கல்லறை மீதிலெம் கைகளை வைத்தோரு சத்தியம் செய்வோமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா இன்றும் விடுதலைக் கனவினை சுமந்தவாறே அந்த மண்ணை சுற்றிக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் அதன் தலைமையும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது புலத்தில் இருக்கம் மக்கள் அவைகள் தேசிய அவைகள் நாடு கடந்த அரசாங்கம் போன்றவற்றை பற்றியோ அதிகம் அச்சம் கொள்ளவில்லை. மாறாக தமது இனத்தின் விடுதலைக்கா தமது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான வீரர்களின் தியாகங்கள் தான் அவர்களுக்கு இன்னும் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய போராளிகளில் கணிசமான தொகையினரை விடுதலை செய்துள்ளதாக கூறும் இலங்கை அரசாங்கம் மறுபுறம் மாவீரர்கள் உறங்கும் கல்லறைகளை உடைத்து சிதைத்திருப்பது ஏன் என்பதே முக்கியமானது.

அந்த மாவீரர்களின் தியாகம் மட்டுமே இனி விடுதலையின் வீச்சை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்த தியாகத்தின் மேன்மையினை தமிழர் மனங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதன் மூலமாகவே தமிழினத்தின் மத்தியில் எரியும் விடுதலைத் தீயை அணைக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றது.

மறுபுறம் மாவீரர்களின் தியாகத்தின் வலிமையினை உணராதவர்களாக நாங்கள் அவர்களின் நினைவு தினத்தையும் பங்குபிரிப்பதற்கு எதிர் எதிர் அணிகளாய் மாறி நிற்கின்றோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மாவீரர் தினத்தை தேசிய நினைவெழுச்சி தினமாக அறிவித்தததும் விடுதலைப் புலிகளின் தலைவரின் வருடாந்த உரையினை அதில் இணைத்தும் அதன் முக்கியத்துவத்தையும் நோக்கத்தையும் தீர்க்கமாக வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் முக்கிய பதவி நிலைகளில் இருந்தவர்களும் இன்று மாவீரர் நாளின் புனிதத்தையும் அதன் நோக்கத்தையும் மறந்து விட்டார்களோ என்ற சந்தேகங்களை தோற்றுவிக்கின்றார்கள்.

நமது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக மாவீரர் நாளை பயன்படுத்த முற்படும் நிலை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியினையும் கவலையினையும் தோற்றுவித்துள்ளது.

இதுவரை காலமும் மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் நடத்தியவர்கள் தாயகத்தில் வாழும் மாவீரர்களின் குடும்பங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உரிய முறையில் உதவிகளை வழங்கவில்லை என்ற வாதம் நியாயமானது.

இதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாவீரர் தின நிகழ்வுகளின் போது சேகரிக்கப்படும் பெரும் தொகை பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அந்த நிகழ்வில் தமது பங்களிப்பை வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக அளிக்கப்படும் காணிக்கை உன்னதமான நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை பங்களிப்பாளர்களுக்கு ஏற்பட வேண்டும்.

வெளிப்படைத் தன்மையுடன் இந்த விடயத்தை அணுகினால் இது போன்ற சர்சகைகளையும் விமர்சனங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

மாறாக இதுவரை நாங்கள் தான் மிகப் பெரிய அளவில் நினைவெழுச்சி நிகழ்வினை நடத்தி வருகின்றோம் எமது நிகழ்விற்கே அதிகளவில் மக்கள் வருகின்றார்கள் எனவே நாம் நினைத்தவாறு நடக்கலாம் என்று ஏற்பட்டாளர்கள் கருதினால் இது போன்ற இன்னும் ஏராளமான பிளவுகளை எமது சமூகத்தில் ஏற்படுத்தவே அது வழிவகுக்கும்.

மாவீரர்களின் குடும்பங்களுக்கு உரிய வகையில் உதவிகள் செய்யப்படவில்லை என்பதோடு மட்டும் நின்று விடாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தடுக்க நினைத்தார்கள் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று தொடர்பற்ற காரணங்களை அடுக்கி தமது தரப்பினை நியாயப்படுத்த முற்படுவது தமிழர் அறக்கட்டளையினரின் தவறான நிலைப்பாடாகவே கருதப்படுகின்றது.

இரண்டு விடயங்கள் அதிகம் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு. ஒன்று மாவீரர்களை இழந்து நிர்கதியாகி நிற்கின்ற அவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படத்த வேண்டும். இலங்கை அரசாங்கம் தடைகள் போடுகின்றது உதவிகளை வழங்க முடியாதுள்ளது என்ற காரணங்களை ஐந்து வருடங்களின் பின்னரும் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது அதற்கு மாற்றாக முன்னிலைப்படுத்தப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ தமிழ் மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அரச சார்பற்ற மனிதாபிமான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு தடைகள் இருந்தால் அது குறித்து ஐநாவிடமும் ஏனைய மனித நேய அமைப்புகளிடமும் பகிரங்கமாக முறையிட வேண்டும்.

கண் மூடித்தனமாக இணக்க அரசியல் அரசாங்கத்திற்கு நோகாத அரசியல் செய்ய முயல்வது அரசியல் தீர்வினைக் காணப்பதற்கான பொறிமுறையாக மட்டுமே இருக்க வேண்டும்.

இது போன்ற அடிப்படை மனித நேய தேவைகளுக்குள் அரசியலையும் இராஜதந்திர நுட்பங்களையும் கலந்த விடாமல் இருந்தால் இதனை கூட்டமைப்பினால் சாத்தியமாக்கலாம்.

இரண்டாவதாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தவதற்கு வேண்டிய அழுத்தங்களை புலம்பெயர் சமூகம் தாயகத்தில் உள்ள உறவுகளிற்கு வழங்க வேண்டும்.

நீங்கள் யாருக்காக போராடினீர்களோ அந்த மக்களே உங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களே என்று இலங்கை அரசாங்கமும் இராணுவமும் முன்னாள் போராளிகளை வார்தைகளால் கொல்லும் நிலையை மாற்ற வேண்டும். அதே போல் அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

மாவீரர் குடும்பங்களும் முன்னாள் போராளிகளும் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் அவலங்களை பதிவு செய்து இங்குள்ள மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

ஏட்டிக்கு போட்டியாக நிகழ்வுகளை நடத்துவதற்கும் மேடைகளை அலங்கரித்து தமிழினத்தின் தலைவர்களாவதற்கும் காட்டப்படும் முனைப்புகளில் ஒரு சிறு பகுதியாவது இந்த விடயங்களை நோக்கியதாக மாற்றப்பட்டால் அவர்களின் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்

அதனை விடுத்து முன்னர் இடம்பெற்ற சம்பவங்களையும் அரசியல் விருப்பு வெறுப்புகளையும் மாவீர் தினத்துடன் இணைத்து அதன் மூலம் அரசியல் செய்ய முற்படுவது யாருக்கும் எந்த பலனையும் ஏற்படுத்தாது.

இது போன்ற விடயங்கள் பொதுவெளிகளில் தொடர்ந்து உரையாடப்படுவதும் விமர்சிக்கப்வடுவதும் அதற்கான சூழ்நிலைகள் அடுத்தடுத்து ஏற்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சுயவிமர்சனம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவை உரிய முறையில் முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவசியம். புலம்பெயர் மக்களின் பலம் மற்றும் தெளிவான செயல்பாடுகள் மட்டுமே எமக்கான நீதியினை பெற்றுத் தரும். அது எங்கள் ஒற்றுமை என்ற அத்திவாரத்தின் மீதே கட்டியெழுப்ப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மாவீரர்களின் நினைவிடங்களை அழிப்பதன் மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் அந்த தியாகத்தின் பின்னால் உள்ள உன்னத நோக்கம் குறித்தும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் அடுத்த தலைமுறையும் சிந்திக்காமல் தடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையே இங்கே முரண்பாடுகளின் பெயரில் முட்டிமோதும் நாமும் முன்னெடுக்கப் போகின்றோமா ?

கல்லறை மீதலெம்

கைகளை வைத்தோரு

சத்தியம் செய்கின்றோம் … !

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

– ரமணன் சந்திரசேகரமூர்த்தி (கனடா) –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*