தேசிய மாவீரர் நாள் அறிக்கை – விடுதலைப் புலிகள் (ஒலி வடிவம்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

 

இன்று மாவீரர் நாள். எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள் தொடர்பில் விடுதலைப் புலிகளால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

தேசிய மாவீரர் நாள் அறிக்கை – 2014
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27/11/2014

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

 

இன்று மாவீரர் நாள். எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள் .தமிழர்கள் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள்.

எமது மண்ணின் விடுதலைக்காக விதையாகிப் போன உத்தமர்களை எமது இதயக்கோவில்களில் வைத்து நெஞ்சுருகிப் பூசிக்கும் நாள்.

சாவுக்கோ சவால்களுக்கோ அஞ்சாது, தமது இறுதிக் கணம் வரை சத்திய இலட்சியத்தில் உறுதியாக நின்று, எமது மக்களின் வளமான எதிர்காலத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூரும் தேசிய நாள் .

வரலாற்றில் என்றுமே சந்தித்திராத பாரிய நெருக்கடியை எமது விடுதலை இயக்கம் எதிர்கொண்ட தருணத்தில், ஆன்ம பலத்தை அத்திபாரமாக்கி, எமது மக்களை காப்பதற்காக தமது உயிர்களை அரணாக அமைத்து போராடி வீழ்ந்த தமிழீழ தேசத்தின் வீரர்களை போற்ற நினைவு கூரும் நாள்.

அன்பிற்குரிய மக்களே!

எமது தேச விடிவிற்காக களமாடி வீரச்சாவடைந்த அக்கினிக் குழந்தைகள் உறங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும், எமது தேசத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படைகளால் இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவீரர் நாள் தமிழீழ மண்ணில் எதிரியின் அச்சுறுத்தலுக்கு

மத்தியிலும் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர்களை நினைவு கூருவதென்பது ஆண்டாண்டு காலமாகத் தொடரும் தமிழர் மரபும் பண்பாடும் ஆகும்.

தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த எமது மாவீரச் செல்வங்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் இன்று சிறிலங்காப் படைகளால் அனைத்துலக போர் சட்டங்களை மீறும் வகையிலும் மனித நாகரீத்திற்கு ஒவ்வாத முறையிலும் அழிக்கப்பட்டுள்ளன. மாவீரர்களின் ஈகத்தையும் அவர்கள் விட்டுச்சென்ற விடுதலை வேட்கையையும் என்றுமே அழிக்கமுடியாது என்பதை சிங்கள தேசம் உணரும் காலம் மிக விரைவில் உருவாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு சக்தியாக நிற்கும் எமது மக்கள் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற அவலங்களும் இழப்புக்களும் வலி நிறைந்தவை, வார்த்தைகளுக்குள் அடங்காதவை. ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப்பெரியது.

அளப்பரியது.

இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிங்கள அரசு ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை எமது மண்ணில் தீவிரப்படுத்தியுள்ளது. சிறிலங்காப் படைகளின் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், நில அபகரிப்புக்கள் மனிதஉரிமைச் செயற்பாட்டளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்கள், ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் என்பன உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.

தமிழீழ மண்ணை தொடர் இராணுவ முற்றுகைக்குள் வைத்திருந்து படிப்படியாக தமிழினத்தை இல்லாதொழித்து சிங்கள மயமாக்கலை வெற்றிகரமாக செய்து முடிப்பதே இன்றைய பேரினவாத சிங்கள அரசின் தீராத விருப்பாகும். இத்தனை நெருக்கடிக்குள்ளும் அச்சுறுத்தலுக்குள்ளும் மண்ணின் விடுதலை மீது எமது மக்கள் கொண்டுள்ள பற்றுறுதி எம்மை அழிக்கத் துடிப்பவர்களை வியப்பில் ஆழத்தியுள்ளது.

அன்பான மக்களே!

காலநீட்சியில் உலக ஒழுங்கிலும் வரலாற்றிலும் மீன்டும் மாற்றங்கள் வரலாம்.அந்த மாற்றங்களை எமது விடுதலையை வேகப்படுத்தும் வகையில் முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு. கூண்டோடு தமிழினம் அழிக்கப்பட்டதாக முழக்கமிட்டவர்களின் கனவு கலைந்துபோயுள்ளது. சத்திய இலட்சியத்திற்காகச் சாகத்துணிந்த நெருப்பு மனிதர்களை கவசங்களாகக் கொண்டவர்கள் நாங்கள்.

பல்வேறு காலகட்டங்களிலும் பாரிய அழிவுகளிலிருந்தும் இழபுபுக்களிலிருந்தும் நாம் மீண்டெழுந்தோம் என்பதே வரலாறு. இது எமது இனத்தின் தனித்துவம் ஆகும். சிறிலங்கா அரசின் இன அழிப்பு நிறுத்தப்பட்டு சிங்கள அடக்குமுறை அகலும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம். களங்களும் காலமும் மாறலாம். ஆனால், எமது மக்கள் எங்கள் வரலாற்று வழி வந்த தாயகத்தில் தம்மைத் தாமே ஆட்சி செய்து, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழும் வரை எமது விடுதலைப் போராட்டம் தொடரும். சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழ தேசத்திலேயே எமது மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை வரலாறு உறுதிசெய்துள்ளது.

இன்று எமது மண்ணில் சிங்கள அரசு இன அழிப்பின் ஒரு அங்கமாக எமது கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடையாள அழிப்பும், வரலாற்று மறைப்பும் திணிப்பும் தீவிரம் பெற்று வருகிறது. எமது தேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரால் உண்டான விளைவுகளால், உலகை வியக்கவைத்த எமது விடுதலை இயக்கத்தின் மகோன்னதமான போரியல் வெற்றிகள், சாதனைகளையாரும் இருட்டிப்புச் செய்யவோ வரலாற்றிலிருந்து அழிக்கவோ முடியாது.

சிங்கள தேசம் தாம் சுதந்திரமடைந்ததாக கூறிய காலப்பகுதி முதல், தமிழர் தேசத்தின் மீதான அடக்குமுறையையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டது. அவற்றின் தாக்கங்களில் மாற்றங்கள் உருவான போதும் ஒடுக்குமுறை இயந்திரம் தனது இலக்கினை நோக்கி தொடர்ந்தும் இயங்குகின்றது.

சுமார் நான்கு தசாப்த காலம் தொடர்ந்த எமது ஆயுதப் போராட்டம் சிறீலங்கா அரசின் அதியுச்ச இன அழிப்பு நடவடிக்கையை மட்டுப்படுத்தி அதனை நிலைகுலைய செய்தது. இந்த நிலையில் பொய்பரப்புரைகள் மூலம் உலக நாடுகள் சிலவற்றையும் அரசுகளையும் ஏமாறி சிறிலங்கா அரசு

மூர்க்கத்தனமாக தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட வேளையில் அதிலிருந்து மக்களை மீட்கவும், பாரிய உயிர் அழிவுகளை தவிர்க்கவும், எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை அனைத்துலக சமூகத்தின் முன் நகர்த்தவுமே எமது ஆயுதங்களை அமைதியாக்கினோம்.

ஆனாலும், சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது மண்ணை ஆக்கிரமித்து இராணுவமயமாக்கி நில அபகரிப்பையும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றது. தமிழ்மக்களின் கலாச்சாரம் பண்பாடுகளை சிதைத்தும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களையும் அரங்கேற்றி வருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இவற்றை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் மூலம் எமது மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியும், எமது தாயகக் கோட்பாட்டையும் தேசத்தின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் சிதைத்துவருகிறது.

தொடரும் சிங்கள பௌத்த பேரினவாத்தின் தமிழ் மக்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பின் இறுதி இலக்கு தமிழின அழிப்பே ஆகும். கடந்த காலங்களில் சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த சில நாடுகளும் அரசுகளும் இன்று சிங்கள அரசின் போலிமுகத்தை புரிந்திருக்கும் என நம்புகிறோம். அதேவேளை, உலக நாடுகளும், பொது அமைப்புக்களும் எமது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எமது தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீள அடைவதற்காகவு, மறுக்கப்பட்ட இறையாண்மையை பெற்றுக்கொள்வதற்காகவும், அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவை வேண்டிநிற்கின்றோம்.

எமது மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையும் இத் தருணத்தில் தெரியப்படுத்த விரும்புகிறோம். தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ்மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக

மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து எமது விடுதலை அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முன்வரவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை சிறிலங்கா அரசு புலம்பெயர் நாடுகளில் தாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், ஜனநாயக முறையிலும் செயற்படும் அரசியல், மனித உரிமை அமைப்புகளையும் தமிழ் செயற்பாட்டாளர்களையும் உணர்வாளர்களையும் பயங்கரவாத முத்திரை குத்தி பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பக்கத்துணையாக, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எமது அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முன்னிறுத்துகின்றது.

எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்த காலப்பகுதிக்கும் இன்றைய காலப்பகுதிக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மானுட தர்மத்திற்கும் விடுதலை கோட்பாடுகளுக்கும் எதிரான முறையிலும், சிறீலங்கா அரசின் பொய்ப்பிரச்சார வலைகளுக்குள் சிக்கியும், எமது விடுதலை இயக்கத்தை உலகநாடுகள் பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை எமக்கு கடும் ஏமாற்றத்தை உண்டுபண்ணியது. அத்துடன், எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை கேட்டறியமால், சிறீலங்கா அரசின் ஒரு பக்க போலிப் பிரச்சார பொறிக்குள் அகப்பட்டு, எமது விடுதலை இயக்கத்தின் மீது தடைவிதித்தமை எமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது.

ஆயினும், எமது விடுதலை இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இணைத்தமை தவறு என்ற அடிப்படையில், எமது இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய பொது நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இது எமக்கு நிலையான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறது.

இவ்வாறான விடயங்களை கவனத்திற்கொண்டு, நீதியான முறையில் செயற்பட்டு ஏனைய நாடுகளும் எமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும ; என கேட்டுக்கொள்கிறோம். நாம் வன்முறையில் விருப்புக் கொண்டவர்களோ, எந்த தேசத்திற்கும், இனத்திற்கும், மதத்திற்கும்

எதிரானவர்களோ அல்ல. நாம் போரை விரும்புவர்களும் அல்ல.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காகவும் இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காகவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நாம் ஆயுதம் ஏந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். சிறிலங்கா அரசின் உண்மை முகம் இன்று சர்வதேச அரங்கில் அம்பலப்படுதத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான இதயசுத்தியுடனான அர்த்தம் பொதிந்த எந்த நடவடிக்கைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் எடுக்கவில்லை என்பதுடன் , இலங்கைத் தீவில் நீதியுடன் கூடிய நிலையான சமாதானம் தோன்றுவதற்கு எதிரானவர்கள் யாரென்பதையும் உலக நாடுகள் கவனத்திற்கொள்ளும் என நம்புகின்றோம்.

சகல சிங்கள அரசுகளும் இதனையொத்த மனப்பாங்கையே கொண்டுள்ளதால், சிறீலங்கா அரசென்பது தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்காதென்ற புரிதலின் அடிப்படையில் அனைத்துலகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே, இலங்கைத் தீவில் நீதியுடன் கூடிய நிலையான சமாதானம்

உருவாகுவதற்கு வழிவகுக்கும் என நாம் கருதுகிறோம்.

எமது தேசத்தின் மீதான இன அழிப்பு நிறுத்தபபடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை, அனைத்துலகம் விரைந்து மேர்கொள்ளவேண்டும். அத்துடன் எமது மக்கள் தமது தாயகத்தில் தம்மைத் தாமே ஆட்சி புரிந்து, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதற்கான அரசியல் தீர்வுக்கான

பொறிமுறை ஒன்றை சர்வதேசம் ஏற்படுத்த முன்வந்தால் அதனையும் வரவேற்போம்.

அண்மையில் ஸ்கொட்லாந்திலும் கற்றலோனியாவிலும் இடம்பெற்றது போன்று மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான சர்வசன வாக்களிப்பை தமிழீழத்தை அடியாகக் கொண்ட மக்களிடத்தில் ஐ.நா மேற்பார்வையில் நடாத்த வேண்டும் என ஜனநாயகத்தின் மீது விருப்பும் மதிப்பும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக ரீதியில் தமது உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமான அரசியல் இயங்குவெளி என்பது வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உதவும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2015ல் இடம்பெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி அண்மைய வாரங்களில் சிறீலங்காவில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் என்பது, ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் சிங்கள பௌத்த பேரினவாத வாக்கு வங்கியை இலக்கு வைத்தே தமது காய்களை நகர்த்துவதை வெளிப்படுத்துகிறது.

இவர்கள் யாரும் தமிழர் தேசத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழினத்தை பொறுத்தவரை இது ஆச்சரியத்திற்குரியதுமல்ல. இத்தகைய நிகழ்வுகள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மாயைகளை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட மகாவம்ச மனப்பாங்கு தற்போதும்

தீவிரத்துடன் தொடர்வதையே எடுத்து காட்டுகிறது. ஆகவே தமிழ ; மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கமோ அல்லது ஆட்சிபீடத்தில் அமரமுயலும் தரப்புகளோ இதயசுத்தியுடனான எண்ணப்பாட்டினை கொண்டிருக்கவில்லை என்பதனையே வெளிப்படுத்துகின்றது.

ஆழமான அர்ப்பணிப்புடன் நிறைந்த எமது மௌனிப்புக்குள் புதைந்திருக்கும் வெற்றியை பலர்புரியாமல் இருப்பதை நாம் அறிவோம். இதனை எதிர்கால வரலாறு நிச்சயமாக உணர்த்தும் என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம். சிங்கள தேசம் எமது மக்கள் மீது தொடுத்துள்ள உளவியல் போர், எமது சமூகத்தின் ஒருசாரரின் மத்தியில் தோல்வி மனப்பான்மையை உருவாக்கியுள்ளது.

இது மாவீரர்களின் அதி உன்னத அர்ப்பணிப்புகளால் எமக்காக உருவாக்கப்பட்ட வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் சரிவர பயன்படுத்துவதற்கு தடைக்கல்லாக இருக்கிறது. எமது போராட்டம் ஆசியாவை மையமாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்கை மாற்றியிருக்கிறது. உலக வல்லரசுகளின் மூலோபாயங்களை மாற்றியமைத்திருக்கிறது. இதனால் இந்து சமுத்திரமும் தென்னாசியாவும் முன்னரை விட முக்கியத்துவம் மிக்கவையாக பூகோள அரசியலில் தோற்றம் பெற்றுள்ளன. இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் உலக வல்லரசுகளின் தேசிய நலனை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியமானதாக உருப்பெற்றிருக்கிறது.

ஆதலால், தமிழர் தேசத்தின் தேவையென்பது அனைத்துலகத்திற்கு அவசியமாகிறது. இதனை சரிவரப் புரிந்து, மதிநுட்பத்துடன் காய்களை நகர்த்துவதே எமது தேசத்தின் நலனையும் பூர்த்தி செய்வதற்கு துணைபுரியும்.
எனவே, எமக்கு பலமாக திருப்பப்பட்டுள்ள பூகோள அரசியலை புரிவதோடு, தமிழர் தேசத்தின் நலனை பூர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து, அதனை அமுல்படுத்துவதற்காக விசேட பொறிமுறைகளை வகுத்து, விவேகத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பும் தேசியப் பணியும் அனைவருக்கும் உண்டு.

எமது மாவீரர்களினதும் மக்களினதும் தியாகங்களை மனதிலிருத்தி, எமது தேசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்குள் கரைந்து போகாமல் அரைகுறைத் தீர்வுகளுக்குள் எமது மக்களின் உண்மையான அபிலாசைகளை புதைத்து விடாமல் செயற்படவேண்டும்.

கனிந்திருக்கும் காலத்தையும், காத்திருக்கும் வாய்ப்புக்களையும் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டுமானால், சுய நலன், அமைப்பு நலன்கள், கட்சி நலன்கள் ஆகியவற்றை கடந்து, எமது மக்களுக்காக நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் பணியாற்றுமாறு தமிழர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

ஈழத்தமிழர்களுக்குஎதிராக சிங்கள பௌத்த பேரினவாத அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தமிழக மக்களின் போராட்டங்களும் வலிமையானவை. ஆயினும், இன அழிப்புக்கு உள்ளான எமது மக்களுக்கு இன்னமும் நீதி

கிடைக்கவில்லை.

எமது இனத்தை அழிக்கும் முகமாக சிங்கள இராணுவமும், பௌத்த பேரினவாத சிந்தனையுடைய சிங்களவர்களும் எமது மண்ணை ஆக்கிரமிப்பதிலும் அபகரிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடருமாயின் நாம் எமது மண்ணை விரைவில் இழப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அடையாளமேயின்றி அழிக்கப்பட்டு விடுவார்கள்.

எனவே எமது போராட்டத்தை வீச்சாக்கும் முகமாக தமிழகத்திலுள்ள செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கிடையில் பொது செயற்பாட்டுத்தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை அன்புடன் வலியுறுத்த விரும்புகிறோம். தமிழர்களின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் ஒற்றுமை என்பது, தென்னாசியாவிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் பெரும் சக்தியாக தமிழினத ;தை மாற்றும் வல்லமை

உடையது.

எனவே, இந்த பொதுச் செயற்பாட்டுத்தளத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை காலம் தாழ்த்தாமல் செயற்படுத்துவதோடு எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை இந்திய அரசுக்கு புரிய வைப்பதற்கும் தமிழக உறவுகள் ஆகிய நீங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைந்து போராடவேண்டுமென்றும் அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.

எமது அன்பிற்குரிய மக்களே!

நாம் போரில் பின்னடைவுகளைச் சந்தித்திருப்பினும் எமது போராட்டத்தில் முன்னகர்ந்துகொண்டே இருக்கிறோம். எம்மினத்தின் இருப்பின் வேர்களை சாய்க்க முயன்ற சிங்கள அரசபயங்கரவாதம் வெற்றி மமதையில் மிதக்கும் போதே, அவர்களுக்கு மீள முடியாத நெருக்கடிகளை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். இதன் விளைவுகளை சிங்கள அரச பயங்கரவாதம் நீண்டகால நோக்கில் அனுபவிக்கப்போகிறது.

நிச்சயமாக அது நிகழும் . எமது மாவீரர்களின் ஈகமும் மக்களின் அர்ப்பணிப்பும் வலிமையானவை ஆற்றல் மிக்கவை. அது வீண்போகாது.எமது போராட்டத்தை வீச்சாக்க அனைத்து மக்களினதும் அமைப்புக்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிகவும் அதிகமாகத் தேவைப்படும். அதற்கு ஏற்ற வகையில் அனைவரும் எங்களை நாங்களே தயார்படுத்திக்கொள்வோம்.

தாயகத்தில் சமூக கட்டமைப்பும் தேசக் கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளதால், இன்னல்படும் எமது மக்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் மனிதாபிமான ரீதியிலான உதவிகளை பன்மடங்காக அதிகரிக்குமாறு இந் நேரத்தில் புலம்பெயர்ந்த உறவுகளிடம் வேண்டுகின்றோம்.

அனைத்துலக சமூகத்துடனான இராசதந்திர உறவுகளை விரிவுபடுத்துவதோடு, அந்தசெயற்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துமாறும் தமிழீழ விடுதலைப் போராட்ட அனுபவங்களை கற்றறிந்து, எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும், சிறீலங்கா அரசு எமது தேசத்துக்கு எதிராக மேற்கொள்ளும் இனஅழிப்பையும் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு இளைய தலைமுறையை வேண்டிக்கொள்கிறோம்.
எமது அன்புக்குரிய இளையவர்களே!

எத்தகைய சவால்களைக் கண்டும் பின்வாங்காதீர்கள். தன்னம்பிக்கையுடனும், தளராத துணிவுடனும், விடாமுயற்சியுடனும் இலட்சியப் போராட்டத்தை முன்நகர்த்தியபடியே இருங்கள். தமிழினம் விடுதலைப்பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உங்களின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறோம்.

சத்திய வேள்வியில் சமராடி சரித்திர சாவையணைத்து எங்கள் தேசமெங்கும் விதையாக உறங்குகின்ற மாவீரர்களின் தியாகங்களை மனதிலிருத்தி, வணக்கம் செலுத்தும் இப் புனித நாளில் அவர்களின் பெருவிருப்பை எமதாக்கி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் எமது தமிழீழ தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உழைப்போமென உறுதி எடுத்துக் கொள்வோம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*