சுவிற்சர்லாந்தின் அரசதொலைக்காட்ச்சியகம் ‘எஸ்.ஆர்.எப்1 சைவெநறிக்கூடத்தின் தொண்டுதொடர்பாக ஒளிபரப்பாகவுள்ள ஆவணப்படம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிற்சர்லாந்தின் அரசதொலைக்காட்சியாம் ‘எஸ்.ஆர்.எப்1 (SRF 1)’ல் சைவெநறிக்கூடத்தின் தொண்டுதொடர்பாக 23. 10. 2016 காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள ஆவணப்படம்

சைவநெறிக்கூடம் தோற்றம் பெற்று 22 ஆண்டுகள் நிறைந்தது, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இறையருளால் அமைந்து 10 ஆண்டுகள் நிறைகிறது!

எதிர்வரும் 23. 10. 2016 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து அரசதொலைக்காட்சியான எஸ்.ஆர்.எப். 1ல் காலை பத்துமணிக்கு ‘தந்தையின் வீட்டில் பல அறைகள் – பல்சமய இல்லத்திற்கு செல்லும் வழியில் (Viele Zimmer in Vaters Haus – unterwegs im Haus der Religionen)’ எனும் தலைப்பில் ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

இவ் ஆவணப்படம் 2002ம் ஆண்டு பல்சமயம் நிறுவப்பட்டு, 2012ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டு அடிக்கல்நாட்டி, 14. 12. 2015 பல்சமய இல்லம் திறப்புவிழாக் கண்டதுமுதல் தலைலாமா அவர்களின் வருகைவரை உள்ளடக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எப்1ல் ஒளிபரப்பாகும் இப்படத்தின் சிறப்பு 45வீதத்திற்கு மேலாக சைவநெறிக்கூடத்தையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலையும் ஆவணப்படுத்துவதாக இப்படம் அமைந்திருப்பதாகும்.

http://www.srf.ch/sendungen/sternstunde-religion/viele-zimmer-in-vaters-haus-unterwegs-im-haus-der-religionen

நேரடியாக தொலைக்காட்சியில் காணமுடியாதவர்கள் மேற்காணும் மிகையிணைப்பினைச் சுட்டி ஒளிபரப்பப்பட்ட காலத்திற்குப் பின்னர், தொலைக்காட்சியின் இணையத்தில் இவ் ஆவணப்படத்தினைக் காணலாம்.

சைவநெறிக்கூடம் மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தோற்றத்தின் சுருக்கமும் நோக்கமும்:

தமிழ்மொழியில் சமயம் எனப்படுவது நன்குபதப்பட்ட பக்குவநிலை எனக்கொள்ளப்படும். சமையல் என்ற சொல்லும் இதனுடன் தொடர்புடையதே. உண்பதற்கு உகந்த நிலையினை அடைந்திருக்கிறது என்று பொருட்படும். ஆனால் தமிழர்களுடைய சமயநம்பிக்கை, இதையும் தாண்டியதாகும். இயற்கையான நெறியே சைவநெறியாகும். எமது சைவநெறி எவராலும் வெறும் கற்பனையில் எழுதப்பட்டதல்ல. எந்த ஒரு மனிதனாலும் தன்போக்கில் நிறுவப்பட்டதுமில்லை. மனிதர்களால் நிறுவப்படாத, ஆனால் மனித இனம் பண்பட்ட காலம் முதல் இன்றுவரை எண்ணிறந்த இறையாளர்களால் நெறிப்படுத்தப்பட்ட சமயம் ஆகும். இப்பெருமக்கள் சைவத்தமிழ்நெறியில் தோன்றி சமயத்திற்கும், இனத்திற்கும், மொழிக்கும் எழுத்தில் விளக்கமுடியாப் பெரும்பணியாற்றிச் சென்றிருக்கிறார்கள். இன்றுவரையும் பல இறையாளர்கள் தோன்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் றெலியன் அல்லது டொச்சில் றெலிகியோன் எனும் சொற்பதம் சமயத்திற்குப் பாவிக்கப்படுகிறது. இதன் வேற்சொற்பொருளும் ‘பக்குவப்பட்ட’ எனப்பொருள்கொள்கிறது, மேலும் இச்சொல்லிற்கு ‘சிந்தனை, மதிப்பளித்தல், கவனம் செலுத்தல்’ என்றும் பொருள் அமையும். மேலுள்ள சொல்லுக்குப் பெருள்தேடி இச்செய்தி கோர்க்ப்படவில்லை. இருப்பினும் உலகில் மாந்தர்கள் சமூகமயப்பட்டு பண்பட்டு இயங்கத்தொடங்கியதும் நம்பிக்கை உருவாகி இருக்கிறது. மனிதனின் நம்பிக்கை மனிதனைப் பண்படுத்தி இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் எழுதிய குறள்வழி வாழ்வியலை நோக்கினால் தமிழர்கள் தொன்மையும், சமய நம்பிக்கையின் ஆழமான பொருளும், இயற்கையுடன் ஒன்றிய வாழ்வும் புலப்படும். அதுபோல் தொல்காப்பியத்தில் மந்திரம் என்பதன் பொருள், தெய்வத் தமிழில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டினாலும், அறிஞர்கூட்டம் திசைக்கொருவர், ஏதேனும் ஒரு கருத்தியலை முதன்மைப்படுத்தி முட்டிமோதிக்கொண்டாலும், பாமரமக்கள் தங்கள் வாழ்வியலை காலம் அமைத்துக்கொடுத்த நம்பிக்கைக்கமைய வாழ்ந்து கழித்திருக்கிறார்கள். இதற்குத் தமிழர்களும் விலக்கு அல்ல என்பது எங்கள் வரலாற்றில் நாங்கள் உணரும் உண்மையாகும்.

