யாருக்கெல்லாம் தூக்கு…? ஜெரா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணத்தின் கரைகளிலிருந்து படகுகள் பயணிக்கின்றன. அதே போல தமிழக கரைகளிலிருந்தும் படகுகள் வருகின்றன. ஓன்றுவிட்டு ஒரு நாளைக்கு அதிநவீன மீன்பிடிப் படகுகளை (ரோலர்) பயன்படுத்தி மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியும். இரு பக்கங்களிலிருந்தும் வரும் சில படகுகள் சந்தித்துக் கொள்கின்றன. அப்படியான சந்திப்புக்களில் இப்படியும் நடக்கின்றது.

போதைப்பொருள் கடத்தல். அது எப்படி நடக்கிறதெனில், கச்சத்தீவுக் கடற்பரப்பில் தமிழகத்தின் ரோலர் படகொன்றும், இலங்கையின் சிறுபடகொன்றும் மிக அண்மையாக நிற்பதை கடற்படையின் ராடர் கண்டுபிடித்துவிடுகிறது. உசாரடைந்த கடற்படைப் படகுகள் ஆரப்;பரிக்கும் கடலலைகளுக்கு நடுவில் சத்தம் சந்தடியில்லாமல் அவர்களை சுற்றி வளைத்துக் கவனிக்கிறது. மீன்பிடிப்பவர்களும், கடத்தல்களில் ஈடுபடுவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். கடற்படையின் நடமாட்ட சத்தங்களுக்கும், தூரத்தே தெரியும் இராணுவ வெளிச்சங்ளுக்கும் மத்தியில் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன அந்தப் படகுகள். சுற்றும்முற்றும் பார்த்தபடி மண் மூடைகளுக்குள் பொலித்தீன் கைளில் இறுக்கிச் சுற்றப்பட்ட எதையோ வைத்து, வலையோடு கட்டிக் கடலில் இறக்கிவிடுகின்றனர் அதில் தெரியும் மனிதர்கள். அந்த மண் மூ;டைகள் இறக்கப்படும் இடத்தை ஜீ.பீ.எஸ் கருவிகள் மூலம் மிக நேர்த்தியாகக் குறித்தும் கொள்கின்றன. கடற்படை அந்த இடத்துக்கு சென்று படகுகளை விரட்டினாலும், குறித்த ஜீ.பீ.எஸ். அடையாளங்களை வைத்து, கண்காணிப்பற்ற நேரங்களில் வந்து மண் மூடைகளை எடுத்துச்செல்ல முடியும் என்பதற்காகவே இப்படிச் செய்கின்றனர். இப்படி நடக்கையில், கடற்படைக் கலங்கள், மெதுவாக இரண்டு படகுகளை நெருங்குகின்றன. திடீர் என்று அந்தப் படகுகளை நோக்கித் தம் ‘பரா’ வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. நடுங்கிப் போகும் குறித்த இரண்டு படகுகளும், உடனடியாகவே மண் முடைகளைக் கடலில் தூக்கிவீசுகின்றன. அதில் ஒரு மண் மூடை படகின் இயந்திரப் பகுதியில் சுழலும் கற்றாடியில் சிக்கி சின்னாபின்னமாகிறது. பொலித்தின் பை கடலில் மிதக்கிறது. அதைத் திறந்து பார்த்தால், போதைப் பொருள். நம் தலைமுறையினரின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள்.
—————————

யாழ்ப்பாணத்துக்குப் போதைப்பொருள் வரும் வழியை இப்படித்தான் போட்டுடைக்கின்றனர் மீனவர்கள். அதுவும் அக்கம்பக்கம் பார்த்தே அவர்கள் பேசுகின்றனர். ‘முக்கியபுள்ளிகள்’ யாரென்றே தெரியாமல் நடக்கும் இந்தத் தொழிலில், யார் எதிரி, யார் நண்பன் என்று சொல்லவே முடியாது என்கிற பயம்தான் அவர்களின் பேச்சை மட்டுப்படுத்துகின்றது.

இப்படியொரு குற்றத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள்தான் இந்தக் கட்டுரைக்கு மூலகாரணமான எட்டுப்பேரும். அதில் ஐவர் இந்தியர்கள், மூவர் இலங்கையின் வடபாகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் எண்மருமே தமிழர்கள். தமிழர்கள்..!

கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் 27 இல் மண்டைதீவு, குருநகர் பகுதிகளில் வாழ்ந்து மீன்படி தொழில்செய்யும் மூவர் தொழிலுக்காகப் படகேறுகின்றனர். அனைவருக்குமே தெரியும், அன்று மாவீரர் தினம். வழமையை விட கடற்படை இந்தத் தினத்தில் கடலை இறுக்கி வைத்திருக்கும். இந்து மா சமுத்திரத்தின் அனைத்துப் பரப்பும் ராடர்களின் துல்லிய கண்காணிப்பில் இருக்கும். அப்படியான தீவிர கண்காணிப்பில் இருக்கின்ற நாளொன்றின் நடுச்சாமத்தில், கச்சத்தீவுக் கடற்பரப்பில் வைத்துத்தான் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். இதேவேளையில் அல்லது சற்று முன் பின்னான நேரங்களில் தமிழக மீனவர்கள் ஐவரும் கைதாகினர்.

தங்களின் கணவன்மார் இப்படியொரு குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டமையை, மண்டைதீவு, குரநகர் பகுதிகளில் வாழ்ந்த அவர்களின் மனைவியர் அறிந்திருக்கவில்லை. கடலுக்கு சென்றவர்களைக் காணவில்லை என்று தேடத் தொடங்குகின்றனர். கடற்படையினரிடமிருந்து அறிவிப்பு வருகின்றது, ‘பவுடர்’ கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது என்று.

சில தினங்களுக்குள்ளேயே மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலை யாக்கப்படுகின்றனர். விசாரணைகள் ஆரம்பமாகின்றன. குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சிறைக்குள் போக அவர்களை நம்பியிருந்த குடும்பம், அதனோடு அலையத் தொடங்குகின்றது.

அவ்வாறு அலையத் தொடங்கியவர்களில் மண்டைதீவைச் சேர்ந்த மரியா புளோரான்ஸ் ஒரு குழந்தைக்குத் தாய் ஆவார். அதாவது கணவன் கடலில் கைதாகும்போகும் அவரின் மடியைப் பயப்பீதியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் மகனுக்கு வயது ஒன்றரை. அவரின் தந்தையும் இப்படித்தான் கடலால் காவுகொள்ளப்பட்டிருக்கிறார். கட்டுமரமேறி கடலில் சென்றுகொண்டிருக்கையில் கடற்படையினர் சுடும்போது, மாரடைப்பு வந்து மரத்திலேயே சரிந்துவிட்டார். இரண்டு நாள்கள் கழித்து அவரின் சடலத்தோடு கரையொதுங்கியதாம் கட்டுமரம். அதனால் வறுமை அவருடன் கூடப்பிறந்த ஆண் சகோதரன் போல வளர்ந்திருக்கின்றது. எம்மோடு பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகள் தொடக்கம், கசிந்துகொண்டே இருக்கும் அவரின் கண்ணீர் வரைக்கும் வறுமைநெடி அடிக்கிறது.

கணவன் கைதாகிய பின்னர், பிணையிலெடுப்பதற்கு அலைந்தார் மரியா. அதுவரை உழைத்து சேர்த்திருந்த அனைத்தையும் விற்றும், அடகு வைத்தும், அடகு மூழ்கியும் கணவனின் விடுதலைக்காகப் போராடினார். இந்தப் போராட்டத்துக்குள் மகன் கிபி~னும் வளர்ந்தான். “இவர் சின்னப் பிள்ளத்தானே..றோட்டால போகேக்க கண்டதெல்லாம் கேட்பார். சிலநேரம் என்னட்ட வாங்கிக் குடுக்க காசு இருக்கும். சில நேரம் இருக்காது. சாப்பாடுகள் கேட்டு அடம்பிடிச்சு அழுவான். வேற வழி தெரியாது அடிபோட்டுக் கூட்டிக் கொண்டுவருவன்” என்று மகன் வளரும் முறையைச் சொல்கிறார் மரியா.

கணவனுக்கு மகனைத் தெரிந்திருந்தும், மகன் அப்பாவின் பெயரை உச்சரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவர் சிறைக்குள் ஒரு குற்றவாளியாகத்தான் அறிமுகமாகிறார். அத்துடன் ஏனைய பிள்ளைகள் அப்பா என்று அழைப்பதைப் பார்த்தே, தன் மகனும் அப்பாவை அழைக்கப் பழகியதாகவும் மரியா சொல்லும்போது எழும் கண்ணீர் அவரின் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவரின் மனதையும் உடைத்துவிடுகின்றது.

நான் இப்ப தொழில் வரும்போதெல்லாம் வலைதெரிக்கப்போவன். 350 ரூபா தருவினம். அதிலதான் சீவியம். இப்ப மாமியாக்கள் கூட்டிக் கொண்டுவந்து வச்சிருக்கினம்;. ஊர்ல இருக்கிற எல்லாரிட்டயும் சைன் வாங்கிக் கொண்டிருக்கிறன், ஜனாதிபதிக்கு அனுப்ப. என்ர அவர் ஒரு குற்றமும் செய்யேல்ல, என்கிறார் மரியா புளோரன்ஸ். ஏந்தக் குற்றமும் செய்யாத குழந்தை அம்மாவின் கதைகயை ஆழமாகக் கேட்டபடி வளர்ந்துகொண்டிருக்கிறது. “அப்பா அடுத்த மாசம் வருவார் அம்மா” என்று தாயின் கண்ணைத் துடைகிறது குழந்தை. ஆவன் அப்பாவை விசாரிக்கும் போதெல்லம் இப்படித்தான் சொல்லி வளர்த்தார்களாம். அதேயே அம்மாவுக்கும் விண்ணப்பிக்கிறான் கிபிசன்.

மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மனைவியர்களில் மற்றைய இருவரும் குருநகரைச் சேர்ந்தவர்கள். அதில் மேரி கரோனியின் நிலை மிகப் பரிதாபமானது. அவரும் வறுமையின், வெறுமையின் அடையாளமாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறார். இந்த மூன்று பெண்களிலும் மேரி கரோனிக்குத்தான் வயது அதிகம். 3 பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆனால் அவரின் வறுமையும் மிலேச்சத்தனமானதுதான். இவரும் கடலில் விழுந்து காயமுற்று முள்ளந்தண்டுப் பாதிப்புக்குள்ளானவர். அத்துடன் தொடர் நோயாளி. மேலும் ஐந்து பெண் சகோதரிகளைக் கொண்டவர். வறுமையின் தொழிலாளியான மேரியின் அப்பா ஆழப் பெருங்கடலின் கரையில் நின்று தூண்டில் போட்டே மீன்பிடிக்கிறார். எப்போதாவது ஏமாறும் மீன்கள் தரும் வருமானத்தில் தான், மேரியின் குடும்ப அங்கத்தவர்கள், அவரின் பெண் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் உயிர்வாழ்கின்றனர். நாளொன்றின் ஒரு வேளையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். மூன்று வேளையும் சாப்பிடாத நாளில் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் அவர் சொல்கிறார். இப்படியாகக் கணவர் கைதாகிய பின் வந்த பல இரவுகள் அந்தக் குடும்பத்தின் கண்ணீரால் கழுவப்பட்டிருக்கின்றன. பசி கண்ணை மயக்கும் கண்ணீர் அதை மறைத்துவிடும் என்கிறார் மேரி. மேரியிடமும் ‘அவர் எந்தக் குற்றமும் செய்யேல்ல’ என்ற வசனம் அடிக்கடி வருகின்றது.

இவரும் இருந்த நகை நட்டுக்களை நம்பித்தான் இவ்வளவு காலமும் வழக்காடுநர்களுக்கான பணத்தை செலுத்திவந்திருக்கிறார். இனி விற்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்ற நிலைவரும்போது கணவனுக்கும் மரண தண்டனை தீர்ப்பு வந்துவிட்டது. தீர்ப்பு வந்த நாளில் இருந்து பிள்ளைகளுக்கு சாப்பாடு இருந்தாலும் பள்ளிக்கூடம் போகுதுகளில்ல. வீட்டை விட்டு வெளிய வரவே பயப்புடுற மாதிரி இருக்குதுகள் என்று அவர் சொல்லும்போதுதான், மரண தண்டனை அனுபவிப்பவரைவிட, அது யாரையெல்லாம் முதலில் தூக்கில் மாட்டுகிறது என்கிற் எண்ணம் நமக்குள்ளும் வெடிக்கிறது. ஆனாலும் நாம் நம்மைக் கட்டிவைத்திருக்கின்ற சட்டங்களை விமர்சிக்க முடியாது. ஏனெனில் அவை மன்னர்களின் பாதுகாப்புக்காகக் கடவுளால் கிறுக்கப்பட்டவை. ஆதலால்தான் அதை சாதாரணர்களால் வாசிக்கவோ திருத்தியமைக்கவோ முடிவதில்லை

துசாந்தன் நிலக்சி. இவர் குருநகரில் இருக்கிறார். அவரின் மடியில் இருக்கும் ஆண்மகனுக்கு, கணவன் கைதாகிய நாளில் ஆறு மாதங்கள். கணவன் கைதாகியதும் தன் அம்மாவின் குடும்பத்தாருடன் இணைந்து வாழ்கிறார் அவர். அவரின் மகன் அப்பா என்ற உச்சரிப்பை, புதுவிதத்தில் கற்றிருக்கிறான். வழக்கு விசாரணைகள் நடக்கும்போது குழந்தைகள் அப்பா.. அப்பா என்று அழுதுகொண்டிருப்பார்களாம். அதைக் கவனித்த மகன் சாருஜன், தானும் அப்பாவை அழைக்கத் தொடங்கிவிட்டான்.

‘அவர் குற்றஞ்செய்யேல்ல’ என்கிற நம்பிக்கை நிலக்சியின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

கடந்த 30 ஆம் திகதியில் தீர்ப்பு வந்த நாளன்று இவர்கள் மூன்றுபேருமே கொழும்புக்குச் சென்றனர். வழக்காடுநர்கள் அன்றைய விசாரிப்புடன் குற்றஞ்சாட்டப்பட்ட கணவன்மார் வெளியே வந்துவிடுவர் என்று நம்பிக்கை கொடுத்திருந்தனர். அதேபோல கணவன்மாரும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கான உடுப்புகளுடன் மனைவியரை வரச்சொல்லியிருந்தார்கள். உடுப்புகள், குழந்தைகள், பைபிள் மட்டுமே அவர்களின் பயணத்தோடு இருந்தது. நீண்ட கரிய இருளின் பின்னர் ஒரு சூரியனை சுமந்து வர செல்லும் படகுக்காரன் போல மூவரும் தம் குழந்தைகளுடன் சந்தோசமாகப் போனார்கள். விசாரணை தொடங்கியது. இவர்களிடம் குழந்தைப் பிள்ளைகள் இருப்பதனால் வழக்கு நடைபெறும் பகுதிக்கு செல்ல முடியாது. வெளியிலிருந்து வழக்காடுவதைக் கேட்கமுடியும். முழுச் சிங்களத்தில் நடக்கும் விசாரணைகளில் பொழிப்பை மட்டும் சில வார்த்தைகளில் தமிழில் சொல்வார்கள். சந்தோசத்தோடு தம் கணவன்மார்களையும், அப்பாக்களையும், மகன்களையும் வரவேற்கக் காத்திருந்தவர்களின் காதுகளுக்கு தீர்ப்புக் கேட்டது,

‘ஜனாதிபதி மாளிகையிலயிருந்து நாலு மைலுக்கு அங்கால இருக்கிற, நாலு சுவருக்கு நடுவில, குறிச்ச நாளில தூக்கில் தொங்கவிடப்படுவர்’..

உலகிலுள்ள அத்தனை கொடுமைகளையும் ஒன்றாக்கி செய்யப்பட்ட முள்கணையொன்று அவர்களின் தலையில் ஓங்கியடிக்கிறது. மீண்டும் கண்ணீரைப் பாய விட்டபடி அமைச்சர்களிடமும், தேவ தூதன்களிடமும், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் அந்தப் பெண்கள் அலையத் தொடங்கியிருக்கின்றனர். தூக்குத் தண்டனை யாருக்கானது? இந்தக் கதைகள் குற்றமிழைப்பவர்களின் கவனத்திற்கு முன்வைக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு குற்றம் செய்தால் உங்கள் குடும்பங்களும், பிள்ளைகளும் இப்படித்தான், தூக்கில் குறையுயிரோடு தொங்கிக் கொண்டிருப்பார். மரண தண்டனை குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல, கூட்டு சமூகத்துக்குமானது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*