தாய்லாந்து இளவரசி அரச ஆணையினால் பட்டத்தைத் துறந்தார்!:இளவரசருடன் மணமுறிவு

பிறப்பு : - இறப்பு :

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பட்டத்துக்குரிய இளவரசியான ஶ்ரீராஸ்ம் ஒரு சில அரசியல் காரணங்களால் அரச குடும்பத்தின் வேண்டுதலுக்கு ஏற்பத் தனது பட்டத்தைத் துறந்திருப்பதாகவும் இதன் மூலம் பட்டத்துக்குரிய இளவரசர் மஹா வஜிராலொன்கோர்ன் உடனான இவரது 13 வருட திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசியார் ஶ்ரீராஸ்ம் மீதான இம்முடிவின் பின்னணியில் கடந்த மாதம் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் உயர் மட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டமை இருக்கலாம் எனப் பரவலாக ஊகிக்கப் படுகின்றது. இந்நிலையில் வெள்ளி மாலை தாய்லாந்து அரச மாளிகை விடுத்த விரிவான அறிக்கையில், இளவரசர் வஜிராலொன்கோர்ன் இனது 3 ஆவது மனைவியான ஶ்ரீராஸ்ம் தனது அரச பட்டத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று அரச மாளிகை கோரிக்கை விடுத்ததாகக் கூறியிருந்த போதும் இதற்கான காரணங்கள் அதில் தெரிவிக்கப் படவில்லை. ஆயினும் 87 வயதாகும் அரசர் பூமிபோல் அடுலையாடேஜ் இக்கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்திருந்ததாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தாய்லாந்தில் அந்நாட்டு அரச குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்களுக்கு குறைந்த பட்சம் 15 வருட சிறைத் தண்டனை அளிக்கப் படுவது நடைமுறை என்பதுடன் இச்சட்டங்கள் அங்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அரச குடும்பத்தில் நடக்கும் விடயங்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதைத் தடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவரசர் வஜிராலொன்கோர்ன் மற்றும் ஶ்ரீராஸ்ம் தம்பதியினருக்கு 9 வயதுடைய ஓர் மகன் உள்ளார் என்பதுடன் அந்த வாரிசு வருங்காலத்தில் முடிசூடும் வரிசையில் இருப்பதும் முக்கியமானது. தற்போது இராணுவ ஆட்சி நடைபெறு வரும் தாய்லாந்தில் உலகின் மிக நீண்ட காலமாக மன்னர் பதவியில் இருக்கும் தாய்லாந்து மன்னரான பூமிபோலின் குடும்பத்துக்கு இந்நிகழ்வு சிறிது களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவே கருதப் படுகின்றது. மேலும் டிசம்பர் 5 ஆம் திகதி தாய்லாந்து மக்கள் தமது மன்னரான பூமிபோலின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய போதும் உடல்நலம் குன்றியிருப்பதால் மன்னர் பொதுமக்கள் முன் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit