யாழ்ப்பாணமும் எயிட்சும் (AIDS/HIV)…..சிறப்புத் தொகுப்பு

பிறப்பு : - இறப்பு :

எம் சமூகத்தின் நன்மை கருதியும் இன்றைய காலத்தின் நிலைமை கருதியும் சிலவிடயங்கள் எவ்விதமான தணிக்கைகளும் இன்றி இக்கட்டுரையில் கையாளப்பட்டுள்ளது . 

உலகை உலுக்கும் இந்த மருந்தற்ற உயிர்க்கொல்லியானது இப்போது எங்களையும் பயமுறுத்த தொடக்கி விட்டது . பலர் இதன் பதிப்புக்களை உணரத்தொடங்கிவிட்டனர். எதோ எமது கலாசாரங்களை சரியாக கடைப்பிடிக்கிறோம் என்று மார்தட்டும் சமூகமே இந்த நோய் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டா? இது என்ன சளி தடிமன் போல காற்றாலா பரவுகின்றது? விழுமியங்களை சரியாக போதிக்கும் சமூகமே நீ அதனை ஏன் பின்பற்ற மறுக்கிறாய்?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது உனது மூச்சு எண்டு மூளையெல்லாம் ரீங்காரம் இடும் எம்தமிழ் சமூகமே நீ அதை சரியாக கடைப்பிடிகிறாயா? அப்படியெனில் இந்த நோய் வந்தது எவ்வாறு?

2007-775-failing-sex-education

இது என்ன நோய் என உன் பிள்ளை கேக்கும். உன் வியாக்கியானங்களை விலக்கி விட்டு உள்ளதை உள்ளபடி கூறு. இது எவ்வாறு பரவுகின்றது என்று கூறு …. இதனை எவ்வாறு தடுக்கலாம் என்றும் கூறு … மீண்டும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று பழைய பல்லவி பாடதே முன்னேறிய எம்சமூக பிள்ளைகளுக்கு உண்மையை உரை அவர்களை உணரச்செய்.

sex education

தப்பு பண்ணவேண்டாம் என்று அறிவுரை சொல் இல்லையேல் தப்பினை சரியாக செய்யச்சொல் ஏனெனில்  அந்த தருணங்களில் நீ முடிவினை எடுக்கமுடியாது , என்சமூகமே இந்த கசப்பான உண்மையை உணர்ந்து கொள் எமது குழந்தைகளை காப்பற்ற இந்த முயற்சியை நீ செய்தாகவேண்டிய காலம் இதுவே தான்.

stat hiv

2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தரவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் HIV தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 38 ஆக காணப்படுகின்றது.

இதில் வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்நாட்டில் தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 2 ஆகவும் காணப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் எத்தனை விதமாக சமூகச் சூழல் மாறிக்கொண்டிருக்கின்றது.

சமூகச் சூழலைப் பொறுத்த வரைக்கும் இம் மாற்றமானது ஆரோக்கியமாகக் காணப்படவில்லை என்ற காரணத்தினால் 2007 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியல் HIV தொற்று இன்னும் அதிகரித்துக் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டதாலும் யாழ்ப்பாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ இறுக்கமான நடைமுறைகள் காணப்பட்டதாலும் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தோ அல்லது யாழ்ப்பாணத்திலிருந்தான போக்குவரத்தோ இலகுவாகக் காணப்படவில்லை.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் இல்லாவிட்டாலும் பிறிதொரு இடத்திலிருந்து கட்டுப்பாடான பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு தலைமைத்துவம் யாழ்ப்பாணத்தைக் கண்காணித்துக் கொண்டிந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் சமூகச் சீரழிவுகள், தண்டனைக்குப் பயந்து பெரிதாக நடைபெறவில்லை. ஆனால், இன்றைய சூழல் கேட்போர் யாருமற்று கேளிக்கை களியாட்டங்களில் திளைத்துக் காணப்படுகின்றது.

கடற்கரைகள் சல்லாப இடங்களாக மாறிவருவதை அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது. தவறான பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் அதனால் கர்ப்பந்தரித்தல் , பிறக்கும் சிசுவை கிணற்றுள், பற்றைக்குள், உரப்பைக்குள் போடும் கொடூரம் என தினந்தோறும் காலையில் பத்திரிகைகள் தாங்கிவரும் செய்திகள் யாழ்ப்பாணத்தில் மாறிவரும் சமூகச் சூழலுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. வெளிநாட்டு மோகம் காரணமாகவோ அல்லது டாம்பீக வாழ்க்கையை எதிர்பார்த்தோ அல்லது கல்யாணச் சந்தையில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் விலை குறைவாக இருப்பதன் காரணமாகவோ ஏழைப் பெற்றோர் வெளிநாட்டு வரனைப் பற்றி நன்றாக விசாரிக்காது தமது பெண் பிள்ளைகளை ஏன் தற்போதைய சூழலில் ஆண் பிள்ளைகளைக் கூட வெளிநாட்டுக்கு திருமணம் செய்து அனுப்புகின்றனர். கிடைத்த அவ் வரன் நற்குணமுள்ள ஒரு வரனாக இருக்குமிடத்து யாவருக்கும் நன்மையே.

அல்லாதவிடத்து, தவறான நடத்தையுள்ள அல்லது பலருடன் பாலியல் தொடர்புகள் வைத்திருக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு வாழ்க்கைத் துணையாவதன் மூலம் HIV தொற்றும் வாய்ப்பு உள்ளது. எமது இன்றைய சமூகத்தில் பொருட்களின் விலை யானை விலை குதிரை விலை என்பார்களே அது போன்றே உள்ளது. உயர்மட்டத்து குடும்பங்களுக்கும் உயர் பதவியில் இருப்போரது குடும்பங்களுக்கும் பெரிதாகப் பாதிப்பில்லை.

ஆனால், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாடம் உழைத்து உண்ணும் அடிமட்ட மக்களும் இவ் விலை வாசியேற்றத்தால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்கள். இவ் விலைவாசியேற்றமானது கீழ்த்தர மக்களைப் பாதிக்கும்பொழுது வேறு எத்தொழிலுமே செய்யத்தெரியாத நிலையிலுள்ளவர்கள் உணவுத் தேவைக்கோ அல்லது அன்றாட அடிப்படைத் தேவைக்காகவோ பாலியல் தொழில் புரியவேண்டிய கட்டாயத்திலிலுள்ளனர்.

images

இலங்கையில் ஏறத்தாழ 30,000 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஆண் -பெண் பாலுறவு காரணமாக ஏறத்தாழ 85% தொற்று ஏற்படுகின்றது. ஆபாச இணையத்தளங்கள் , ஆபாச சினிமாப்படங்கள் என்பன இன்றைய யாழ்ப்பாணத்தில் மலிந்து காணப்படுகின்றன. இளம் தலைமுறையினர் அவற்றைப் பார்த்து இரசிப்பதோடல்லாமல் அதில் காண்பிக்கப்படும் காட்சிகளைப் போலத் தாமும் செயற்பட விளைகின்றனர். இதனால், HIV தொற்று ஏற்படச் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அத்துடன், திரையரங்குகளில் தமக்குப் பிடித்த நட்சத்திரங்கின் திரைப்படங்கள் புதிதாக வெளிவரும் போது அவர்களின் ‘கட்அவுட்’டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.

எத்தனையோ பாலகர்கள் பசிக்காகப் பால் வேண்டி அழ ‘கட் அவுட்’டுக்கு பாலாபிஷேகம் செய்வது மாறிவரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இன்று எமது யாழ்ப்பாணம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மூச்சுத் திணறி நிற்கின்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கலாசாரத்திற்கு எமது தனித்துவமான கலாசாரமும் மெல்ல மெல்ல மாறி வருவதை இளைஞர் , யுவதிகளின் ஆடை அலங்காரங்களைப் பார்த்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

இதென்ன ஜீன்ஸ் சேர்ட் அணிந்த ஆணும் பெண்ணும் நட்ட நடு வீதியில் கைகோர்த்துக் கொண்டு போகின்றார்களே யாரென்று பார்ப்போம் எனக் கிட்டச் சென்று பார்த்தால் அவர்கள் இருவரும் ஆண்கள் தான் என்ன வித்தியாசம் என்றால் ஒருவன் முடி வளர்த்து காதணி அணிந்திருப்பான் இதுதான் இன்றைய யாழ்ப்பாணச் சமூகம். அன்றைய யாழ்ப்பாணத்தில் அதவும் நகரத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியளவிலேயே விடுதிகள் அதாவது சுபாஸ் ஹோட்டல் போன்ற ஹோட்டல்கள் அமைந்திருந்தன.

ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி ஏன் முழத்துக்கு முழம் விடுதிகள் முளைவிட்டிருக்கின்றன. இவ் விடுதிகள் தங்க வருபவர்களின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து தங்குமிட வசதியை வழங்கினால் HIV தொற்றும் வீதத்தைக் குறைக்கலாம்.

உனக்கும் சில சந்தேகம் வரலாம் இதோ உனக்காய் நம் சமூகத்திற்காய் இந்த வழிப்போக்கனின் வழிகாட்டலை , விளக்கத்தினை ஏற்றுக்கொள். சரியாக வழிகாட்டு நீயும் சரியான வழியில் போ இல்லையேல் பூமியின் நரகம் உன் காலடியில் …………………….  இதோ என் விளக்கம் உனக்காய் .

எச்.ஐ.வி???

எச்.ஐ.வி எனும் வைரஸினால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும்.

எயிட்சை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குகின்றது. நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீ-ஹெல்பர் கலங்களையே (T-helper Cell) இது முக்கியமாகத் தாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ் தொற்றியிருக்கும் கலத்தில் பெருகிப் பின் அக்கலத்தை அழித்து வெளியேறுகிறது.

HIV-AIDS-Leaflet-Tamil_Page_2 HIV-AIDS-Leaflet--Tamil_Page_1

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ”’தேசிய புற்று நோய் நிறுவனம்”’ இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V – type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

how-do-you-get-hivaids-1 (1)

பரவும் முறைகள்

பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுறுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. எனவே ஆண் பெண் உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போதுகர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது. எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும். அதே நேரம் கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும், பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம். HIV தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல், வியர்வை, கண்ணீர், சிறுநீர் மற்றும் முத்தமிடல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல், கொசுக்கடி மூலமாகவோ பரவாது. இருப்பினும் பொது இடங்களில் சவரம் செய்து கொள்ளும் ஆண்கள் பொதுக் கத்திகளைப் பயன்படுத்தாமல் புதிய சவர அலகுகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

medicine

அறிகுறிகள்

HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது “ஃப்ளு சுரமாக” (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும். “எய்ட்ஸ்” வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எவ்வாறு உறுதிப்படுத்துவது?

முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை, எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை எனப்படுகிறது. எலைசா சோதனையானது எச்.ஐ.வி தொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு. வெஸ்டர்ன் புலொட் சோதனை இது உறுதிப்படுத்தும் சோதனையாகும். எலைசா சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் வெஸ்டர்ன் புலொட் சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் எச்.ஐ.வி பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.

எலைசா சோதனை, வெஸ்டர்ன் புலொட் சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் நேர்(+ )வகை காணப்பட்டால் எச்.ஐ.வி பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.

மருந்துகளின் பயன்? 

HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது. இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு உண்டு.

HIV யைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பொதுவாக ”’ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்”’ (Antireteoviral Drugs) என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக ஆன்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.

HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகைகளே பயன்படுத்தப்படுகின்றன. 1.Nucleoside analogues 2.NonNucleoside reverse trancriptasinhibirors 3.Protese inhibitors இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.

aids

நம்மை நாமே பாதுகாப்போம் 

எய்ட்ஸ் பாதுகாப்பு HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும். பிரதானமாக உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தலுக்கான பூரண முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.

ஒருவருக்கொருவர். உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் அவசியமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும். மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்

Safe Sex1

பிற பாதுகாப்பு முறைகளிலும் அவதானம் செலுத்துதல் வேண்டும். ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கருவுற்ற பெண்கள், “தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை” அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும். ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Aids_graph

அவர்களும் மனிதர்களே 

எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப்படாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தவறு. ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும்கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. எயிட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தெரிந்து தெளிவடைதல், ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர், அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும்.

மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ என்று வைத்தியர் முடிவெடுக்க வேண்டும். எயிட்ஸ் பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். தெரிவித்த பின் வேறு ஒரு பரிசோதனையை மேற்கொள்ளல் கூடாது. இது நோயாளிகளின் உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நோயாளிகளினால் நீதி மன்றத்தை அணுக முடியும். ஆனால் HIV . மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர்.

வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை எனும் போது ‘எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும்.” இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படுவது குறைவு. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, அல்லது தனியார் துறையோ தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும்.

20121005-083720-g

தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம். அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் HIV உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே HIV எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.

எய்ட்சு வந்து விட்டால்

மனம் தளராமல், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அமைதியாக வாழப் பழகிக் கொள்வதுடன், மிகுந்த ஓய்வு எடுப்பதுடன் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.

-நிலவன்- 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit