பொன்னின் குடம் உடைந்தால் என்னாகும்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காந்தக் குரலால் உலகெங்கும்
தடம் பதித்து உணர்வற்ற
மாந்தர் நெஞ்சிலும் இடம் பிடித்து
உணர்வேற்றி ஆரவாரமாய் எழுந்த
தமிழீழத்தின் எழுச்சிப் பாடகன் சாந்தனே!
அமைதியாய்ப் போனாலும் எமையாளும்
உணர்வுக் குரலில் நீ வேந்தனே போய் வா!

 

 

காந்தக் குரலோனே! சாந்தமாய் உறங்கு
அந்த மண் எங்களின் சொந்த மண்
என்றும் நீ எங்களின் சொந்த மண்!
மண்ணும் மொழியும் எமது கண்ணண்ணா
காலத்தைக் காலமாக்கிக் காலமானவனே!
நிம்மதியாய் உறங்கு! ஞாலத்தில் ஒரு நாள்
தமிழீழம் மலரும்! அன்று மீண்டும் உன்
உறுமல் குரல் ஓங்கி ஒலிக்கும்.

அண்ணனவன் எண்ணங்களுக்கு உயிரூட்டி
வண்ணமுடன் உணர்வும் தீட்டிப் பாடிய இசைக்குயிலே!
மண்ணையும் மக்களையும் திண்ணமுடன்
நினைவிருத்தி ஓயாது வீசிய விடுதலைப் புயலே!
கண்ணுக்குள் நின்றாடும் ஒளிவீச்சு மண்ணுக்குள்
சென்றதோ? விண்ணுக்குள் சென்றதோ? உன் உயிர் மூச்சு!

கானகத்து மரங்கள் எல்லாம் ஒன்றோடொன்று
உரசிக் கதறுகின்றதே! தங்கள் அன்புக்
கானக்குயில் மறைந்ததென்று கிளைக் கைகள்
அடித்துப் பதறுகின்றதே! மானத்துடன் வாழ்ந்த
எங்கள் மண்ணின் ஜீவனே! இனமான மறவர்களை
மண்ணுக்காய் ஈந்த மறவனே!

 
இருப்பவர்கள் இருந்திருந்தால் உன்
இறப்புக்கூட ஒரு சரித்திரம் இனி
என்று தீரும் எங்கள் மண்ணைப்
பிடித்த தரித்திரம்! அந்த மண்ணுக்காக
மரித்த மறவர் கொஞ்ச நெஞ்சமா?
அந்த மறவர் வரிசையில் நீயும் ஒரு சரித்திரம்!

புங்குடுதீவுத் தாயின் வயிற்றில் கருவானவன்
அங்கு பொங்கிடும் கடலலை போல் ஓயாது
எங்கும் ஒலிக்கும் குரல் கொண்டு உருவானவன்!
தங்கத் தமிழீழத் தாய் மண்ணுக்கு எருவானவன்
மண்ணின் குடம் உடைந்தால் மண்ணாகும்
பொன்னின் குடம் உடைந்தால் என்னாகும்? என்றும்
அது பொன்னாகும். பசும் பொன்னே போய் வா!
பெரும் புகழே போய் வா!

கவிஞர் த. மதி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*