சுருக்கத்திற்கு வருவோம், தமிழர்கள் சமயத்தை இயற்கையின் நெறி என்றே குறிப்பிட்டனர். தமிழர்களின் பூகோள அறிவு இன்று விஞ்ஞானம் உரைக்கும் உண்மைகளை அன்றே இருந்த இடத்தில் கணித்துகொடுத்த செயலால் அளக்கலாம். இயற்கை வைத்தியமும், கோள்களின் கணிப்பும், அறிவும், நம்பிக்கையும், பண்பாடும், மொழியும், ஒன்றாகி இணக்கமான வாழ்வியலை தமிழன் வாழ்ந்தான் என்பது இப்போது நாங்கள் வாழும் வாழ்வின் மிகுதியிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.

மனிதர்கள் தங்கள் பண்பினை, செயல்களை, எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தி, அரசியல், உளவியல் செயல்களை நெறிப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு சமய நம்பிக்கை அனைத்தையும் இணைக்கும் முடிச்சாக அமைகிறது. உலகில் இன்று கிறிஸ்தவம், இசுலாம், இந்துசமயம், பௌத்தம், சீக், யூதர், பகாய், அலேவித் என்று எட்டிற்கும் மேற்பட்ட சமயங்கள் விளங்குகின்றன.

தமிழர்களின் சைவசமயம் வலுக்கட்டாயமாக இந்துசமயம் எனும் குடும்பத்திற்குள் புகுக்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம், சாத்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் என வடமொழியில் பெயரிடப்பட்டு ஆறு சமயங்கள் ஒன்றாக இந்துசமயமாக பேர்சியர்களாலும், பின்னர் ஆங்கிலேயர்களாலும் நாங்கள் அடையாளப்படுத்தபட்டுள்ளோம். இந்த உண்மையினை பெரிய எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கவேண்டிய தேவையில்லை.

7ம் நூற்றாண்டுவரை தமிழன் தமிழனாகவே வாழ்ந்தான். சைவசமயம் தமிழர்களால் ஒழுகப்பட்ட உண்மைச் சைவநெறியாக விளங்கியது. பாழான இருண்டகாலத்தில் பிரகிருதமொழி மோகமும், பின்னர் பல்லவர் காலத்தில் வடமொழி மோகமும் தமிழின் அடையாளத்தை குலைத்தது. ஆனால் ஒரு அற்புதம் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருந்தது, எப்போதெல்லம் தமிழ் அழிவின் விளிம்பை அடையும் அனர்த்தம் எழுந்ததோ அப்போதெல்லாம், இறையருளாளர்கள் தோன்றி தமிழ்மொழியை மேலும் செழிக்கச் செய்துள்ளார்கள். நால்வர் பெருமக்களும் இப்படியான காலத்தில் தோன்றினார்கள். அனல்வாதம், புனல்வாதம் புரிந்து தமிழ்ச்சைவத்தைப் பரப்பினர். பக்தி இலக்கிய காலத்தில் தமிழும் சைவமும் மீண்டும் துளிர்த்தது. தமிழில் வழிபாட்டை இழந்த இனம், ஆட்சியையும், அறுதியில் இனமான உரிமையினையும் இழந்தது. இன்றுவரை வரலாறும் அப்படியே நகர்கிறது. கருவறைவிட்டு எப்போது தமிழ் நீக்கப்பட்டதோ அப்போது முதல் அழிவும் தொடங்கியது. மருதாச்சலம் எனும் இயற்பெயர் கொண்ட தமிழறிஞர் மறைமலையடிகளார் எனத் தன்பெயரைத் தமிழ்ப்படுத்தி, தமிழிற்கும் சைவத்திற்கும் சென்ற நூற்றாண்டில் அளப்பெரிய பல்தொண்டுகள் ஆற்றினார். தெய்வத் தமிழழைப் போற்றினார்.

பிறநாட்டவர் படையெடுப்பு, வெள்ளையர்களின் வல்வளைப்பிற்கு பின்னரான ஒருகாலத்தில், ஈழத்தில் நான்பெரிது, நீபெரிது என்று வாழாமல் நாம் பெரிது, நமதுநாடு பெரிது என்று வாழுங்கள் என்று மொழிந்து தமிழ் நிமிர்ந்த காலத்திலும், தமிழர்கள் வழிபாட்டு முறைமையில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆகமொத்தம் நால்வர் இறைபெருமக்களும், எண்ணற்ற இறையாளர்களும், மறைமலை அடிகளாரும் முயன்று தொடங்கியபணியின் தேவை இந்த நூற்றாண்டிலும் அப்படியே இருக்கிறது. இதனை ஒருசிலரால் மட்டும் சீர்தூக்க முடியும் என்று நினைப்பது அறியாமையாகும். ஆனால் யாவரும் அப்படியே எண்ணிப் பணிகளைப் புறந்தள்ளினால் ஆவது என்ன?

மேலே குறிப்பிட்ட சூழலில் 1994ம் ஆண்டு சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் தோற்றம் பெற்றது. சைவத்தமிழ்மக்கள் இசைவு வழங்கினால் தொண்டு தொடரும் அல்லது அருட்பா அருளிய இராமலிங்க வள்ளலார் பெருமான் வாக்கின் நிலைபோல் ‘ கடைவிரித்தேன் கொள்வாரில்லை – கட்டிக் கொண்டேன்!’ என்று எங்கள் செயற்பாட்டை நிறுத்திக்கொள்வோம் என்று திடம் பூண்டே சைவநெறிக்கூடம் தொடங்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302