கொடுத்தஉயிர் விலை வீணல்ல – அது கொண்டுவரும் விடுதலையை…..

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எரிந்தமனதிருந்து எடுத்துவந்த தீபமொன்றை
உங்கள் பேர்சொல்லி ஏற்றுகின்றோம் இன்று.
விரிந்த வானத்தில் விளக்குகளாய் ஏறிநின்று
சிரிக்கும் உறவுகளே செந்தமிழின் சொத்துக்களே
வந்துமது கல்லறையின் முன்னின்று இன்று
வரலாற்றின் வல்லமையை எண்ணுகின்றோம்.
நொந்துபல துயர்களினால் நெஞ்சம் வெந்தாலும்
நேசத்துக்குரியவரே உம்முன் நெக்குருகி நிற்கின்றோம்!

கார்காலம் கருக்கூட்டும் கார்த்திகையின் நாயகரே
வேராக இருந்தெம்மை தாங்குகின்ற உறவுகளே
காற்றோடும் கடலின் மடியோடும் கலந்துவிட்ட – எம்
கண்ணின் மணிகளே மண்ணின் பிள்ளைகளே
தேற்றுவாரின்றி நாம் தேம்பியழும் போதெல்லாம்
ஊற்றுநீராய் ஓடிவந்தெமை ஆற்றும் ஆளுமைகளே
கூற்றோடு போராடி கொள்கைக்காய் விதையாகி – எம்
குலம்காத்த வீரர்களே நெய்விளக்கேற்றுகிறோம்!

கொட்டும் மழைதனிலும் கொளுத்துகின்ற வெயிலிலும்
குலையாத உறுதியுடன் நடந்தவரே – இமைமுட்டும்
நொடிப்பொழுதில் பகையழித்து வெற்றிக்கு வழிதந்து
சூரியனைச் சூழ்ந்துநின்று சுடராக மிளிர்பவரே
நெஞ்சகலா நினைவுகளில் நீக்கமற நிறைந்திருந்து
விடிகின்ற நாளுக்காய் விளக்கான வித்துக்களே
விடியும் பொழுதுக்காய் விதைந்தவரே உம்முன்னே
விளக்கேற்றி விம்மித்தொழுகின்றோம்!
போரியல்வரலாற்றில் புதுமைகள் புரிந்தவரே
புலரும்பொழுதுகளின் புதுவெளிச்சம் ஆனவரே
கரிகாலன்படையினிலே கருத்தரித்த கங்குல்களே
காரியத்தில் உறுதிகொண்டு களமாடிவென்றவரே
தமிழர்தம் வரலாற்றில் தனியிடம் கொண்டவரே
தற்கொடையாய் தந்துஉயிர் தரணியில் நிலைத்தவரே
கொடுத்தஉயிர் விலையொன்றும் வீணல்ல – ஓர்நாள்
கொண்டுவரும் விடுதலையை அந்நாள் பொன்நாள்.

– ஆதிலட்சுமி சிவகுமார் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*