புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு பின் தமிழகம்.

பிறப்பு : - இறப்பு :

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மறைந்த மிகப்பெரிய அரசியல் ஆளுமையான புரட்சி தலைவி மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் காலமாகி இன்னும் ஒரு வாரம்கூட ஆகிவிடவில்லை,

அதற்கிடையில் ஆயிரம் கேள்விகள், பிச்சல் பிடுங்கல்கள் என்று மிகப்பெரிய நிழல் யுத்தம் வெளியிலிருந்தும் கட்சிக்குள்ளும் ஆரம்பமாகிவிட்டது.

எம்ஜீ ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அதிமுக கட்சியை கைப்பற்றுவது யார், கட்சியை கட்டுக்குள் வைத்திருப்பது யார், பொதுச்செயலாளர் பதவியை கையகப்படுத்துவது யார், முதலமைச்சராக இருக்கவேண்டியது எவர், என்ற பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.

ஜெயலலிதா இல்லாதபோது யாரோ ஒருவர் கட்சியை தலைமை ஏற்று நடத்தவேண்டும் என்பதுதான் நியதி. உட்கட்டமைப்பு ரீதியாக ஒருவரை தேர்வுசெய்து முதன்மைப்படுத்த எவருக்கும் உடன்பாடு இல்லை.

இராணுவ கட்டமைப்புப்போன்ற ஒற்றை கட்டளை பீடத்தின் ஆணைக்கு கட்டுண்டு ஓடிக்கொண்டிருந்த நிர்வாக இயந்திரம் எதிர்பாராத நேரத்தில் திடீரென கட்டளை பீடத்தின் அச்சு முறிந்து விழுந்து சமநிலை சீர்குலையும்போது இப்படியான நெருக்கடிகள் தலையெடுப்பதென்பது தவிர்க்க முடியாதது என்பதும் நிதர்சனமே.

சசிகலா, சசிகலாவின் கணவர் நடராசன், ஓ பன்னீர்ச்செல்வம், மக்களவை உறுப்பினர் தம்பித்துரை ஆகியோர் சற்று வெளிப்படையாகவும், மோடி தலைமையிலான பாஜக திரை மறைவிலும் ஆட்டத்தை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

புதிய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இயல்பான பலவீனத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூற்றவாளியாக காணப்பட்டு விசாரணை வளயத்தில் தனித்து விடப்பட்டிருக்கும் சசிகலாவின் இக்கட்டான சோதனை சரிவையும் குறிவைத்து நரேந்திர மோடி அதிமுக கட்சியின் அனைத்து அசைவாக்க சக்திகளையும் தனது விருப்பத்துக்கேற்றவாறு பாவனைக்குட்படுத்த அனைத்து செயற்பாடுகளையும் தந்தரமாக திரைமறைவில் தொடங்கிவிட்டார்.

பாஜகவின் தந்திரத்துக்கு சசிகலா தரப்பு எவ்வளவுக்கு பலியாகும் என்று இப்போதைக்கு தெரியவில்லை.

கிட்டத்தட்ட சசிகலா குழுமம் ஒரு புறம் அடுத்தகட்ட உபாயங்களில் மூழ்கியிருக்க, மறுபுறத்தே புதிய முதலமைச்சர் உட்பட மக்களவை எம்பிக்கள் என அனைவரும் பாஜக பிடியில் சிக்குண்டு விட்டதாகவே தெரிகிறது. நாளடைவில் சொத்துக்குவிப்பு வழக்கின் சிக்கல்களை முன்னிறுத்தி சசிகலா குழுமத்தையும் தம்வழிக்கு கொண்டுவர மத்திய பாஜக முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒரு சிறு உதாரணம்.

சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு பாரளுமன்றத்தில் கொண்டுவந்த GST மசோதாவின் வாக்கெடுப்பின்போது அதிமுக உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்யும்படி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார் இருந்தும் மசோதா நிறைவேறியது. அது வேறு கதை.

அப்படி இருக்க, 07-12-2016 அன்று அதாவது ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் நியுஸ்7 தொலைக்காட்சி ஊடகம் நடத்திய கேள்விநேரம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஆவடி குமார் என்ற அதிமுக எம் எல் ஏ. மிகவும் ஆவேசமாக GST மசோதா தொடர்பாக ஜெயலலிதா மேற்கொண்ட அந்த நிலைப்பாடு தவறானது என்று வாதிட்டார்.

மசோதாவை புறக்கணித்ததால் நாம் எதையும் சாதித்துவிடவில்லை நாம் புறக்கணித்தபோதும் மசோதா நிறைவேறத்தான் செய்தது எனவே ஜெயலலிதாவின் ராஜதந்திர அனுமானம் தவறானது என்பதுபோலவே அவரது உள்ளக்கிடக்கை அம்மணமாகி வெளிப்பட்டது.

ஜெயலலிதாவின் நிழலில் நீண்ட காலமாக பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆவடி குமார் போன்றவர்கள் மட்டுமல்ல ஜெயலலிதாவுக்கு பின்னால் இருந்துவரும் எல்லோருமே தனித்தனியானவர்கள் எல்லோருக்குள்ளும் இன்னொரு பக்கம் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதையே ஆவடி குமாரின் கருத்து வெளிப்படுத்தியது.

கட்டுப்பாடு இல்லாத ஒரு தருணத்தில் இப்படியான செயற்பாடுகள் தவிர்க்கமுடியாதவை என்பதும், ஆயுத, அதிகார பலம் மட்டுமே இப்படியானவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கட்டுப்படுத்தக்கூடியவை என்பதே நமது தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் முன்னர் பலமுறை வரையறுத்து சொல்லியிருப்பதை இங்கு நினைவு கூர முடியும்.

இவை எதனை வெளிப்படுத்துகிறது என்றால் பதவி சுகங்களுக்காக மட்டுமே சுயநலத்தை மனதில் கொண்டு போலியான முகஸ்துதியுடன் கள்ள விசுவாசத்தை வெளிக் காட்டி வாழும் பச்சோந்தி தனமானதுதான் இப்படியான கொள்கைக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகளின் உண்மை முகம் என்பதையே காட்டி நிற்கிறது.

இவர்கள் எப்போ வேண்டுமானாலும் கொலைகாரர்களாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் மாறக்கூடியவர்கள் என்றால் கடுகளவும் மிகைப்படுத்திய கூற்றென்று சொல்ல முடியாது.

ஜெயலலிதா என்ற ஆளுமை நிறைந்த ஒற்றை பெண்ணை மட்டும் மலைபோல நம்பி அதிமுக தொண்டர்களால் கட்டி எழுப்பட்ட அதிமுக ஆட்சியானது கிட்டத்தட்ட மத்திய அரசின் திட்டமிடலுக்கேற்பவே நகர்த்தப்படும் சாத்தியங்களே இன்று அதிகமாக காணப்படுகின்றன.

இந்த இடத்தில் இன்னும் ஒன்றையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. அடுத்தடுத்து தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து குட்டையை குளப்ப சந்தற்பம் பார்த்திருக்கும் திமுக வின் கருணாநிதி தரப்பு ஜெயலலிதா இல்லாத இந்த தருணம் பார்த்து குறுக்குத்தனமாக ஏதாவது சதி செய்து அதிமுக கட்சியை உடைத்து சில எம் எல் ஏக்களை தம்பால் கவர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டாகக்கூடும்.

ஆனால் அது இலகுவாக சாத்தியப்படாது என்றே படுகிறது. காரணம் இடையில் பெருத்த தடையாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக என்ற பூதம் இடங்கொடுக்காது என்பதும், அதிமுக கட்சியை உடைத்து சில எம் எல் ஏக்களை தம்வசம் இழுப்பது இலகுவான காரியமாக இருந்தாலும் அப்படியான செயற்பாடு திமுக கட்சிக்கு எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் அவப்பெயரை இட்டுத்தரும் என்பதாலும் மிகப்பெரிய அரசியல் சாணக்கியவாதியான கருணாநிதியே அதை விரும்பமாட்டார் வேறுவிதமான தொந்தரவுகளை அதிமுகவுக்குள் உண்டுபண்ணி கட்சியை உடைப்பதற்கான சதிகளை செய்து லாபமடைய வழிதேடக்கூடும் என்பதும் மறுப்பதற்கில்லை.

யார் தடுத்தாலும் உள்ளுக்குள்ளேயே சசிகலா தரப்புக்கும், முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் உட்பட நிர்வாகிகள் மட்டத்தில் கட்சியை தம்வசம் கைப்பற்றும் அதிகாரப் போட்டி நிச்சியம் நடைபெற்றுத்தான் ஆகும், ஒருகட்டத்தில் கட்சி உடைந்து போவதையும் எவரும் தடுக்கமுடியாது என்பதுதான் முன்னைய அரசியற் கட்சிகளின் வழி வந்த வரலாறு என்பதும் புறந்தள்ளுவதற்கில்லை.

தமிழ்நாட்டில் ஆகக்கூடிய மக்கள் ஆதரவை பெற்ற மிகப்பெரிய ஒரே ஒரு அரசியற் கட்சி என்றால் அது அஇஅதிமுக, என்ற கட்சி மட்டுமே இருந்து வருகிறது எம்ஜீ ஆர் அவர்களின் மறைவுகுப்பின் கட்சியை ஒன்றுசேர்ந்த ஒற்றை புள்ளியாக கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருந்துவந்தார், ஜெயலலிதா ஒரு சந்தற்பத்திலும் தனக்கு அடுத்த நிலையில் இரண்டாம் நிலை தலைவர் என்று எந்த ஒருவரையும் இனங்காட்டியிருக்கவில்லை.

அரசியல், ஆட்சி, அதிகரம், கட்சி இவைகளை தாண்டி தனது வாழ்நாள் தோழியாக ம நடராசனின் மனைவி சசிகலாவையே 28 ஆண்டுகளாக ஜெயலலிதா தன்னருகே வைத்திருக்கிறார், சசிகலா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் சசிகலாவுக்கு கட்சியில் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.

ஏதோ ஒரு காரணத்தினால் உயிருடன் இருக்கும்போதுகூட தனது அண்ணன் ஜெயக்குமாரை சந்திக்க ஜெயலலிதா முனைப்புகாட்டவில்லை. ஒருமுறை ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அண்ணன் ஜெயக்குமார் போயஸ் தோட்டத்துக்கு வந்தபோதும் அவருக்கு அனுமதி அளிக்கப்படாமல் அவர் திரும்பி சென்றிருந்தார். அண்ணன் ஜெயக்குமார் இறந்தபின் தனது ரத்த உறவுகளான அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளைக்கூட தன்னருகில் வைத்திருப்பதற்கோ, அல்லாமல் தொடர்பாடலுடன் இருக்கவோ ஜெயலலிதா ஏனோ விரும்பவில்லை.

கட்சியில் இரண்டாம் நிலை தலைவராக ஒருவரை நிறுவியிருந்தால் ஏதாவது ஒரு சந்தற்பத்தில் கட்சி கொள்கைகளில், அல்லது ஆட்சி நிர்வாக அலுவல்களின்போது ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுக்கும் சந்தற்பங்களில் வெவ்வேறு கருத்துவேறுபாடு உண்டாகி நிர்வாக சிக்கல்கள் ஏதாவது தலை தூக்க இடமிருக்கும் என்று நினைத்தோ என்னவோ இரண்டாம் நிலை தலைவர் என எவரையும் ஜெயலலிதா இனங்காட்டியிருக்கவில்லை.

அதிமுக என்ற கட்சி ஒற்றை மனித இராணுவ கட்டமைப்பாகவே தோற்றம் பெற்றிருந்தாலும் ஜனநாயகத்துக்கு விரோதமான சித்தாந்தங்களை ஜெயலலிதா கொண்டிருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும். மக்களின் பேராதரவை பெற்று ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டே தமிழ்நாடு நேற்றுவரை நகர்ந்திருக்கிறது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றால் அது ஒரு இராணுவ நடைமுறை கட்டுப்பாடுகளை கொண்ட அமைப்பு என்று தொண்டர்கள் சொல்வதை ரசித்து சிரித்து மகிழ்ந்தே வந்திருக்கிறார் ஜெயலலிதா, எனவே அவர் கட்சியை தன் ஒருவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து பரிபாலனம் செய்யவே விரும்பியிருக்கிறார் என்பதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது.

தன்னை தானே நல்ல ஆளுமை மிக்க நிர்வாக திறன் உடையவர் என நூறு சத வீதம் அம்மையார் தன்னை நம்பியிருந்ததால் கட்சிக்குள் எதிர்க் கருத்து சொல்லக்கூடிய இன்னொருவரை வளர்க்க அவர் விரும்பவில்லை என்றுகூட நம்ப இடமிருக்கிறது.

ஜெயலலிதா மிகுந்த தன்நம்பிக்கை கொண்டவர் என்பதை பல தளங்களில் பார்த்திருக்கிறோம் அதற்கமைய ஜெயலலிதா தன்னை முழுமையாக நம்பியதுபோல இயல்பாகவே தொலைநோக்கோடு திட்டமிடுவதில் சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஜெயலலிதாவின் குணாதிசயம் இயல்பான ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள தேசிய அரசியற் கட்சிகள் தொடங்கி சிறிய சாதி கட்சிவரை எவர் தலைவராக இருக்கிறாரோ அவரின் எண்ணம்தான் செயற்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால், தலமை தனக்கு கட்டுப்படக்கூடிய ஒரு கூட்டத்தை பொதுக்குழு செயற்குழு மத்திய குழு என்று பெயரளவில் சம்பிரதாயத்துக்கு வைத்துக்கொண்டு தலைவர் நினைத்தவற்றை நிகழ்த்துவதுதான் கட்சிகளின் கலாச்சார மரபாகவும் இருந்துவருகிறது.

மீறி கேள்வி கேட்பவன் மறுநாள் கட்சியில் இருக்கமுடியாது கட்சியின் பெயரால் கிடைக்கப்பெறும் சுகபோகங்களை அனுபவிக்கவும் முடியாது. எனவே இத்தகைய நடைமுறைகளை ஏற்று கொண்டவர்களாகவே தொண்டர்களும் நிர்வாகிகளும் கையாலாகதவர்களாக இருந்து வருகின்றனர் இது இந்தியாவின் சாபக்கேடாக இருந்தாலும் எவராலும் எதையும் செய்ய முடியவுமில்லை. ஆட்சி செய்பவர்கள் இதை மாற்றி அமைக்க விரும்பவுமில்லை. இந்த செயற்பாடு இந்திய அரசியலமைப்பு சாசனம் போலவே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை நான் மட்டுமல்ல ஜனநாயகத்தை மதிப்பவர்கள எவரும் வரவேற்க முடியாது என்றாலும் இந்தியாவில் இதுதான் வரையறுக்கப்பட்ட அரசியல் கலாச்சாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜனநாயகம் என்ற போர்வையில் படுபாதக அரசியலை செய்து வரும் இந்தியா போன்ற கட்டுப்பாடுகள் அற்ற நாட்டில் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஒற்றையாக தன்னிச்சையயாக செயற்படும் இப்பேற்பட்ட செயற்பாடுகளை சர்வாதிகாரம் என்று வசைபாடி கால் வார எதிரணியினர் சன்னதம் ஆடுவார்கள் என்பதும் உண்மைதான்.

ஜெயலலிதா நல்ல படிப்பாளி அறிவுக்கூர்மை உடையவர், கருணாநிதி போன்றவர்களைப்போல வாய்ப்பந்தலில் மக்களை ஏமாற்றி தமிழ் என்று உசுப்பேற்றி அதிகாரத்துக்கு வந்தவரும் இல்லை.

சட்டப்படியானதாக இல்லாவிட்டாலும் எம்ஜீஆர் அவர்களின் தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்தவர் ஜெயலலிதா, அந்தவகையில் எம்ஜீ ஆர் அவர்களின் அரசியல் வாரிசாகவே ஜெயலலிதா மக்கள்முன் இனங்காணப்பட்டிருந்தார். மக்களும் ஜெயலலிதாவை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

எம்ஜீஆர் அவர்களின் விருப்பத்துக்கு இணங்கவே ஜெயலலிதா கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தன்னம்பிக்கை நிறைய பெற்றவர் நிர்வாக திறமை உடையவர்.

எம்ஜீ ஆர் அவர்களின் மரணத்தின் பின் எம்ஜீஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க ஜானகி அம்மையாரால் முடியவில்லை.

அன்றைக்கும் அதிமுக என்ற கட்சி ஜே அணி (சேவல்), ஜானகி அணி (புறா)என இரண்டாக உடைந்தது மீண்டும் ஒன்றாகி இரட்டை இலை சின்னத்துடன் ஜெயலலிதா தலைமையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளை அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகம் தொட்டு நிற்கிறது.

ஜெயலலிதா அவர்களின் திடீர் மறைவின் பின் கட்சி சந்திக்க இருக்கும் இன்றைய நிலையும் எம்ஜீ ஆர் அவர்கள் மறைந்தபோது இருந்த அன்றைய நிலையும் மிகவும் வேறுபட்டதாகவே இருக்கிறது.

அண்ணா திமுகவை யாரும் அழிக்க நாங்கள் விடமாட்டோம்.

இப்படி ஒரு தகவல் செய்தியை சொன்னவர் சசிகலாவின் கணவர் ம நடராசன். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தானாக முன்வந்து இப்படி ஒரு பேட்டியை அவர் கொடுத்திருக்கிறார்.

ம.நடராசன். தன்னிச்சையாக அப்படி ஒரு பேட்டியை கொடுத்தாரா அல்லாமல் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் ஆழம் பார்ப்பதற்காக அந்த அறிவித்தலை கொடுத்திருந்தாலும் கட்சி நிர்வாகிகள் மந்திரி, எம் எல் ஏக்கள், எம்பிக்கள் என்று உயர் மட்டத்துக்குள் சசிகலா பிரிவினருடன் ஒத்த கருத்து இல்லை என்பதையே இந்த செய்தி வெளிப்படுத்துகிறது.

நேற்றுவரை இந்த நடராசன் எங்கே இருந்தார் என்பதுகூட தெரியாது. ஜெயலலிதா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில்க்கூட ஏதோ ஒரு சில இடங்களில் நடராசன் தலை காட்டினார் என்பது தவிர அவர் ஒரு இடத்திலும் முன்னிலைப்படுத்தப்படவும் இல்லை.

ஜெயலலிதா இருந்தபோது நடராசன் கட்சியிலிருந்து அறவே நீக்கப்பட்டுவிட்டார். தனது வாழ்நாளில் நடராசனை இனியொரு பொழுது சந்திக்க விரும்பவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருந்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது பல நெருக்கடியான தருணங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் ஓ பன்னீர்ச்செல்வம் மட்டுமே.

பன்னீர்ச்செல்வத்தின் ஆளுமை, நிர்வாக திறன் ஆகிய அளவுகோலின் அடிப்படையில் பன்னீர்ச்செல்வத்தை ஜெயலலிதா முதலமைச்சர் ஆக்கினார் என்று எவர் நம்பினாலும் அதுகூட நகைச்சுவைக்கே இடமளிக்கும். பன்னீர்ச்செல்வத்தின் பணிவு விசுவாசம் அகல கால் வைக்கமாட்டார் என்ற தகுதிகளின் அடிப்படையிலேயே ஜெயலலிதா பன்னீர்ச்செல்வத்தை முன்னிலைப்படுத்தி முதலமைச்சர் ஆக்கினார் என்பதே உண்மை.

இன்றைய நிலையில் ஜெயலலிதாவின் பல ஆயிரம் கோடி சொத்து, அதிமுக கட்சியின் பல்லாயிரம் கோடி சொத்து ஆகியவை எல்லாம் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதே உண்மையாக இருக்கும்.

கட்சி தலைமைப்பொறுப்பு விவகாரம் சசிகலா தரப்புக்கும் நிர்வாகிகள் தரப்புக்கும் பெரும் இழுபறிகளை தோற்றுவிக்கும், சசிகலா தரப்புக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொறுப்பில் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் முதல்வர், மற்றும் மந்திரி, எம் எல் ஏ பதவிகளில் இருப்பவர்களுக்கும் சமரசம் ஏற்படாத பட்சத்தில் பிரச்சினை நீதிமன்றத்துக்கு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

அதிமுக இரண்டு மூன்று துண்டுகளாக உடைவதற்கும் சந்தற்பம் இருக்கிறது. இதனால் எப்போ கடல் வற்றும் வண்டி கட்டி கரை சேரலாம் என்று காத்திருக்கும் திமுகவின் அரசியல் வாரிசு ஸ்ராலின் அடுத்த முதலமைச்சர் ஆக காலம் இடம் கொடுக்கலாம்.

தவிர்ந்து சசிகலா தரப்பும் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து தொலைநோக்கோடு ஒரு சமரசத்துக்கு வந்து!? சுமூகமாக போகும் பட்சத்தில் அதிமுகவை உறுதியான கட்சியாக தொடர்ந்து வழிநடத்தி செல்லவும் சந்தற்பம் இருக்கிறது. (?) ஆனால் இந்த ஐந்தாண்டு ஆட்சியின் பின் அக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கும் என்பதும் காலம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இப்போ இருப்பது ஜெயலலிதா என்ற ஒருவரின் தனிப்பட்ட செல்வாக்கின் வெற்றியில் கிடைக்கப்பெற்ற ஆட்சியே.

எது எப்படி நடந்தாலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழ்நாட்டில் ஒரு பெரிய வெற்றிடம் காலத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை நியதி.

ஏற்கெனவே தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற ஊழல், நிர்வாக சீர்கேடு போன்றவற்றை பார்த்து வெறுப்படைந்த மக்கள் ஒரு மாற்று அரசியல் தோற்றப்படவேண்டுமென்ற மனநிலை இருந்து வந்ததும் உண்மையே,

புதிய வித்தியாசமான கொள்கை கொண்ட தலைவர்கள் வரவேண்டுமென்று விரும்பி வைகோ, விஜயகாந்த் ஆகியோரை பின்பற்றி திரண்ட கூட்டம் வைகோ, விஜயகாந்த் ஆகியோரின் ஆளுமை அற்ற தனத்தால் வெறுத்துப்போய் திரும்பவும் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரை பின்பற்றி வாக்களித்ததாகவே கடந்த சட்ட மன்ற தேர்தல் நிலவரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இன்றைக்கு ஓரளவு எதிர்பார்ப்புடன் தமிழக அரசியற் களத்தில் இறங்கியிருக்கும் கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சியாகவே காணப்படுகிறது.

இன்று காலத்தால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை தம்மகப்படுத்தக்கூடிய சாகசம் வல்லமை மக்கள் மனம் கவரக்கூடிய தொலை நோக்குக்கொண்ட தலைமைத்துவத்திலும் குறிப்பாக ஜெயலலிதா போன்று சமரசம் செய்யாத சோரம்போகாத உறுதி கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று புரியப்பட்டிருக்கிறது.

வைகோவுக்கு நல்ல வரவேற்பு ஒரு காலத்தில் இருந்தது ஆனால் அவரது திடமில்லாத முடிவுகளாலும் அளவுக்கு அதிகமான வாய்ப்பேச்சாலும் தனது மதிப்பை கெடுத்துக்கொண்டுவிட்டார்.

இன்றைக்கும் வைகோ பற்றி ஒரு சராசரி தனி மனிதனிடம் அபிப்பிராயம் கேட்டால் வைகோ நல்ல மனிதர் என்றுதான் சொல்லுவான் ஆனால் வைகோவுக்கு வாக்களிப்பீர்களா என்றால் அவர் ஒருபோதும் வெல்லப்போவதில்லை அப்புறம் ஏன் ஒரு வாக்கை வீணாக்கவேண்டும் என்றுதான் சொல்லி போவான்.

விஜயகாந்தை மலைபோல தமிழக மக்கள் நம்பிய காலம் ஒன்று சமீபம்வரை இருந்தது அனைத்தையும் அவர் தனது நடைமுறையால் கெடுத்துக்கொண்டுவிட்டார்.
பாமக கட்சியிலும் ஒரு காலத்தில் மக்களுக்கு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது ஆனால் அவர்களின் குறுகிய அரசியல் கொள்கையை எவரும் ரசித்ததாகவும் தெரியவில்லை.

மிகப்பெரிய கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக தவிர வேறு கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது என்பது நெருப்பாற்றில் நீந்தி கரை சேருவதற்கு சமமாகும். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மதம்போல மக்கள் மனங்களில் வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன.

கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா இருவரும் பொதுமக்கள் மனங்களில் மதங்களின் மூலவர்களாக பதியம் போடப்பட்டிருக்கின்றனர். அங்கிருந்து மக்களை திசை திருப்புவது என்பது இலேசானாதும் அல்ல.

தமிழக அரசியலில் உடனடியாக ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பேயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே பெரும் தகுதியாக இருந்திருக்கிறது. ஒரு தேர்தலில் தோற்றுப்போனாலும் உறுதி தளராமல் சமரச அரசியல் பாதாளத்தில் விழுந்து முரண்பாடானவர்களுடன் கூட்டணி வைத்தால் அதுவே பெரு வீழ்ச்சியாக அமையும்.

இப்படியான விபத்துக்களிலிருந்து தப்பித்து தனிமையாக தனித்தன்மையுடன் உறுதிபட நின்றால் மட்டுமே மீண்டும் மக்களால் திரும்பி பார்க்கப்படுவார்கள் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.

இன்றைய ஜெயலலிதா அவர்களின் வெற்றிடம் பூதாகரமானதாகவே இருக்கும் தொடர்ந்து அதிமுகவை நிர்வகிப்பவர்கள் கருத்துவேறுபாடு அற்ற சீரோடு நகர்த்தி சென்றால் ஒருவேளை மக்களை தம்பால் தக்க வைக்க முடியலாம்?

அதிமுக கட்சிக்கு தலைமை தாங்கக்கூடிய சரியான தகுதியான முகம் ஒன்றும் இன்றைக்கு இல்லை.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் நான்கரை வருடங்கள் இருக்கின்றன இந்த கால இடைவெளியை சரியாக பயன்படுத்தி விளைச்சல் காணுவதற்கு சீமான் தலைமையிலாம நாம்தமிழர் கட்சிக்கு ஓரளவு வாய்ப்பு இருக்கிறது,

மற்ற கட்சி தலைவர்களை தரக்குறைவாக குறை சொல்லி விமர்சித்து வசைபாடுவதால் சுற்றியிருக்கும் ஒரு சிறு கூட்டத்திடம் கைதட்டலை வாங்கலாம் சிரிப்பலையை கேட்கலாமே தவிர பரவலான வெகுஜன சமூகம் இப்பேர்ப்பட்ட அரசியலை ரசிக்காது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்படியானவர்களை ஊடகங்கள் பத்திரிகைகள் பின்பாற்றி முன்னிலைப்படுத்த விரும்ப மாட்டாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

சீமான் அவர்கள்மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் ஈர்ப்பும் இருக்கிறது.

எவராக இருந்தாலும் பேச்சில் நிறைய நிதானமும் அதிக கள செயற்பாடுகளுமே அடுத்த தலைமையை தமிழ்நாட்டுக்கு இனம் காட்டும் என்பதாகவே தெரிகிறது.

காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
காலத்தைபோன்ற சிறந்த ஆசானும் இல்லை.
காலத்தைப்போன்ற சிறந்த மருந்தும் இல்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit