தாய் மொழிக்கல்வியின் தேவை – சு.விசாகன்

பிறப்பு : - இறப்பு :

ஆரம்ப காலங்களிலே ஆங்கில மொழியானது பிரித்தானியாவினுடைய ஆட்சி மொழியாக இருந்து பிரித்தானியாவினுடைய படையெடுப்புகளால் உலகளாவிய அளவில் சர்வதேச மொழியாக பரிணமித்துள்ளது.

இன்று நம் சமூகங்களிலே ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகி விட்டது. ஆங்கிலம் பேசுவது அறிவாகப் பார்க்கப்படுகிறது. இதனால் நம் தாய் மொழியில் சில சொற்களைச் சொல்வது கூட இன்று அநாகரிகமாகிவிட்டது. இன்றைய உலகில் தொழில் வாய்ப்புகள் மற்றும் உயர் வருமானம் ஈட்டுவதற்கு ஆங்கில மொழி அவசியமானது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் சாதிக்க முடியாது என்பது உண்மையானதே. அதற்காக ஆங்கிலத்தை நாகரிகமாக எண்ணுவது ஏற்க முடியாது.

இன்று நம் சமூகத்தில் இவ்வாறான ஆங்கில மோகமே ஆங்கில மொழி மூலமான கல்வி மோகத்திற்கும் ஒரு காரணமாகக் காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், அறிவியல் போன்றவற்றை ஆங்கில மொழி மூலம் கற்பதே சிறந்தது என்பது இன்று பல கற்றவர்களின் கருத்தாகக் காணப்படுகிறது. ஆனால் ஜப்பான், ஜேர்மனி. சீனா போன்ற நாடுகள் உலகில் மேலோங்கி நிற்பது அவர்களின் சொந்த தாய்மொழியில் கற்பதே என்று பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. தாய்மொழி மூலமான கல்வியை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதைக் காணலாம். ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி மூலமான கல்வி அவசியமானது.

இலங்கையிலே ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் 1970களில் கல்வி நிலை முற்றுமுழுதாக சுயமொழிகளில் கற்பிக்கத் தொடங்கப்பட்டன. அந்நிலை மாறி மீண்டும் 2002ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழி மூலமான கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

ருNநுளுஊழு(1951) தாய் மொழி மூலமான கல்வி பற்றி வெளியிட்ட அறிக்கையில்,
“கல்வியியல் காரணங்களின் அடிப்படையில் முடிந்த அளவு கல்வி நிலையில் இறுதி வரை தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம். குறிப்பாக பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் போது மாணவர்கள் தாய் மொழியில் பயிலத் தொடங்க வேண்டும்: ஏனெனில் அவர்கள் அதனையே மிகச் சிறப்பாக விளங்கிக் கொள்வர்: அத்துடன் பாடசாலை வாழ்க்கையைத் தம் தாய் மொழியில் தொடங்குவதால், பாடசாலைக்கும் இல்லத்திற்குமிடையே உள்ள இடைவெளி மிகவும் குறையும்”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய கால சூழ் நிலையில் தாய்மொழி மூலமான கல்வியானது பழமைவாதமாக தவறான கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகிறது, இன்றைய தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி டூலமான கல்வி தம் பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்குமா? என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் எழுகின்றது. நாம் ஒரு விடயத்தை தாய் மொழியில் கற்கும் போதே அதை சமூகத்துடன் இலகுவாக ஒப்பிட்டு பார்க்க முடியும். இதனால் ஆங்கில மொழி மூலமாக கற்பவர்களை விட தாய்மொழி மூலமாக கற்பவர்களின் கற்கும் திறன் நாளடைவில் அதிகரிக்கிறது. இதனால் தான் தாய்மொழியில் அறிவியல் கல்வியை கொடுப்பதன் மூலம் ஆக்க பூர்வ சிந்தனையை குழந்தைகள் மத்தியில் கொண்டு வர முடியும் என்று டாக்டர். அப்துல்கலாம் கூறியுள்ளார்.

திருமதி.கே.சிவாஜி,
ஆங்கிலத்துறை, தலைவர், யாழ். பல்கலைக்கழகம்.

தாய்மொழி மூலமான கல்வி சுய அறிவு வளர்ச்சிக்கு அவசியமானது. எண்ணக்கருவை விளங்கிக்கற்றலுக்கும், சுயசிந்தனை வளர்ச்சிக்கும் தாய் மொழி மூலமான கல்வியே அவசியமானதாகும். ஆங்கில மொழியானது மிக அண்மித்த அல்லது நவீனமான விடயங்களை உடனுக்குடன் பரிமாறக் கொள்வதால் நவீன உலகோடு ஒன்றித்த கல்விக்கு மிக அவசியமானது. ஆங்கில மொழி அறிவை வளர்ப்பதற்கு ஆங்கில மொழி மூலமான கல்வி அவசியம் என்று கூறமுடியாது. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்று அதனை தான் சார்ந்த துறையோடு அல்லது நாளாந்த வாழ்வியலோடு தொடர்புபடுத்துவதால் பொதுவான நல்ல ஆங்கில அறிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கை சுய சிந்தனை, சுயதேடல், கருத்துப் பரிமாற்றம், சொந்த ஆக்கங்கள் என்பன வளர்வாந்கு தாய்மொழி மூலமான கல்வி இடமளிக்கிறது. ஆங்கில மொழி மூலமான கல்வி இன்றைய உலகில் நாகரிகமாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலம் சர்வதேசமொழி எனவே இனங்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுக்காகவும், நவீன உலகின் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றிப்பதற்கும் ஒரு பொதுவான அங்கீகரிக்கப்பட்ட மொழி அவசியம் தேவைப்படுகிறது. ஆங்கிலம் இந்தப் பணியைச் செய்வதால் அது இன்றைய உலகின் தேவை. எனவே ஆங்கிலத்தை ஒரு கட்டாய தேவையாகப் பார்த்து ஒவ்வொருவரும் தாய்மொழியோடு இரண்டாம் மொழியாக இதனைக்கற்று, அதன் பாவனையை உறுப்படுத்த வேண்டும்.

“வெளி உலகைத் தரிசிப்பதற்கான பிரதான சாளரமே ஆங்கில மொழி”
ஜவஹர்லால் நேரு

பிள்ளைகள் வெளியுலகை அறிவதற்கு ஆங்கிலமொழி அவசியமானது. ஆங்கில மொழியின் தேவையை அறிந்து அதைக்கற்க வேண்டும். முழுமையான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு தாய்மொழி மூலமான கல்வி அவசியமானதாக இருந்தாலும் அதை வெளியுலகிற்கு வெளிக்கொணர ஆங்கில மொழி இன்றியமையாத மூலமாகின்றது.

நாம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்தவும் ஏனைய இனம், மொழி சார்நத விடயங்களைப் பெற்றுக்கொள்ளவும் ஆங்கில மொழி தேவையானது. தாய்மொழியில் புத்தகங்கள் இருக்க வேண்டும். ஏனைய மொழிகளிலுள்ள சிறந்த புத்தகங்களை தாய் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மொழிகளும் அறிவியல் யுகத்திற்கு ஈடு கொடுத்து தம்மைப் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். உலகில் 6000 மொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் ஆறே மொழிகள் தான் உலகிற்கு நாகரிகம் சொல்லிக் கொடுத்த மொழிகள். அவற்றில் நம் தமிழ் மொழியானது பயன்பாட்டிற்குரிய வாழ்க்கை மொழியாகவும், கல்வி கற்கின்ற ஊடகமாகவும் நமக்கு வாய்த்திருப்பது பெருமைக்குரிய விடயம். ஆனால் அதனை இன்னும் தமிழர்களே முழுமையாக உணரவில்லை. இன்றும் தமிழ் மொழியின் பெருமை குன்றாமலிருப்பதற்குஎ தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களே காரணம். தமிழ் மொழியில் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் மொழி மூலமான கல்வியை பிள்ளைக்கு வழங்க வேண்டும்.

ஆங்கில மொழியில் தேவையை மக்கள் உணருகின்ற அதே சமயம் ஆங்கில மொழியை ஒரு நாகரிகமாகப் பார்க்கின்ற போர்வைக்குள்ளிருந்து வெளிவர வேண்டும். இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. அதற்கு ஆங்கில மொழி மூலமான கல்வியை அவசியம் என்று கூறமுடியாது. ஆங்கில மொழி அறிவே அவசியமானது.

இன்றைய உலகில் ஆங்கில மொழி சமூக மேன்மைக்கான ஒரு அடையாளமாகி விட்டது. இதனால் ஆங்கிலத்தில் உரையாடுவது தம்மை மேல்தட்டு மக்களாக காட்டிக்கொள்வதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறான நிலமை தொடர்ந்தால் தமிழ் மொழியும் கிரேக்கம், இலத்தீன், வடமொழி போன்ற மொழிகளைப் போல் வழக்கொழிந்து விடும் என்பதில் ஐயமில்லை.

சு.விசாகன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit