தேசத்துரோகச் செயல்கள்! மன்னிக்கவே முடியாது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் தேசப்பற்று இருப்பது இன்றியமையாததாகும்.

நாட்டுக்கு விசுவாசமாகவும், அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதமாகவும் இருக்க வேண்டிய கடப்பாட்டை ஒவ்வொரு பிரஜையும் கொண்டிருக்கின்றார்.

நம்பிக்கைத் துரோகமாக செயற்படக் கூடிய விதத்தில் எவரது செயல் தொடர்பிலும் மன்னிக்க முடியாத நிலையே காணப்படும்.

தான் பிறந்த தேசத்துக்கு துரோகமிழைப்போரை மன்னிக்கவே முடியாது.

எமது நாட்டின் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் தேசத்துரோகச் செயல்கள் இடம்பெற்ற போதிலும் அவ்வாறான சதி முயற்சிகளை சாதுரியமாக முறியடித்து வெற்றி காணப்பட்டுள்ளது.

முன்பொரு தடவை ஜனநாயக வழி மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இராணுவச் சதியொன்று மேற்கொள்ளப்பட்ட போது அந்த சதிப்புரட்சித் திட்டம் இடைநடுவில் கசிந்ததன் காரணமாக நாடு காப்பாற்றப்பட்டது.

அதேபோன்றுதான் 70 களில் ஜே. வி. பி. யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் புரட்சியும் பாதுகாப்புத் தரப்பினரால் சாதுரியமான வகையில் தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறு ஜனநாயக வழி நெடுகிலும் காலத்துக்குக் காலம் அச்சுறுத்தல்கள் இடம்பெற்ற போதிலும் முறியடிப்பதில் அரசுகள் வெற்றி கண்டன.

நாட்டைத் துண்டாடும் ஒரு முயற்சியில் வடக்கு கிழக்கு, தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை அதுவும் 30 ஆண்டுகால யுத்தத்தை படையினர் பெரும் இழப்புகளுக்கு மத்தியில் வெற்றி கொண்டனர்..

அவர்களது போராட்டத்துக்கான பின்புலங்களை நியாயமானதாக நோக்க முடிந்தாலும் அதனை ஆயுதமேந்தித்தான் நடத்த வேண்டும் என எடுத்த முடிவுதான் தவறானதாகும்.

இன்று மற்றுமொரு தேசத்துரோகச் செயற்பாடு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

அது இலங்கை மத்திய வங்கியின் இரகசிய நிதி விபரங்களை வெளியே கசிந்திருப்பதாகும்.

இப்படி இரகசிய விபரங்கள் வெளியே இருந்து யாராலும் பெற்றுக்கொள்ள முடியாது. உள்ளிருந்து தான் முழுக்க கசிந்துள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரகசிய பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

advertisement

இவ்வாறு இரகசிய நிதி விபரங்கள் அடிக்கடி கசிவதால் தேசத்தின் நிதி நிலைவரம் பாரிய சவாலுக்குட்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததே ஆகும்.

கூட இருந்தே குழிபறிக்கும் துரோகத்தனத்தைச் செய்யும் மத்திய வங்கி பிரகிருதிகளை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் தெரிவித்திருக்கிறார்.

தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகச் செயலாகவே இதனையும் நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கக் கூடிய செயலாகவே இது காணப்படுகிறது.

மன்னிக்கப்பட முடியாத இந்த துரோகத்தைச் செய்தவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

அவர்கள் தப்புவதற்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாது.

மத்திய வங்கியில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வங்கி ஆளுநர் துரிதமான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அதற்கப்பால் அரசும் முக்கிய சில முடிவுகளை அடுத்து வரும் சில வாரங்களுக்கிடையில் எடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் உறுதியாகவும் கவனமாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய மத்திய வங்கி நிதி இரகசியங்கள் வெளியே கசிவதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திப் பணிகள், சர்வதேச ஒத்துழைப்பு என்பன கேள்விக்குறியாக்கப்படக் கூடிய ஆபத்தே உருவாகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட முதலீடு செய்வதற்குத் தயக்கம் காட்டுவார்கள். இச்செயல் நாட்டை எவ்வளவு தூரம் பாதிப்படையச் செய்யும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது இடம்பெற்று வரும் நாட்டின் முக்கிய நிர்மாணப் பணியான நிதி நகரத் திட்டத்துக்கு முதலீடு செய்யும் வெளிநாட்டு வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் பலவும் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து மீளச் சிந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருப்பதாக அறிய வந்துள்ளது.

இந்த விடயத்தில் தொடர்புபட்டவர்கள் யாராக இருப்பினும் பட்டம், பதவி, தராதரம் பாராது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தை மூடி மறைத்து தப்பித்துக் கொள்வதற்கு துரோகத்தனத்தை செய்தவர்கள் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தக்கூடும்.

அவ்வாறானதொரு முயற்சிக்கு அரசு எந்தவிதத்திலும் இடமளிக்கக் கூடாது.

சாதாரண விடயமாக இதனைப் பார்க்க முடியாது. இதுவும் தேசத்துரோகச் செயல்களில் ஒன்றுதான்.

இவ்வாறான துரோகிகள் தப்புவதற்கு இடமளிப்பதை தேசத்தின் அழிவுக்கே இடமளிப்பதாகவே கொள்ள வேண்டும்.

நாட்டின் நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களின் செயற்பாடுகள், அதிகாரிகளின் பணிகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்து மாற்றங்கள் தேவைப்படின் அவற்றை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதத்தை வழங்காமல் கண்டும் காணாத போக்கில் தொடர்ந்தும் செயற்பட முனைந்தால் பாரிய எதிர்விளைவுகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடலாம் என்பதை அரசுக்கும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கும் எச்சரிக்கையாக சொல்லி வைக்கின்றோம்.

மற்றுமொரு தடவை இது போன்று எங்காவது ஒரு இடத்தில் இரகசியங்கள் கசியும் நிலைக்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாது.

களையெடுப்புச் செய்வதில் தயவு தாட்சண்யமோ, பாராமுகமோ இருக்கக் கூடாது.

நாட்டு நலனில் அக்கறை காட்டி அதற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

தேசத்துரோகிகளையும், காட்டிக் கொடுப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த தயக்கம் காட்டவே கூடாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*