பாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம் ……..(படங்கள் )

பிறப்பு : - இறப்பு :

யாழ் குடாவினதும், வடக்கினதும் மக்கள் தமது நலன்களைப் பேணத் தாமாகத் தெருக்களிலும், எங்கும் இறங்கிக் போராடவேண்டிய காலம் வந்துவிட்டது போலிகளையும், ஏமாற்றுக் கும்பல்களையும் தூக்கி எறியவேண்டிய காலம் வந்துவிட்டது. உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து கொண்டு அரசியல் பேசுகின்ற, எழுதுகின்ற பெருந்தகைகளே!

இன்று வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், முகநூல், twiter போன்றவற்றில் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும், ஏனையவைகள் பற்றியும் எத்தனை ”ஆய்வு”களையும், அறிவுறுத்தல்களையும் நீங்கள் செய்கிறீர்கள்?

அபிவிருத்தி பற்றிப் பேசுகிறீர்கள், தமிழரின் உரிமைகள் பற்றிப் பேசுகிறீர்கள், நீங்கள் சிந்தித்து மக்களின் நலன்கள் கருதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதாகக் கூறுகின்றீர்கள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மக்களிடம் சென்று சேவையாற்றுவதாகப் பேசுகின்றீர்கள், எழுதுகின்றீர்கள்! வேறு ஏதோ ஏதொவெல்லாம் பேசுகிறீர்கள். பெரும் அறிவுறுத்தல்களைச் செய்வதாகக் காட்டியும் கொள்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் எல்லாம் யாழ்குடாவும், வடக்கும் எதிர்நோக்குகின்ற மிக முக்கிய பிரச்சினையான விடயங்களைப் பேசாது ஏமாற்றுப் பேச்சும், எழுத்து எழுதும் போலிக் கும்பல்களே!

பெருந்தகைகளே! நீங்கள் பேசுகின்றவைகள், எழுதுகின்றவைகள் எதற்காக? எவற்றைத் தமிழர்கள் அடைய? வடக்கில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியுமானால்தான் நாம் எமது அபிவிருத்தியையும், உரிமைகள் பற்றியும் பேசவும், எழுதவும் முடியும்.வடக்கில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியாதாயின், வடக்கின் அபிவிருத்தி, மக்களின் உரிமைகள் என்பவைகளைப் பற்றிப் பேசுவதெல்லாம் ஏமாற்றுப் பேச்சே! மக்களை ஏமாற்றி, குறுகிய கால கண்ணோட்டத்தில் நீங்கள் அரசியல், மற்றும் இலாபங்களைத் தேடும் ஏமாற்று நடிவடிக்கைகளே!

யாழ் குடா மக்களும், வடக்கு மக்களும் இன்று மூன்று மிக முக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவையாவன:

1. யாழ்குடா நாட்டின் நில அடி நீரில் கழிவு எண்ணெய் *Waste oil) கலப்பது;

2. யாழ் குடா நாட்டின் நில அடி நீரானது உப்பு நீராக மாறிவருவது;

3. யாழ்குடாவினதும், வடக்கினதும் நில அடி நீரி்ல் உரம், மற்றும் பூச்சி கொல்லிகள், புல்- பூண்டு அழிப்பு மருந்துக்கள் ஏனையவைகளின் இரசாயனப் பொருட்கள் கலப்பது.

இவற்றுள் முதல் இரண்டுமே மிகப் பெரும் பிரச்சினைகள் ஆகும்.

oil well

1. யாழ்குடா நாட்டின் நில அடி நீரில் “கழிவு எண்ணெய்” கலப்பது

யாழ் குடா நாட்டில் ”கழிவு எண்ணெய்” நில அடி நீரில் கலப்பது, பின்வருவனவற்றால் நடைபெறுகிறது:

i) சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையக் கழிவு எண்ணெய்கள் நில அடியினுள் விடப்பட்டு வந்தமையும், இன்று விடப்படுவதும்;

norther power

ii) யாழ் குடாவினதும், வடக்கினதும் ஆயிரக்கணக்கான Service Stations. Garages என்பவைகளில் கழிவு எண்ணெய்கள் நிலத்தில் விடப்படுவது,

iii) வீடுகளில் தனியார்களின் வாகனங்களின் கழிவு எண்ணெய்கள் நிலத்தில் விடப்படுவது.

Vehicle-Service-Station-for-IMMIDITAE-sale51f7a278007c85c77258

இன்று ஒருபுறத்தில் சுண்ணாகம், ஏழாலை, மல்லாகம் மேற்கு வரை கழிவு எண்ணெய் நில அடி நீரில் பெருமளவில் கலந்து விட்டது.
இதனால், 600இற்கு மேற்பட்ட கிணறுகளின் நீர் மனிதர்கள், மிருகங்கள், தாவரங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மக்களும், அவர்களின் எதிர்காலச் சந்ததியினரும் இனி எங்கே இடம்பெயர்ந்து தமது வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கவுள்ளனர்?

இதற்கு அரசு எவைகளை இந்த மக்களுக்குச் செய்து கொடுக்கவுள்ளது?

அதுவரைக்கும் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை என்ன?

இதைவிட எந்தெந்தப் பகுதிகளின் எத்தனை ஆயிரம் கிணறுகளில் சிறிய அளவுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலக்க ஆரம்பித்துள்ளன என்பதும் எவருக்கும் தெரியாது.

இதனைப் பரிசோதிக்க அரச திணைக்களங்களும் தம்மால் முடியாது எனக் கூறியுள்ளன. பரிசோதனைகளைச் செய்யத் தேவையான இரசாயனப் பொருட்கள், ஏனையவைகள் தம்மிடம் இல்லை என அவை கூறுகின்றன

ஆனால், அவற்றை இன்றுவரை யாழ்குடாவின் அரசியல்வாதிகளோ, நிர்வாகிகளோ பெற்றுக் கொடுக்கவுமில்லை!!

ஆனால். மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், நில அடி நீரில் ஏற்கனவே கலந்த கழிவு எண்ணெய்களையும், இனிக் கலக்கப் போகும் கழிவு எண்ணெய்களையும் நிரந்தரமாகக் குறுகிய காலத்தில் நீக்க எந்தவித முறையும் இங்கு இல்லாதிருப்பதாகும்!

இவைகள் தொடர்பாக பிரதேச சபைகளோ, மாகாண சபையோ, அல்லது அரசின் சம்பந்தப்பட்ட திணைக் களங்களோ, அரசியல்வாதிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கழிவு எண்ணெய்கள் எப்படிச் சேமிக்கப்படவேண்டும், இதை எப்படி முகாமைப் படுத்துவது, அவைகள் எங்கு எவர்களிடம் தவறாது கையளிக்கப்பட்டு, அவை எப்படிச் சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்துவது, அல்லது அழிப்பது என்பது எவருக்கும் தெரியாத விடயமாகவே இருக்கிறது. இவைகள் பற்றி அரச, மற்றும் நிர்வாகங்கள் எதனையும் அறியாத, தீர்வுகாண முற்படாத நிலைதான் காணப்படுகிறது.

அப்படியானால், இவைகள் ஏன் செயற்படுகின்றன? இவைகள் உண்மையில் எவர்களின் நலன்களைப் பேணச் செயற்படுகின்றன. இந்த அமைப்புக்கள், திணைக்களங்கள் இந்த முக்கிய பிரச்சினையினைக் கையாள முடியாதவையாயின், அவை ஏன் உருவாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோருக்கு மக்களின் வரிகளுடாகச் சம்பளங்கள் வழங்கப்படுகின்றன?

2. யாழ் குடா நாட்டின் நில அடி நீரானது ஊப்பு நீராக மாறிவருவது;

யாழ்குடாவின் விவசாய, குடியிருப்பு நிலங்களில் கிணற்று நீர் இன்று உப்பாகி வந்துவிட்டது. வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுண்ணாகம், கந்தரோடை எனப் பரந்து இன்று உடுவிலின் வட, மத்திய பகுதிகளிலும் கிணறுகளின் நீர் உப்பாகி விட்டது!

KKS Cement factory region z_bus800

எமது ”வித்தகர்கள்” இதற்குப் பல விளக்கங்களைக் கூறும்பொழுதும், இப்பகுதிகளின் கிணறுகள் உப்பாகி வருவதற்கு முதல் முக்கிய காரணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழில்சாலைப் பகுதியிலும், அதன் சுற்றத்திலும், 100 – 200 அடி ஆழத்திற்கு சுண்ணாம்புக் கல் தோண்டி எடுக்கப்பட்டதாகும். போரின்போது சீமெந்துத் தொழிற்சாலை மூடப்பட்டு, மக்கள் விரட்டியடிக்கப்பட்டபின்னர், இப்பகுதிகளில் இராணுவத்தினரும், தனியார் கொம்பனிகளும், ஏனையவைகளும் சுண்ணாம்புக் கல் கிண்டி எடுத்துத் துறைமுகமூலமாக வெளியே எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடாந்து நடைபெற்று வந்துள்ளன.

இதன் காரணமாக, தெல்லிப்பழை மற்றும் பகுதிகளின் கிணறுகள் உப்பு நீராக இன்று மாறியுள்ளன!
இதற்குச் சிறந்தவொரு உதாரணம், தெல்லிப்பழையின் ”துர்க்காபுரம்” என இன்று அழைக்கப்படும் குடிமனைப் பகுதியாகும்!இங்கு மீள் குடியேற்றம் நடைபெற்று கடந்த இரண்டு வருடங்களுள் ஏறக்குறைய 35 கிணறுகள்வரை உப்பு நீராகிய நிலையில், அவ்விடத்தினர் குழாய் கிணறுகள் தோண்டப்பட்ட தனியாரின் கிணறுகளுக்குச் சென்று குடிநீர் பெற்று வாழ்ந்து வந்தனர்.கடந்த ஒருசில நாட்களாக இப்பகுதிகளில் பெய்த மழையின் பின்னர், நேற்று முதல் இந்தக் கிணறுகளும் உப்பாகிய நிலையில், குடிநீருக்கு இப்பகுதி மக்கள் பிரச்சினையை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்!

இதைப் போலவே, உடுவில் வடக்குக் கிராம சேவையாளர் பகுதியின் பல கிணறுகள் மழையின் பின்னர் உப்பாகி விட்டன!இப்படி எத்தனை பகுதிகள் இந்தப் பிரச்சினைகளை எதிர்நொக்க ஆரம்பித்துள்ளன என்பதையே அரசியல்வாதிகளும், ஆளும் அமைப்புக்களும் அறியாத, தெரியாத நிலையில்தான் உள்ளன! இந்தநிலையில், காங்கேசன்துறை சீமெந்துச் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பித்து சில நூறு தமிழர்களுக்கும், பல நூறு சிங்கவர்களுக்கும் வேலை வாய்ப்பை அளிப்பதுடாக பொருளாதாரத்தை வளர்க்க முற்படும் அரசியல்வாதிகளையும், அவர்களது கட்சிகளையும் என்னவென்று கூறலாம்?

இவர்கள் அபிவிருத்தி என்ற மாயைத் தோற்றத்தின்கீழ் செய்வது வருபவை, உண்மையில், முழு யாழ்குடா மக்களையும் வெகு சீக்கிரத்தில் யாழ் குடாவைவிட்டு வெளியே கலைப்பதுதான்!
இந்தக் கோஷடி இப்படி ஏமாற்றும்போது, மற்றைய பெரும் ஏமாற்றுக் கோஷ்டியானது, தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரப்போவதாகக் கூறி, தாம் ஜனாதிபதித் தேர்தலில் என்ன நிலைப்பாட்டினை தம்ழ் மக்களின் நலன்களைப் பேண எடுக்கக் கடுமையாகச் சிந்திப்பதாகக் கூறுகிறது!

கைக்கூலித் தமிழ் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளையும், போலி ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன! இந்தக் கோஷ்டியானது யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொள்ளாத கும்பலாகும்! இந்தநிலையில், யாழ் குடா மக்களுக்கு இன்று ஜனாதிபதி தேர்தல்தான் முக்கியமானதா, அல்லது ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதுதான் முக்கியமானதா, அல்லது ”பொது அணி” என்ற கோஷ்டியின் வேட்பாளர் ஜனாதிபதியாக ஆக்குவதுதான் முக்கியமானதா? அல்லது பிறவொரு சாரார் விரும்பும் ”ஆட்சி மாற்றம்” தான் எமக்கு முக்கியமானதா?

இல்லவேயில்லை! இவை எதுவுமேயில்லை!!

யாழ்குடாவினதும், வடக்கினதும் மக்கள் தாம் தமது நிலத்தில் நிரந்தரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்குவதுதான்முக்கியமானது! அந்தச் சூழ்நிலையை உருவாக்கிப் பேணுவதுதான் முக்கியமானது! இந்தநிலையில், மக்களை ஏமாற்றும் கூட்டங்கள் ஜனநாயகம், அபிவிருத்தி எனப் போலிப் பேச்சுக்கள் பேசி,, ஜனாதிபதித் தேர்தல் பக்கம் மக்களின் கவனத்தை இழுத்துத் தமது இலாபங்களை அடைய முற்படும் காலத்தில், நாம் எமது இருப்பை உறுதிசெய்ய வைப்பதற்கான பேராட்டங்களை டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கவேண்டியுள்ளது!

தெருக்களிலும், அரச நிர்வாக மையங்கள் முன்பும், திணைக்களங்கள் முன்பாகவும் யாழ் குடா மக்களினதும், வடக்கு மக்களினதும் போராட்டங்கள் டிசெம்பர் எட்டாம் திகதியிலிருந்து தொடர நாம் செயற்படவேண்டும்!

நீங்கள் தொடர்ந்தும் எமது பகுதிகளில் வாழ விரும்பினால், இக்கருத்துக்களைப் பற்றியும், டிசெம்பர் 8 முதல் வெகுஜனப் போராட்டங்களை ஆரம்பித்து நடாத்தவேண்டிய செய்தியையும் சகலரும் அறியச் செய்யுங்கள்!! உங்களது பங்களிப்புக்கும், உதவிக்கும் ஆயத்தமாகுங்கள்!! இப்பிரச்சினைகள் எனது பகுதியில் இல்லைத்தானே என்ற சுத்த சுயநலநோக்கில் நீங்கள் செயற்பட்டால், நீங்கள் உண்மையில் வெறும் முட்டாள்கள் என்பதும், உங்களைப் போன்றவர்கள் பெருமெண்ணிக்கையில் இருந்தால், இலங்கைத் தமிழர்கள் ஓர் அழியும் சமூகம், அழியவேண்டிய சமூகம் என்பதும் அசைக்கமுடியாதபடி உறுதிப்படுத்தப்படும்!!

நன்றி அ.உதயகுமார்
-நிலவன்-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit