எங்கள் மண்ணும் இந்த நாட்களும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

“மூன்று நூற்றாண்டுகள் சென்றன
ஆயினும் அம்மா அம்மா
உன்னுடைய மென்கழுற்றில்
இன்னும் விலங்கு இன்னும் விலங்கு”

1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் “எங்கள் மண்ணும் இந்த நாட்களும் ” என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் “மண் சுமந்த மேனியர்” நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப் பார்த்தவர் பலர்.பார்க்காதவர் வெகு சிலரே.

“இன்னும் எம் மக்களின் குருதி குருதி மண்ணை நனைக்கும்” செய்திகள் இன்றும் வரும்பொழுது- கவிஞர் சேரனின் காலத்தால் அழியாத அன்றைய அற்புத வரிகள் தாம் நினைவுக்கு வரும்.

இலங்கைத் தீவை ஆண்ட ஐரோப்பியர்களான போத்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆண்ட நூற்றாண்டுகளையும் அதனைத் தொடர்ந்தும் நாம் படும் துயரங்களையும் இவை காட்டும்.

இந்த வரிகள் முழு இலங்கை அன்னைக்கும் இன்று பொருத்தமானவை எனலாம்.

இலங்கை மண்ணில் வெளிநாட்டுச் சக்தி ஒன்று தனது அன்றைய விஞ்ஞான , தொழிநுட்பப் பலத்துடன் காலடி எடுத்துவைத்த முதல் நாள் இன்று (15 .11.1505) ஆகும்.

இயற்கைக்கும் எமக்கும் பூர்வீகத் தொடர்பு என்னவோ -போத்துக்கேயனான டொம் லோரன்சோ டீ அல்மெய்டா முதன் முதல்- இலங்கைத் தீவின் மேற்கில் கடுங்காற்றால் கரை ஒதுங்கியதுவே -ஐரோப்பியரின் வரலாறு -எமது அனைவரதும் அரசியல் விதியினைத் தீர்மானிப்பதாய் அமைந்தது.

வந்த அந்தப் பெரியாரும் நேரே போர்த்துக்கலில் இருந்து வரவில்லை. இந்தியாவிலிருந்தே வந்தார். போர்த்துக்கேயர் வந்த காலம் கி பி பதினாறாம் நூற்றாண்டு! இன்று இருபத்தி ஒன்று!

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நிலவிய அரசியல், பொருளாதார சமூக சூழ்நிலை மகிழ்ச்சிக்குரியதன்று. தீவின் மக்களுக்கு இப்படிக் காற்றோடு காற்றாய் வந்திறங்கிய அந்நியரின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கூட எத்துறையிலும் இருக்கவில்லை.

சமூகத்தைத் தாக்கும் சமய பொரளாதார சக்திகளையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆத்மீக பலத்தையும் அன்றைய இலங்கைச் சமூகம் இழந்திருந்ததாகவே அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்லின்-பெலநறுவையை கைவிட்டு ஊர் ஊராகத் தலைநகர்களை மாற்றித் திரிந்த மன்னர்கள் ” இலங்கையின் அரசியல் முகாமை” என்பதை கீழ் நோக்கிச் செல்லும் வரைபாகவே நகர்த்தினர்.

இலங்கை அரசியலின் கீழ்நோக்கிய செல்கைக்குச் சான்றாக விளங்கினார். 1415 -லிருந்து கோட்டை தலை நகராக விளங்கிற்று. எனினும் அதிலிருந்து ஆட்சி புரிந்தோர் பெயரளவில் மட்டுமே இலங்கையின் பேரரசர் என்ற பட்டத்தைத் தரித்திருந்தனர் என்பர்.

அரசறிவியற் குறிப்புகளின், கட்டுரைகளின் படி- உண்மையில் இச்சிறு தீவு பல சிற்றரசர்களாற் பங்கு போடப்பட்டிருந்தது. கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம், என்ற மூன்று பெரும் பிரிவுகளும் இவற்றுக்கு இடைப்பட்ட வன்னிப்பிரதேசமும் தனித்தனி அரசர்களாக விளங்கின. செல்வம் மிகுந்த கோட்டை ப பேரரசு பலம் மிகுந்திருந்தால் அயலரசர்கள் அதற்குத் திறை வழங்கினர்.

அப்படி வழங்காமல், அடங்காதோரை அடக்க போர்கள் இடம்பெறும். இங்ஙனம் இச் சின்னஞ் சிறிய தீவில் அரசியல் ஒற்றுமையின்றி இருந்தால் அந்நியர் வந்து புகச் சந்தர்ப்பம் உண்டாயிற்று. இன்றைக்கு மட்டுமல்ல அன்றைக்கும் இது எழுதப்பட்டாத விதியாக எமது தீவுக்கு அமைந்தது என்பதை முழு இலங்கையரும் இன்னும் உணரத் தலைப்பட்டதாயில்லை.

வடக்கே கலா ஓயா, தெற்கே வளவை கங்கை, கிழக்கே மத்திய மலைப்பகுதி, மேற்கே கடல் ஆகிய எல்லையுடையது. கோட்டை அரசு அதன் மாவட்டபிரிவுகள் ஏழு கோறளை, நாலு கோறளை, மூன்று கோறளை, இரண்டு கோறளை என்ற தேனவக்கை றைகமம் மாத்தறை என்பன ஒவ்வொன்றையும் பரிபாலித்தற்கு அரசன் திசாவை என்னும் உயர் அதிகாரியை நியமித்திருந்தார்.

இவ்விராச்சியத்தின் தலைநகர் ஜயவர்த்தன கோட்டை – அதாவது வெற்றி வளரும் அரண் – என்ற பொருளுடையது அதனைச் சுருக்கிக் ‘கோட்டை’ என்று அழைத்தனர் என்பது வரலாறு.

சிற்றரசர்கள் ஆண்டுக்கொருமுறை திறை செலுத்த வரும்போது தலைநகரில் நடக்கும் ‘பெரஹா1’ என்ற பெருவிழாவிற் பங்கு பற்றுவர். அதற்கு வராமல் விடுபவர் அரசனை மதியாது புரட்சி செய்பவர் எனப் பொருள்படும். பெரஹர- தமிழில் பிரகாரம் என்று கோவில் வீதி வலம் வருவதைக் குறிக்கும் .

யாழ்ப்பாண அரசு:-

யாழ்ப்பாணக் குடாநாடு, வட இலங்கையில் மன்னார் வரையுள்ள நிலப்பகுதி, தீவுப்பற்று ஆகியனவற்றைக் கொண்டிருந்தது. சில நூற்றாண்டுகளாக அது சுதந்திரம் பெற்ற தனியரசாக விளங்கியது. தெற்கிலும் வடக்கிலும் பலம் மிக்க அரசுகள் எழும்போது யாழ்ப்பாண மன்னர் அவற்றுக்கு அடங்கித் திறையளிப்பார். அயலவர். பலம் குன்றினால் தாம் திறைகொடாது தனியரசு நடாத்துவர். இங்ஙனம் கோட்டையரசருக்கும் இந்தியாவின் விஜயநகர வேந்தருக்கும் திறையளித்த சந்தர்ப்பங்கள் 15ம் நூற்றாண்டில் ஏற்பட்டன. ஆனால் 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் சுகந்திர ஆட்சியை நடாத்தி வந்தனர். அவர்களது தலைநகராகிய நல்லூர் தமிழ்ப் பண்பாட்டையும் கலைகளையும் பேணிப்பாதுகாக்கும் தானமாயிற்று. தென்னாட்டில் முஸ்லிம்களின் படையெழுச்சியால் ஏற்பட்ட கொந்தளிப்பு பாக்கு நீரிணையைத் தாண்டி அவர்களுக்கு இங்கு வர முடியாமையினால் சைவத்தமிழ்க் கலாச்சாரத்தின் இறுதிப்புகலிடமென யாழ்ப்பாணம் விளங்கியது. சங்கம் வளர்;த்துத் தமிழ்காத்த பாண்டி நாட்டைப்போல யாழ்ப்பாணத்திலும் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது.

அரச குடும்பத்தில் உதித்தவர்கள் கூட வடமொழியிலும் தமிழிலும் சோதிடம் முதலிய துறைகளிலும் முதன்மை வாய்ந்த நூல்கள் எழுதப்பட்டன.

13 – ம் நூற்றாண்டுக்கு முன்னமே யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற அரச குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். அந்த நூற்றாண்டில் மிக்க பலம் பெற்று, அடுத்த நூற்றாண்டில் உச்ச நிலையடைந்த அவர்களின் அரசு கம்பளை யரசர்களிடத்திலும் திறை பெற்றது. ஆனால் அதன் புகழ் 15 – ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அற்றுப் போகத் தொடங்கியது என்பர். 6 – ம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகன் சபுமல் குமரையன் அதைக் கைப்பற்றினான். (1450 – 1467) (மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த நினைவுக்கு வரலாம்) .அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நல்லூரை அண்டிய பிரதேசங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கதைகள் பல உண்டு. மீண்டும் யாழ் அரசு உதயமானது.வரலாற்றாசிரியர் ஒருவரின் கூற்றுப்படி -” கிரகணத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல “அது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. கலை, கல்வியனைத்தும் விருத்தியடைந்தன.

சங்கிலி மன்னன்.

பரராஜசேகரன் 1478 முதல் 1519 வரை அரசாண்டான். அவனுக்குபின் சங்கிலி என்ற செகராஜசேகரன் சிம்மசேனமேறினான். அக்காலத்தில் புயற்காற்றால் எற்றுண்டு கரைக்கு வந்த கப்பல்கள் அரசனுக்கே சொந்தம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வழக்கப்படி, இலங்கை இந்தியத் துறைமுகங்களிடையே வியாபாரஞ் செய்து வந்த போர்த்துக்கேயக்கப்பல்கள் சில உடைந்து யாழ்ப்பாணக் கரைக்கு வந்தபோது அரசன் அவற்றைக் கைப்பற்றினான். கடலெல்லாம் தமதே என உரிமை பாராட்டிய போர்த்துக்கேயர் சுதேச சட்டங்களை மதிக்காமல் தம் கப்பல்களைத் திரும்பப் பெற முயன்றனர். அதன் பொருட்டு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கவும் மனங் கொண்டனர்.

போர்த்துக்கேயர் தலையீடு

ஆனால் யாழ்ப்பாண அரசு பெயரளவிலாயினும் விஜயநகர மன்னரி;ன் ஆட்சிக்கு உட்பட்டதுடேன் நெருக்கமாகவும் இருந்தது தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசுடன் போர்த்துக்கேயர் சண்டையிடாது ஒத்து நடந்து வந்தனர். எனவே, தக்க காரணமின்றிப் படையெடுக்க அஞ்சினர். தெற்கே மாயாதுன்னையின் தொல்லை குறைந்து, புவனேகபாகுவும் பேரனும் லிஸ்பனில் முடி சூடிய பின்னர் பின் உற்சாகமடைந்த போர்த்துக்கேயர் யாழை நோக்கி படையெடுக்க ஆயத்தமாயினர் நல்லூரில் அரண்மனைச் சதிகள் சில அவர்கள் காதுக்கு எட்டின. பட்டத்துரிமை தனக்கே என்று கூறிக் கொண்டு ஒரு அரசகுமாரன் போர்த்துக்கேயரை அடைந்தான். இது தான் தருணமெனக் கருதிய போர்த்துக்கேயர் 1543 – ல் மார்ட்டின் அல்ஃபொன்சோ டீ சௌசா என்பவன் தலைமையில் படையனுப்பினர். எதிர்ப்பதற்கு இது தரண மல்ல எனப் புத்திசாலித்தனமாக அன்று நினைத்த சங்கிலி அவர்களுக்குக் கப்பங்கட்டி ஆளச் சம்மதித்தான்.எனினும் பின்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் வேறு.

வன்னிப்பகுதி

வன்னிப்பகுதி என அழைக்கப்படும் பிரதேசத்தில் புத்தளம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு முதலியனவும் அடங்கும் பதினெட்டுப் பற்றுக்கள் இதிலிருந்தன என்பர். அடங்காத்தமிழ் எனப்பெருமை பாராட்டும் இப்பகுதி மக்கள் தனியுரிமையுள்ள வன்னியர்களால் ஆளப்பட்டனர். இலங்கையின் மூன்று அரசர்களால் யார் படைப்பலம் கொண்டு அடக்க முற்படுவாரோ அவர்களுக்கு ஓரொரு சமயம் திறைசெலுத்துவர் மற்றப்படி தனியரசு நடாத்துவர். இவ்வன்னியர் ஆட்சி பிற்காலத்தில் டச்சுக்காரர் ஆட்சியிலும் இவர்களது ஆட்சி ஓரளவு நிலை பெற்றேயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)

கண்டி அரசு :-

இத்தீவின் மத்தியிலுள்ள மலைப்பகுதி (கந்த) ஜந்து ரட்டைகளைக் கொண்டிருந்தமையால், அது “கந்த – உட – பஸ் – ரட்ட” என்ற பெயரைப் பெற்றது. சுருக்கமாக அதனை உடரட்டை (உயர் பூமி) என்பர். அதன் ஜந்து மாவட்டங்கள் உடுநுவரை, யட்டிநுவரை, தும்பறை, ஹரிஸ், பற்று, ஹெவ ஹெற்ற என்பன. இம் மலையரசின் தலைநகர் கம்பளை (1540 அளவிலேயே செங்கடகலவுக்கு மாற்றப்பட்டது) சிற்றரசு எனினும் இயற்கையரண் வாய்ந்ததாயிருந்தமையால், கோட்டையரசனுக்கு கீழ்ப்படாது இருந்தது.

ஆட்சிமுறை :-

அக்கால அரசியமைப்பைப் பற்றிய பூரணமான சித்தி;ரம் ஒன்றை வரைதல் அரிது. கீழ்நாட்டு மன்னர்களணைவரும் சர்வாதிகாரிகள் என்ற கருத்தைப் பரப்பிய மேல்நாட்டவர் அவர்கள் தான்தோன்றித் தனமாக ஆட்சி புரிந்தனர் என எழுதுவர். ஆனால் அரசன் ஆலோசனைச் சபையொன்றை கூட்டி முக்கிய அரசியற் கருமங்கள் பற்றி ஆலோசனை செய்த பின்னரே செயலாற்றுவான் . அவன் செயல்களைக் கட்டுப்படுத்த ஏட்டில் எழுதிய சட்டதிட்டங்கள் இல்லையே ஒழிய அவன் கட்டுப்பாடெதுவுமின்றிக் கருமம் ஆற்றினான் என்பது தலைமுறை தலைமுறையாக வருவது அது எழுதுப்பட்ட அரசியல் திட்டத்திலும் வலிமை வாய்ந்தது. அதை மீறி மக்களின் அபிமானத்தை இழக்க எவ்வரசனும் துணியமாட்டான். பரம்பரை வழக்கத்தை மீறிய மன்னன் பொதுஜன அபிப்பிராயத்துக்கு மாறாக அரசாள முடியாது. அவன் சிம்மாசனத்தையோ உயிரையோ இழக்க வேண்டிவரும். அதனால் அவன் நாட்டுமக்கள், குருமார் ஆகியோருக்கு மாறாக நடக்கத் தயங்குவான்.

மாகாண, கிராமி நிர்வாகம் :-

இராச்சியம் பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் “திசாவை” என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கீழ் பல அதிகாரிகள் பல கிராமங்களடங்கிய கோறளைகளை நிர்வகித்தனர். இவர்களுக்கு கீழே கிராமந்தோறும் கிராம அதிகாரிகள் இருந்து நிர்வாகத்தை நடத்தினர். இவர்கள் வரி வசூலித்தல், வீதிகள், குளங்கள் முதலியவற்றை அமைத்து பழுதுபார்த்தல், நீதி வழங்குதல், அரசனுக்குப் போர்க்காலத்தில் வேண்டிய படை வீரரை சேர்த்து அனுப்புதல் முதலிய கருமங்களை கவனித்து வந்தனர்.

நீதி பரிபாலனம் :-

குடிகளிடையே நிகழும் காணிச் சச்சரவுகள், பிணக்குகள் முதலியவற்றை தீர்க்கும் நீதி மன்றமாகக் கிராமசபை (கம் சபாவ) விளங்கியது. தற்கால சனநாயகத்தில் காணப்படும் குறைகள் காணப்படவில்லை. . கிராமத்தில் கண்ணியமானவர்கள் அதில் முக்கிய பங்குபற்றுவர் பரம்பரை வழக்கத்தையொட்டியே அதன் தீர்ப்புக்கள் இருக்கும். (கிராம சமுதாயத்தின் அத்திவாரமாக அமைந்திருந்தவை இச்சபைகளே குளம் கட்டல், வீதிகளமைத்தல் முதலிய பொதுச்சேவைகளையும் அவையே மேற்பார்வை செய்தன.) கிராம அதிகாரி இச்சபையின் தூண்போலிருந்து குற்றம் புரிவோரை தண்டித்தார் . இந்த நீதி மன்றத் தீர்ப்பை ஏற்காதவர்கள் மேலதிகாரிகளுக்கோ, மன்னனுக்கோ விண்ணப்பிக்கலாம்.
பொருளாதார நிலை

குடிகளின் முக்கிய தொழில் விவசாயமே ஆனால் புராதன, மத்திய காலங்களில் வரட்சி மண்டலத்தில் பெருங் குளங்களையமைத்த மன்னர்களால் உழவுத் தொழில் விருத்தியடைந்த நிலை மாறியது. மேலை நாடுகளில் விரும்பி வாங்கப்படும் கறுவாவே கோட்டையரசின் முக்கிய வருமானமாயிற்று அதனை அரசனேயன்றி வேறெவரும் சேகரித்து விற்றல் கூடாது. இயற்கையாக வளரும் கறுவாவை ஒரு சாதியார் சேகரித்துப் பதனிட்டுக் கொடுக்க மன்னன் அவற்றை முஸ்லிம் வணிகருக்கு விற்பான். கோட்டைத் தலைநகராக்கியதன் நோக்கமே கறுவா வாணிகத்தால் முழுநயம் பெறுவது தான் எனலாம். கறுவா மட்டுமன்றி முத்து இரத்தினங்கள் யானை, பாக்கு, மிளகு முதலியனவும் அரசனது தனியுரிமையாயிருந்தன. அவற்றை விற்பதாலும் அரசன் பெருலாபம் பெற்றான்.
சமயம், மொழி, பண்பாடு

பண்டைய மன்னர்களது காலத்திலிருந்த சீரும் சிறப்பும் பௌத்த சமயத்துக்கு இல்லை எனினும் இன்னும் அது மக்கள் சமூக வாழ்க்கையின் ஆணிவேராக அமைந்தது. என்பதை மறுக்கமுடியாது.

அரசன் புத்தரின் புனித சின்னமாகிய தந்தத்தை தன் தலை நகரில் தலதா மாளிகையமைத்துப் பேணி வைத்திருந்தான். ஆண்டுதோறும் “பெரஹர” (பிரகாரத்தை வலம் வருதல்) என்ற விழா பதினாறு நாட்களுக்கு நடக்கும். (அத்தருணத்திலேயே அரசனின் கீழுள்ள சிற்றரசர் வந்து விழாவிற் பங்குபற்றித் தம் திறைமையும் அளிப்பர்.) அநுரதபுரி, பொலநறுவை, மன்னார்களைப் போல அநேக விகாரைகளைக் கட்டவில்லை எனினும் சில நகரங்களில் கோட்டையரசர் விகாரை’களை யமைத்திருந்தனர். இரத்தினபுரிக்கருகில் சமண தேவாலயத்தைப் புதுப்பித்தனர் . அவர்கள் விகாரங்களுக்கும் தேவாலயங்களுக்கும் மானியமாக விடப்பட்ட கிராமங்கள் “விகாரகம்” “தேவாலகம்” எனப்பட்டன. அவற்றை ஆலய ஊழியர்கள் அனுபவித்து வந்தனர். சிங்கள மொழியும் அக்காலத்தில் மதிக்கத்தக்க முன்னேற்றமடைந்து வடமொழித்தொடர்பால் வளமுற்றது. கோட்டை மன்னர்களது. ஆதரவில் பல புலவர்கள் இலக்கண இலக்கிய நூல்களை எழுதினர். என்கின்றனர் நூலாசிரியர்கள்

இத்தகைய சுதேச சுகமான சூழ்நிலையில் வாழ்ந்த இலங்கை மக்கள் சமூகம் 15ம் நூற்றாண்டின் இறுதியில் இந்து சமுத்திரத்தில் ” இயற்கையின் நிகழ்வின் ” வருகையால் தோன்றிய புதிய ஜரோப்பிய இனத்தைப் பற்றியாதும் அறியாதவராயிருந்தனர் என்பதே உண்மை.

அவர்களது புதுமையான கடற்பட வலிமையும் பெரிய கப்பல்களும் அன்றைய விஞ்ஞானத்துறையில் அவர்கள் அடைந்த வெற்றிகளும் தம்மை எங்ஙனம் விரைவில் பலவகையில் பாதிக்கக்கூடும் தாங்கள் சமூகங்களுக்குள் எத்தனை எத்தனை அழிவுகளையும் சகோதரப் படுகொலைகளையும் இனப் படுகொலை களையும் நடத்தும் என்பதனைச் சற்றும் அறியாதவர்களாகவே இருந்தனர்.

தங்கள் மன்னர்களைக் குறித்தே கவலை கொள்ளாமல் வாழ்ந்த அவர்கள் கவலை கொள்ளாதவராய்த் தம் அற்ப போட்டி பொறாமைகளில் முழ்கிக் கிடந்தனர். இந்தப் போட்டிகளும் பொறாமைகளும் தான் 1505 இல் வந்த போத்துக்கேயரைத் தொடர்ந்து டச்சுக்காரர் ஆங்கிலேயர் என ஒவ்வொருவரும் தங்கள் மண்ணில் வந்து குடிகொண்டு தங்களை அவர்களே ஆள் வைப்பதற்கு வழி சமைத்தது! எனபர் ஆய்வாளர்கள்.

அந்தப் பொறாமைகளும் காட்டிக் கொடுப்புகளும் குத்து வெட்டுகளும் சூழ்ச்சிகளும் எம் தலைமைகளுக்கிடையில் தொடரும் வரை இன்னும் பலர் இத் தீவை “ஆண்டுகொண்டே “இருப்பார்! இந்த நாள் நமக்குத் தரும் செய்தி இதுவே!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*