந்தாலும் சாதாரண குடிமக்களால் அவற்றை சொந்தமாக பாவிக்க இயலவில்லை.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் அறிமுகமாகியதுதான் கைத்தொலைபேசி; ஆரம்பத்தில் கைத்தொலைபேசியின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் 2007 இற்கு பின்னர் வீட்டிற்கு ஒன்றாக அதிகரித்து இன்று ஒவ்வொருத்தரும் ஒரு கைத்தொலைபேசி பயன்படுத்துமளவிற்கு அதன் பாவனை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமா என்பதில்த்தான் விவாதமே. எதையுமே நாம் பயன்படுத்தும் விதத்தில்த்தான் அதன் நன்மை, தீமை தீர்மானிக்கப்படுகிறது; ஒரு தீக்குச்சியால் தீபமும் ஏற்றலாம் தீயும் வைக்கலாம்; அது பயன்படுத்தும் முறை மற்றும் தேவையை பொறுத்தது.

jaff4

இன்று தொலைபேசி உள்ளதால் எத்தனை சௌகரியங்கள்!!! ஒரு சந்திப்பை எடுத்துக் கொண்டாலே ஒருவரை சந்திக்குமுன் தொலைபேசியில் அவர் சந்திப்புக்கு தயாராக உள்ளாரா என அறிந்த பின்னர் செல்வதால் வீண் அலைச்சல், பணம், நேரம் என்பன எவ்வளவு சேமிக்கப்படுகிறது! சரியான நேரத்திற்கு வீடிற்கோ அல்லது குறிப்பிட்ட ஓரிடத்திற்க்கோ செல்வதற்கு தாமதமாகினால் தாமதத்தை அறியப்படுத்தி ஏற்ப்படும் அசௌகரியங்களை தவிர்க்கிறோம். தூரதேச பிரிவின் இடைவெளி எத்தனை குடும்பங்களுக்கு தொலைபேசியில் இன்று ஆறுதலை வழங்குகின்றது!!!

வெளிநாடுகளில் உள்ளவர்களின் குரலையோ முகத்தையோ அன்று வருடக்கணக்கில் காணாத நாம் இன்று தினமும் பார்த்தும் கேட்டும் மனதிற்கு ஆறுதலை தேடுவது எதனால்? இவைதவிர வர்த்தகம், மருத்துவம் முதல் அத்தனை தொழில்களிலும், சேவைகளிலும் தொலைபேசியின் பங்கு என்ன என்பதை யாவருமே அறிவோம்! இத்தனை நன்மைகளை தன்னகத்தே கொண்ட தொலைபேசிதான் இன்றைய பல யாழ் இளைஞர்களினதும் யுவதிகளினதும் ‘காம வேட்க்கைக்கு’ பயன்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘பல'(‘சில’ அல்ல) இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன்று ஒன்றுக்கு மேற்ப்பட்ட (ஒரு சிலர் யாரென்றே தெரியாத) எதிர்ப்பாலருடன் தமது இச்சைகளை போக்கிக்கொள்ளும் ஒரு கருவியாக தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள் என்பது சோகமான விடயமே.

நிச்சயம் இது தொலைபேசியால் ஏற்ப்பட்ட சீரழிவுதான்; ஆனால் இந்த சீரழிவு யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை. இது உலகம் முழுவதிலும் உள்ள சீரழிவுதான், ஆனால் யாழ்ப்பாணம் எப்படி தனித்து காட்டுகின்றதென்றால்; இதுவரை காலமும் இருந்துவந்த கட்டுப்பாடான ஒழுக்கம்தான். உதாரணமாக கறுப்புடன் வேறெந்த நிறம் சேர்ந்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது, ஆனால் வெள்ளையுடன் ஒரு துளி வேறு எந்த நிறம் சேர்ந்தாலும் அது மிகைப்படுத்திக் காட்டிக்கொடுக்கும்; அந்த நிலைதான் இன்றைய யாழின் நிலை.

jaff5

தொலைபேசிபோலத்தான் இணையந்தின் பங்கும்; இணையத்தால் ஏற்ப்பட்டிருக்கும் நன்மைகளை சொல்லித் தெரியவேண்டியதில்லை! வீட்டிலிருந்தே உலகத்தை புரட்டிப்பார்க்கும் நெம்புகோல் இணையம்; அதனை ஆக்கவழியில் பயன் படுத்துவதும் அழிவுப்பாதையில் பயன்படுத்துவதும் தனிமனித நிலைப்பாடு. ஒரு சிலர் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதற்காக இணையத்தை புறந்தள்ள முடியுமா? இல்லை இணையம் இல்லாமல் இனிவரும் காலங்களில் உலகத்துடன் இணைந்து வாளத்தான் முடியுமா?

Face Book; இது இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டிருப்பதை மறுக்க முடியாது; அதன் தாக்கம் யாழிலும் இல்லாமல் இல்லை. கல்வி வீழ்ச்சிக்கு இன்றைய Face Book இன் தாக்கம் ஒரு காரணமாக கூறப்படுகிறது, உண்மைதான்; சில மாணவர்கள் Face Book தான் வாழ்க்கை என்கின்ற அளவில் உள்ளார்கள்; இவர்களின் வயதும் அதற்க்கு துணைபோகும் காரணிகளும் Face Book இல் உள்ளமைதான் இவர்களின் இந்த அதீத ஈடுபாட்டிற்கு காரணம். பொய்யான பெயர்களில் கணக்கு வைத்திருந்து வேண்டாத நட்புகளை உருவாக்கி வயதின் இச்சையை பூர்த்திசெய்யும் விடலைகள் சற்று அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறார்கள்!!! அப்படியானால் Face Book என்கின்ற சமூகத்தளம் தேவையற்றதா? நிச்சயமாக தேவையற்றது என்று கூற முடியாது; பல நல்ல விடயங்கள் Face Book இல் உள்ளதையும் மறுக்க முடியாது.

jaff6

இவற்றைப்போலவே எ-9 பாதை திறக்கப்பட்டதால் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளது என்கின்ற வாதத்திலும் மறுப்பு ஏதும் கூறுவதற்கில்லை; பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள், தீய விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளை ஊக்குவிக்கிறார்கள்; உண்மைதான், அதற்காக எ-9 பாதை பயன்பாட்டை நிறுத்த முடியுமா? இல்லை புறக்கணிக்கத்தான் முடியுமா? எ-9 பாதை இல்லாத காலங்களில் எம்மக்கள் பட்ட அவஸ்தையை எட்ட நின்று கருத்து கூறும் யாராலும் புரிந்து கொள்ள இயலாது. 1000 ரூபாயில் செய்ய வேண்டிய போக்குவரத்தை 30,000 ரூபாவில் கூட செய்யமுடியாத சூழலில் எத்தனை பேர் முக்கிய நிகழ்வுகளில் (மரணம், திருமணம்) கலந்துகொள்ளாமல் மனரீதியாக தாக்கப்பட்டார்கள் என்பதை ‘எக்ஸ்போ’ விமான சீட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சென்றவர்களால் உணரமுடியும்.

எ-9 பாதை திறக்கப்பட்டதால் ஏற்ப்பட்ட இலகு மற்றும் குறைந்த செலவில் நினைத்தநேர பயணம், ஏறுமதி மற்றும் இறக்குமதி, பொருட்களின் விலை வீழ்ச்சி போன்ற சாதகமான காரணிகளுடன் ஒப்பிடும் பொழுது பாதகமான காரணிகள் மிகச்சொற்பமே. அதற்காக பாதகமான காரணிகளை வரவேற்பதாக அர்த்தமல்ல, அப்பாதகமான காரணிகளை எவ்வாறு நீக்கலாம் என்று சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்; அதைவிடுத்து எ-9 பாதை திறந்ததுதான் இன்றைய யாழின் சீரழிவிற்கான காரணம் என்று கூறுவதல்ல!!

jaff7

அடுத்து வெளிநாட்டுப்பணம்; மேலதிகமாக கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தினால் பள்ளி வயது முதல் பாடை வயதுவரை பீர் மழையும், மோட்டார் சைக்கிள்களும் (குறிப்பாக பள்சர்) யாழ்ப்பாணத்தில் குறைவில்லாமல் உள்ளன. வேலைக்கு போகும் பணியாளர்களுக்கும், மாணவர்களின் தேவைகளுக்கும், வியாபாரிகளின் பயன்பாட்டிற்கும் மோட்டார் சைக்கிள்களின் தேவை இன்றியமையாதது என்பது நிதர்சனம். அதேநேரம் பகட்டுக்காக மோட்டர் கைக்கிளை வைத்து ‘படம்’ காட்டும் இளைஞர்களும் அதிகமாகவே உள்ளனர்; இவர்கள்தான் இன்றைய வீதி விபத்துக்களின் ஏஜண்டுகள், மற்றும் பெண் செட்டைகளின் முக்கிய சூத்திரதாரிகள். இவர்களை கட்டுப்படுத்துவது அவரவர் குடும்பத்தினதும், வெளிநாடுகளில் இருந்து தேவைக்கதிகமாக பணம் அனுப்புபவர்களதும், சமூகத்தினதும், பொலிசாரினதும்(?) கைகளில்த்தான் உள்ளது.

அடுத்து கூறப்படும் இன்னுமொருவிடயம்; “புலிகள் காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு பயந்து ஒழுக்காமாக இருந்தனர், ஆனால் இன்று புலிகளின் தாக்கம் இல்லாததால் ஒழுக்கம் குறைவாக நடக்கின்றார்கள்” என்பதுதான். இங்கு ஒழுக்கம் என்று சொல்லப்படும் முக்கிய விடயங்களாக ரவுடித்தனம், பெண் சேட்டைகள், கள்ளத்தொடர்பு, விபச்சாரம், போதை போன்றன அடங்குகின்றன. இவ்வாறான ஒழுக்க மீறல்களினை காணும் அல்லது அறியும் சந்தர்ப்பங்களில் “இவங்களுக்கு அவங்கள்தான் சரி” என்பதே பலராலும் உச்சரிக்கப்படும் ஒரு வாக்கியம்!!!

jaff8

உண்மைதான் இதை நானும் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றேன்; அனால் இதில் இன்னுமொரு விடயத்தையும் உற்றுநோக்கவேண்டும், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு பயந்துதான் (மரண பயம்) இதுவரை காலமும் யாழ் இளைஞர்கள் யுவதிகள் ஒழுக்கமாக இருந்தார்களா? ஆம் என்றால் அந்த ஒழுக்கம் யாழ்ப்பாணத்தின் அடிப்படை ஒழுக்கமா? இல்லை கட்டுப்படுத்தியதால் ஏற்ப்பட்ட ஒழுக்கமா? இது எம்மக்களின் சுயமரியாதையை காயப்படுத்துவதாக இல்லையா?

அப்படியானால் கட்டுப்பாடு தேவை இல்லையா என நீங்கள் கேட்கலாம்! நிச்சயம் கட்டுப்பாடு தேவை, ஆனால் கட்டுப்பாடு மட்டுமே போதாது; கூடவே நல்ல சமூக கட்டுக்கோப்பும் தேவை; தனிமனிதனில் சமூகத்தினதும், சமூகத்தில் தனிமனிதனதும் ஒழுக்கம் தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காவல்த்துறையும் நீதித்துறையும் மக்களுக்கும், மக்கள் காவல்த்துறைக்கும் நீதித்துறைக்கும் பூரணமான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் இதய சுத்தியோடு வழங்கினால் வேண்டத்தகாத பல தீய விளைவுகளை அடியோடு ஒழிக்கலாம்; அனால் இன்றைய சூழலில் அது உடனடிச்சாத்தியம் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

jaff9

தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், எ-9, வெளிநாட்டுப்பணம் போன்றன எந்தளவிற்கு யாழ்மக்களுக்கு இன்றியமையாத தேவைகளாக உள்ளதோ! அதேபோல இவற்றால் ஏற்ப்படும் ‘சீரழிவு’ என்று சொல்லப்படும் அசௌகரியங்கள் அதிகரித்துள்ளமை மிகவும் பாதகமான விடயமாகவே உள்ளது. தொலைபேசி, இணையம் போன்றவற்றால் இன்று ஒழுக்கத்திலும், கல்வியிலும் ஏற்ப்பட்டுள்ள தாக்கங்கள் காலப்போக்கில் குறைவடைந்து ஓர்நாள் இல்லாமலே போய்விடும் என்கின்ற நம்பிக்கை உண்டு.

உதாரணமாக சொல்வதானால் 1996 களில் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் மின்சாரம் (6 ஆண்டுகளின் பின்னர்) வழங்க ஆரம்பித்த புதிதில் அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் முதற்கொண்டு வயலும் வாழ்வும் வரை முழுநேரமும் தொலைக்காட்சியுடன் தான் அன்றைய இளைஞர்கள் நேரத்தை செலவிட்டனர்; ஆனால் இன்று??? வேண்டியபோதுதான் தொலைக்காட்சி! அதேபோலத்தான் புதிதாக ஒரு தொலைபேசியை வாங்கிய முதல் இரண்டு வாரம் அதையே போட்டு நோண்டி நொங்கெடுப்போம் , பின்னர் ???? பாவனைக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்! இது மனித இயல்பு, எதையும் புதிதாய் கண்டால் சிலகாலம் அதனுடன் ஒன்றிப்பது மனிதர்க்கு புதிதல்ல!!!

இந்த நிலைதான் இன்று எம்மவரில் சிலருக்கும் இருக்கும் பிரச்சனை!!! காணாததை கண்டதால் ஏற்ப்பட்ட விளைவு என்றுகூட இதை சொல்லலாம். எந்த புதிய அறிமுகமும் அறிமுகமான புதிதில் சில அசௌகரியங்களை கொடுக்கத்தான் செய்யும்; ஆனால் நாளடைவில் அவை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இது உலக நியதி, யாழ்ப்பாணம் ஒன்றும் இதற்க்கு விதி விலக்கல்ல. அப்படித்தான் கூடிய சீக்கிரம் தொலைபேசியும், இணையமும் மாறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

jaff10

ஆனால் ரவுடீசம், பெண் சேட்டைகள், புதிதாக நுழைந்துள்ள போதை, விபச்சாரம் போன்றன கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் அது நிச்சயம் சமூகத்தின் கைகளிலும், போலிஸ், மற்றும் நீதி துறையின் கைகளிலும்தான் தங்கியுள்ளது. போலீசார் நினைத்தால் இவற்றை அழிப்பது அவளவு கடினமல்ல; காரணம் இவையெல்லாம் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எதையுமே ஆரம்பத்தில் அழிப்பது சுலபம் என்பதால் பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காது இதய சுத்தியோடு செயற்ப்பட்டால் போலிஸ் துறையால் நிச்சயம் இவற்றை கட்டுப்படுத்த முடியும்; ஆனால்???

யாழ்மக்களை குறை சொல்பவர்களே ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், இங்குள்ளவர்களும் மனிதர்கள்தான்; தவறு செய்பவன்தான் மனிதன், அந்த தவறை சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தி கேவலப்படுத்துவதை கெட்டித்தனமென்று எண்ணாமல் தவறுகளை எப்படி தீர்க்கலாம் என்று சிந்தியுங்கள், அறிவுறுத்துங்கள். இன்னமும் பாவாடை தாவணி, சேலையில் பெண்களும்; வேட்டி சட்டைகளில் ஆண்களும் இருந்தால்த்தான் யாழ்ப்பாண கலாச்சாரம் காக்கப்படும் என நீங்களாகவே கற்பனை பண்ணிகொண்டு, அவ்வாறு இல்லாதவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்களாக எண்ணினால்; உங்களுக்கு நாங்கள் சொல்லாது ஒன்றே ஒன்றுதான் “VERY SORRY”

உலகம் போகிற வேகத்தில்த்தான் இனிவரும் காலங்களில் எங்களாலும் போக முடியும்; கலாச்சாரம் முக்கியம்தான்; அதற்காக கலாச்சாரத்தை மட்டுமே கட்டி பிடித்துக்கொண்டு இங்குள்ளவர்கள் 50 ஆண்டுகள் பின்நிற்க வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் நினைத்தால் அவர்களுக்கு AGAIN “VERY SORRY”தான். நான் ஒன்றும் முற்போக்கு வாதம் செய்யவில்லை, இதுதான் இன்றைய யதார்த்தம். உலகத்துடன் தன்னை இணைக்கும் முயற்ச்சியில் எல்லா துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய தளம்பல் நிலை தற்காலிகமானது; தளம்பல் நிலை சீரடைந்து உரிய வளர்ச்சியை எட்டும்போது இப்போது காணப்படும் சில வேண்டத்தகாத ‘சீரழிவுகள்’ நிச்சயமாக இல்லாதுபோகும், இல்லாது போக வேண்டும்!!!!!!!!!

அந்த நாளுக்காக காத்திருக்கும்,
யாழ் மக்களில் ஒருவன்.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit