“எல்லாம் பொய் யுத்தம் ஓய்ந்த பின்பே எங்கள் அசிங்கமான நிர்வாணத்தை​ப் பார்க்கிறோ​ம்”

பிறப்பு : - இறப்பு :

“உடலால் ஊனமாகி உள்ளங்களாலும் கைவிடப்பட்டு ஆங்காங்கே தென்படும் முன்னாள் போராளிகளைத் தவிர அனைத்துமே மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறது” 

வழமையாகக்  கார்த்திகை மாதக் கடைசியில்  ஊடகங்களில் மாவீரர் தின உணர்வலைகள்  வீச ஆரம்பித்து விடும். ஆனால் சனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து அவ்வுணர்வலைகள்  ஊடகங்களைப் பொறுத்த வரை அமுங்கி விட்டன போலத் தோன்றுகிறது.

நிகழப்போகும் சனாதிபதித் தேர்தல் இலங்கையில்  பெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறதென்ற நினைப்பில் பலர் வாயைப்பிளந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர் நலனில் இருந்து சிந்திக்கும் அரசியல் ஆய்வாளர்கள் இலங்கையில் நிகழப்போவதாக எதிர்பார்க்கப்படும் ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சிங்கள அதிகார வர்க்கத்தின் கீழ்வரும்  குழுக்களுக்குள் நிகழும் ஒரு அரசியல் இழுபறியாகவே எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இருக்கப்போகிறது.

•    சிங்கள இனவாத மென் போக்காளர்கள்.
•    சிங்கள இனவாதக் வன் போக்காளர்கள்
•    சிங்களப் பகற் கொள்ளைக்காரர்

இவ்வரசியல் அதிகாரப்போராட்டத்தில் இந்தியாவும் மேற்குலகும் சிங்கள இனவாத மென்போக்காளர்கள் பக்கம் நிற்கின்றன. அவ்வளவுதான். சிலவேளை சிங்கள மென் இனவாதமா அல்லது தற்போதைய பகற்கொள்ளைக் கூட்டமான ராசபக்ஸ கூட்டமா தேர்தலில் வெல்லப்போவது என்பதைத் தமிழர்களின் வாக்குகள் தீர்மானிக்கக்கூடும்.வெற்றி அடையும் சிங்கள இனவாதக்குழு இலங்கையின் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதி செய்யும்  உண்மையான சனநாயக ஆட்சியைக்கொண்டு வரப்போவதில்லை. பகற் கொள்ளைகாரர்களுடன் இணைந்து அதிகாரத்தில் இருந்த வன்போக்கு இனவாதிகள் மீண்டும் வரப்போகும் அதிகாரத்தின் மீது படிந்து விடவும் காத்திருக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான இலங்கையின் வரலாறு பெரும் பூதம் போல இவற்றையெல்லாம் சொல்லியபடிக்கு எங்கள் முன் சிரித்துக்கொண்டிருக்கிறது.

2009 இல் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து  (புலிகள் அழிக்கப்பட்டதில் இருந்து)  இலங்கையின் வடக்கு கிழக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக உலகெங்கும் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.  தார் வீதி வந்த போது ஆவென்று வாயை பிளந்தவர்கள், புகையிரதம் வந்த போது ஆவென்று வாயைப் பிளந்தவர்கள், அழகிய கட்டிடங்கள் வந்த போது வாயைப்பிளந்தவர்கள் என வாயை பிளந்தவர்களின் தொகை அதிகரித்து மைத்திரிபால சேனா நாயக்க  மகிந்தவை விட்டு விலகியதும் அத்தொகை இன்னும் அதிகரித்து விட்டது.  ஆனால் தமிழர்களின்  வாய்களுக்குள்ளும் மனங்களுக்குள்ளும் அவர்களையும் அறியாமலேயே பல நச்சுக்கிருமிகளும் நச்சு எண்ணங்களும்  நுளைந்து கொண்டிருக்கின்றன.  வெளி உலகத்துக்குத் திறந்து விடப்பட்டிருக்கும் எங்கள் சமூகத்துக்குள் உலகத்தின் குப்பைகள் நுழையத்தொடங்கி இருக்கின்றன அல்லது நுழையக் காத்திருக்கின்றன.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுக்கலாசாரம் உள் நுழைந்திருக்கிறது.   மொழிக்கும் கூட்டுணர்வுக்கும் தீங்கு விளைவிக்கும் ஊடகக்கலாசாரம் உள் நுழைந்திருக்கிறது. தங்கு தடையற்ற நுகர்வுக்கலாச்சாரம் உள் நுளைந்திருக்கிறது. மேற்குலகில் தடை செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. சூழலியல் கட்டுப்பாடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் எதுமற்ற முதலீடுகள் வடக்கு கிழக்கை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றன. நுகர்வோர் பாதுகாப்பற்ற  சந்தைகள் உருவாகி வருகின்றன. உள்ளூர் மூலதனம் வங்கிகளின் மூலம் கொழும்பை நோக்கியும் உலக நிறுவனங்களை நோக்கியும் பெயர்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கின் வளமான நிலங்களைச் சிங்களக் குடியேற்றவாதிகளும்  இராணுவமும் மட்டுமல்ல பல்தேசிய நிறுவனங்களும் அபகரிக்கக் காத்திருக்கின்றன.

கிணறுகளில் எண்ணை சுரக்கிறது அல்லது உப்பு விளைகிறது. குடி நீரில் இரசாயனங்கள் கலக்கின்றன. காடுகள் அழிகின்றன. நிலங்களுக்குள் தேக்கப்படாத வெள்ளம் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கடலுக்குள் போய்விடுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்கிற நியாயப்படுத்துகிற ஒரு அதிகாரக்கூட்டம் தமிழர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. பல தமிழ் அதிகாரிகள் கேட்பாரில்லாமல் ஊழல் புரிகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அதிகாரத்தின் நோக்கம் புரியாமல் நடந்து கொள்கிறார்கள். வளங்களும் வாய்ப்புக்களும் தொழில்களும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. தனிப்பட்ட நலன்களுக்காக எதனையும் செய்யக்கூடிய தமிழ்ச்சமூகம் ஒன்று உருவாகிவருகிறது.

தமிழர்களின் விடுதலையை மண்மீட்பு  என்பதற்குள் குறுக்கி வைத்திருந்த காலத்தில் இருந்து இன நல்லிணக்கச்  சட்டகத்துக்குள் ஒடுக்கி வைத்திருக்கிற இக்காலம் வரையும் எங்கள் சமூகம் பண்பாட்டுத் தளத்தில் உன்னதங்கள் எதனையும் அடைந்து விடவில்லை என்பதையே இச் செயல்கள் காட்டுகின்றன.

ஆயுதமேந்திய போராட்டம் நசுக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் சமூக பொருளாதார சூழலியல் அபிலாசைகள் இலங்கை என்ற சட்டகத்துக்குள் வந்து விட்டன. உலகின் எல்லாப்பகுதிகளையும் போலவே  இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக பொருளாதார மனப்பாங்கும் நேரிடையாகவே பல்தேசிய நிறுவனங்களினால் தீர்மானிக்கப்படுவதாக மாறிவருகிறது.  இதன் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்ச் சமூகம் என்னவிதமான இயக்கவியலை அடைந்திருக்கிறது என்ற கேள்வி இப்பொழுது முக்கியமாகிறது. எங்கள் எல்லோருடைய அவதானமும் அரசியலில் தான் அனேகமாகக் குவிந்திருக்கிறது.

விடுதலைப் போராட்டத்தை நடத்திய ஒரு சமூகத்துள் கொள்கை அளவிலாவது, உயரிய விழுமியங்கள் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் ஏனெனில் தனக்கேயுரிய சமூக பொருளாதார சூழலியற் கட்டுமானங்களைப் பற்றிக்கற்பனை செய்து அதற்காகப் போராடிய ஒரு சமூகம் தனது அனுபவங்களினூடாக எத்தகைய உன்னதமான மன நிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறதா?

பாதிக்கப்படுகிற பத்து அல்லது நூறு மக்கள் மட்டும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகப் போராடுகிறார்கள். ஏனையவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு விட்டது.  சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் விடுதலைப்போராட்டம் ஒன்று நிகழ்ந்தது என்பதற்கு சான்றாக இருந்த புறச் சின்னங்களும் அனேகமானவை அழிந்து அல்லது அழிக்கப்பட்டு விட்டன. உடலால் ஊனமாகி உள்ளங்களாலும் கைவிடப்பட்டு ஆங்காங்கே தென்படும் முன்னாட் போராளிகளைத் தவிர வேறு எவரும் கண்ணில் படுவதில்லை. அரசியற்கைதிகள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்கியதில் இருந்து அதனை உண்மையாக நேசித்து  அதற்காக மடிந்த அனைத்து மாவீரர்களையும் நினைந்தேற்றும் மனப்பக்குவம் கொண்டவர்கள் ஏற்றும் ஒவ்வொரு தீபத்தையும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்  வாக்குச் சீட்டுக்களாக நினைத்துப் பொறுக்கிச் சட்டைப்பைக்குள்  போட்டுக் கொள்கிறார்கள்.

மண்ணை மீட்க முடியாது இருக்கிற போதும் அதிகாரங்கள் எதுவும் இல்லாதபோதும்  விடுதலையை நோக்கிய பயணம் நிகழவேண்டி இருக்கிறது. இப்பயணம் தன் பற்றிய விழிப்புணர்வில் இருந்தும் தன்னைச் சூழ நடப்பவைகள் பற்றிய விழிப்புணர்வில் இருந்தும் தான் ஆரம்பிக்கிறது.

சில நாட்களின் முன்பு நான் தொடர்பு கொண்டு உரையாடிய பொழுது ஒரு முதிய கலைஞர்  பின்வருமாறு கூறினார்: “ தம்பி நாங்கள்  எங்களைப் பழம்பெருமை மிக்க உன்னதமான சமூகம் என்று மார்தட்டிக்கொள்ளுகிறோம் ஆனால் இங்கு வந்து பார். எல்லாம் பொய். யுத்தம் ஓய்ந்த பிறகுதான் நாங்கள் எங்கடை உண்மையான அசிங்கமான நிர்வாணத்தைப் பார்க்கிறோம்”
தேவ அபிரா

நன்றி,

-GTN-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit