
இன்று நடைமுறையில் இருக்கும் இலங்கையின் அரசியல் யாப்பானது தமிழ்பேசும் மக்களுக்கு முற்றிலும் பாதகமான வகையிலேயே பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த யாப்பில் இனப்பிரச்சனையை கையாள்வதற்கு ஒருசில சாதகமான அம்சங்கள் இருந்தாலும், அதனை முற்றிலும் பாதகமான வகையில் கையாள்வதற்கான மனப்பாங்கும் செயல்முறைகளுமே உண்டு. உதாரணமாக இனப்பிரச்சனையை தீர்க்க விரும்பும் ஒருவர், அதற்கான மனத்திடம் கொண்ட ஒருவர் ஜனாதிபதி பதவியில் அமருவாரேயானால் அவரால் தனது அதிகாரங்களை பயன்படுத்தி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் உண்டு. ஆனால் பதவியில் அமரும் ஜனாதிபதி அவ்வாறு நல்நோக்கில் தமது அதிகாரத்தை பயன்படுத்தாமல் அவ்வதிகாரத்தையே இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக கொண்டு செயற்பட்டு வந்துள்ளனர். 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி முறைமை நடைமுறைக்கு வந்ததிலிருந்து இற்றைவரை பதவியில் அமர்ந்த அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் அதனையே செய்து வந்துள்ளனர்.
ஆதலால் யாப்பில் சாதமான ஏற்பாடுகள் இருப்பினும் கூட சிங்கள இனவாத மனம் அதனை தமக்கு சாதகமான வகையிலேயே கையாளும் இயல்பு கொண்டது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். இந்த வகையில் யாப்பை விடவும் இனவாத மனம் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படத்தக்கது. மேலும் உதாரணமாக 1947ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பின் கீழுள்ள 29வது பிரிவின்படி சிறுபான்மை இனங்களுக்கு பாதகமான சட்டங்களை இயற்ற முடியாத வகையில் அப்பிரிவு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் அப்பிரிவு யாப்பில் இருந்தபோதும் அப்பிரிவை மீறி 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதாவது 3இல் 2 பெரும்பான்மை பலத்தால் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரிவை சாதாரண பெரும்பான்மை கொண்ட வாக்குகளினாலான சட்டத்தை இங்கு பிறப்பித்தார்கள். இது உண்மையில் ஓர் அரசியல் அமைப்பு மீறலாகும்.
இங்கு உண்மை என்னவெனில் தமிழருக்கு எதிராக அரசியல் அமைப்பை எந்தவகையிலும் பாதகமாக பயன்படுத்துவதற்கான மனத்திடத்தை சிங்களத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். எனவே கடந்த காலத்திலாகினும் சரி, நிகழ்காலத்திலாகினும் சரி, எதிர்காலத்திலாகினும் சரி, ஒரு யாப்பில் ஏதாவது நல்லவற்றை செய்ய இடம் இருக்கிறதா என்பதைவிடவும் தமிழருக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான மனநிலையை சிங்களத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு பெரிதும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
ஆனால், இங்கு நடைமுறையில் இருக்கின்ற யாப்பில் ஜனாதிபதி தேர்தலின் போது சிங்களத் தலைவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு தமிழ் வாக்காளர்களுக்கு உண்டு. இந்த வாய்ப்பை நாம் சரிவர பயன்படுத்தப்போகிறோமா இல்லையா என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.
அதாவது ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிப்பதற்குரிய மாற்று வாக்கு (Alternate Vote) என்று ஓர் ஏற்பாடு உண்டு. ஒரு வாக்காளர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு தான் விரும்பும் முதலாவது நபருக்கு ஒன்று (1) என்ற இலக்கத்தை இடுவதன் மூலம் தனது முதலாவது வாக்கையும், அவர் தேர்ந்தெடுக்கப்படாது தோல்வியடையும் இடத்து இன்னொருவரை தெரிவதற்கான தனது இரண்டாவது (2) வாக்கை இடவும் இவ்வாறாக வழியுண்டு.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் வாக்கில் 50.01 வீதத்திற்கு மேலான வாக்குக்களை பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவாக முடியும். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது 50 வீதத்திற்கும் மேலான வாக்குகளை ஒருவர் பெற முடியாத போது அதில் யாரும் வெற்றி பெற்றவராக கொள்ளப்பட மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில் மூன்றாவது நபர் தேர்தலிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் இரண்டாவதான மாற்று வாக்கு, மேல் உள்ள இருவரில் யாருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று எண்ணப்படும். இம்மேலதிக வாக்குகளையும் கூட்டி யார் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறுகிறாரோ அவரே ஜனாதிபதி என அறிவிக்கப்படுவர்.
இந்நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு தெளிவான வாய்ப்பு இருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை தேர்தலில் நிறுத்தினால் மேற்படி வாய்ப்பை பயன்படுத்த முடியும். இதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குக்களை 100 என எடுப்போம். இத்தேர்தலில் Mr.X, Mr.Y என இருபெரும் சிங்களக் கட்சிகளின் சார்பில் இரு சிங்களத் தலைவர்கள் போட்டியிடுவதாக வைத்துக்கொள்வோம். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் தரப்பில் Mr.T என ஒரு வேட்பாளர் போட்டியிடுவதாகவும் வைப்போம். இதில் Mr.X 45 வாக்குகளும் Mr.Y க்கு 35 வாக்குகளும், Mr.T க்கு 20 வாக்குகளும் கிடைப்பதாக வைப்போம். இதன் போது முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாதவர் என்ற வகையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கமுடியாது.
அடுத்து மூன்றாவது வேட்பாளரான Mr.T தேர்தலில் இருந்து விலக்கப்பட்டு அவரது வாக்குச்சீட்டில் இரண்டாவதாக அளிக்கப்பட்ட வாக்குகள் மேற்கூறப்பட்ட இருவரில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என தரம்பிரிக்கப்பட்டு அவரவரது வாக்குகளோடு சேர்க்கப்படும். உதாரணமாக இவரது வாக்குக்சீட்டில் 18 வாக்குகள் Mr.Y க்குரியது என இருந்தால் Mr.Y ஏற்கனவே பெற்ற 35 வாக்குகளோடு 18 வாக்குகளை கூட்டும்போது அவர் 53 வாக்குக்களை பெற்றவராய் வெற்றிபெற்றுவிடுவார்.
இதில் மற்றொரு ஏற்பாடும் உண்டு. அதாவது Mr.T க்கு வாக்களிப்போர் தமது வாக்குகளை இரண்டாவதான மாற்று வாக்கை அளிக்காது, Mr.T க்கு மட்டும் வாக்களித்ததோடு நிறுத்திவிட்டால் அந்த வாக்குக்கள் தேர்தலில் இருந்து விலக்கப்படும். இதன்படி Mr.T க்கு வாக்களித்த 20 வாக்காளர்களும் தமது 2வது வாக்கை அறவே பயன்படுத்தாதுவிட்டால், அந்த 20 வாக்குக்களும் விலக்கப்பட்டு 80 வாக்குகளும் பின்பு 100 வாக்குகளாக கொள்ளப்படும். அதன்படி 45 வாக்குக்களை பெற்றவர் 56.25 வீத வாக்குகளை பெற்றவராக கொள்ளப்பட்டு வெற்றி பெறுவார்.
இதன்படி தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்தி தமது முதலாவது வாக்கை மட்டும் அளித்துவிட்டு 2வது வாக்கை அளிக்காது விடலாம். அவ்வாறன சூழலில் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சிங்களத் தலைவரும் வெற்றி பெறாது, 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதுதான் வெற்றி பெற முடியும். இந்நிலையில் முதலாவது சுற்று எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாத ஜனாதிபதி என்ற பெயரையே பெறுவார். மேலும் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் பெரும்பான்மையினரின் வாக்கைப் பெற்ற ஜனாதிபதி என்ற பெயரே அவருக்குரியதாக அமையும்.
அதேவேளை தமிழ் பேசும் தரப்பு வேட்பாளர், மேற்கூறப்பட்ட இரு சிங்கள வேட்பாளர்களில் ஒருவருடன் பேரம் பேசி அதன் அடிப்படையில் தமது 2வது வாக்கை தமக்கு சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்பவருக்கு அளிக்க முடியும். இந்த வகையில் Mr.Y சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்வாரேயானால் இரண்டாவது வாக்கை Mr.Y க்கு அளித்து 2வது சுற்று எண்ணிக்கையில் Mr.Yயை வெற்றிபெற வைக்க முடியும்.
அதாவது முதல் சுற்றில் 45 வாக்குக்களை பெற்ற Mr.X யை, 35 வாக்குகளைப் பெற்ற Mr.Y, 2வது சுற்றின் போது Mr.T யின் வாக்குச்சீட்டில் உள்ள 2வது 20 வாக்குகளையும் கூட்டுவதன் மூலம் 55 சதவீத வாக்குகளை பெற்றவராய் வெற்றி பெற முடியும். இங்கு சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவராக்க முடியும். இது ஒரு நிகழ்தகவு கணிப்பாகும்.
இனி நாம் நேரடி நடைமுறைக்கு வருவோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துமிடத்து தமிழ் மக்களின் வாக்குகளை சிங்கள இனவாதத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளாக, தமது உரிமைகளை பேணுவதற்கு ஒன்று குவிக்கப்பட்ட வாக்குகளாக உலகிற்கு காட்ட முடியும். இரண்டாவதாக தேர்தல் காலத்தில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை பயன்படுத்தி மக்களை சந்திக்கவும் அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று திரட்டப்பட்ட அரசியல் உணர்வை பேணவும் தமிழ் மக்களின் உரிமைக்கான வழிகளை வலுப்படுத்தவும் முடியும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துவதே சரியானதும், புத்திசாலித்தனமானதுமாகும். தேவை ஏற்பட்டால் பேரம் பேசலின் போது தமது 2வது வாக்கை பிரயோகிப்பதைப்பற்றி சிந்திக்கலாம். எனவே இங்கு முதலாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி அதனை ஓர் அரசியல் செயற்பாட்டுக் களமாக பயன்படுத்துவது அவசியமாகும்.