தமிழர் திருநாள் உருவானது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.
அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஆவார். சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் ‘தமிழர் திருநாள்’ பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள்
அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து “உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்” என்றும், “தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் ” என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார். அவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார். அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார். தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.

ஒவ்வொரு தமிழர் திருநாள் பெருவிழாவிலும் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்டுதல், தைத் திங்கள் மூன்றாம் நாளில் திருவள்ளுவர் திருநாளாக அறிவித்து விடுமுறை அளித்தல், சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் “ஆகாசவாணி” என்று கூறுவதை நிறுத்துதல், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் அகற்றி, சமயக்குறிகள் நீக்கி திருக்குறள் ஏடும் எழுத்தாணியும் உடைய திருவுருவப் படத்தை திறந்து வழிபடல், தெருப் பெயரிலும் ஊர்ப்பெயரிலும் தமிழர்தம் பெயரிலும் தூய தமிழ்ப் பெயர் மட்டுமே வைத்தல் போன்ற எண்ணற்ற தமிழர் நலன் காக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அதேபோல் 1946இல் ம.பொ.சி. “தமிழரசு கழகம்” எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும். சென்னை மட்டுமல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசு கழகம் விளங்கியது.
இந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாக தெலுங்கர்கள் விசாலா ஆந்திரா (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டும் போராடி வந்தனர். அப்போது ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக ‘தமிழர் திருநாள்’ விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில்,”தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்.

சுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக!”
என்று அறைகூவல் தரப்பட்டது.

இந்த கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் . டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணாத் துரைக்கும் இந்த கூட்டறிக்கை நகல் அனுப்பபப்பட்டது. இருவருமே பதில் தர மறுத்தனர்.
1947 சனவரி 14இல் அறிவித்த படி தமிழர் திரூநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடியாக மொழிவாரி நாடுகளை பிரிக்க வேண்டும் என்றும், ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் பிறகும் தமிழரசு கழகத்தோடு ஒத்துழைக்க மறுத்த திராவிடர்கழகம் தனியாக ‘திராவிடர் திருநாள்’ பெயரிலே விழா கொண்டாடத் தொடங்கியது.

பெரியாரிடமிருந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும் இரண்டு விதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார். ஆனால் பொங்கல் விழாவை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறைப்பதற்கில்லை.

தற்போது வீரமணி தலைமையில் இயங்கங்கூடிய திராவிடர் கழகம் அதே பழைய முறையில் பொங்கல் விழாவை “திராவிடர் திருநாள்” என்று அறிவித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீம்பாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசிய அமைப்புகள் வீரமணியாரின் தமிழின அடையாள மறுப்புச் செயலை வன்மையாக கண்டித்தும் கூட வீரமணியார் இன்னும் திருந்திட வில்லை. இந்த ஆண்டும் “திராவிடர் திரு நாள்” கூத்தை அரங்கேற்ற உள்ளார். தமிழர் பண்பாட்டு விழாவான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராடி வருவதைக் கூட ஆதரித்துப் பேச மறுக்கிறார். இவரின் திராவிடர் திருநாள் பட்டியலில் சல்லிக்கட்டுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை ஆந்திரர்களோ, கர்நாடகத்தினரோ, கேரளத்தினரோ, கொண்டாடாத போது “திராவிடர் திருநாள்” பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரிய வில்லை.
நவம்பர் 1ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும் அங்குள்ள அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் பங்கேற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்.

தமிழரல்லாதார் நலம் காக்கும் பொருட்டு தமிழக எல்லை மீட்புப் போரில் பங்கெடுக்க மறுத்ததோடு பொங்கல் விழாவினை ‘திராவிடர் திருநாள்’ என்று அன்று முதல் இன்று வரை திரிபுவாதம் செய்திடும் திராவிட இயக்கங்களின் நயவஞ்சகப் போக்கை தமிழர்கள் இப்போதாவது உணர முற்பட வேண்டும்.
இன்று தமிழர் திரு நாள் மட்டுமல்ல, திராவிட மயக்கத்திலிருந்து தமிழர் அனைவரும் விழித்துக் கொள்ளும் நாளும் கூட!

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
(தகவல்: ம.பொ.சி. எழுதிய ‘எனது போராட்டம்’ நூலிலிருந்து.)

– Kathir Nilavan –
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit