தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா.

பிறப்பு : - இறப்பு :

theepa

தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர் சசிகலா புஷ்பா எம்.பி. சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா.

தி.மு.க எம்.பி, சிவாவை கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டினார் சசிகலா புஷ்பா எம்.பி, . தற்போது அவர் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், “அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் தென்மாவட்டங்களில் கோலோச்சியவர்களில் ஒருவர் மணல் மனிதர் என்று அழைக்கப்படும் வைகுண்டராஜன். இவரை ஜெயலலிதா, சில காரணங்களுக்காக கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். இவர் மூலமாகவே கட்சிக்குள் நுழைந்தவர் சசிகலா புஷ்பா. தற்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகவே வைகுண்ட ராஜனின் செயல்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா, மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக் கூடாது என்று சசிகலா கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதனால் பொதுச் செயலாளரானதும் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பங்கேற்க பலருக்கு விருப்பம் இல்லை. கட்டாயப்படுத்தியே நிர்வாகிகளை மாவட்ட அளவில் பொறுப்பிலிருப்பவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்திலேயே சசிகலாவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பலைகள் இருந்தன. ஜெயலலிதாவுக்குப் பயந்தவர்கள் சசிகலாவுக்கு பயப்பட வேண்டும் என்ற அவசியமில்லை எங்களுக்கு இல்லை என்ற எண்ணம் கட்சியினரிடம் மேலோங்கி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஒரு தரப்பு அ.தி.மு.க.வினர் முன்னிறுத்தி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள சசிகலா புஷ்பா எம்.பி திட்டமிட்டு அதற்கான காயை நகர்த்தி வருகிறார்.

சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் எல்லோரும் ஒரே அணியில் சேர்ந்து அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த உள்ளோம். தென்மாவட்டங்களில் வைகுண்ட ராஜன் மூலம் அ.தி.மு.க.வுக்குள் நுழைந்தவர்கள் இன்னும் அவருக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் ஆதரவாகவே இருக்கின்றனர். சமீபத்தில், ஆலோசனை கூட்டத்துக்கு சசிகலா அழைத்தும் அவரது ஆதரவாளர்கள் செல்லவில்லை. பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன், அமைச்சர் சண்முகநாதனுடன் அதிக நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், உடன்குடி மகேந்திரன் ஆகியோர் செல்லவில்லை. இதில் சுப்பிரமணியன், மகேந்திரன் ஆகியோர் தீபாவுக்கு ஆதரவு என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர்.

குமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக ஏற்கெனவே ஒரு அணி செயல்படுகிறது. அந்த அணியில் இருப்பவர்களை சசிகலா புஷ்பா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி தீபா அணியில் சேர வழிவகை செய்துள்ளனர். இவ்வாறு தென்மாவட்டங்களில் தீபாவின் கை ஓங்குவதற்குப் பின்னணியில் சசிகலா புஷ்பா இருக்கிறார். தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அப்போதுதான் தீபாவுக்குப் பின்னால் இருக்கும் சசிகலா புஷ்பாவின் அரசியல் தெரியவரும்” என்றார்.

தீபா பேரவையை தொடங்கி இருக்கும் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், “நான், கடந்த 98-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். உடன்குடி அருகே லட்சுமிபுரம் ஊராட்சி கழகச் செயலாளராக உள்ளேன். உடன்குடி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அ.தி.மு.க.வினர் சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் செயல்பட முடிவு செய்து தீபா பேரவையை தொடங்கி இருக்கிறோம். சென்னையில் தீபாவை சந்தித்து எங்களது ஆதரவை அவருக்கு தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

“தீபா பேரவை பல இடங்களில் தொடங்கப்பட்டு வரும் நேரத்தில் அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தயாராக இருக்கின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் உறவினர் தீபாவின் ஆதரவாளராக உள்ளார். அவர், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்மாவட்டங்கள் மட்டுமல்ல கொங்கு மண்டலத்திலும் தீபாவை ஆதரிக்கும் குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

இவ்வாறு தீபாவுக்கு தமிழகத்தில் பல இடங்களிலிருந்து ஆதரவு கிடைப்பது தொடர்பாக சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி உள்ளது. அப்போது, தீபாவுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.வினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலும் சசிகலா பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு தீபாவுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.வினரிடம் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். அடுத்து, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit