நிழலும் நிஜமும்

பிறப்பு : - இறப்பு :

ரோகிணி தன் கணவனுக்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு அருகில் அமர்ந்தாள். அவள் எதையோ யோசித்தவண்ணம் ஒரே கவலையாக காணப்பட்டாள். ஆசை கணவன் ரமேஷ் சாப்பிட்டுக் கொண்டே இவளை கவனித்தான் . கொஞ்ச காலமாக ரோகினி எப்பப் பார்த்தாலும் அவள் நண்பி சுஜியைப் பற்றி தான் ஒரே பேச்சு . பாவம் இன்று அவள் நண்பிக்கு என்னவோ ஏதோ. அம்மா, ரோகிணி ஏன் கவலையில் இருக்கிறாய் ? உனக்கு சுகவீனம் ஏதுமோ ?. அப்படி என்றால், நீ போய் கொஞ்சம் படு . நானே போட்டு சாப்பிட்டு விட்டு வருகிறேன் . ரமேஷ் மிகவும் கரிசனையுடன் வினவினான் .

ரோகிணி மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தாள். பாருங்களேன்! நீங்கள் என்னில் எத்தனை அன்பு வைத்துள்ளீர்கள் . ஆனால் பாவம் சுஜி . அவளுக்கு சோதனைக்கு மேல் சோதனை . வாய்த்த கணவன் ஒரு பொல்லாதவன் . அது மட்டும் போதாது என்று மாமியாரின் கொடுமை வேறு. அவள் ஒருத்தி தனியே நின்று கொண்டு எல்லாவற்றையும் தாங்க வேண்டி இருக்கிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை . நாம் இந்த வெளிநாட்டில் உறவுகள் அருகில் இல்லாமல் தனிமை வாழ்வை அனுபவிக்கிறோம் . என்னுடைய மாமி, அது தான் உங்கள் அம்மா ஊரில இருக்கிறதாலவோ என்னவோ என்னிடம் பாசமாக இருக்கிறா. அவ இங்கே எம்முடன் வந்து தங்கினால் சுஜியின் மாமியை போல் தான் கொடுமைப்படுத்த தொடங்கி விடுவாரோ என்னவோ.

மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி எவ்வளளவு கேள்விப்பட்டுள்ளோம் . ரமேஷ் இடை மறித்தான். நீ அவர்கள் மாதிரி இல்லையம்மா . உனது நல்ல குணத்தை புரிந்துக்கொண்டு எனது அம்மா உன்னுடன் நன்றாகத் தான் இருப்பார். உங்கள் இருவரதும் ஒற்றுமை எல்லோரையும் பொறாமை பட வைக்கும். அம்மா தானே உன்னை தேடித்தந்தவர் . ஆகவே ஒரு நாளும் பிழைக்காது. கணவன் மனைவியை தேற்றினான் . ரோகினி கணவனின் பாராட்டுதலில் குளிர்ந்து மனத்தை சமாதானப்படுத்திவிட்டு சரி விடுங்கோ, நான் பாத்திரங்களை கழுவப்போகிறன். ரோகினி எழுந்தாள். அவள் சோகத்துடன் செல்வதை கண்ணுற்ற கணவன் ரோகிணி நானும் சாப்பிட்டு முடித்து விட்டேன் . இதோ நாமிருவரும் சேர்ந்தே கழுவலாம் . ரோகினி ஒரு கணம் அவனைப் பார்த்து, பார்த்தீங்களா! நீங்கள் இந்த வெள்ளைக்காரைப் போன்று சமையல் அறையில் உதவி செய்ய வருகிறீர்கள் . ஆனால் எமது ஊரிலோ ஆம்பிளைகள் சமையல் அறை பக்கமே வர மாட்டார்கள் . பாவம் அந்த சுஜியும் தன்னந் தனியே எல்லா வேலைகளையும் செய்கிறா. அப்படியிருந்தும் அவளுக்கு பிரச்சனை . ரோகிணி பெருமூச்சு விட்டாள்.

அடுத்தநாள் வழமைப்போன்று ராகவன் வேலைத்தளத்திலிருந்து ரோகிணிக்கு தொலைபேசி மூலம் அழைக்க அவள் கொஞ்சம் பதட்டத்துடனே பதில் அளித்தாள் . ரமேஷ்க்கு எதோ உறைக்க என்னம்மா சுஜிக்கு ஏதாவதா? என்று கேட்கும் முன்னரே, ஆமாங்க , அவளை இப்பொழுது தான் காயப்பட்டததினால்  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கிறார்கள் . இனி என்ன நடக்குது என்று நான் பார்க்க வேண்டும் . பின்னேரம் நீங்கள் வந்த பின்னர் என்ன நடந்தது என்பதை கூறுகிறேன். இப்பொழுது வைக்கட்டுமா , என்று கொஞ்சம் அவசரமாகவே அழைப்பை துண்டித்தாள் .ரமேஷ் ரோகிணியின் நல்ல உள்ளத்தை ஒரு தரம் எண்ணிப்பார்த்தான் . சுஜியை நினைத்து அவள் கவலைப்படுவதை ரமேஷ்யினால் பொறுக்க முடியவில்லை . உடனே ஒரு தீர்மானத்துடன் தனது பொறுப்பதிகாரியை சந்திக்க சென்றான் .

வீட்டு கதவை திறந்துக்கொண்டு வந்த ரமேஷ் ரோகினி நாளை நாம் இந்தியா வெளிக்கிடுகிறோம் . நீ நேரில் சென்று உன் நண்பி சுஜியை பார்க்கலாம் . அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் . என்ன இப்ப உனக்கு சந்தோஷமா ? நான் வேலையிலும் விடுமுறை போட்டுவிட்டு  விமான டிக்கட்டுகளுக்கும் ஒதுக்கீட்டு செய்து விட்டேன் . ரோகினி ரமேஷ் கூறுவதைக்கேட்டு மலங்க மலங் முழித்தாள். என்னங்க சொல்றீங்க ? சுஜி நான் ஒவ்வொரு நாளும் பார்க்கிற நாடகத்தொடரில் வரும் கதாப்பாத்திரம் அல்லவா . அவளைப் போய் நான் இந்தியாவில் எங்கே போய் தேடுவது என்று கூற ரமேஷ் இவள் சொல்வதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தான் .

இதுதான் இன்றைய புலம்பெயர் சமூகத்திலும்……

புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் குடும்பங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகள் இன்றி தனிமையாக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருகின்றனர் . தாம்பத்திய வாழ்வுக்கு அதாவது கணவன் மனைவி ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதனால் வெளிக் குறுக்கீடுகள் இன்றி சில குடும்பங்கள் சந்தோஷமாக வாழத் தலைப்பட்டாலும் அவர்கள் தனிமை வாழ்வை வாழத்தான் அவர்களால் முடிகிறது . குறிப்பாக நம் பெண்கள் தமது அன்றாட வீட்டு வேலைகளை முடுத்து விட்டு பொழுது போக்குக்காக தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களை பார்த்து அதிலேயே மூழ்கி, அன்று முக்கிய கட்டத்தில் விட்ட அடுத்த கட்டத்தை பார்ப்பதற்காக அடுத்த நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் . இவர்களுக்கு தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்கள் அவர்களுக்கு நெருங்கிய உறவுகளாக நினைக்க முற்படுகின்றனர் . இத்தகைய நிலை ஆரோக்கியமானது அல்ல . இப்படிப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஒதுக்கி விட்டு மற்றைய நேரம் எம் பொன்னான நேரத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது சாலச் சிறந்தது“ .

–          மீரா குகன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit