
பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்கொய்தா இயக்கத் தலைவனான பின்லேடனை 2011 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது.
இந்த ரெய்டு சம்பந்தமாகப் பல சந்தேகங்கள் இன்னமும் தொடரும் நிலையில் அமெரிக்கக் கடற்படையின் முன்னால் வீரரும் சீல் (SEAL) அமைப்பின் உறுப்பினருமான ரோபெர்ட் ஓ’ நெயில் என்பவர் தானே ஒசாமா பின்லேடனின் தலையில் மூன்று முறை சுட்டு அவரைக் கொலை செய்திருந்ததாக இன்று வியாழக்கிழமை வெளி உலகத்துக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் SOFREP என்ற இணையத் தளத்தில் வெளியான இச்செய்தியில் 38 வயதுடைய ஓ’ நெயில் கடற்படையின் SEAL 6 என்ற குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்றும் இவரே அல்கொய்தா தலைவனை மூன்று முறை தலையில் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மொன்டானா சுரங்க நகரில் வளர்ந்து வந்த இப்படை வீரர் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்த இத்தகவலை வெளியிட்டதன் காரணமாக அமெரிக்க அரசின் சட்ட ரீதியான தண்டனைக்கு உள்ளாகலாம் என ஊகிக்கப் படுகின்றது. 2011 மே 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் இலுள்ள கர்ரிசன் நகரில் சுமார் 23 சீல் உறுப்பினர்கள் சேர்ந்து 40 நிமிடத்தில் ஒபாமா வேட்டையினை முடித்திருந்ததாக முன்னர் செய்திகள் கசிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓ’ நெயில் 400 இற்கும் அதிகமான போர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளதுடன் 16 வருடங்களாக சீல் படையின் உறுப்பினராக இருந்தவர் ஆவார். ஈரான் மற்றும் ஆப்கான் யுத்தங்களில் பங்கு பற்றிய அனுபவம் மிக்கவரும் ஆவார். இதற்கு முன்னர் ஒசாமா பின்லேடன் எவ்வாறு கொல்லப் பட்டார் மற்றும் அதில் எத்தனை பேரின் பங்கு இருந்தது ஆகிய தகவல்கள் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது