சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறிலங்காவின் ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைகளை வழங்கியது.

தமது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியது தொடர்பில் இந்தியா மீது ராஜபக்சாக்கள் கோபங் கொண்டனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மகிந்தவால் பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

அப்போது சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராகப் பணியாற்றிய அலோக் பிரசாத்தும் ராஜபக்சாக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தமையால், ராஜபக்சாக்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியதை அலோக் பிராசத்தும் எதிர்த்ததுடன் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் தனது அரசாங்கத்திடம் கையளித்தார்.

ராஜபக்சாக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இந்தியா தனது நாட்டில் தஞ்சம் புகுந்த சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டது.

இதேவேளையில், சிறிலங்கா ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைவுகளை வழங்கும் நடவடிக்கையை இந்தியா இடைநிறுத்தியது. இதன்மூலம் இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தது.

2010ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, இந்திய அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்பதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்டார். இந்திய அரசாங்கத்தின் அமைப்பொன்றின் ஊடாக இந்தியாவிற்குச் செல்வதற்கான முயற்சிகளிலும் சரத் பொன்சோ ஈடுபட்டிருந்தார். இதனை அறிந்த ராஜபக்சாக்கள், இந்தியத் தலைவர்கள் பொன்சேகாவைச் சந்திப்பதைத் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.

ராஜபக்சாக்களின் இந்த வேண்டுகோளை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஏனெனில் அக்காலப்பகுதியில் சிறிலங்காவின் அதிபராக மகிந்த இருந்தமையே இதற்கான காரணமாகும். இறுதியில், பொன்சேகா இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்ட போதிலும், இவர் புதுடில்லிக்குச் செல்லவில்லை. இதற்குப் பதிலாக இவர் மும்பைக்குச் சென்றார். சரத் பொன்சேகா மும்பைக்குச் செல்வதால் அங்கு அவரால் இந்தியத் தலைவரைச் சந்திக்க முடியாது என்பதில் ராஜபக்சாக்கள் உறுதியாக இருந்தனர்.

அப்போது 43வது பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார். அந்தவேளையில், சிராணி பண்டாரநாயக்க தமக்கு விரிவுரைகளை வழங்க வரவேண்டும் என இந்தியப் பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இவர் ஒரு பேராசிரியராக இருந்த காரணத்தாலும், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான புத்தகங்களை எழுதியிருந்ததாலும் இந்தியப் பல்கலைக்கழங்கள் சிராணி பண்டாரநாயக்க தமக்கு விரிவுரை வழங்க வேண்டும் என விரும்பின.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிராணி பண்டாரநாயக்கவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தால், அது ராஜபக்ச அரசாங்கத்தின் முகத்தில் அறைந்தது போலிருக்கும் என்பதால் தனது பல்கலைக்கழகங்கள் அவ்வாறு செய்வதற்கு உந்துதல் வழங்க இந்திய அரசாங்கம் விரும்பவில்லை.

சிறிலங்காவின் அரசியல் மற்றும் அரசியற் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள இந்தியா, சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கத்துடனான உறவு எந்தவிதத்திலும் விரிசலடைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது.

இந்நிலையில் மகிந்த இந்தியாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார். இந்திய ஆலயங்கள் மற்றும் விகாரைகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பை ஏற்றே இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைக்குமா என்பதிலும் கவனம் செலுத்தினார்.

எனினும், மோடி, மகிந்தவைச் சந்திப்பதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. மோடி சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, எவ்வித முன்வேண்டுகோள்களும் இல்லாது மகிந்த, மோடியைச் சந்தித்திருந்தார்.

மகிந்தவின் அரசாங்கம்:

மகிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில், இந்தியா விரும்பியிருந்தால் பொன்சேகாவையும் சிராணி பண்டாரநாயக்கவையும் தனது நாட்டிற்கு அழைத்து மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்திருக்க முடியும். எனினும், இந்தியா நாகரிகமற்ற வகையில் நடந்து கொள்ளவில்லை.

சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் சீனா தொடர்பைப் பேணி வருகிறது. 1977ல், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் சீனா தனது உறவைப் பலப்படுத்தியது.

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த பண்டாரநாயக்கக்களுடன் வரலாற்று ரீதியாக நல்லுறவைக் கட்டியெழுப்பி வந்த சீனா ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் பண்டாரநாயக்காக்களை கறிவேப்பிலை போல் தூக்கியெறிந்தது. இது திருமதி பண்டாரநாயக்கவிற்கு ஆச்சரியத்தை அளித்தது.

சிறிமாவோ எதிர்க்கட்சியில் இருந்தபோது, சீனாவிற்குச் செல்வதற்கான அழைப்பைக் கூட இவர் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் ஜே.ஆர் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாகக்கூடாது என சீனா கருதியமையே இதற்கான காரணமாகும்.

சிறிலங்காவுடன் மிகக் கவனமாக சீனா தொடர்பைப் பேணும் அதேவேளையில் கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தால் அவன்ட் கார்ட் ஊழல் மோசடி தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் மீதான விசாரணை மேற்கொள்ளும் வேளையில் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச சீனாவிற்குப் பயணம் செய்தமையானது சிறிலங்கா அரசாங்கத்தின் கன்னத்தில் விழுந்துள்ள அடிக்கு ஒப்பானதாகும்.

கோத்தாபய மீதான வெளிநாட்டுக்குச் செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் இவர் சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். அவன்கார்ட் ஊழல் மோசடி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தாபய, சீனாவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சீனாவிற்குப் பயணித்ததானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தை மட்டுமல்லாது, இலங்கைத் தீவு முழுமைக்கும் தீங்கு விளைவிப்பதற்கான ஒரு நகர்வாக எடுத்துக் கொள்ளலாம்.

ஷியாங்சான் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு சீனாவால் கோத்ததாபயவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியராச்சி மற்றும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் சிலருக்கும் சீனா அழைப்பு விடுத்தது. இப்பாதுகாப்பு மாநாட்டில் கோத்தாபய, சிறிலங்கா சார்பாகக் கலந்து கொண்டாரா அல்லது சீனாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டாரா என்பது இங்கு முன்வைக்கப்படும் வினாவாகும்.

மைத்திரி-ரணில் அரசாங்கமானது எதற்கும் சாய்ந்து கொடாது நிமிர்ந்து நின்றால், சீனா இவ்வாறான கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டாது. பௌத்த தலைவர் தலாய்லாமாவை தனது எதிரியாகவே சீனா கருதுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தலாய்லாமாவை சிறிலங்காவிற்குச் செல்லவிடாது தடுப்பதே சீனாவின் நோக்காகும்.

இதையும் மீறி சிறிலங்கா, தலாய்லாமாவை தனது நாட்டிற்கு அழைத்தால் தமக்கு எதிராக சிறிலங்காவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவோம் என சீனா சிறிலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது அரசியல் எதிரிகளை சீனா தனது நாட்டில் அழைப்பது தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கம் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தால், இது தொடர்பில் சீனா அச்சம் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம் – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*