நல்லிணக்கத்தின் விரோதிகள்……!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

therar

ஜனாதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் நல்லிணக்க வாரம் ஒன்றினை பிரகடனப்படுத்தவுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அந்த வாரம் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

ஆனால் நாட்டில் பௌத்த கடும் போக்கு மேலாதிக்க வாதிகள் கூறி வருகின்ற சில கருத்துக்கள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனத்திற்கும், சிங்கள தேசிய இனத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு தடையாகவே அமைந்திருக்கின்றது.

அதை வலுச் சேர்க்கும் வகையில் இலங்கையின் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் அமைந்திருப்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விடயம்.

மூவின மக்களும் வாழ்கின்ற மட்டக்களப்பு பிரதேசத்தில் அண்மையில் பௌத்த மதருவால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடானது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

அங்கு கடமையாற்றும் அரசாங்க அதிபர் அச்சத்தில் உறைந்திருந்ததையும் காணக் கூடியதாகவிருந்தது.

இது குறித்து எந்தவொரு பொது நிர்வாக சேவை உத்தியோகத்தாகளும் தேரரின் இந்த செயலை கண்டிக்காமல் விட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பொதுபலசேனா அமைப்பு மட்டக்களப்பு வருவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.

மட்டக்களப்பு பிரதேசமானது மூவின மக்களும் வாழுகின்ற பிரதேசமாக இருக்கின்ற போதும் வடக்கு, கிழக்கு என்பது தமிழ் மக்கள் வாழுகின்ற ஒரு பூர்வீக பிரதேசமாகும்.

இது கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்திய – இலங்கை ஒப்பந்த்தின் மூலமும், ஆட்சியாளர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நாட்டில் சிறுபான்மையாக தமிழ் மக்கள் வாழுகின்ற போதும் அவர்கள் ஒரு தேசிய இனம் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளாதான் விளைவே இந்த நாட்டில் இரு இனங்களுக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தது.

வடக்கு – கிழக்கு இணைந்து காணப்பட்ட போது இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தர்லில் பெரும்பான்மை பலத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிலைப்பெற்றிருந்த போதும் ஏனைய இனங்களை அடக்கி, அவர்களை புறந்தள்ளும் வகையில் ஆட்சி, நிர்வாகம் இடம்பெற்றிருக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடமாகாண சபை எந்தவொரு இனத்திற்கும் எதிராக செயற்படவில்லை.

ஆக தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்திற்கு எதிராகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ செயற்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.

அவர்கள் தாமும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம் என்பதையும், வடக்கு- கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகம் என்பதையுமே வலியுறுத்துகிறார்கள்.

அவர்கள் தமது இறைமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் ஒரு தேசிய இனத்திற்கான அடையாளங்களுடன் வாழக் கூடிய வகையில் சமநீதி, சமவுரிமை என்பவற்றை கோரி வருகிறார்கள்.

ஆனால், தென்னிலங்கையில் உள்ள பௌத்த மேலாதிக்க கடும்போக்கு சக்திகளிடம் இதனை ஏற்கின்ற பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.

அவர்கள் தமிழ் தேசிய இனத்தை அடக்கி, ஓடுக்கி பௌத்த மேலாதிக்க சிந்தனையை பரப்ப முயல்கிறார்கள்.

தற்போது இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதும் பௌத்த கடும்போக்கு சிந்தனைகள் தற்போதும் தொடர்வதையே அவதானிக்க முடிகிறது.

ஒரு நாட்டின் மத்திய கபினற் அமைச்சர் என்பவர் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களையும், அனைத்து சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.

அதிலும் குறிப்பாக நீதித்துறை அமைச்சர் என்பவர் முழுநாட்டிலும் சட்டம், நீதி சீர்குலையாத வகையில் தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் அவதானமாகவும் செயற்பட வேண்டும்.

ஆனால் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நீதித்துறை அமைச்சர் அங்கு நடைபெற்ற மாவட்ட மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லாட்சியை சீர்குலைக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு நீதி அமைச்சராக உரையாற்றியிருந்தார்.

அதே தினம் சிங்கள பௌத்த கடும்போக்கு கொள்கை கொண்ட பொதுபலசேனா பிக்குகளை அழைத்து மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கின்றார்.

அச் சந்திப்பின் போது தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சந்திப்பு இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அங்கு கருத்து தெரிவித்த நீதித் துறை மற்றும் பௌத்த விவகார அமைச்சர் ‘மட்டக்களபபு மாவட்டத்தில் 1982ம் ஆண்டுக்கு முன்பு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது எண்ணிக்கை குறைந்து விட்டது.

அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிதகள் இல்லை. அதனாலேயே அம்பிட்டிய சுமணதேரர் அவர்களுக்காக குரல் எழுப்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்தச் செயற்பாடும் இனவாத நோக்கோடு செயற்படும் மதவாதிகளை மக்களின் பிரதிநிதியாக கருதி கருத்து வெளியிட்டு இருப்பது என்பதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதே.

ஆக இந்த இடத்தில் நீதி அமைச்சர் தான் ஒரு புத்ததாசன அமைச்சர் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்க சிந்தனை வலுப்பெற்றமையே இனமுரண்பாடு தீவிரம் அடைய காரணமாக இருந்திருக்கிறது.

அப்படியான நிலையில் ஒரு நீதித்துறை அமைச்சர் புத்ததாசன அமைச்சராகவும் செயற்படுவது என்பது நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் கேள்வி எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் இருந்தும் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் வெளிவாராமல் இருப்பது பல்வேறு மட்டங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் அமைச்சரின் கருத்துக்களும் புத்தசாசனம் தொடர்பில் கரிசனை கொள்வதாகவும், கடும்போக்கு கொள்கை கொண்ட அந்த பிக்குகளின் செயற்பட்டை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் அல்லது ஆட்சியாளர்கள் மட்டத்தில் நல்லிணக்கம் பற்றி எதுவும் பேசாமல் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்ப்பது என்பதும், அதற்காக நல்லிணக்க வாரம் ஒன்றை அனுஸ்டிப்பது என்பதும் எவ்வளவு தூரம் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.

– நரேன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit