பித்தலாட்டங்களும் கற்பனாவாதமும் மலிந்து கிடக்கும் தமிழர் அரசியல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எமது இனத்தின் இன்றைய சாபக்கேடு என்னவெனில், உண்மைநிலை மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டே மறந்து போன நிலை தான். உண்மைநிலையை மறந்தவர்கள் அமைப்புக்களின் தலைமைகளாகவும் முன்னணி செயற்பாட்டாளர்களாகவும்

காகிதப்புலிகளாயும் தமிழர் அரசியல் கருத்து வெளியை ஆக்கிரமித்து நிற்பது, மூடர்கூடம் என தமிழர் அரசியல்வெளி குறிப்பிடப்பட வழி சமைக்கப்போகின்றது.

சரி. மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது நிலையை இயன்றளவு சுருங்கக்கூறின் நாம் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறையை எதிர்த்து அரசியல் வழியில் போராடத் தொடங்கி, பின் அந்த மென்முறை வழி சிங்கள கொடும் பேரினவாதத்திடமிருந்து எமது மக்களைக் காப்பற்றுவதற்கு துப்பற்றது என்று தூலாம்பரமாக தெரிந்து போக, வாய்வீராப்பு மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் போலி உறுதிமொழிகளும் செயலற்ற தன்மையும் வேசமும் காலாவதியாகிப் போய்விட்டது.

அதன் விளைவாக இளைஞர்கள் புரட்சிகரப் பாதையில் ஆயுதம் ஏந்தி உண்மையான விடுதலைக்காக இதயசுத்தியுடன் போராட ஆரம்பித்து, பின்னர் முதிர்ச்சியற்ற தன்மையாலும், சோரம் போன சோகத்தாலும், புரிந்துணர்வற்ற தன்மையால் ஏற்பட்ட தப்பபிப்பிராயங்களாலும், சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் போட்ட அவிழ்த்து விடப்பட்டிருக்காத சதி முடிச்சுக்களாலும், விடலைப் பருவத்திற்கு கூட வந்திராத பூகோள அரசியல் மற்றும் உலக புலனாய்வு அமைப்புகளின் செருகிவிட்டு சிதைத்து விடும் நர சூட்சுமங்களின் நரித்தனங்கள் பற்றிய புரிதல்களும் எமது புரட்சிகர இளைஞர்களை கூறு போட்டு விட்ட வலி நிறைந்த வரலாறாகியது.

பின்னர், தமிழ் இளைஞர், யுவதிகள் புலிகளாகி ஒப்பற்ற தியாகங்களை செய்து வீரத்துடனும் தீரத்துடனும், உலக வல்லரசுகளாலும் பிராந்திய பலவான்களாலும் போசாக்கூட்டி வளர்க்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்துப் போரிட்டு, தமிழின விடுதலைப் போராட்டத்தை மற்றைய அடக்குப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் பாடத்திட்டத்திலும் கொள்கைத்திட்டத்திலும் முன்னுதாரணமாக இடம்பிடிக்கச் செய்தார்கள். முழு உலகமும் வியப்புடன் நோக்கும் படி எமது விடுதலைப் போராட்டத்தை வளர்த்து விட்டு எழுத்தில் வடிக்க முடியாத எத்தனையோ தியாகங்களை செய்து விட்டு அந்த தியாகச்செம்மல்கள் ஆகுதியாகி விட்டார்கள்.

பல ஆரோக்கியமான விமர்சனங்களை உண்மையான விடுதலையின் பற்றுதலின் பாற்பட்டு முன்வைத்தவர்கள், மனனம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளை விமர்சனங்கள் செய்தோர்கள், துரோகியாக்கப்பட்டவர்கள், சோரம் போனவர்கள் என பலரும், இன விடுதலைக்காக ஒன்றுபட வேண்டிய சரியான தருணம் என கணித்ததனாலேயோ அல்லது விடுதலை பெற்று தனிநாடாகிவிட்டால் தமது நிலை என்னவாகும் என்ற பீதியினாலேயோ வன்னிக்கு வருகை தந்து விடுதலைப் புலிகளுடன் உறவாடியும் சமரசம் செய்தும் தமிழின விடுதலைப் பாதையில் ஓரளவிற்கு ஒன்றிணைந்து விட்டதான புதிய பரிணாமம் ஏற்பட்டது.

உலகமயமாதலின் தாக்கங்களிற்கு முறியடிப்புச்சமர் செய்ய முடியாததாய் சமாதானகால சூழ்நிலை அமைந்து விட்டதாலும், மக்களிடமிருந்து கால நீட்சியில் புலிகள் அந்நியப்பட ஆரம்பித்ததாலும், எமது விடுதலையும் வல்லாதிக்க நலன்களும் ஒரு புள்ளியில் எப்புறம் நீட்டிப்பார்த்தும் சந்திக்காமல் போனமையாலும் எமது ஆயுதப்போராட்டம் முற்றாகவே தோற்கடிக்கப்பட்டு தமிழினம் இனவழிப்பிற்கு உள்ளானது. இதற்கான ஒத்திசைவையும் ஐக்கிய நாடுகள் தனது மௌனத்தால் வழங்க, தமிழினம் வகை தொகையின்றி கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டது.

இப்போது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இறக்குமதி செய்யப்படும் இனவழிப்பு ஆலோசனைகளை அடியொற்றி, கட்டங்கட்டமான தொடர்ச்சியான இனவழிப்பு அதி தீவிர சிரத்தையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எமது இனம் தனது அடையாளத்தையும், எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் அமையும் பொருண்மியத்தையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றது. கல்வி, பொருண்மியம், கலை, பண்பாடு என்று ஒவ்வொரு தளத்திலும் மிகவும் நுண்மையாக திட்டமிட்டு முற்றாக அழிக்கும் பொல்லாத நிகழ்ச்சிநிரலைப் பூர்த்தியாக்கும் வெறித்தனத்துடன் சிங்கள பௌத்த பேரினவாத காடையரசு கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றது. பெருமளவில் எமது இனம் எமது மண்ணில் ஆதாரங்களை இழந்து தங்கியிருக்கும் பொருண்மியத்தாலும் காத்திருக்கும் அரசியலாலும் வழிகாட்டும் தலைமையின்றியும் மிகவும் மோசமான நிலையில் ஒரு பெட்டியில் அகப்பட்டுக் கிடக்கின்றது. இந்த அழிவுக்களத்திலிருந்து வெளியேறி சிலர் வெளிநாடுகளிற்கு செல்ல, பலர் அந்த மண்ணிலேயே அகப்பட்டு எழுதாமல் ஏற்றுக்கொண்டதாய் அடிமை சாசனத்தை அனுமதிக்கிறார்கள். நாம் சமூக சீரழிவுகளால் நம்மையே மறந்தவர்களாக, போதைப்பழக்கத்திற்குள்ளாகி சிந்திக்காது விட்டு விட்ட மந்தைகளைப் போல பெரும்பாலும் மாறிக்கொண்டிருக்கின்றோம்.

இதுதான் உண்மைநிலை. இதுதான் எதார்த்தம். இதனை எந்த வகையிலாவது எதிர்த்துப் போராட வேண்டியது எமது மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய, அந்த மண்ணில் இருந்து மட்டுமே செய்யக்கூடிய தட்டிக்கழிக்க முடியாத தார்மீகக் கடமையாகும்.

இந்த உண்மைகளை மறந்து, ஆண்ட இனம், மண்டியிடாத வீரம், வீரத்தமிழன், வெற்றித்தமிழன், முப்பாட்டன் உலகாண்டான், தமிழீழம் அமைதிப்பூங்காவாக உதயமாகின்றது, வானில் இருந்து குதித்து நாடு மீட்க வெளிநாட்டிலிருந்து திட்டம் தீட்டப்படுகின்றது என்று பித்தர்கள் போல் பீற்றிக்கொள்வதும், சில நூறுகளை கூட்டிவிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் என்றும் மாபெரும் மக்களணி திரண்டு நிற்கின்றது என்று கூறுவதும் அதை இன்னும் மிகைப்படுத்தி விறுவிறுப்பு தேடும் ஊடகங்களுமாக புலமும் தமிழகமும் பொய்மைத் தோற்றங்களின் பிரதிபலிப்பாய் பித்தலாட்ட அரசியல் செய்து களத்திலிருக்கும் அப்பாவி மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றது.

எமது மண்ணில்திக்கற்று நிற்கும் அப்பாவி மக்களோ “பெடியல் விடமாட்டாங்கள்”, கடவுள் கைவிடாது, சர்வதேசம் கைவிடாது, தமிழ்நாடு கைவிடாது என்று நம்பி நம்பியே பேரினவாதத்தின் நரபலி வெறியாட்டத்தில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் வீற்றிருந்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாய் கதையடிப்பவர்கள் மந்திரத்தால் மாங்கனியை பறிக்கும் மந்திரக்காரர்கள் தான். அவர்கள் மீட்பாளர்களாகவும் முடியாது. போராளிகளாய் இருக்கவும் முடியாது. அவர்கள் வங்கிக் கணக்கை மேலதிக பற்று ஏற்படாத வண்ணம் பேணிக்கொண்டு கூலிப்படை நடத்தி ஏதாவது சின்னதாய் செய்து விட்டு ஊடகத்தில் அதனை மிகைப்படுத்திக்காட்டி அதற்கான தலைமையாய் தம்மை மார்தட்டிக்கொள்ள துடிக்கும் இவர்கள், படிப்பை பாதியில் குழப்பி விட்டு சினிமாவில் கதாநாயகனாக வரத்துடிக்கும் இளைஞனைப் போல வலம் வருகிறார்கள்.

இவர்களால் மூன்று தசாப்த காலமாக விடுதலைப் போராட்டத்தோடு வாழ்ந்த ஈழமக்களை ஏமாற்றிக் கூலிப்படையாக்குவது கடினமானது என்பதால், நல்ல உணர்வுள்ள வஞ்சகமற்ற தமிழ் நாட்டு இளைஞர்களின் உண்மையான விடுதலையுணர்வை பாவித்து அந்த இளைஞர்களை தமக்கான கூலிப்படையாக்கி போராட்டத்தின் பெயரால் மனவளர்ச்சி குன்றிய வேலை பார்க்கிறார்கள்.

மக்களிற்கு உண்மையை சொல்லுங்கள். அவர்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள் என்பதற்கிணங்க பித்தலாட்டங்களையும் கற்பனாவாதங்களையும் களைந்து, வெளியாருக்காக காத்திருக்கும் இனக்கொல்லி நோயை குணப்படுத்தி எமது மண்ணில் எமது மக்களிற்கான மக்கள்மயப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்து இந்த பூமிப்பந்தில் எமக்கான இருப்பினை உறுதிப்படுத்தியேயாக வேண்டும்.

அந்த மண்ணில் இருந்து அடக்குமுறைக்கு எதிராய் வீசப்பட்டது ஒரு கல்லெறியே என்றாலும் அதுதான் போராட்டம். எமது மண்ணில் நடந்தால் தான் அது எமக்கான போராட்டம். அதுவன்றி மற்றையவை எல்லாம் ஆதரவுகள் மட்டுமே, அதுவும் இல்லையெனில் அது புளுடா.

ஆம். மக்களிற்கு உண்மையை சொல்லுங்கள். அவர்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள்.அது மட்டுமே நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*