தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…. ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.

இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப் பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27 ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்… என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit