அரசுக்கு நெருக்கடியை தோற்றுவிக்க சதித் திட்டம்!

பிறப்பு : - இறப்பு :

tamilcnn,yarlminnal,cnn tamil,jaffnawin

நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு இரத்த ஆறு ஓடச் செய்யும் முயற்சியில் இனவாதச் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் இதனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய கட்டாயத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருக்கிறார்.

நல்லிணக்கச் செயற்பாடுகளை சீர்குலைப்பதே இந்த இனவாதக் குழுக்களின் திட்டமெனவும் அதன் மூலம் ஆட்சியை ஆட்டம் காணச் செய்யும் மறைமுகமான திட்டம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2015 ஜனவரி 8ம் திகதியுடன் இனவாதிகளின் வாய்களுக்கும், கைகளுக்கும் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இனவாதச் சக்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இக்குழுக்களின் பின்னால் சில அரசியல்வாதிகளும் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்துக்கிடையில் புத்தர் சிலை விவகாரமும், முஸ்லிம்கள் தொடர்பிலான கடும் போக்கு. சக்திகளின் அச்சுறுத்தல்களும் நாட்டில் ஒரு பதற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது.

எங்காவது ஒரு இடத்தில் சிறிய சம்பவம் இடம்பெற்றாலும் கூட அதனை ஊதிப் பெருப்பித்து ஒரு இனக்கலவரத்தை தோற்றுவிப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்களில் இந்த கடும் போக்குவாதச் சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.

வதந்திகளைப் பரப்பி முழு நாட்டையும் அதிர்வுக்குள்ளாக்குவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் இனவாதச் சூழ்ச்சிகள் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை மட்டத்தின் போதும் பெரியளவில் பேசப்பட்டிருக்கின்றது.

தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி அரசுக்கு நெருக்கடியை தோற்றுவிப்பதில் எதிரணி அரசியல் சக்தியொன்று பின்னணியில் நின்று இனவாதக் கும்பலொன்றை இயக்கி வருவதாக பாதுகாப்புத் தரப்புக்கு தகவல் கிட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதன் மூலமே மக்களை தம்பக்கம் அணி திரட்டிக் கொள்ள முடியும் என்ற ஊகத்தின் அடிப்படையில் மக்களால் தூக்கி வீசப்பட்ட அரசியல் சக்தியொன்று புது வடிவத்துடன் மறுபிறவி எடுக்கத் தொடங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கிழக்கிலும் மற்றும் சில பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள விரும்பத்தகாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் பாதுகாப்புத் தரப்பினருடனும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன மோதல்களுக்கு சிறிய அளவிலேனும் இடமளிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது.

அவ்வாறான நிலைமையிலும் கூட இனவாதச் சக்திகளும், அரசியல் சக்திகளும் மறைமுகமானதொரு நடவடிக்கையிலீடுபட்டிருப்பது கவலை தரக்கூடியதாக உள்ளது.

பௌத்த மதத்துக்கு அபாயம் ஏற்பட்டு விட்டது என்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவித்து பௌத்த சிங்கள மக்களை தூண்டி இன மோதல்களை ஏற்படுத்தும் ஒரு பின்னணியில் இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறான சுயநல நோக்குடன் அரசியல் இலக்கை அடையும் பொருட்டு மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த முனையும் சக்திகள் விடயத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை அவசரமாகியுள்ளது.

இன்னொரு இனக்கலவரத்தை எதிர்கொள்ளும் சக்தி இந்த நாட்டு மக்களுக்குக் கிடையாது. இனவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதனைத் துடைத்தெறிவதில் பின்னிற்கக்கூடாது. அதே சமயம் இனவாதச் சூழ்ச்சி வலைக்குள் மக்கள் சிக்கி விடக்கூடாது.

நாடு 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்ட இருள் சூழ்ந்த யுகித்தன் பக்கம் நாம் மீளத் திரும்பிச் செல்ல முடியாது அன்றுபட்ட வேதனையின் வடு ஆறாதவகையில் சகலரதும் மனங்களில் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையில் மீண்டும் அந்தப் பாதைக்குள் நுழைவதற்கு மக்கள் நாட்டம் கொள்ள மாட்டார்கள்.

இதன் காரணமாகவே நேரடியாக வராமல் மக்களை மாற்று வழிகள் மூலம் தவறான திசையில் கொண்டு செல்லும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிக்கு நாம் துணைபோய்விடக்கூடாது.

பேரினவாதம் ஒருபுறம் சிங்கள மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லும் போது மறுபுறம் சில முஸ்லிம் கடும்போக்கு சக்திகள் சமூகத்தை குழப்பும் விரும்பத்தகாத செயலிலீடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிடும் செயலில் சிலர் ஈடுபட்டிருப்பதை உளவுப் பிரிவு கண்டுபிடித்திருப்பதாக முஸ்லிம் விவகார தபால்துறை அமைச்சர் ஹலீம் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் விடயத்திலும் நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.ஏதாவது சம்பவம் நடத்தவுடனேயே அதன் பின்னணி, உண்மைத்தன்மை எதனையும் சீர்தூக்கிப் பார்க்காமல் கண்டன அறிக்கைகளையும், விமர்சனங்களையும் வெளியிடுவதை முஸ்லிம் தலைவர்களும், அமைப்புகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த விடயமானாலும் பொறுமையுடன் விவகாரங்கள் கையாளப்பட வேண்டியது அவசியமானதாகும்.

சட்டம் ஒழுங்கு நாட்டில் பேணப்பட வேண்டும். அதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும். சட்டமும் ஒழுங்கும் சரியாக முன்னெடுக்கப்பட்டால் தீயசக்திகளால் தப்பிக்க முடியாது போகும்.

பொலிஸாரும், பாதுகாப்புத் தரப்பும் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டியது அவசியமானதாகும். யார் விடயத்திலும் பாரபட்சம் இருக்கக்கூடாது.

சட்டம் அனைவர் விடயத்திலும் சமமாகி இருக்க வேண்டும். அதில் இனம், மதம், மொழி பேதம் எதுவும் பார்க்கப்பட முடியாது. இதன் மூலமே நாட்டில் மற்றொரு இனவெறியாட்டம் உருவாவதை தடுக்க முடியும்.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் இனவாதத்தை விரட்டியடிக்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit