வியாபார அரசியலுக்குள் மூழ்கிக் கொண்டு இருக்கின்றதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சி.தி.குமரன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tna

தமிழ் தேசிய வாதிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இலங்கை தீவின் இழி குலமாக ஈழத்தமிழினம் இன்னும் எத்தனை காலம் வாழப் போகின்றது. இமயத்தில் கொடி நட்டோம் எல்லையற்ற கடல் தொட்டோம் என்று பெருமிதத்தோடு வாழ்ந்த ஒரு தேசிய இனம் இன்று இலங்கை தீவின் இரண்டாம் தர குடிமக்களாகவும் சிறுபாண்மை இனமாகவும் எவன் எவனிடமோ கையேந்தி நிற்கின்றது கட்டெறும்புகளும் சிட்டுக்குருவிகளும் வந்து பசியாறும் என்று வாசலில் அரிசிமாவாலே கோலம் போட்டு வைத்த தமிழன் பிள்ளைகள் அடுத்த வேளை உணவிற்கு கையேந்தி நிற்கின்றனர் செங்கோல் ஏந்தி அரியனை மீது மிடுக்குடன் அமர்ந்தவன் கொடுங்கோல் ஆட்சியிலே தெருக்கோடிகளில் முடங்கி வாழ்கின்றான் இந்த நிலையில் இருந்து தமிழினம் மீண்டெழுவது எப்போது இவர்களை மீட்டெடுப்பது யார்?

இவர்களுக்காக குரல் கொடுப்பது யார்? இந்த கேள்வியினை வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு தமிழனிடம் கேட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதில் தான் வரும் எனவே தான் ஒட்டுமொத்த தமிழினமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை இன்று பிரதான எதிர் கட்சியாக அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் அன்று முதல் இன்று வரை தளராத நம்பிக்கை வைத்துள்ளனர் எனவே தான் பல மாற்று கட்சிகள் பல தமிழர் தாயகத்துள் ஊடுருவி பல சாலுகைகளை செய்த போதும் அவற்றிக்கெல்லாம் விலை போகாது தமிழ் தேசிய கூட்டமைப்பினை தேர்வு செய்தார்கள் ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சர்வதிகார போக்குடன் செயற்படுகின்றதா?

அல்லது தமிழ் தேசிய பாதையில் இருந்து அது விலகி வியாபார அரசியலுக்குள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றதா. என்ற சந்தேகம் இன்று வலுவாக தமிழர்கள் மத்தியில் எழுகின்றது தமிழ் தேசிய கூட்டமைபப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் பற்றுதலும் தற்போது தளர்ந்து கொண்டிருக்கின்றது. இது கற்ப்பனையோ அல்லது பொய்யான பரப்புரையோ அல்லது மறுக்க முடியாத உண்மையோ இதனை இல்லை என்று மறுப்பவர்கள் இனிவரும் காலங்களில் இதனைபுரிந்து கொள்வீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பே உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை பராளுமன்றம் அனுப்பியது எதற்காக என்பது உங்களில் எவருக்கேனும் நினைவு இருக்கிறதா?

என்ற கேள்வியினை எழுப்புவது நியாயமானதே மக்களின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொள்ள எவரும் நல்ல தலைவர்கள் என்று குறிப்பிட தகுதி அற்றவர்கள் மக்களின் துன்ப துயரங்களிலே பங்கெடுத்து ஆறுதல் படுத்தாத எவரும் நல்ல தலைமையாக இருக்க வாய்ப்பில்லை அந்த வகையில் தமிழ் தலைமைகள் என்று கூறிக் கொள்ளும் திரு.சம்மந்தன் திரு.சேனாதிராசா திரு.சுமந்திரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களே இதுவரை தமிழர்கள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருப்பார்கள்.கண்ணீர் விட்டு கதறி அழுது வீதி வீதியாக அலைந்திருப்பார்கள் இவற்றுள் எத்தனை போராட்டங்களிலே நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள் என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் வாக்கு கேட்டு வரும் போது கைகூப்பி வருகின்ற நீங்கள் தமிழர்கள் கண்ணீர் விடும்போது அவல குரல் எழுப்பும் போது ஓடி வந்து உதவிக்கரம் கொடுக்க வேண்டியவர்கள் மாயாவிகளாக மறைவது எவ்வாறு இதோ தீர்வு இதோ தீர்வு என்று இன்று எத்தனை வருடங்கள் வீணாகப் போய்விட்டது. எமக்கான தீர்வினை பெற்றுத் தருவார்கள் எம் இனத்திற்கு அழிக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்று தருவார்கள் என்று நம்பி உங்களை பாராளுமன்றம் அனுப்பிவைத்த அப்பாவி தமிழர்களுக்கு இதுவரை உங்களால் செய்ய முடிந்தது என்ன?

இந்த கேள்வி உங்களை எரிச்சலூட்டலாம் நீ யார் இதை கேட்பதற்கு என்று கேள்வி கேட்கலாம். ஆனால் உங்களக்கு வாக்களித்து உங்களை தேர்வு செய்த ஒவ்வொருவருக்கும் இந்த உரிமை உள்ளது. எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது இதனை முதலில் நினைவில் கொள்ள வேண்டும் மாறாக அதிகாரத்தில் உள்ள மமதையில் சர்வாதிகார போக்குடன் செய்யகூடாது இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் அதை தேர்வு செய்வார்கள் என்ற வகையில் நீங்கள் அடிக்கடி நல்லாட்சி என்னும் நல்லினக்கம் என்றும்; அடிக்கடி கூறிக் கொள்கின்றீர்களே தவிர இங்கே தமிழர்கள் மத்தியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அபிவிருத்தி அபிவிருத்தி என்று அரசாங்கம் கூறிக் கொள்கின்றது. அதற்கு ஆமாம் போட்டு தலையசைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் இன்று தமிழர்களின் வழங்கள் சொத்துக்கள் எல்லாம் அபிவிருத்தி என்ற பெயரில் களவாடிச் செல்லப்படுகின்றது. கோழி குஞ்சுக்கு தீனி போட்டு வளர்ப்பது அதன் முட்டைகளை திருடவே அன்றி அன்பின் வெளிப்பாடல்ல. இன்று தமிழர்கள் எதிர்பார்ப்பது அபிவிருத்தியோ அல்லது சலுகைகளோ அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது எதனை என்பது உங்களுக்கு தெரியுமா? திரு.சுமந்திரன் அவர்களே கடந்த மாதம் நீங்கள் முப்பது மாதம் ஆயதம் தூக்கி எதை நீங்கள் சாதித்தீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளீர்கள் நெஞ்சில் ஈரம் இன்றி இரக்கம் இன்றி எவ்வாறு இதை உங்களால் கேட்க முடிந்தது.

முப்பது வருடம் தமிழர்கள் எதை செய்தார்கள் என்று தெரியாமலா இவ்வளவு காலம் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவேன் என்று கொக்கரிக்கின்றீர்கள் உம்மை தேர்வு செய்வதை எண்ணி வெட்கி தலை குனிகின்றோம். முப்பது வருட போராட்டத்தில் நாம் இழந்தது கொஞ்சம் அல்ல ஆனால் தந்த இழப்புக்களை பெருட்படுத்தாது இந்த இழப்புக்கள் இந்த ஆயுதப் போராட்டம் ஏதோ ஒன்றைபெற்று கொடுத்துள்ளது என்று பெருமைப்படும் தமிழர்களையும் இந்த ஆயுத போராட்டத்தின் பங்காளிகளாக நாமும் ஏதோ ஒரு வகையில் இருந்தோம் என்று பெருமைப்படும் முன்னாள் போராளிகளையும் சிங்கள ஆட்சியாளர்கள் கூட இவளவு கேவலப்படுத்தி இருக்கவில்லை. திரு. சுமந்திரன் அவர்களே இதே கேள்வியினை உங்களிடம் கேட்கிறேன் இதுவரை காலமும் நீங்கள் தமிழர்களுக்கு பெற்று கொடுத்தது எதனை? அவர்களின் தேவை என்ன?

என்பதை நீங்கள் அறிவீர்களா? நல்லிணக்கம் ஏற்பட்டதாக அடிக்கடி கூறுகின்றீர்கள் அது உமக்கும் சிங்கள தலைமைகளுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கலாம் அதன் பயனாளி நீங்கள் மட்டுமே தான்.ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அல்ல எனவே உங்களுக்குள் ஏற்படும் நல்லிணக்கத்தை ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏற்பட்டதாக கருத வேண்டாம். அறிவாளிகள் என்றும் அனுபவசாலிகள் என்றும் கூறி கொண்டு நீங்கள் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தழிழர்களையும் அதள பாதாளத்தில் தள்ளி விடும் போருக்கும் போராட்டத்திற்கும் வேறுபாடு அறியாதவர்களா நீங்கள்.

இன்று இதோ தீர்வு இதோ தீர்வு என்று கூறுகின்றீர்களே தவிர இதுவரை உங்களால் செய்ய முடிந்தது என்ன? அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் உங்களால் செய்ய முடிந்தது என்ன? கேட்டால் பேசுகின்றோம் இணக்கம் காணுகின்றோம் என்று பல கெட்டிதனமான பதில்களை கூறுவதில் நீங்கள் வல்லவர்கள் ஆனால் உண்மையில் நீங்கள் நினைத்திருந்தால் கடந்த தேர்தலில் நீங்கள் இன்றைய ஜனாதிபதிக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி உங்கள் ஆதரவினை கொடுத்து ஆட்சிபீடம் ஏறினீர்கள் ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற ஒன்றை வைத்து அரசிடம் பேரம் பேசியிருந்தால் ஏதாவது உடன்பாடு கண்டிருந்தால் இன்று அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை பெற்றிருப்பார்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை உங்கள் அரசியல் ஞானம் அப்போது எங்கே போனது. இன்று அவர்கள் சிறையில் வாடுவதற்கான முழு பொறுப்பும் உங்களுடையதே.

முள்ளிவாய்க்கால் என்று உச்சரிக்கும் போதே முட்களால் கற்றுவதைப் போல வலிக்கின்றது பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற பெயரில் அரச பயங்கரவாதிகளால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கே நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதை ஏன் நீங்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை?

இன அழிப்பு என்ற வசனத்தை உச்சரிக்கவே நீங்கள் தயங்குவது எதற்காக இது யாரை திருப்திப்படுத்த இதனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன? சட்ட வல்லுணர்;களின் வாதப்பிரதிவாதங்களால் சத்தியம் சாகாது திரு.சுமந்திரன் அவர்களே! யாழ் பருத்துறையின் இரண்டு ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு மக்கள் சந்திப்பின் போது நான் நேரடியாகவே உங்களிடம் கேட்டேன் நீங்கள் ஏன் இன அழிப்பு என்ற வசனத்தை உச்சரிக்க தயங்குகின்றீர்கள் என்று அதற்கு நீங்கள் சொன்ன பதில் தம்பி கொஞ்சம் பொறும் இப்போது சர்வதேச விசாரனை நடைபெறுகிறது.

அந்த விசாரனை முடியாமல் நாங்கள் எவ்வாறு இன அழிப்பு என்று கூற முடியும் எனவே போர் குற்ற விசாரனை முடிவடையட்டும் அது வரை பொறுமையாக இருப்போம் அருமை அருமையான பதில் சட்ட வல்லுணரே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இலங்கையிலே காலம் காலமாக தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இது இன அழிப்பில்லையா?மொழிகலை கலாச்சாரம் என்ற எம் இனத்தின் விழுதுகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றது இது இன அழிப்பில்லையா? அப்படியானால் இன அழிப்பு என்றால் என்ன என்பதை கூறுங்கள் ஏன் இந்த கபட வேலை எதற்காக உங்களை தேர்ந்தெடுத்தோம் அடுத்து ஒரு மக்கள் சந்திப்பிலே திடீர் என்று போர் குற்ற விசாரனை முடிந்துவிட்டது மிகவும் சிறப்பான முறையிலே சர்வதேச விசாரனை முடிந்துவிட்டது மிகவும் சிறப்பான முறையிலே சர்வதேச விசாரனை முடிவுற்றது என்று கூறுகின்றீர்கள் இது எந்த விதத்தில் நியாயம் கேட்பதற்கு யாரும் இல்லை என்று இன்னும் எத்தனை இழி செயல்களை தமிழர்களுக்கு செய்ய போகிறீர்கள் எப்போது சர்வதேச விசாரனை நடைபெற்றது யாரை விசாரித்தார்கள் யார் விசாரனை செய்தார்கள் பாதிக்கப்பட்ட எங்களை எவரும் விசாரிக்கவில்லையே இது என்ன அநீதி எம் இனத்துக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும் மனித குல வேடர்கள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்.

அநீதி யாளர்கள் சர்வதேசநீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்பு இதற்காக தான் உங்களை தேர்வு செய்தோம். ஆனால் நன்றி மறந்து அந்நியாளர்களுடன் கைகோர்த்து நீங்கள் செயற்படுவது நிதர்சனம் குற்றவாளிகளே நீதிபதிளா? குற்றவாளிகள் ஒரு போதும் நீதிபதிகளாக முடியாது எனவே இந்த உள்ளக விசாரனை என்பது கண்துடைப்பு ஏமாற்றுவித்தை என்பதை சர்வதேசத்திடம் தெளிவுபடுத்த தவறிவிட்டீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பே அனுபவசாலிகளே. சட்டவாளர்களே இறுதிக்கட்ட போர் என்றும் போர்குற்ற விசாரனை என்றும்; பேசிக் கொண்டிருக்கின்றீர்களே இலங்கையில் எப்போது போர் நடைபெற்றது. முதலில் இங்கே போர் என்பதே நடைபெறவில்லை.

இதனை புரிந்து கொள்ளுங்கள் இங்கே நடைபெற்றது போர் அல்ல இன அழிப்பு போர் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இரு நாடுகளுக்கிடையில் அல்லது சமபலம் கொண்ட இரண்டு பிரிவினர்களுக்கிடையில் போர் விதி முறைக்கு உட்பட நடை பெறுவதே ஆனால் இலங்கையிலே சிங்கள பேரினவாதத்தினால் தமிழர்கள் மீது வன்முறைகள் திணிக்கப்பட்ட போது அதற்கெதிராக தமிழர்கள் போராடினார்களே தவிர கொழுப்பெடுத்து மல்லுக்கட்டி போர்களம் போகவில்லை சிறை மீண்ட செம்மலே உங்களுக்கும் இது புரியவில்லையா?

போருக்கும் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவுபடுத்த ஏன் தவறிவிட்டீர்கள் தமிழர்களது போராட்டம் இன்றுவரை பயங்கரவாதம் என்று இழிவுபடுத்தப்படுகின்றதே. இதனை எப்போது உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள். எனவே போர் குற்ற விசாரனை என்பதை நீங்கள் இனிவரும் காலங்களிலாவது இன அழிப்பு விசபரனை என்று வலியுறுத்துங்கள். இன அழிப்பு என்ற வசனம் மிகவும் சக்தி வாய்ந்தது ஆனால் நீங்களே இன அழிப்பு என்று உச்சரிக்கவே தயங்கி நிற்பது வேதனையளிக்கின்றது. போர்க்குற்றம் போர்க்குற்றம் என்று நீங்கள் கூறுவது சிறு பிள்ளைத்தனமானது சற்று சிந்தித்து பாருங்கள் போருக்கும் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் புரிந்து கொள்ளுங்கள் போர் குற்ற விசாரனை என்பது குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றும் ஒரு செயலே போர்களத்தில் செய்யப்படுவது கொலையல்ல போர் என்றால் உயிரிளப்புக்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றே எனவே இவ்வாறான பல தரப்பட்ட கருத்துக்களை குற்றவாளிகள் முன்வைத்து தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடும் போர்க்குற்றம் என்ற வார்த்தைக்குள்ளே கற்பழிப்புக்கள் ஆட்கடத்தல் என பல குற்றச் செயல்கள் மறைக்கப்பட்டு தமிழர்களுக்கான நீதி நீர்த்துப்போகும் ஆனால் இன அழிப்பு என்ற ஒரு வசனம் அங்கே நடைபெற்ற படுகொலைகள் பாலியல் வன்முறைகள் ஆட்கடத்தல்கள் என அத்தனை அநீதிகளையும் தெளிவுபடுத்தும் இதனை ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை இன்று ஒட்டு மொத்த தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது தமக்கான நீதிக்காக இன்று நீங்கள் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் என காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்.

இரகசியப் பேச்சு என்றும் நல்லிணக்கத்துக்கான சந்திப்பு என்றும் நீங்கள் மூடிய அறைக்குள் இன்று செய்து கொண்டிருப்பது அரசியலா? அல்லது விபச்சாரமா? அரசியல் என்பது வெளிப்படையாக செய்யப்பட வேண்டிய ஒன்று மக்களைத் தெரிவுபடுத்தி அனைவரையும் அதிலே பயங்கரவாதிகளாய் மாற்றி ஒரு பலமான சத்தியாக மாறி அரசியல் களத்தில் வெற்றிவாகை சூட வேண்டிய நீங்கள் தனித்து முடிவுகள் எடுப்பது மர்மமான முடிச்சுகள் போடுவதும் வேதனை அழிக்கின்றது. பேசுகின்றோம் பேசுகின்றோம் என்று காலத்தை இழுத்தடித்து நீங்கள் அரசியல் இலாபம் தேட முற்படுகிறீர்களா? என்ற சந்தேகம் இன்று தமிழர் மத்தியில் வலுவடைகிறது.

திரு.சம்மந்தன் அவர்களே அனுபவசாலி என்றும் மூத்த அரசியல் தலைவர் என்றும் கூறி நீங்கள் இன்று தமிமினத்தின் அரசியல் போராட்ட களத்தில் தடுமாறி கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு பல சந்தர்ப்பங்கள் உள்ளன எம்மிடம் அதிகாரம் இல்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அதிகாரம் என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதிகாரம் என்பது தங்க தட்டில் வைத்துக் கொடுக்கப்படுவதா? நிச்சயமாக இல்லை எமக்கான அதிகாரங்களை நாமாக பெற்று கொள்ளவும் அதை நிலை நிறுத்தவும் தவறிவிட்டு அதிகாரம் இல்லை என்று புலம்புவது எந்த விதத்தில் நியாயம் அடுத்ததாக தமிழர்களை சிறுபான்மை இனமாகவும் இரண்டாம் தர பிரஜகளாகவும் சர்வதேசம் உட்பட பல இடங்களில் நீங்கள் அடையாளபடுத்துவது தெளிவற்ற செயல் என்று கூறலாம். எம்மை நாமே சிறுபான்மை இனம் என்று அடையாளப்படுத்துவது கேலிக்கிடமான ஒன்று நாம் சிறுபான்மை இனம் அல்ல. சிறுபான்மை இனமாக அழிக்கப்பட்டவர்கள் நாம் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல.

இரண்டாம் தர பிரஜகளாக அடக்கு முறைக்குள் அடக்கப்பட்டவர்கள் இவற்றை தெளிவு படுத்த வேண்டிய நீங்களே எம்மினம் சிறுபான்மை இனம் என்று கூறுவது நியாயமாகுமா? உங்கள் அரசியல் தெளிவு என்பது இதுதானா? சற்று சிந்தித்துபாருங்கள் வீரர்கள் இறந்துவிட்டால் ஒரு போர் நிறைவுக்கு வரலாம். ஆனால் போராட்டம் என்பது அப்படி அல்ல எத்தனை போராளிகள் வீழ்ந்தாலும் போராட்டத்துக்கான கோரிக்கைகள் நிறைவேற்றபடும் வரை போராட்டம் ஓயாது. போராளிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் எனவே இன்றுவரை தமிழர்களின் கோரிக்;கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவே தமிழர்களின் போராட்டம் நிறைவடையவில்லை அந்த போராட்டம் இன்று அரசியல் ரீதியானதாக மாற்றம் பெற்றுள்ளது. அந்த அரசியல் போராட்ட களத்தில் தலைமை என்ற பொறுப்பினை தமிழர்கள் உங்களுக்கு கொடுத்திருப்பது உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே ஆனால் அந்த நம்பிக்கை இன்று தளர்வடைந்து வருகின்றது என்பது உண்மை. பேச வேண்டிய இடத்தில் பேசுவோம். மோத வேண்டிய இடத்தில் மோதுவோம் என்று கெட்டித்தனமாக பேசி காலத்தை கடத்துகின்றீர்ககள் எப்போதும் பேசினீர்கள். மாறாக தமிழின விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றீர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. அதற்கான முக்கிய காரணங்கள்

1) ஐநா அறிக்கை தாமதபடுத்தல்

2) உள்ளக பொறிமுறை என்று கூறப்படும் இலங்கை அரசின் இனப்படுகொலை மறைப்புக்கு துணைபோதல்

3) தமிழர் தேசத்தில் நடந்த இனபடுகொலையினை வெறுமனே போர் குற்றம் என்று அடையாளப்படுத்தல்

4) சத்வதேச விசாரனைக்கு அழுத்தம் கொடுக்காது மௌனம் காத்தல்

5) தமிழத்களது சுதந்திர விடுதலை போராட்டத்தினை பயங்கரவாதம் என்று அடையயாளப்படுத்தல்

6) சமஸ்டி எனும் வார்ததையாலத்தில் ஒற்றையாட்சியை மக்கள் மனதில் மெதுவாக திணித்தல்

7) நாம் இந்த நாட்டின் பூர்விக மக்கள் என்பதை மறந்து இரண்டாம் தர பிரஜைகள் என்று சிறுபான்மை இனம் என்றும் பேசி மக்கள் மனதில் அதை விதைதல்

8) வட்டுக்கோட்டை தீர்மானத்தை மற்றாக நிராகரித்தல்

9) தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கூட்டு கட்சியாக இருந்தாலும் மூன்று நபர்கள் மட்டும் தன்னிச்சையாக சர்வாதிகார போக்கில் முடிவுகளை எடுத்தல் அதை தமிழ் மக்கள் மனதில் திணித்தல்

10) இழந்த உயிர்களை தமிழர்களது தியாகங்களை உதாசீனம் செய்து அவர்கள் இழப்பில் அவர்கள் பெயரில் அரசியல் இலாபம் தேடுதல்.

இவ்வாறு பல பொறுப்பற்ற செயல்களால் உங்கள் மீது அவநம்பிக்கையும் வெறுப்பும் எற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ் அரசியல் களத்தில் இருந்து முற்றாக தூக்கி எறியப்படுவீர்கள் நீங்கள் எத்தனை தவறுகளை இழி செயல்களை செய்தும் மீண்டும் மீண்டும் தமிழர்கள் உங்களை தேர்வு செய்கிறார்கள் என்றால் உங்கள் முகங்களில் அழகிற்கோ அல்லது உங்களை அறிவாளிகள் என்று நம்பியோ அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிமீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என்ற ஓரே காரணத்திற்காகவே என்பதை மறக்க வேண்டாம் மக்களின் நம்பிக்கையினை நிறைவேற்றுங்கள் தமிழ் தேசியப் பாதையில் தமிழர்களோடு சேர்ந்து பயணித்து தமிமினத்தின் கனவுகளை நனவாக்க போராடுங்கள். பாராளுமன்ற சுகபோத வாழ்க்கையினை இவளவு காலமும் அனுபவித்துள்ளீர்கள் இனியேனும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் செய்றபடுங்கள்.

-சி.தி.குமரன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit