தமிழகம் வாயை மூடினால் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

lk-army3-300x195

தமிழ்நாட்டிற்கு ‘தனிப்பட்ட’ விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், ‘தந்தி’ தொலைக்காட்சியிலும், கண்ணபிரான் நினைவு நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் கூறும் நல் ஊடக வெளியில் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கின் முதல்வர் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் ஏதோவொரு அமானுஷ நெருக்கடி அவரை தந்தி தொலைக்காட்சிக்கு முன்னால் நிறுத்தியிருக்கிறது.

அத்தோடு இந்தியா இல்லாமல் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையென்று அவர் அண்மையில் உதிர்த்த வார்த்தைகள்தான் இப்போது நினைவிற்கு வருகிறது.

வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வரைக்கொண்டு, தமிழக ஆதரவாளர்களை , அரசியல்வாதிகளை ஈழப்பிரச்சினை குறித்து பேசவிடாமல் ஊமையாக்கும் தேவை யாருக்கு இருக்கிறது என்பதனைப் புரிந்து கொண்டால், இந்த ‘தனிப்பட்ட’ விஜயத்தின் சூட்சுமம் விளங்கும்.

‘ கண்ணபிரான்’ மேடையில், இறுதிப்போரில் இந்திய வழங்கிய இராணுவ- அரசியல்- புலனாய்வு ஒத்துழைப்பு பற்றி போட்டுடைத்துள்ளார் முதல்வர். போர் முடிந்தபின் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதுதான் இந்தியா இலங்கையோடு பேசிய பேரமாம்.

இந்தியாவின் போரை நாமே நடாத்தினோமென தென்னிலங்கையிலிருந்து ஒரு அதிகாரக்குரல் அண்மையில் ஒலித்ததை, விக்கினேஸ்வரன் அவர்கள் மறந்தாலும், வலிசுமக்கும் மக்கள் அதனை மறக்கவில்லை.

போர் முடிந்து 5 வருடமாகியும் இன்னும் தீர்விற்கான பேரம் முடியவில்லை போல் தெரிகிறது. இப்போதுதானே சீனாவின் நீர்மூழ்கி இலங்கைக்கு வைத்திருக்கின்றது. ஆகவே பேரத்தின் காலம் நீண்டு செல்லும் என்பதை பகவான் சிங் போன்றோர் புரிய மறுத்தாலும், இலங்கை வரும் இந்திய இராணுவ மையப் பிரதிநிதிகள் எமக்கு உணர்த்திவிட்டுச் செல்வார்கள்.

கடந்த 12 ஆம் திகதியன்று ‘ தந்தி’ தொலைக்காட்சியில், அதன் பிரதம செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே மேற்கொண்ட நேர்காணலில், வடமாகாண முதல்வர் வெளியிட்ட அரசியல் செய்திகள் குறித்து பார்பதுதான் இப்பத்தியின் நோக்கம்.

இயக்குனர் சங்கரின் ஒருநாள் முதல்வரால் சாதிக்க முடிந்ததில் ஒரு வீதம் கூட, தனது ஒருவருட ஆட்சியில் சாதிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் முதல்வரின் பேச்சில் எதிரொலித்தது.

அந்த நேர்காணலிற்கான நோக்கம் தெளிவானது.

அதாவது வடக்கு முதல்வரின் வாய் வழிமூலம் தனி ஈழம் சாத்தியமில்லை என்றும், அக்கோரிக்கையை முன் வைப்பதன் ஊடாக வடக்கில் இருக்கும் ஒரு இலட்சத்தி ஐம்பதினாயிரம் இராணுவத்தினரை அகற்ற முடியாதுள்ளது என்கிற அச்சுறுத்தும் செய்தியை தமிழக மக்களுக்குச் சொல்ல இந் நேர்காணல் பயன்பட்டது போல் தெரிகிறது.

இந்திய நடுவண் அரசை நோக்கி தமிழகம் கொடுக்கும் அழுத்தமானது கொழும்பிற்கு நெருக்கடியைக் கொடுக்கிறது என்று ஆனந்தப்படும் முதல்வர் விக்கினேஸ்வரன், இதனைச் சிங்களம் பார்க்கும் பார்வை தம்மீது புலிப்பட்டம் கட்ட உதவுகிறதென ஆதங்கப்படுகிறார்.

ஆகமொத்தம் தமிழக மக்களின் ஈழ ஆதரவு தேவை என்கிறாரா? இல்லையேல் வேண்டாம் என்கிறாரா என்று புரியவில்லை.

‘தாங்கள் தமிழீழம் கேட்கவில்லை’ என்பதனை தமிழக மக்களுக்கு இடித்துரைப்பதிலேயே அவரின் முழுக் கவனமும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும் தாங்கள் நீதிமன்றத்தில் ‘தனிநாடு கோர மாட்டோம்’ என்று சத்தியக்கடதாசி கொடுத்தும், அதனை நம்ப மறுப்பதுபோல் நடிக்கும் சிங்களத்தின் தந்திரம் குறித்து முதல்வர் பேச மறந்து விட்டார்.

ஆயினும் இவர்கள் விரும்பினாலும் அரசியலமைப்பின் 6 வது திருத்தச் சட்டம் அதற்கு அனுமதிக்காது என்பதை ரங்கராஜ் பாண்டேக்கு புரிய வைக்க எவருமில்லை.

தமிழீழத்தைக்கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கையில், அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் மக்களிடம் வாக்குக்கேட்டோம் என்பதனை தமிழக மக்கள் உணர வேண்டும் என்கிறார்.

முதல்வரால் இயலாததை தமிழக- புலம் பெயர்ந்த தமிழர்கள் முன் வைக்கின்றார்கள். அதிலும் தாயக- புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பினை நடாத்துமாறே பெரும்பாலான தமிழக அமைப்புக்கள் கோருகின்றன. ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் அண்மையில் நிகழ்ந்த வாக்கெடுப்புப் போல் ஒன்று நிகழ்வதை முதல்வர் ஏன் நிராகரிக்க வேண்டும். கட்டலோனியா மக்களும் இத்தகைய வாக்கெடுப்பினை இம்மாதம் நிகழ்த்தியிருந்தார்கள்.

‘தந்தி’ நேர்காணலில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வினை வேண்டுவதாகக்கூறும் முதலமைச்சர், இதுவும் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்தும் ஒரு ஜனநாயகப் பாதைதான் என்பதை ஏன் ஏற்க மறுக்கின்றார்?.

ஆனால் இங்குதான் ஒரு முக்கிய சூத்திரம் மறைந்திருப்பதை அவதானிக்க வேண்டும்.

அதாவது இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப்பாதை ஆதிக்கத்தை பலமிழக்கச் செய்ய இலங்கை மற்றும் மாலைதீவின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு அவசியமாகிறது.

ஒத்துழைப்பு என்பதற்கு அப்பால், தனது பிராந்திய அதிகார மையத்துள் இவ்விரு நாடுகளையும் கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது.

இன்றைய யதார்த்த சூழலில், இதனை பொட்டலம் போட்ட ‘பூமாலை’ நடவடிக்கை போல் அணுக முடியாது என்பதை, இந்திய வெளியுறவுத் துறையின் அறிவுரையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

சிவப்புக் கொடியை உயர்த்தமுன், பச்சைக்கொடியை உயர்த்திப்பிடிக்கும் ‘பொறுத்திருந்து பார்க்கும்’ இராசாவின் தந்திரத்தை தெற்கு வளாகம் பிரயோகிப்பது தெரிகின்றது.

இந்திய அளவில் இதற்குப் பெருந்தடைக்கல்லாக இருப்பது தமிழகம் மட்டுமே என்று நடுவண் அரசு நினைக்கின்றது. ஆகவே அந்த ஈழ ஆதரவுத் தளத்தினை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பையும், உலகத்தமிழர் பேரவையையும் பயன்படுத்த தெற்கு வளாகம் முயற்சிக்கும்.

இந்திய இராசாக்களின் இத்தந்திரத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்களும், ‘கண்ணபிரான்’ நினைவரங்கில் சொற்பொழிவாற்றிய முதல்வர்.விக்கினேஸ்வரனும் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

‘இந்திய நலன் என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தனி ஈழம் கோருவது, இந்திய- இலங்கை உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும்’ என்பது குறித்தே டெக்கான் குரோனிகள் பகவான் சிங் போன்றோர் கவலைப்படுகிறார்கள்.
இராணுவ அபகரிப்பிற்குள்ளாகும் நிலம் குறித்தோ அல்லது நிரந்தர அரசியல் தீர்வு குறித்தோ இந்தியா அக்கறை கொள்வதில்லை. அது குறித்துப்பேசி சிங்களத்தோடு முரண்படவும் இந்திய விரும்பவில்லை.

எங்களை விட்டால் உங்களுக்கு வேறு வழியில்லை என்று உணர்த்துவதில் மட்டுமே கொள்கைவகுக்கும் கோமான்கள் குறியாக இருக்கின்றார்கள். அதனை அடிக்கடி வடக்கின் முதல்வர் வழி மொழிகின்றார்.

தந்தை. செல்வாவின் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஈழப்போராளிகளும் , விடுதலைப்புலிகளின் அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையான புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் ஒரு முகாமிலும், அரசோடு இணைந்து வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்கிற சிறு குழுக்கள் பிறிதொரு முகாமிலும், நாட்டைப்பிரிக்காமல் அதன் அதிகார வரம்பினுள்ளே எமக்கென ஒரு சுயநிர்ணய உரிமையும், ஆகக்கூடிய அதிகாரப்பகிர்வுடன் எமது வாழ்க்கையை நடாத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்பும் தம்மைப்போன்றோர் மூன்றாவது முகாமிலும் இருப்பதாக விக்கினேஸ்வரன் அவர்கள் பாண்டேயின் கேள்வி ஒன்றிக்குப் பதிலளித்துள்ளார்.

ரங்கராஜ் பாண்டேயின் கேள்விகள் அனைத்தும் டெல்லியின் குரல் போல் ஒலித்தது.
‘புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகள் இருக்கிறதாமே..!’ என்று பாண்டே குத்திக்காட்ட, முதல்வர் அதனை சமாளித்த விதத்தைப் பார்க்கும்போது, எதிர்வரும் சனாதிபதி தேர்தல் காட்சிகளே எம்மனதில் வந்துபோயின.

‘தமிழக அரசியல்வாதிகள் இலங்கையின் யதார்த்தநிலை புரியாமல் பேசுகிறார்கள்’ என்கிற தொனிப்பட, கேள்வி போன்ற கருத்துத் திணிப்பினை பாண்டே முன்வைத்த போது, தம்மாலும் அவற்றை வெளிப்படையாக பேச முடியாதுள்ளதெனவும், அந்த அளவிற்கு இராணுவ அடக்குமுறை இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டபோது, எதிர்பார்த்த பதில் கிடைக்காததால் பாண்டேயின் முகம் சுருங்கிப் போனது.

இவர்கள் கூறுவது போன்று வெறும் உணர்ச்சி அரசியல் என்கிற குறுகிய வட்டத்திற்குள் முடங்கிவிடாமல், தர்க்கபூர்வமாக -பூகோள அரசியல் கண்ணோட்டத்தில் ஈழ மக்களின் தேசிய இனப்பிரச்சினையைப் அணுகும், அதுகுறித்து விவாதிக்கும், ஆரோக்கியமான பல வெளிகள் தமிழகத்தில் இப்போது உருவாகியிருக்கின்றன.

இவற்றுள் மே 17 இயக்கம், மாணவர் அமைப்புக்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஊடகர் அய்யநாதனும், தமிழ் -ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார். தந்தியிலும் அவரின் பங்கு சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் அமைப்புக்களின் கருத்தையும், தமிழக ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும், ‘தமிழக மக்கள்’ நம்பக்கூடாது என்பதனை நிலைநாட்டும் முகமாகவே தந்தித் தொலைக்காட்சியின் நேர்காணலும், அடுத்த நாள் நடை பெற்ற விவாதமும் முன்னெடுக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகின்றது.

பாண்டேக்களுக்கும், பகவான்களுக்கும் இருக்கும் தந்திர வகைசார் அக்கறையைக் காட்டிலும், தமிழக மக்களுக்கு ஈழத்தமிழினத்தின் மீது அறிவார்ந்த, உணர்வுபூர்வமான அக்கறை உண்டென்பதை எவராலும் நிராகரிக்க முடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit