முன்பு ‘வரப்புயர’ இப்போது ‘றோட்டுயர’

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரச சபையில் புலவர்கள் கூடி மன்னனைப் புகழ்ந்து பாடுகின்றனர். ஒவ்வொரு புலவராக மன்னனைப் புகழ்ந்து பாடுகையில், அடுத்த சந்தர்ப்பம் ஔவையாருக்குக் கிடைக்கின்றது.

ஆசனத்தில் இருந்து எழுந்த ஔவையார் மன்னனைப் பார்த்து “வரப்புயர” என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார்.

அரச சபையில் ஒரே கலகலப்பு. எல்லாப் புலவர்களும் மன்னனைப் புகழ்ந்து பாட, ஔவையார் மட்டும் வரப்புயர என்றாரே! அவர் கூறியதன் பொருள் புரியாததன் காரணமாகவே சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

தாயே! தங்கள் பாட்டின் பொருள் யாது என்று புலவர்கள் வினவ ஔவையார், வரப்புயர நீர் உயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லுயர குடியுயரும்; குடியுயர கோன் உயர்வான் என்றார்.

இப்பாடலைக் கேட்டு மன்னனும் புலவர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். வரப்புயர என்ற ஔவையின் பாடல் இப்போதெல்லாம் பொருந்தாது.

வரம்பேயில்லாத வயல்கள், வயல்களுக்குச் செல்ல முடியாத தடைகள் என்பதாக நம் நிலைமை மாறி விட்டது.

எனினும் ஔவையார் சமகாலத்தில் நம் மத்தியில் வாழ்ந்து மன்னனைப் பாடுவாரா யின், றோட்டுயர… என்றே பாடியிருப்பார்.

இப்போது றோட்டுயர என்பதன் பொருள் யாது தாயே! என்று வினவினால், றோட்டுயர வீடு பதியும்; வீடு பதிய வெள்ளம் உயரும்; வெள்ளம் உயர இடம் பெயர்வு நடக்கும்; இடம்பெயர்ந்தால் சமைத்த உணவு கிடைக்கும் என்பதாக அவரின் பாடல் அமையும்.

வட பகுதி எங்கும் வீதிகள் உயர்த்தப்பட்டுள்ளன. கூடவே புகையிரதப் பாதைகளும் மலையாக எழுந்து நிற்கின்றன.

இந்நிலையில் சொற்ப மழை பெய்தாலும் வீதிகளின் இரு மருங்கிலும் வெள்ளம் தங்கி விடுகின்றது.

ஒழுங்கைகள் எங்கும் மழை நீர்த்தேக்கம். வீடுகளில் மழை நீர் புகும் ஆபத்து என்நேரமும் நடக்கலாம் என்றவாறு எங்கள் நிலைமை உள்ளது.

திட்டமிடல் எதுவுமின்றி அபிவிருத்திப் பணி என்ற பெயரில் நடக்கின்ற செயற்பாட்டின் விளைவு இது எனலாம்.

ஒரு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணியை முன்னெடுக்கும் போது துறைசார்ந் தவர்களிடம்- ஊர்ப் பெரியவர்களிடம்-அனுபவசாலிகளிடம் கருத்துக்களைப் பெறுவது அவசியம்.

இதைவிடுத்து கட்டிடம் கட்டுகிறோம். வீதி போடுகிறோம். இதில் கருத்தறிவுக்கு என்ன? இடம் இருக்கிறது என்று செருக்குக் கொண்டால், திருநெல்வேலியில் கட்டப்பட்ட சந்தைக் கட்டிடம் போலத்தான் நிலைமை முடியும்.

ஆம், திருநெல்வேலியில் கட்டப்பட்ட சந்தைக் கட்டிடத்தின் அமைப்பு; சந்தை இயங்கும் மேற்தளம்; மழை காலத்தில் சந்தையின் அவலக் கோலம் என்பன எங்களிடம் இருக்கக்கூடிய அறியாமையின் வெளிப்பாடாகும்.

திருநெல்வேலியில் சந்தைக் கட்டிடம் கட்டப்பட்ட போது வெள்ளவத்தையிலும் ஒரு சந்தைக் கட்டிடம் அமைக்கப்பட்டது.

இரண்டு கட்டிடங்களுக்குமான செலவில் திருநெல்வேலி சந்தைக் கட்டிடமே அதிகம். ஆனால் வெள்ளவத்தை சந்தை அமைப்பு, அதன் தோற்றம் என்பன மிகச் சிறப்பான திட்டமிடலை, மேற்பார்வையை, இலஞ்சங்கள் ஊடுருவாத வேலைத் திட்டத்தை வெளிப்படுத்தி நிற்கும்.

ஆக, எதைச் செய்ய முன்பும் அதைப் பற்றி பல தடைவைகள் ஆராய்வது அவசியம். இல்லையேல் வீதிகள் அமைக்கப்படும் ஆனால் மழை காலத்தில் வீடுகளில் இருக்கமுடியாமல் போகும் என்பதை இப்போது நாம் யதார்த்தபூர்வமாக அனுபவிக்கப் போகின்றோம்.

எது உயர வேண்டுமோ அதை அழித்து உயரக் கூடாததை உயர்த்தினால் உபத்திரங்கள் தொடரும் என்பதற்கு எங்கள் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீதிகளும் புகையிரதப் பாதைகளும் நல்ல எடுத்துக் காட்டு.

நடந்தது நடந்தாயிற்று என்று மெளனமாக இருக்காமல் வடிகால் அமைப்புகள் தொடர்பில் நவீன நுட்பங்களைப் பிரயோகித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுவது அரசின் கடமை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*