இன்று கஜன்,சுலக்சன்…. நாளை?

பிறப்பு : - இறப்பு :

இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதன்மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை வைத்தே ஆட்சியைப் பிடித்த மைத்திரிபால அரசு, சிறுபான்மையினர் உரிமைகளை உதாசீனம் செய்து, அந்த நம்பிக்கைகளைச் சிதைத்து விடக் கூடாது”.

சென்ற வியாழக்கிழமை (அக்டோபர் 20) பிற்பகல், இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு, கொழும்பிலிருந்து புறப்படும்முன், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா-இஷாக்-நித்யே செய்தியாளர் கூட்டத்தில் தெள்ளத் தெளிவாக இதைத் தெரிவிக்கிறார்.

அன்று இரவே, யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜனும் விஜயகுமார் சுலக்சனும், இலங்கை காவல்துறையின் துவக்குக்கு இரையாகின்றனர். நாங்களும் தெளிவாகத்தான் இருக்கிறோம் – என்று ரிட்டாவுக்கும் சர்வதேசத்துக்கும் நிரூபிக்க முயல்கிறார்களா? புரியவில்லை.

இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கஜனும் சுலக்சனும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால்தான் கீழே விழுந்திருக்கின்றனர், இறந்திருக்கின்றனர். ‘மோட்டார் சைக்கிள் நிற்காமல் போனதால்தான் காவல்துறையினர் சுட்டிருக்கிறார்கள்’ என்கிற வசனத்தை மனசாட்சியே இல்லாமல் ஒப்பிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நமது உறவுகளல்ல! குற்றவாளிகளின் கூட்டாளிகள்.

நடந்தது சாலைவிபத்து தான் என்றும், கஜனும் சுலக்சனும் அந்த விபத்தில்தான் இறந்தார்களென்றும் சொல்லி, ஒரு கொலையையே மூடிமறைக்கப் பார்த்தவர்கள் யார் யாரென்று அ முதல் ஃ வரை கணக்கெடுத்து ஒட்டுமொத்தமாகக் கைது செய் என்று ஏன் இவர்களால் குரல் கொடுக்க முடியவில்லை?

கஜனையும் சுலக்சனையும் சுட்டுக்கொன்ற போலீஸ் குழுவை மட்டுமே குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பது அயோக்கியத்தனம். அவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான மோசடி. சுட்டுக்கொன்றவர்களை விட, அந்தக் கொலையை மூடிமறைக்கத் துணை போனவர்கள்தான் கடுமையான குற்றவாளிகள். அந்த மூடிமறைப்புப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுவது மிகமிக அவசியம்.

ஒரு பச்சைப் படுகொலையை மூடிமறைக்கத் துணைநின்ற உயர் அதிகாரிகள் யார் யார்? இலங்கை காவல்துறை அதிகாரிகளில் யார்யாருக்கு இதில் தொடர்பிருக்கிறது? கொழும்பிலிருந்து இந்த விஷயத்தைக் கையாண்ட மேலிடத்துக் கை எது? இதையெல்லாம் இப்போதே விசாரித்தால்தான், ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே-வுக்கு இந்த மூடிமறைப்பில் தொடர்பிருக்கிறதா

என்பதைக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பவம் நடந்த வியாழன் இரவு முதல் ஆளுநருக்குத் தொலைபேசி அல்லது அலைபேசி வாயிலாக வந்த அழைப்புகளை மட்டுமே அலசி ஆராய்ந்தால் போதும். அவரும் இதில் குற்றவாளியா என்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மூடிமறைப்பு வேலைகளில் சிங்கள அரசியல்வாதிகள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த ரகசியம். முள்ளிவாய்க்கால் வரை எம் உறவுகளை விரட்டி விரட்டிக் கொன்றுவிட்டு, ஒன்றரை லட்சம் உடல்களைக் குவியல் குவியலாகப் புதைத்துவிட்டு, ‘ஒரு புல் பூண்டைக் கூட நாங்கள் மிதிக்கவில்லை’ என்று கூசாமல் பேசிய கோயபல்ஸ்கள் அவர்கள். அதனாலேயே, மாஜி அரசியல்வாதியான ஆளுநர் குரேவுக்குத் தெரியாமல் இந்த மூடிமறைப்பு முயற்சி நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்று நினைக்கிறேன்.

இலங்கையில், மாகாணசபை ஆளுநர் என்பவர், மாகாணத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காகவே கொழும்பிலிருந்து நியமிக்கப்படுகிறார். அப்படி நியமிக்கப்பட்டவர்தான் ரெஜினால்ட் குரே. 2 அப்பாவி மாணவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ‘சாலைவிபத்து’ என்று அதைத் திசைதிருப்பி, ஒரு பச்சைப் படுகொலையை மூடிமறைக்க முயன்றிருக்கிறது – ரெஜினால்ட் குரேவின் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறை. நியாயமாகப் பார்த்தால், தன் பொறுப்பில் இருக்கும் காவல்துறையின் கொடுங்குற்றத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று குரே ராஜினாமா செய்திருக்கவேண்டும்.

இப்போது வேறு வழியில்லை. நடந்த கொலையை மூடிமறைக்க நடந்த முயற்சியில் குரேவுக்குத் தொடர்பிருந்தால், ஆளுநர் பதவியிலிருந்து அவரை உடனடியாக நீக்கி, அனுப்பவேண்டிய இடத்துக்கு அனுப்பியாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் ஆளுநர் மாளிகை மட்டுமா இருக்கிறது? சிறைச்சாலையும் இருக்கிறது.

நடந்தது எதுவுமே குரேவுக்குத் தெரியாது, அவர் ஒரு அப்பிராணி, அவரை இந்த சர்ச்சையில் இழுப்பது நியாயமா – என்று யாராலும் கேட்க முடியாது. காவல்துறை அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒரு ஆளுநருக்கே தெரியாமல், அவரை இருட்டறையிலேயே வைத்திருந்து, இப்படியொரு கொலைபாதகத்தையும் மூடிமறைப்பு மோசடியையும் காவல்துறை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்றால், இப்படியொரு DUMMY ஆளுநர் வட மாகாணத்துக்கு எதற்கு? தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்திக் குளிர்காய்வது மட்டும்தான் ஆளுநரின் வேலையென்று நினைக்கிறார்களா?

எனக்கென்னவோ, ரெஜினால்ட் குரே வெறும் DUMMY பொம்மை கிடையாது என்று தோன்றுகிறது. குரேவுக்குத் தெரியாமல் எதுவுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்குப் பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதி அவர்.

advertisement
1977 நாடாளுமன்றத் தேர்தலில் பேருவளை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 54 வாக்கு மட்டுமே வாங்கிய குரே, 2000-தில் மேல்மாகாண சபை முதல்வராகவும், 2010ல் கலியுகப் புத்தன் மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகவும், 2016ல் வடமாகாண ஆளுநராகவும் இருக்க முடிகிறது என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும்….!

இப்படியொரு சாமர்த்தியசாலி கண்ணில் யாரும் மண்ணைத் தூவ வாய்ப்பில்லை. ஒன்றுமே தெரியாதவர் போல காட்டிக் கொண்டு நம் கண்ணில் மண்ணைத்தூவ குரே முயல்கிறார் என்பதுதான் உண்மை.

வடமாகாணத்துக்கான ஆளுநராக குரே தேர்வு செய்யப்பட்டதற்கு, ஒரே ஒரு தகுதியைத் தவிர, வேறெந்தத் தகுதியும் கிடையாது. அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பது மட்டுமே அவரது தகுதியாக இருந்தது. அதனாலேயே அவரை மைத்திரிபாலா தெரிவு செய்தார்.

2009ல் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு எமது தாயக மக்கள் மேற்கொண்டுவருகிற தொடர் பிரச்சாரங்களில் – செயற்பாடுகளில், கிறிஸ்தவ மக்களுக்கும் அமைப்புகளுக்கும் பங்குதந்தைகளுக்கும் பேராயர்களுக்கும் இருக்கிற ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து கவனித்துவருகிற எவருக்கும், ரெஜினால்ட் குரே என்ன வேலைக்காக அங்கே அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது எளிதாகப் புரியும்.

ஆனால், மரியன்னையின் மகனான ஏசு கிறிஸ்து என்கிற உலகின் முதல் புரட்சியாளனின் வழியில் நடக்கும் எமது கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சகோதரர்களிடம், வாழைப்பழத்துக்குள் விஷம் வைத்துக் கொடுக்கும் மைத்திரிபாலாவின் நயவஞ்சக பார்முலா பலிக்கவில்லை. திட்டமிட்ட இனப்படுகொலை மூலம் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கேட்பதில் எப்போதும்போல் இப்போதும், கத்தோலிக்கச் சகோதரர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

சென்றமாதம் நடந்த எழுக தமிழ் பேரணி முடிய ஒவ்வொரு நிகழ்வும் இதை நிரூபிக்கிறது. எம் தமிழர் தாயகத்தில், நீதி கேட்டுக் குரல்கொடுக்கிற மக்கள்திரளை, வெள்ளை அங்கியுடன் வழிநடத்திச் செல்கிற இயேசுவின் தூதர்களைக் காணொளிகளில் காணும்போது கண்கலங்கி விடுகிறேன் நான். அவருடைய இரக்கங்களுக்கு முடிவேது?

குரே எதற்காக அனுப்பப்பட்டாரோ, அதைச் சாதிக்க முடியவில்லை. எமது மக்களின் ஓர்மமும் அச்சமின்மையும் நீதிவேட்கையும், அவர்களை வழிநடத்தக் கிடைத்த விக்னேஸ்வரனின் அறிவார்ந்த தலைமையும், அரசச் சீருடைகளுக்கு அஞ்சாமல் ஏசுவின் தோழர்கள் தருகிற தொடர் பாதுகாப்பும் அதற்குக் காரணங்களாக இருந்தன, இருக்கின்றன. கஜன், சுலக்சன் விஷயத்தில் உடனடி நீதி கேட்டுப் போராடுகிற எமது தாயகத்தின் மாணவச் செல்வங்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதும் – இந்த அம்சங்கள்தான்!

கஜன், சுலக்சன் விஷயத்தில், இன்னொரு FOUL PLAY நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சம்பவம் நடந்தது, வியாழன் பின்னிரவில்! துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அவர்கள் எவ்வளவு நேரம் உயிருடன் இருந்தார்கள் என்பது, முக்கியமான கேள்வி.

இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீசார் முயன்றிருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருந்திருக்கும். அவர்கள் பிழைத்துவிட்டால் – உண்மையில் என்ன நடந்ததென்பது அம்பலமாகிவிடுமே என்கிற அச்சத்தால், அவர்களது உயிர் பிரியும் வரை காத்திருந்து, அதற்குப் பிறகே அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தக் கேள்வி, மிக மிக முக்கியமான கேள்வி.

இதுதான் நடந்திருக்குமென்றால், இப்படிச் செய்ய போலீசாருக்கு வழிகாட்டியது யார் – என்கிற கேள்வி மற்றெல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானதாகிவிடுகிறது. ரெஜினால்ட் குரே என்கிற மைத்திரிபாலவின் நேரடி ஏஜென்ட் மட்டுமே இதற்குப் பதில் சொல்ல முடியும்.

வாய் திறந்து பேசு குரே! என்ன நடந்ததென்று சொல்! குற்றத்தில் பங்கிருந்தால், வன்னி மண்ணிலிருந்து வெளியேறு!

2002ல், ஒரு சிறுமழைப் பொழுதில், செம்மணி வெளியில் நின்றபோது வீசிய ஈரக்காற்றை எங்கள் கிருஷாந்தியின் மூச்சுக்காற்றாகவே நினைத்துக் கலங்கியவன் நான். அன்றிருந்த அதே மனநிலையில்தான் இதை எழுதுகிறேன். வெறும் கற்பனையால் மட்டுமே இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. யதார்த்தம் அறிந்தே பேசுகிறேன்.

செம்மணி வெளியில் எங்கள் பிள்ளை கிருஷாந்தி குமாரசாமிக்கு என்ன நடந்ததென்பது, சோமன ராஜபக்ச என்கிற சிப்பாய் உண்மையைச் சொல்லியிருக்காவிட்டால் வெளியே தெரிந்திருக்குமா? கஜன் சுலக்சன் படுகொலையிலும், சம்பந்தப்பட்டவர்கள் யாராவது வாய்திறந்தால்தான் உண்மை வெளிவரும். அவர்கள் அவ்வளவு சுலபத்தில் வாய் திறக்க மாட்டார்கள். மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா?

சோமன ராஜபக்சவைப் பேசவைத்தது, சந்திரிகாவின் அதிகார கெடுபிடிகளுக்கெல்லாம் அஞ்சாமல், எமது தாயக மக்கள் ஒன்றுபட்டு நின்று எழுப்பிய உறுதியான குரல்தான்! இன்று, தாயகமெங்கும் எமது மாணவர்கள் ஒன்றுபட்டு நிற்பதைப் போல்தான், அன்று எமது மக்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். வரலாறு திரும்புகிறது…..!

இன்று, நீதியைப் பெற்றே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு தாயகமெங்கும் எம் மாணவச் செல்வங்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். ‘பேனா தூக்கும் கையாலே ஆயுதம் தூக்க வைக்காதே’ ‘இனவெறிக்கு மாணவர்களா பலி’ ‘இன்று இவர்கள்…. நாளை?’ என்கிற வாசகங்களுடன் நீதிகேட்டு நிற்கிற அவர்களின் அடிச்சுவட்டில், ஒட்டுமொத்தத் தாயகமும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. கணினியில் இந்தக் கட்டுரை உருவாகிற இதே நேரத்தில் (அக். 25 செவ்வாய் காலை), கஜன் சுலக்சனுக்கு நீதி கேட்டு நடத்தப்படுகிற ஹர்த்தால் போராட்டத்தால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் முடங்கிக் கிடக்கிறது.

என்ன நடந்ததென்கிற உண்மை தெரியவேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் (ஆளுநராகவே இருந்தாலும்) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் – என்கிற மக்கள் குரல் மேலும் வலுவடையும் என்பதற்கான முன்னறிகுறி இது!

கஜன் சுலக்சன் படுகொலை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 5 போலீசாரும் சிங்களர்கள். இதை இலங்கைப் பத்திரிகை எதுவும் வெளிப்படையாகக் குறிப்பிடவேயில்லை. (நல்லிணக்கத்தைக் காப்பாற்றுகிறார்களாம்!) இதை அம்பலப்படுத்தியிருக்கும் இலங்கை இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ன, ‘தமிழர் பகுதியில் கடமையாற்ற சிங்களர்கள் எதற்கு’ என்று வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார்.

தமிழர் தாயகத்தில் காவல்துறையின் அடாவடித்தனம் தொடருவதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கருணாரட்ன, இந்த நிலை நீடித்தால் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கேட்டிருக்கிறார். தமிழினப் படுகொலையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடியவர் அவர். தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தைத் தொடக்கத்திலிருந்தே ஆதரிப்பவர்.

ராஜபக்சவின் முகமூடிதான் மைத்திரி என்பதை மைத்திரியாலேயே மறுக்கமுடியாத நிலையில், இரண்டும் ஒன்றுதான் என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் கருணாரட்ன. ‘இனங்களுக்கிடையே நல்லிணக்கம் – என்று பேசுகிற மைத்திரி, உண்மையில் இனவாதத்தைத் தூண்டிவிடவே, முயற்சிக்கிறார். ராஜபக்ச அரசு செய்ததைத்தான் இவரும் செய்கிறார்’ என்பது அவரது குற்றச்சாட்டு.

தமிழர் தாயகத்திலிருந்து, தமிழினத்தின் மனசாட்சியாகவே ஒலிக்கும் ‘வலம்புரி’ நாளேடு, கஜன் சுலக்சன் தொடர்பில் எழுதியிருந்த தலையங்கம் தெளிவானது, துல்லியமானது என்பதால், அதன் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

“வன்னி யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி அப்படியொரு விசாரணைக்கு வழிவகுத்திருந்தால், அதன்வழி குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வகை செய்திருந்தால் மட்டுமே படைத்தரப்பு பயந்திருக்கும்….. அதைச் செய்யாத தமிழ்த் தலைமையின் கொடுமைத்தனத்தால், தமிழன் எவனையும் எந்த இடத்திலும் வைத்து சுட்டுக் கொல்லலாம் என்று பாதுகாப்புத் தரப்பு நினைக்கலாயிற்று” என்கிற வலம்புரியின் வார்த்தைகள், வரலாற்று நிஜம். வலியோடும் வேதனையோடும் வலம்புரியை வழிமொழிகிறேன்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit