பஸிலின் ஆதங்கம் நிறைவேறுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அரசியல் களம் இரண்டு முனைகளில் இப்போது பரபரப்பாகியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு பலமாகியிருக்கின்றது. அதனையொட்டி, களத்தில் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் இறங்கியிருக்கின்றன.

மறுபக்கத்தில், கொழும்புத் துறைமுகத்திற்கு சீனப் போர்க்கப்பல் இரண்டாவது தடவையாக வருகை தந்தது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் அரசியல் களத்தைப் பரபரப்படையச் செய்திருக்கின்றது. இது சர்வதேச மட்டத்திற்கு நீளும் வகையில் பல நாடுகளையும் முகம் சுளிக்கச் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

ஜனாதிபதியாக இரண்டாவது பருவ காலத்தில் பதவி வகித்துக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முனைந்திருக்கின்றார்.

மோசமான ஒரு யுத்தச் சூழலிலேயே, முதற் தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், யுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய அவர், 2009 ஆம் ஆண்டு யுத்ததில் அடைந்த மகத்தான வெற்றியை மூலதனமாகக் கொண்டு, தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதிலும் அவரே வெற்றிபெற்றிருந்தார்.

அதே யுத்த வெற்றி என்ற அரசியல் மூலதனத்தையும், தனக்கிருந்த அரசியல் அதிகார பலத்தையும் பயன்படுத்தி 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்னர் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வரமுடியாது என்ற கட்டுப்பாடு அரசியலமைப்பில் இருந்து வந்தது. இந்தக் கட்டுப்பாட்டை அவர், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கி, மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொண்டார்.

சட்ட ரீதியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் உண்மையான – சட்டரீதியான பொருள் கோடல் என்ன என்பது குறித்து இப்போது சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சாரார் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி அவ்வாறு மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாதிட்டு வருகின்றனர். இந்த 18 ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அவர் அந்தப் பதவியில் இருந்த காரணத்தினால், அவர், திருத்தப்பட்ட புதிய சட்ட விதிகளுக்கு உட்படவில்லை என்பது அவர்களின் வாதமாகும். திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற ஒருவரே மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியும் என்பது அவர்களுடைய முடிவு. ஏற்கனவே பதவியில் உள்ளவருக்கு இந்தச் சட்டம் பொருந்தமாட்டாது என்பது அவர்களின் பொருள்கோடலாக உள்ளது.

இந்தப் பின்னணியில்தான், மூன்றாவது முறையாக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா, இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விளக்க ஆலோசனை கோரியிருக்கின்றார்.

அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத்தில், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் ஒன்பது நீதியரசர்கள் அடங்கிய நீதியரசர் குழுவொன்று இந்தக் கோரிக்கை குறித்து ஆராய்ந்து, அதன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனை தொடர்பில், ஆதரவாகவும் எதிராகவும் சட்ட விளக்கங்கள் அடங்கிய 38 ஆலோசனைகள் உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி ஆய்வு செய்த பிரதம நீதியரசர் தலைமையிலான ஒன்பது பேர் அடங்கிய நீதியரசர் குழுவினர் தமது பொருள் கோடல்விளக்கத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தின் உள்ளடக்கம் என்ன என்பது ஜனாதிபதி மாளிகையினாலோ அல்லது ஜனாதிபதி அலுவலகத்தினாலோ உடனடியாகப் பகிரங்கப்படுத்;தப்படவில்லை. அவ்வாறு அது பகிரங்கப்படுத்தப்படுமா இல்லையா என்பது யூகிக்க முடியாமல் இருக்கின்றது.

அதேநேரம், ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிடலாமா இல்லையா என்பதைத் தீர்மானித்து ஒரு முடிவைத் தெரிவிப்பதற்கு தேர்தல் ஆணையாளருக்கே அதிகாரம் இருக்கின்றது. தனி மனிதராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணையாளரின் இந்த அதிகாரத்தை அவருக்குள்ள உரிமையை மீறும் வகையில் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

அடுத்த தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்று ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருப்பது அவருடைய தனிப்பட்ட விடயமாகும். ஆந்த முடிவைப் பொதுவானதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பொருள்படும் வகையிலும் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கின்றது.

இது ஒரு புறமிருக்க, ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள அதேநேரத்தில், பாப்பரசர் புனித பிரான்சிஸ் அவர்களின் இலங்கை வருகை பற்றிய உறுதியான தகவல்களும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது பற்றிய ஐயப்பாட்டையும், தேர்தலுக்கான திகதி குறிப்பது தொடர்பிலும் பல்வேறு வினாக்களையும் தோற்றுவித்திருக்கின்றன.

இத்தகையதொரு குழப்பகரமான பின்னணியில்தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு விடுத்துள்ள அழைப்பு ஒன்றின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச கோரியிருக்கின்றார்.
ஏன் இந்த அழைப்பு?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியும், மீண்டும் புலி வருகின்றது என்ற அச்சமூட்டுகின்ற பூச்சாண்டி அரசியல் கோஷமும்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குழுவினரின் அரசியல் தந்திரோபாய பாணியாக இருந்து வருகின்றது. பேரின மக்களின் அரசியல் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதிலும், அதனை மேலும் மேலும் வலுப்படுத்திச் செல்வதிலுமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத் தரப்பினர் தீவிர கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர்.

இந்த பேரினவாத அரசியல் போக்கில் இருந்து அவர்கள் இம்மியளவும் இதுவரையில் மாறவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த ஐந்து வருட காலத்தில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்கூட, தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அவர்களுடைய அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்ற ஆறு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலம் நீடித்துள்ள அரசியல் ரீதியான உண்மையை, நிலைப்பாட்டை அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை.

தமிழர்களாயினும் சரி, முஸ்லிம்களாயினும்சரி அவர்களுடன் அரசியல் பேரம் பேசி, நிபந்தனைகளின் அடிப்படையிலான இணக்கப்பாடு என்ற அத்திவாரத்தின் மீது அவர்கள் அரசியல் நடத்துவதற்குத் தயாரில்லை. மாறாக மேலாதிக்க அரசியல் போக்கின் அடிப்படையிலேயே நாட்டில் அரசியலை அவர்கள் நடத்தி வருகின்றார்கள். விட்டுக்கொடுப்புகளுக்கு இடமே இல்லை. மற்றவர்கள் இணங்கி வரவேண்டுமேயொழிய, நாங்கள் இணங்கி வரமாட்டோம் என்பதே அவர்களின் அரசியல் சித்தாந்தமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்று இந்த அரசாங்கத்தில் அதிகார பலமுள்ளவர்களில் ஒருவராகிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய பஸில் ராஜபக்ச அழைத்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி வாகையும், புலி வருகின்றது புலி வருகின்றது என்ற பூலிப் பூச்சாண்டியும் பேரின மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் புளித்துப் போய் விட்டதோ என்ற சந்தேகத்தையே அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்த அழைப்பு ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்கு ஒருவர் 51 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் திணைக்கள விதியாகும். இந்த நிலையில் 75 வீதமாக உள்ள சிங்கள வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாக்குறுதிகளையும், அவருடைய கொள்கைகளையும் எற்று வாக்களித்தாலே போதும், அவர் இலகுவாக தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற துணிவிலேயே காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.

ஆனால், அரசாங்கத்தின் போக்கில் சிங்கள மக்கள் மத்தி;யில் எற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற அதிருப்தியும், ஏதேச்சதிகாரத்தை நோக்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் போக்கும், ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சிந்தனைப் போக்கையும் அரசியல் செயற்பாட்டையும் சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் அலையானது நாட்டின் தென்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். அண்மையில் நடந்து முடிந்த ஊவா மாகாண சபைக்கான தேர்தல் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அரசியல் செல்வாக்கின் சரிவை, துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இந்த அரசியல் யதார்த்தத்தை உணர்ந்த நிலையிலேயே அமைச்சர் பஸில் ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்று கோரியிருக்கின்றார்.

அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு முன்பாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய நிதி அமைச்சராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அழைத்திருந்தார்.

இதுகால வரையிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பஸில் ராஜபக்ச, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து, கூட்டமைப்பு தனது நேர்மையை வெளிப்படுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.

அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர வழிமுறையிலோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இதுவரையில் ஆதரவு வழங்கியதில்லை என்று அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆதங்கப்பட்டிருக்கின்றார்.

அமைச்சர் பஸில் ராஜபக்சவிற்குப் பதிலளித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசியல் தீர்வு காண்பதற்காக இதுவரையில் தாங்கள் பல தடவைகள் காட்டிய கண்ணியமான நல்லெண்ணத்தை அரசாங்கம் சரியான முறையில் பன்படுத்தத் தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, இருந்தாலும், அமைச்சர் பஸில் ராஜபக்சவின் அழைப்பை ஆழமாகப் பரிசீலிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

கசப்புணர்வைப் போக்கி நேர்மையை வெளிப்படுத்துவார்களா?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் விடுதலைப்புpகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், யுத்தத்தை முடித்ததும், இனப்பிரச்சி;னைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்திருந்த அவர், யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர், அதுபற்றி அக்கறையற்ற போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்றார். யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும், பிரச்சினைகள் இன்னும் முடிவடையவில்லை. பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தவிர்க்க முடியாத அவசியத்தை அவர் உணர்ந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவே இல்லை. இது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், யுத்தம் முடிவடைந்ததையடுத்து இடம்பெயர்ந்த மக்களை மீன்குடியேற்றுவதிலும், அவர்களுக்கான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், யுத்தத்தால் அழிந்துள்ள பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள். ஏதிர்பார்ப்புக்கள் என்பவற்றை நிறைவேற்றத்தக்க வகையில் அவர்களின் பங்களிப்பைப் பெறுவதற்கும் ஜனாதிபதியும், அரச தரப்பினரும் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டமைப்ப உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் மேலும் பாதிப்பு ஏற்படத்தக்க வகையிலேயே அரச தர்பபினர் செயற்பட்டு வந்துள்ளார்கள். இன்னும் செயற்படுகின்றார்கள்.

மறுபக்கத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டிய இராணுவத்தினரை அங்கேயே அனைத்து நவீன வசதிகளுடனும் நிரந்தரமாக நிலைநிறுத்தியிருப்பது மட்டுமல்லாமல், அந்த மக்களுடைய சிவில் வாழ்க்கையில் ஆக்கிரமிப்பு ரீதியான தலையீட்டிற்கும் அரசாங்கம் அனுமதித்திருப்பதை அந்த மக்களால் சீரணிக்க முடியாதிருக்கின்றது.

யுத்தம் நடைபெற்ற பகுதியில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகக் கூறி நடத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர், அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளத்தக்க வகையில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்த நிர்வாகச் செயற்பாடுகளில் அரசியலைப் புகுத்தி, பல்வேறு தடைகளை ஏற்படுத்தி இடர்ப்பாடுகளில் அந்த நிர்வாகங்களையும் மக்களையும் அரசாங்கம் சிக்க வைத்திருப்பதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பறித்தெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம், வாழ்வாதார உரிமை மறுப்பு, நில உரிமை அபகரிப்பு போன்ற, அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது கசப்படைந்திருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின் கடந்த ஐந்து வருடங்களாக அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறுகின்ற அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாமல் போயுள்ள, பதவியில் உள்ள ஜனாதிபதியினால், மூன்றாவது பதவிக்காலத்தில் அத்தகைய அரசியல் தீர்வை ஏற்படுத்துவார் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. அதற்கு, அரசியல் ரீதியான சமிக்ஞைகளையும் காண முடியவில்லை. இந்த நிலைமையில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவாகவே இருக்க முடியும்.

மனித உரிமை மீறல் தொடர்பில் பொறுப்பு கூறத் தவறியிருப்பது, போர்க்குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பது, இதன் காரணமாக ஐநா மட்டத்திலான சர்வதேச விசாரணைக்கு ஆளாகியிருப்பது, போன்ற இக்கட்டுக்களில் இருந்து அரசாங்கமும், ஜனாதிபதியம் தப்புவதற்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியம். அத்துடன் எதேச்சதிகாரப் போக்கிலான ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டிருப்பதனால், அதனை ஒழித்துக் கட்ட வேண்டு;ம் என்று உள்நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள அரசியல் சக்திகளின் எதிர்ப்பையும் முறியடிப்பதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இனப்பிரச்சினைக்கு சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான ஒரு தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் சர்வதேச பிரதிநிதித்துவத்தின் முன்னிலையில் தமிழர் தரப்புடன் திறந்த மனதோடு பேச்சுக்கள் நடத்துவதற்கு உரியதொரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு மகாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். அங்குள்ள மாகாண சபைகள் அரசியலமைப்பில் உறுதியளித்துள்ளவாறாக அதிகாரங்களுடன் செயற்படுவத்றகான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இதுபோன்ற செயற்பாடுகளில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தாமதமின்றி ஈடுபட்டு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான அரசியல் நேர்மையை வெளிப்படுத்தினால் தமிழ் மக்கள் நூறு வீதம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். ஒத்துழைப்பார்கள்.

கூட்டமைப்பின் நேர்மையைக் காட்டுமாறு கோரியுள்ள அமைச்சர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலான அரசியல் நேர்மையை முதலில் வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.
இதற்கு முன் வருவார்களா?

செல்வரட்னம் சிறிதரன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*