குதிரை ஓடு(கி)றது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இன்று ஆஸி நாட்டில் முக்கியமான களியாட்ட நிகழ்வான குதிரைப் பந்தயம் நடக்கும் நாள். மெல்பர்னில் இருக்கும் Flemington என்ற மைதானத்தில் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும். horse racingஇதைத்தவிர சிறியதும், பெரியதுமான குதிரைப் பந்தயங்கள் இந்த நாட்டில் நடந்தாலும் இதுவே நாடளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு களியாட்ட நிகழ்வாகவும் அமைகின்றது.

Melbourne Cup போட்டிக்கு சிறப்பான விருந்துபசாரமும் தொலைக்காட்சியில் நேரடியாகக் கண்டு தரிசிக்கும் வசதியும் உண்டு என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே பெரியதும் சிறியதுமான ஹோட்டல்கள் மதுச்சாலைகள் எல்லாம் விளம்பரப்படுத்தியிருப்பார்கள். ஆஸி நாட்டில் நான் முதலில் காலடியெடுத்து வைத்தது

மெல்பர்ன் நகரில் தான் எனது நான்கரை ஆண்டுகள் அங்கு தான் கழிந்தன. இந்தக் களியாட்ட நிகழ்வு நடக்கும் நாளில் ரயிலில் பயணம் செய்தாலே போதும் ஒரு நடமாடும் களியாட்ட அரங்கைக் கண்ட திருப்தி வரும். 19 ஆம் நூற்றாண்டில் நடமாடுவது போல இருக்கும் அந்தக் காலத்தை நினைவுபடுத்துமாற்போலப் பெண்கள் முழு நீள உடையும் விதவிதமாக நெய்யப்பட்ட பென்னம்பெரிய அழகிய வட்டத் தொப்பிகளுமாகப் பயணிப்பார்கள்.

Melbourne Cup இற்கு விக்டோரியா மாநிலம் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்ததுண்டு. ஆனால் சிட்னி போன்ற நகரங்களில் விடுமுறை விடாமலேயே உத்தியோகப்பற்றற்ற களியாட்டத்தோடு வேலைத்தளங்கள் இருக்கும். மதிய உணவுக்குக் கூட்டாளிகளோடு போவது ஒரு பக்கமிருக்க, வேலைத்தலத்திலேயே சிற்றுண்டிகளோடு இந்த நாளின் மதியம் ஒரு சில நிமிடங்கள் கடந்து போகும் அந்தக் குதிரைப் பந்தய ஆரவாரத்துக்காகக் காத்திருப்பர். வேலைத்தலங்களிலேயே குதிரைக்குப் பணம் கட்டிப் பந்தயம் வைப்பார்கள்.

குதிரை ஓட்டம் என்பது என்னைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியாவுக்கு வரும் வரை இன்னொரு அர்த்தத்தில் தான் மனதில் பதிந்திருந்தது. “குதிரை ஓடுறது” என்ற சொலவாடை ஈழத்துக் கல்வி மட்டத்தில் பழங்குவது.

“கொக்குவில் இந்து பரீட்சை மண்டபத்தில ஒரு குதிரை பிடிபட்டுடுதாம்”
என்றும்
“உவன் படு மொக்கன் எட்டுப் பாடமும் பாஸ் பண்ணியிருக்கிறான் எண்டா நம்ப முடியுமோ கண்டிப்பா உவன் குதிரை ஓடித்தான் பாஸ் பண்ணியிருப்பான்”

என்றும் அப்போது மக்கள் பேசிக் கொள்வதைக் காணலாம். இன்றும் இந்தக் குதிரை ஓடுறது என்ற சொற் தொடர் அங்கே புழக்கத்தில் இருக்கிறதா தெரியவில்லை.

குதிரை ஓடுதல் என்றால் உண்மையான மாணவருக்குப் பதில் இன்னொருவர் ஆள் மாற்றம் செய்து பரீட்சை எழுதுவது. அந்தக் காலத்து தபாற்கந்தோர் அடையாள அட்டை பேப்பரில் செய்ததால் ஒட்டிய புகைப்படத்தை எடுத்துவிட்டு இன்னொருவர் படத்தையும் ஒட்டலாம்.

ஈழத்துக் கல்வி அமைப்பைப் பொறுத்தவரை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை என்றும் (இது இந்தியக் கல்வி அமைப்பில் பிளஸ் 1 இற்கு நிகரானது) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை (இந்தியக் கல்வி அமைப்பில் பிளஸ் 2) என்ற பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை என்றும் இருக்கிறது.

இதில் இந்தக் குதிரையோட்டம் என்பது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையிலேயே அதிகம் இடம்பெறுவது.
அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கவோ அல்லது எழுதுவினைஞராகப் பணிபுரியவோ இந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சாதாரண சித்தி பெற்றாலே போதும் அப்போது.
அதை விட மிக முக்கியமானது யாழ்ப்பாணத்துச் சமூகம் கல்வி விஷயத்தில் வைத்துப் பார்க்கும் ஏற்றத் தாழ்வு முறைமை.

“என்னடா ஒரு பத்தாம் வகுப்புக் கூடப் பாஸ் பண்ணேல்லையோ?” என்பது தற்கொலையைத் தூண்டுமளவுக்கான மானப் பிரச்சனையாகிவிடும்.
நான் பத்த வகுப்புப் படிக்கும் காலத்தில் நாட்டுப் பிரச்சனைகளால் எனக்கு முந்திய இரண்டு ஆண்டில் இருப்போருக்கான பரீட்சை நடைபெறவில்லை. அதில் மூத்த வகுப்பினருக்கு பழைய பாடத்திட்டமே இருந்தது. எனது சித்தி மகன் பழைய பாடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரின் தமிழ்ப்பாட நூல்களை வாங்கிப் பார்த்துக் கிறங்கிப் போயிருந்தேன்.

நாட்டார் பாடல்களும் கம்பராமாயணப் பொருள் விளக்கங்களும் என்று பழைய பாடத்திட்டம் நான் படித்ததை விட ஒரு படி மேலே இருந்தது.
எனவே எனக்கு அவற்றைப் படித்துப் பரீட்சை எடுக்கவேண்டும் என்ற ஆசையில் படித்து இரண்டாண்டுகள் முன்கூட்டியே பழைய பாடத்திட்டத்தில் இருந்த தேர்வை எழுதினேன். கொக்குவில் இந்துக் கல்லூரியில் அமைந்த அந்தப் பரீட்சை மண்டபத்தில் மும்முரமாக விடைத்தாள்களை எழுதிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு ஆரவாரம். திரும்பிப் பார்த்தால் “பின்னால் இருக்கிறவனைப் பார்த்துக் கொப்பி அடிக்கிறீரா” என்ற அவப் பெயரைப் பரீட்சைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெறக் கூடாது என்ற அச்சத்தில் திரும்பாமல் என் வேலையில் மும்முரமாக இருந்தேன்.

பரீட்சை முடிந்து வெளியே வந்து பக்கத்து முருகன் கோயிலின் தேர்முட்டிப் படிக்கட்டில் ஏறிப் போய் இருக்கிறேன். பக்கத்தில் இருந்த அண்ணன்மாரின் கதையோட்டத்தில் இருந்து புரிந்தது. “ஒரு குதிரையைப் பிடிச்சுட்டாங்களாம் என்றும் இன்னார் சார்பில் தலை மாற்றி அனுப்பப்பட்டவர் அவர் என்றும் பேசிக் கொண்டார்கள். பரீட்சை எழுத இருந்த மாணவன் அப்போது கிரிக்கெட் விளையாட்டில் அசகாய சூரனாக இருந்தவன். பாவம் படிப்பில் கோட்டை விட்டு இப்படிப் பின்கதவால் வர முயற்சித்திருக்கின்றான். இனி அவனுக்குக் குதிரை ஓடிப் பிடிபட்டவன் என்ற அவப்பெயர் தான் நிரந்தரம்.

“குதிரையோட்டத்தின் நதிமூலம், ரிஷிமூலம் எதுவென்றும், குதிரை இதுக்குள்ள எப்படி வந்தது என்று புரியாத புதிராகவே எனக்கு இன்று வரை இருக்கின்றது. மற்றக் குதிரைகள் சீராக ஓட, குறுக்கில் புகுந்து முன்னேற முயற்சிக்கும் குதிரையோ அது?

– மடத்துவாசல் கனாபிரபா-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit