அமைச்சர் தொண்டமானுக்கு அப்புஹாமியின் கடிதம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐயா வணக்கமுங்க..

நான் அப்புஹாமி.. சில விஷயங்கள தெரிஞ்சுக்க வேணும் என்கிறதால உங்க கிட்ட கேட்கலாம்னு நினச்சேன்..

மாரிமுத்து என்ட நீண்டகால கூட்டாளிங்க.. அவனும் நானும் முன்ன களுத்துறை அஷ்க்வெலி தோட்டத்துல ஒன்னா இருந்தோங்க.. அவனுக்கும் நாளு புள்ளங்க.. எனக்கு மூணு..

பல வருஷங்களுக்கு முன்னாள அவன் கொஸ்லாந்தைக்கு போயிட்டான், குடும்பத்தோட..

அவன் புள்ளங்க நம்ம வீட்டிலயும், என் புள்ளங்க அவன் வீட்டலயும் வளந்தாங்க… சந்தோஷமா இருந்தோங்க..

இன்னிக்கி அவன் உயிரோட இருக்கிறானோ தெரியல்ல.. அது தான் உங்களுக்கு எழுதுறேன்..

மீடியாவுல தான் எல்லாத்தையும் பார்க்கிறோம்.. அவனுங்க எதையும் பொறுப்பா சொல்றானுங்க இல்லங்க.. அவர் சொன்னாரு இவர் சொன்னாருன்னு பல விஷயங்கள அவங்க சொன்னாலும் எதுவும் தெளிவா இல்லைங்க…
புதன்கிழமை பகல்தான் மண்சரிவு கேள்விப்பட்டோம். வயிறே பத்தி எரிஞ்சதுங்க..

உடனடியா ரீவிய போட்டுப் பாத்தோமுங்க.. 400 பேர் மண்ணோட மண்ணா புதைச்சிட்டாங்கன்னு சொன்னாங்க.. மாரிமுத்து குடும்பத்தோட செத்திருப்பான்னு சொன்னேன்.. என்ட மனுஷி ‘ஹோ’ன்னு அழுதா.. நிப்பாட்டவே இல்ல..

நாங்க தவிச்சுக் கொண்டிருந்தோம். இரவு நியூஸ் பாத்தோம்.. கணக்குச் சொன்னாங்க.. மீரியபெத்த லயன்களில 337 பேர் இருந்ததாக கிராம நிலதாரி சொன்னார். பத்துப் பேர் செத்துட்டதா சொன்னாங்க.. காலையில ஸ்கூலுக்குப் போன புள்ளங்க 75 பேர் தப்பிச்சட்டதாவும் சொன்னாங்க.. இந்த டீஎம்சியோ என்னமோ இருக்குதே.. அதுல இருந்து ஒருத்தர் பேசினார்..

அப்பவும் கொஞ்சம் கவலை தான்.. மாரிமுத்துவுக்கு அஞ்சு பேரப் புள்ளங்க. அதுல மூணுக்கு ஸ்கூல் போற வயசுன்னு நினைக்கிறேன்..

என்ட மனுஷி சொன்னா.. மாரிமுத்துவுக்கோ, அவர் புள்ளங்களுக்கோ ஏதாச்சும் ஆகியிருந்தா அநாதையான பேரப் புள்ளங்களுக்கு நாம ஏதாச்சும் செய்யனும்னு.. நாங்களும் மனுஷங்க தானே..

மறுநாள் காலைல செய்தி கேட்டோம்.. கொஞ்சம் சந்தோஷமா இருந்திச்சுங்க.. ஏன்னா வேலைக்கி போனவங்க திரும்பியிருக்கிறதா சொன்னாங்க.. அவங்க சாகல..

அதாவது, 75 புள்ளங்க.. 75 தொழிலாளிங்க.. மொத்தமா 150 பேர் உயிரோட இருக்கிறாங்க… மீதி உள்ளவங்க தான் மண்ணுல புதைஞ்சிருக்கிறதா சொன்னாங்க.. 337ல இருந்து 150 பேர் போனா 187 பேர்.. அவங்க தான் காணாமல் போயிருக்கனும்..

தப்புனவங்க மத்தியில நிச்சயமா மாரிமுத்து குடும்பமும் இருக்குமுன்னு நம்பினோம்…

வியாழக்கிழமை தான் எல்லோரும் எங்கள போட்டு குழப்பினாங்க.. 190 பேரக் காணல்லனு டீஎம்சி காரனுங்க சொன்னாங்க.. 110 பேர் தான் காணாம போயிருக்கிறதா அமைச்சருங்க சொன்னாங்க..

இந்த பொலிஸ்காரங்க சொன்ன தகவல் புதுசா இருந்துச்சு… தோட்டத்துல 337 பேர் பதிஞ்சிருந்தாலும், உண்மையிலேயே மீரியபெத்த லயத்துல 220 மாத்திரம் தான் இருந்ததா எஸ்எஸ்பி ஒருத்தர் சொன்னாருங்க… இவங்களுல 190 பேர் பூனாகல ஸ்கூலிலயும், கொஸ்லாந்த ஸ்கூலலயும் இருக்கிறதா அவர் கணக்கு சொன்னாருங்க.. இன்னும் சொன்னாரு… மண்ணுல இருந்து உயிரில்லாம மூணு பேர மாத்திரந்தான் எடுத்தோம்.. மீதி 19 பேரத்தான் காணவில்லையெண்டு அவர் சொன்னாருங்க..

நான் கணக்குல கொஞ்சம் ‘வீக்’குங்க.. செத்தவங்க, காணமல் போனவங்க எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா 22 தாணுங்களே.. 220இல இருந்து 22 கழிஞ்சா 198 வரும்.. எஸ்எஸ்பி 190 னு சொன்னா, மீதி எட்டு பேருக்கு என்னங்க நடந்துச்சு..

ஐயா.. எனக்கு குறை பிடிக்கிற நோக்கம் இல்லீங்க.. உயிரோட இருக்கிறவங்கள்ல மாரிமுத்து குடும்பமும் இருப்பாங்கன்னு ஒரு நப்பாசை தானுங்க..

இதுல முக்கியமான விஷயம் இருக்குதுங்க.. புதன்கிழமை 10 பேர சடலமா கண்டெடுத்தோம்னு ஆர்மிகாரங்க சொன்னாங்க.. வியாழக்கிழமை மூன்றே மூன்று பேரை மாத்திரந்தான் சடலமா மீட்டதாக பொலிஸ்காரங்க சொல்றாங்க.. இதுல யாரு சொல்றது உண்மைன்னு தெரியல.. அப்போ செத்தவங்கட ஒடம்ப காணாம, பத்து பேர் செத்துட்டதா ஆர்மிகாரங்க சொன்னாங்களான்னு என்ட மனுஷி கேட்கிறா.. அவ கேட்டது நியாயம் தானேங்க..

இன்னொரு விஷயமுங்க.. எங்கட ஜனாதிபதி நல்லவங்க.. மண்சரிவுல அநாதையான 75 புள்ளங்கல அரசாங்கம் பொறுப்பேற்கும்னு அவரு சொன்னாரு.. அநாதைன்னா என்னங்க.. அம்மா அல்லது அப்பா இல்லாம போன புள்ளங்க தானே.. இந்த 75 புள்ளங்கள அநாதைங்கன்னு சொன்னா.. அவுங்கட அம்மாவோ அப்பாவோ இல்லன்னு தானே அர்த்தம்? 75 புள்ளங்களுன்ட அம்மா அல்லது அப்பா இல்லாம போயிருக்கிறதா வச்சுக்குவம்.. அப்படீன்னா..
கொறஞ்சபட்சம் 75 பேராவது காணாம போயிருப்பாங்க.. இல்லியா? ஆனா, எஸ்எஸ்பியோ 19 பேர மாத்திரந்தான் காணல்லனு சொல்றாரு.. அப்ப எதுதாங்க உண்மை?

இங்க இரண்டு அமைச்சருங்க இருக்காங்க.. ஒருத்தரு தோட்டத்துக்கு பொறுப்பானவரு.. மத்தவருக்கு இயற்கை அனர்த்தங்களுக்கு பொறுப்பானவரு… எத்தனை பேரு உசிரோட இருக்காங்க.. எத்தனை பேர் செத்தாங்க எத்தனை பேரு உசிரோடு இருக்காங்கன்னு இரண்டு பேருக்கும் தெரியல.. இந்த டீஎம்சி காரங்க படுமோசமுங்க.. அவங்க ஒரு நேரம் ஒன்னு சொல்றாங்க.. இன்னொரு நேரம் இன்னொன்னு சொல்றாங்க..

இந்த மாரிமுத்து இருக்கிறானே.. அவன் ரொம்ப நல்லவனுங்க.. உங்க தாத்தா மேலயும் உங்க மேலயும் நிறைய மரியாதை வச்சிருந்தாங்க.. குடிக்க வச்சிருந்த காசையும் சந்தாப்பணமா கட்டுவான்.. நீங்க நடத்துற ஒரு கூட்டத்தையும் விடமாட்டாங்க.. புள்ளங்களையும் காங்கிரசில சேத்துட்டுத் தான் மறுவேலை பாத்தான்… உங்க மருமகன் அக்ஸிடன்ட் ஆன சமயத்துல அவன் துடிச்சு போயிட்டான்னு கேள்விப்பட்டேன்… வீடு வீடா போயி, எங்க தலைவரின் மருமகனுக்கு ரத்தம் குடுக்கனும்னு அவன் கேட்டிருக்காங்க..

இந்த மனுஷன் உயிரோட இருக்கானான்னு தெரிஞ்சுக்கனும்ங்க… இதைப் பத்தி யாரிடம் கேட்பதுன்னு தெரியலீங்க.. தோட்டக் கம்பனிகாரனையும் காணல்ல.. இந்த சிங்கள அமைச்சருங்கள நம்ப முடியலீங்க.. அவங்க உங்க அளவுக்கு தோட்டத்தப் பத்தி தெரிஞ்சிருக்க மாட்டங்க..

நான் உங்க கிட்ட கேட்குறது ஒன்னே ஒன்னுதாங்க.. என்ட கூடப் பிறந்த சகோதரங்க செத்துப் போயிருக்காங்களா உசிரோட இருக்கிறாங்களான்னு அறியத் துடிச்சிக் கொண்டிருக்கிறோம்.. அவங்களப் பத்தி நல்லா தெரிஞ்ச நீங்க.. அவங்க தங்க உசிரயே வச்சிருக்கிற நீங்க… இது வரையும் வாயே திறக்கலியே.. அது ஏனுங்க?

(பின்குறிப்பு: எனக்கு தமிழ்ல எழுதத் தெரியாதுங்க.. அதுனால, என்ட கூட்டாளி சின்னராசுவ வச்சித்தான் இத எழுதினேங்க.. நீங்க சரியா விஷயத்த சொன்னீங்கன்னா நாம ஏதாச்சும் உதவி செய்யலாமுன்னுதான் இத எழுதுறேங்க..)

நன்றி,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*