தமிழர்களை தங்கள் வரலாற்று தாயகத்திலிருந்து ஏதிலிகளாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசு தீட்டியுள்ள திட்டம் காவிரி டெல்ட்டாவரை காத்திருக்கும் பேரழிவு – ஈழத்து நிலவன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது.

தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ என தமிழகத்தை நாசமாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எந்த ஒரு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் தமிழகம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த திட்டத்தால் ஆலங்குடி, பேராவூரணி, கந்தர்வகோட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய சட்டமன்றத் தொகுதியின் பகுதிகள் நேரடியாகவும், உடனடியாகவும், அதற்கப்பால் உள்ள பகுதிகள் காலப்போக்கிலும் மிகப் பெரும் பேரழிவைச் சந்திக்க உள்ளது..!

பல லட்சம் விவசாயிகளின் வளமான நிலங்களும், விவசாயத் தொழிலும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் என்பது மிக எளிய ஹைட்ரோ கார்பனாகும்.

மீத்தேன் ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும்.

இந்தப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க 2000 அடிக்கு மேல் போர்வெல் அமைக்கவேண்டும்.
தண்ணீரை சுத்தமாக வெளியேற்ற வேண்டும் .
பின்னர் அந்த இடத்தை வெற்றிடமாக்கிய பின்னர்தான் எரிவாயுவை எடுக்க முடியும் .!

வெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டதாக இருக்கும். கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இருக்கும். குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், மர்றும் பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கும்.

நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டுபோகும்.

ஆள்துளை கிணற்றில் இருந்து வெறியேற்றப்படும் கதிரியக்க தன்மையுடைய அமில கரைசல் கழிவு நீர்!

” எரிவாயு எடுப்பதற்காக வெளியேற்றப்படும் நீர் நச்சு கலந்து வெளியேறும். அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள். நிலத்தடியில் இருந்த நீரையும், வாய்க்கால், ஆறு, குளம், ஓடைகளில் உள்ள நீரையும் நச்சு நீராக மாற்றி விடும்”

புல் பூண்டு கூட மண்ணில் முளைக்காது!

ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை தற்செயலாக சுவாசிப்பதோ அல்லது உட்கொள்ளுவதோ மிகவும் ஆபத்தானது. ரேடியம் 226 என்ற கதிரியக்கம் வெளிப்படுத்தும் தனிமத்தால் புற்றுநோயும் மக்களை தாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் போன்ற அவயவங்களும் தோல், சுவாச நோய்கள் அதிகமாக ஏட்படும். .

ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. மூடிய அறைகளுக்குள் இவை எரிந்தால், மிகவும் ஆபத்தான கார்பன்-மோனாக்சைடு உருவாகும். இம்மாதிரியான காரணங்களால்தான் வளைகுடா நாடுகளில் எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மாதங்கள் வேலையும், இரண்டு மாதங்கள் ஒய்வும் வழங்கப்படுகிறது. இவர்களின் ஆயுட்காலமே குறைந்து போகும் என்பதுதான் உண்மை.

தமிழர்களை தங்கள் வரலாற்று தாயகத்திலிருந்து ஏதிலிகளாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசு தீட்டியுள்ள திட்டத்தில் முக்கிய கூறு தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகும்.

காவிரி டெல்ட்டாரை காத்திருக்கும் பேரழிவு திட்டமான மீத்தேன் ஆகட்டும் , சிறிது காலங்களுக்கு முன்பு நமக்கு பரிச்சியமான ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு ஆகட்டும், இப்பொழுது புதிதாக வரும் “ஹைட்ரோ கார்பன்” திட்டமும் எல்லாமே ஒரே பொருளை உணர்த்தும் வேறு வேறு பெயர்கள். “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம். பொருள் மிக எளிமையானது அனைத்தும் “நீர்கரிம வாயுக்கள்” என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்.

gas

gass

முதலில் இயற்கை எரிவாயு என்று வந்தார்கள். பின்பு நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்தில் நிலத்தை பறித்தார்கள்.பின்பு வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் முகமூடி அணிந்து வந்தார்கள். இப்பொழுது ஹைட்ரோ கார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் தந்திரம்.

பொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும் . இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் CH4 ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது . இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd. இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவரின் நிறுவனம். அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்.

நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு நம்மில் யாரை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுத்தது?.

பத்து நாட்களாக பதவிக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்ட ஒருவர் கூட இதை பற்றி வாய் திறக்கவில்லை! மக்கள் தங்களுக்காக போராடுகிறார்கள்… மக்களுக்காகப்போராடவேண்டிய அரசியல் வாதிகளோ தங்கள் பதவிகளுக்காகப் போராடுகிறார்கள்..

நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரி முனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள் இந்த வியாபாரிகள். நமது வளங்களை, வாழ்வாதாரங்களை, வாழ்க்கையை, வருங்காலத்தை, வழித்தோன்றல்களைக் காத்துக்கொள்ள தொடர் போராட்டங்களைக் கையிலெடுப்பது.

தமிழகத்தில் மக்கள் அனைவரும் கட்சி ,சாதி ,மதம் கடந்து எதையும் அடையாளப்படுத்தாமல் ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் … ஒன்றாக இணைந்து தாய் தமிழகத்தை காப்போம்.

– ஈழத்து நிலவன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*