ஜனாதிபதித் தேர்தல் அக்கினி பிரவேசமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இரண்டாவது தடவையாக, பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலத்திற்கு முந்திய நிலையில் ஜனாதிபதி தேர்தல் இப்போது அவசியமா, என்ற கேள்விக்கு உறுதியான பதில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு வலுவான காரணம் இருப்பதாகவும் கூற முடியாமல் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் 2005 ஆம் ஆண்டு போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச, முதன் முறையாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆறு வருட காலத்திற்குப் பதவி வகிக்கத் தக்க வகையில் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே, ஜனாதிபதி தேர்தலை நடத்திய அவர் இரண்டாவது தடவையாகவும் ஆறு வருடங்கள் பதவி வகிக்கத் தக்க வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதனையடுத்து, இப்போது அந்த ஆறு வருட காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவர் முனைந்திருக்கின்றார்.

ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உரிய காலத்திற்கு முன்பே நடத்துவதற்கு காரணமே இல்லையென்று அசியல் அவதானிகள் கூறுகின்றனர். இப்போது அவசர அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவசர அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத் தேவையொன்று நாhட்டின் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காணப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதே நேரம் ஜனநாயக ரீதியாக இறைமையுள்ள நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் இப்போது காணப்படவில்லை.

ஜனவரி மாதத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உலகளாவிய ரீதியிலான ஆன்மீகத் தலைவருமாகிய பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடைய விஸயத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதைத் தவிர அரசியல் ரீதியான எந்த அவசரமும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் தேவைக்காகவே அவசர கல்யாணத்தைப் போன்று இவ்வாறு அவசரமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் ஆறு வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்ட விதியாகும். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்ததும், தேவையின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என்று அரசியலமைப்பு கூறுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் – 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிவாக சூடிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், யுத்தத்தின் பி;ன்னரான அடுத்த கட்ட அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக மக்களின் ஆணையைக் கோருவதாகக் கூறி ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

ஆனால் இப்போது வெளிப்படையான காரணங்கள் எதுவுமே இல்லாத ஒரு நிலையிலேயே –ஆனால் – அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவசரமான ஜனாதிபதி தேர்தல்

வழமையாகவே, நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற நாட்டின் வரவு செலவுத் திட்டம் ஒரு மாதம் முன்னதாக, இம்முறை ஒக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டது. ஏதிரி;வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காகவே இவ்வாறு வரவு செலவுத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக சபையில் சமர்ப்பிக்கப்படுவதாக காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கத் தரப்பில் உறுதிப்பட தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய சுசில் பிரேம் ஜயந்த நவம்பர் 19 அல்லது 20 ஆம் திகதி (அதாவது அடுத்த வாரம்) ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது பற்றிய அறிவித்தல் வர்த்தமானியில் nளியிடப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

வர்த்தமானியில் தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து, குறைந்தபட்சம் 16 நாட்களின் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு கோரப்பட வேண்டும். அறிவித்தல் வெளியாகிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பு மனு கோரும் அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் வாக்களிப்பு – தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான இந்தக் கால அவகாசம் 60 நாட்களைத் தாண்டிச் செல்ல முடியாது. எனவே, இந்தக் கால எல்லைக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அது பாப்பரசரின் வருகைக்கு முன்னர் நடைபெறலாம் என்று அமைச்சர் சுசி; பிரேம் ஜயந்த விளக்கமளித்துள்ளார். ஆயினும் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி என்ன என்பதை அவர் வெளியிடவில்லை.

எனவே, ஜனாதிபதி தேர்தல் அவசரமாக நடத்தப்படும் என்பதை, அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் கருத்துக்கள் பளிச்சென வெளிக்காட்டியிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசரமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒருக்கீடு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார். இந்தத் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கமைய, மாவட்டங்களில் உள்ள உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்ற அதேநேரம், இந்தத் தேர்தலுக்கென கடந்த முறையிலும் பார்க்க 80 கோடி ரூபா அதிகமாக செலவாகும் என தேர்தல் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலுக்கு 195 கோடி ரூபா செலவிடப்பட்டதாகத் தேர்தல் திணைக்களம் கூறியிருக்கின்றது. தேர்தல் திணைக்களத்தின் மதிப்பீட்டின்படி, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 275 கோடி ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால், அவசரத் தேர்தலை நடத்துவதற்குரிய நிதியைப் பெற்றுக்கொள்கின்ற அதிகாரம் கொண்டுள்ள தேர்தல் ஆணையாளர் அவசரத் தேர்தல் எனக் கூறி இந்த நிதியைத் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நடக்கப் போகின்ற ஜனாதிபதி தேர்தல் என்பது அவசரமாக நடத்தப்படுகின்ற தேர்தல் என்பது தெளிவாகியிருக்கின்றது.

ஆனால், அவசரமான இந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் இலங்கையின் அரசியல் ஓர் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாரகின்றது என்பது மாத்திரம் நிச்சயமாகத் தெரிகின்றது.
அக்கினிப் பிரவேசமா…….?

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் இரு தடவைகளுக்குமேல் பதவி வகிக்க முடியாது என்பது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பிலான அரசியல் சட்ட விதிகளாகும். ஆனால் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அந்த சட்டவிதியை முற்றாக நீக்கிவிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் ஜனநாயக விழுமியங்களுக்குக் கேடு விளைந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது என்ற தடையேற்பாடு கொண்டு வரப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆட்சி முறையின் பிதாமகனாகிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கூறியிருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுடையவராக ஜனாதிபதி பதவியில் இருக்கின்ற ஒருவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. எமது நாட்டில் அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளின் ஊடாக தண்டனைகளிலிருந்து விலகியிருக்கின்ற சிறப்புரிமை ஜனாதிபதி பதவியில் இருப்பவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒருவருக்கு உள்ள இந்த சிறப்புரிமையைக் கொண்டு அவர் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.

இந்த வகையில் திவிநெகும சட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஒத்துழைக்க மறுத்த முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மோசமான முறையில் நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டதும், முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்த ஜனாதிபதிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டதற்காக மோசமான முறையில் பழிவாங்கப்பட்டு சிறைவாசம் அனுபவி;க்க நேர்ந்திருந்ததும், இதற்கான சிறந்த உதாரங்களாகக் கொள்ள முடியும்.

குற்றவியல் சட்டங்களுக்கு உட்படாத வகையில் தண்டனைகளில் இருந்து விலிகியிருக்கின்ற சிறப்புரிமையோடு நிறைவேற்று அதிகார பலத்தில் இருக்கின்ற ஒருவர் நீண்ட காலத்திற்கு அந்தப் பதவியில் இருப்பது பலவகைகளிலும் ஆபத்தானது என்ற காரணத்திற்காகவே ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாகப் பதவியில் இருக்க முடியாது என்ற கட்டுப்பாடு எமது அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும். உண்மையும் அதுதான்.

உலகில் ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்ட ஜனநாயக நாடுகள் பல இருக்கின்றன. அவற்றில் ஒருசில நாடுகளில் மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு நிபந்தனைகளில்லை. அநேகமான நாடுகளில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகளில் மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறி செயற்பட்ட ஜனாதிபதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதும் பல நாடுகளில் வரலாறாகப் பதிவாகியிருக்கின்றது,

ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாகத் தங்களை உலகத்திற்குக் காட்டிக் கொண்டவர்களின் கொடுங்கோல் அரச முறையைப் பொறுக்க முடியாத மக்கள் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து அவர்களைப் பதவியில் இருந்து தூக்கி வீசியிருக்கின்றார்கள். பலர் தண்டனைக்கு உள்ளாகவும் நேர்ந்திருக்கின்றது.

உதாரணங்கள்

பொலிவியா மற்றும் பெரு போன்ற நாடுகளில் இரண்டு தடவைகளுக்குமேல் ஒருவர் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதியை மீறி, அங்கு பதவியில் இருந்து அதிபர்கள் செயற்பட்டிருந்தார்கள். தங்களது முதல் பதவியானது பழைய அரசியலமைப்பின் கீழ் பெறப்பட்டது என்ற காரணத்தைக்காட்டி அவர்கள் மூன்றாம் முறை அதிபர் பதவி வேண்டும் என வாதாடியிருந்தார்கள். பெரு நாட்டு அதிபர் இதற்காகவே அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதற்கு ஒத்துழைக்க மறுத்த அந்த நாட்டு நீதியரசர்களைப் பதவியில் இருந்து தூக்கியெறிந்தார்.

தேன்கொரியாவின் பலமுள்ள மனிதராகக் கருதப்பட்ட சிங்மன் றீ அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து மூன்றாவது தடவையாகப் பதவியேற்றிருந்தார். அதற்கான அரசியலமைப்பு மாற்றத்தை அனுமதிக்க வேண்டும் இல்லையேல் அந்த நாட்டின் தேசிய சபையை (நாடாளுமன்றத்தைக்) கலைத்துவிடப் போவதாக அச்சுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு நள்ளிரவு நேரத்தில், அந்த தேசிய சபையில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதுபோன்று வேறு பல அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தி வரையறையில்லாத வகையில் அவர் அந்த நாட்டின் அதிபர் பதவியில் சுகபோகங்களையும் அதிகாரத்தின் ஊடான நன்மைகளையும் அனுபவித்திருந்தார். நான்காவது தடவையாக அவர் அதிபர் பதவிக்காகத் தேர்தலில் போட்டியிட்டபோது வெளிப்பார்வையில் மக்கள் அவருக்கு அமோகமாக வாக்களித்து அவரைத் தெரிவு செய்திருந்தார்கள்.

ஆனால், அவருடைய அதிகார துஸ்பிரயோகத்தையும், கொடுங்கோல் ஆட்சி முறையையும் பொறுக்காமல் கிளர்ந்தெழுந்த அந்த நாட்டு மக்கள் அவரைப் பதவியில் இருந்து சரித்து வீழ்த்தினார்கள். கட்டுப்பாடுகளோ வரைமுறைகளோ இல்லாத வகையில் அதிகாரங்களை வரமாகப் பெற்று ஆட்சியதிகாரத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு வீற்றிருப்பவர்களினால் ஜனநாயகம் கோலோச்சுகின்ற நாடுகளில் ஏற்படுகின்ற தீமைகளை இந்த வரலாற்றுப் பதிவுகள் மற்றவர்களுக்குச் சிறந்த பாடங்களாக அமைந்திருக்கின்றன.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றி, அவற்றுக்கமைவாக அரசியல்வாதிகள் ஒழுக வேண்டிய கட்டாயம் குறித்து இந்த வரலாற்றுப் பதிவுகள் வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வரைமுறைகளையும் சட்டவிதிமுறைகளையும் மதித்துச் செயற்பட வேண்டிய அவசியத்தையும் அமைதியான முறையில் குறித்தொதுக்கப்பட்ட கால எல்லைகளில் அமைதியான முறையில் வாக்குப் பலத்தின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவைகள் சுட்டி நிற்கின்றன.

ஜனநாயகக் கட்டமைப்புக்கள் தொடர்ந்து வலுவோடு செயற்படுவதற்கு குறிக்கப்பட்ட கால எல்லைகளில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதும், ஆட்சி முறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதும் அவசியம் என்று ஜனநாயக சட்ட வல்லுனர்கள் வலியுறுத்துகின்றார்கள். காலத்திற்குக் காலம் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் ஜீவநாடியாகும். மாற்றங்களுக்கு வழிவகுக்காத தேர்தல்களினால் பயனேதும் கிடையாது. அத்தகைய தேர்தல்கள் ஜனநாயக முறைக்கு முரணானவை என்பது அந்த வல்லுநர்களின் உறுதியான நிலைப்பாடு. மாற்றங்களைக் கொண்டு வராத தேர்தல்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஆறு வருட பதவிக்காலத்தைக் கொண்ட இரண்டு பருவ காலத்திற்கு ஒருவர் ஜனாதிபதி பதவியில் இருக்கலாம் என்னும்போது, குற்றச்சாட்டுக்களில் இருந்து – தண்டனை பெறுவதில் இருந்து விலகியிருக்கின்ற விசேட சலுகையைப் பெற்றுள்ள ஒரு ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற ஒருவர், அவருக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக 12 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய பாதிப்பு இருப்பதை சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதேநேரம், எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்று உத்தரவாதமளிக்கின்ற 18 ஆவது அசியலமைப்புத் திருத்தச் சட்டம அவசர அவசரமாகவே கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தி;ல் என்ன கூறப்பட்டிருக்கின்றது, அதனுள்ளே மறைந்திருக்கின்ற ஜனநாயகத்திற்கு முரணான ஆபத்துக்கள் என்ன என்பதைக் கண்டறிவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு ரீதியான சட்ட விளக்கம் கோரப்பட்டபோது, பலர், இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற நிபந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அந்த விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுக்கவில்லை.

எதிர்காலத்தில் அதிகார துஸ் பிரயோகத்திற்கு வழிவகுக்கக் கூடிய இந்த பதவிக்காலம் தொடர்பான மாற்றத்திற்கு இறைமையுள்ள மக்களின் விருப்பத்தைக் கோரத் தவறியமையானது, ஜனநயாகப் பண்புக்கமைவாக அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருந்ததாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குற்றச்hட்டுக்களும் சரி, 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் நீதிமன்றம் செயற்பட்டிருக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களும் சரி நீதிமன்ற நீதியரசர்களினாலும், ஆட்சியாளர்களினாலும் கவனத்திற் கொள்ளப்படவே இல்லை என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்hட்டுகின்றார்கள்.

பலவீனமான எதிரணிகள்

இரண்டு தடவைகளுக்குமேல் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியில் இருப்பதனால், ஜனநாயகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை முழுமையாக அறிந்தோ அறியாமலோ நாட்டில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் பல களத்தில் இறங்கியிருக்கின்றன.

ஆனால், மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக நடத்தப்படவுள்ள வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வலுவானதோர் எதிரணி சார்ந்த பொது வேட்பாளர் ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது போனாலும், கட்சி ரீதியாக வேட்பாளர்களை களத்தில் இறக்கி, தேர்தலில் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்கு, மக்கள் மத்தியில் தேசிய மட்டத்தில் அரசியல் செல்வாக்குடைய வேட்பாளர் எவரையும் நாட்டில் காணமுடியாமலிருக்கின்றது.

அதேநேரம், தென்பகுதி அரசியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அணிதிரண்டு கூட்டாட்சியில் பங்கு கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவையடுத்து. ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மேலெழத்தக்க வாய்ப்பைப் பெற்றுள்ளதாக நம்பப்படுகின்ற, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களான மக்களும் விரும்பி வாக்களிக்கத்தக்க வகையில் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது.

சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இன்றைய அரசியல் சூழலில் மிகவும் உறுதிபடைத்த அரசியல்வாதி ஒருவரே தேவைப்படுகின்றார். அத்தகைய உறுதி வாய்ந்த செயற்திறன் மிக்க வேட்பாளர் ஒருவர் களத்தில் இறங்குவாரா, அவ்வாறு ஒருவர் இறங்கி சிறுபான்மையினருடைய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாக முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் வேண்டுமானால், சில வாக்குறுதிகளை நம்பி தமது ஆதரவை அரச தரப்பினருக்கோ அல்லது எதிரணியினருக்கோ வழங்குவதற்கு தயாராகலாம். ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தத் தலைமைகளுக்குப் பின்னால் உள்ள மக்கள் நம்பிக்கையோடு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது.

இந்த நிலையில் வரப்போகின்ற அவசரமான ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டின் அரசியலை அக்கினிப்பிரவேசத்திற்கே இட்டுச் செல்லும் என்றே தோன்றுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*