கர்னாடகாவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறிச் செயல்களை மிகுவாகக் கண்டிக்கிறோம் – கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க இந்தியமாநில-, நடுவன் அரசுகளை வேண்டுகிறோம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்ப மில்லை

ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றுத் தனிப்பெருமை கொண்டது எங்கள் தமிழினம். எமது பண்பாடு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட என்று தமிழ்ச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. உலகில் மிகப் பழைய இனம் எமது தமிழினமாகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர்களாகிய நாங்கள் பரவி வாழ்ந்தாலும், தமிழர்களது தாயகத்தின் தாயகமாகத் திருவிளங்கத் திகழ்வது தமிழ்நாடு ஆகும். முப்பெரும் தமிழ்ப் பேரரசுகள் காலத்தில் எங்கள் தமிழ் அரியணை ஓச்சியது முதல் தமிழ்ப்பேரரசுகளின் வீழ்ச்சிவரை, காலனி ஆதிக்க காலம் முதல் விடுதலை பெற்றது வரை, இலங்கையில் ஏற்பட்ட இனப்போருக்கு முன்னரும் பின்னரும் என பெருமளவு தமிழர்கள் தாயகத்தை விட்டு வெளியில் வாழ்ந்து வருகிறோம். அதேநேரம் பாரத நாடு சுதந்திரம் பெற்று இந்தியாவானதும், மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழர்கள் தம் தொன்மை நாட்டை பிறமொழி மாநிலத்தில் இழந்ததும், தமிழ்நாட்டின் வரலாறாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எம் தொன்மைத் தமிழர்கள் தங்கள் அறிவாற்றலால், கலை உணர்ச்சியால் இன்றைய உலக நவீன வல்லுனர்கள் வியக்கும் பல் அற்புதங்களை தமிழ் அரசாண்ட காலத்தில் நாட்டிச் சென்றிருக்கிறார்கள். அவ்வகையில் காவேரியில் தமிழ் மன்னன் கரிகாலன் கட்டிய கல் அணையும் அதில் ஒன்று!

உலகில் அண்ணளவாக பத்துக்கோடி தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. எங்கள் தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழர் தாயக நிலப்பபரப்பில் வாழ்ந்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தும் பிற இனவழித்தோன்றல் ஆயினும் அவர்களும் தமிழர்களே. தமிழ் மக்கள் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் மற்றும் பிறமொழிப் பேரரசுகளின் ஆளுகைகளின் கீழேயே ஆட்சி செய்யப்பட்டு வந்துதிருக்கிறோம். இப்போது நாம் வாழும் நாடுகளில் நிலவும் அரசியல் அமைப்பிற்கு அமைய வாழ்ந்துவருகிறோம். இதுவே எங்கள் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துள்ளது.

எமது தமிழ் மொழியில் இருந்து பல மொழிகள் இனங்கள் தோன்றிய போதும், பழந்தமிழர் பாரதக் கண்டத்தின் பழங்குடிகள் எனும் கருத்துக்கோள் வரலாற்றால் எடுத்து இயம்பப்பட்டபோதும், தமிழினம் உலகில் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாக அறியப்பட்டபோதும், எங்கள் இனத்தில் இருந்து தோன்றியவர்களால், எங்கள் அண்டை, அயல் இனத்தவர்களால், நாட்டவர்களால் நாங்கள் உரிமை இழக்கும் சூழல் பலதடவை தமிழர்கள் வரலாற்றில் சுழற்சி முறையில் தோன்றிக்கொண்டே உள்ளது. இது தமிழர்கள் யாவருக்கும் பெரும் மனச்சுமையினை ஏற்படுத்தி, மாறாத வடுவாகப் பதிந்துள்ளது.

தமிழர்கள் ஆகிய நாங்கள் இன அடிப்படையிலும், மொழி, பண்பாட்டு அடிப்படையிலும் ஒன்றாக இருந்தபோதும், வாழும் நாடுகளின் அரசியல் உரிமைகளால் வேறுபடுத்தப்பட்டு வாழ்கிறோம். உலகில் எத்திசையிலும் எம் தமிழ் இனம் இன்னல்கள் எதிர்கொண்ட காலங்களில், தாய்த் தமிழகம் உணர்வால் துடிதுடித்து பல் போராட்டங்களை, தங்கள் அரசியல் உரிமைக்கு மேற்பட்டு ஆற்றி வருகிறார்கள். ஈழத்தில் இன்னல்களை எதிர்கொண்டு நாங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகையில் எம்மைத் தாங்கும் வேராகத் தமிழீழத்தையும், விழுதாகத் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களையும் எண்ணி வாழ்ந்து வருகிறோம். எங்கள் தமிழ்மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் போது உலகின் அனைத்துத் திசைகளில் இருந்தும் தமிழ்மக்கள் துடித்திருக்கிறார்கள், தமிழர்கள் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். இதில் கர்னாடகா வாழ் தமிழ்மக்களின் குரல் ஈழத் தமிழ்மக்களுக்காக என்றைக்கும் உரத்து ஒலித்த உறவுக்குரலாகும். இம்மக்கள் தமது சொந்த நாட்டுக்குள் அண்டைய மாநிலத்தில் வேற்றுநாட்டவர்கள் போல் நடாத்தப்படுவதைக் கண்டு உள்ளம் நடுங்க, பெரும் துன்பத்தை உணர்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு உரிய அளவு தண்ணீர், காவிரி அணையில் இருந்து திறக்கப்படவேண்டும் எனும் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பெறுபேற்றால் கர்னாடகாவில் எம் இனத்தவர்களுக்கு கன்னட இனவெறியர்களால் ஏற்பட்ட பேரனர்த்தம் கண்டு ஆறாத் துயர் உற்றுள்ளோம். எதிரிகளைத் தாக்குவதுபோல, உள்நாட்டுக்குள் தான் பிறந்த இனத்தை தாக்கும் வெறிச்செயல் கண்டு எங்கள் உள்ளம் கனக்கிறோம்.

· கர்னாடகா அரசையும், தமிழ்நாடு அரசையும் மேலும் இந்திய நடுவன் அரசினையும் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் பெயரால், தமிழ்நாட்டிற்கு உரிய நீதியை நிலைநாட்டவும், எம் தமிழ் உறவுகளுக்கு உரிய பாதுகாப்பினை அளித்து, அவர்களுக்கு இனவெறிச் செயலால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு உரிய ஈடுவழங்கி இயல்பு வாழ்க்கைக்கு உரிய வழிசெய்து கொடுக்கவும் இத்தால் வேண்டுகிறோம்.

தொடர்ந்தும் கர்னாடகாவில் தமிழர்களுக்கு எதிராக இனவெறிச் செயல்கள் மேற்கொள்ளப்படுமாயின், உலகின் அரங்கிற்கு எடுத்துச் செல்லும் பணிகளை அனைத்து ஈழத்தமிழ்ச் சமூக அமைப்புக்களையும் மேற்கொள்ளுமாறு இத்தால் கோரிக்கை விடுக்கிறோம்.

ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து வாழும் நாங்கள், தமிழர்களுக்கு என இறையாண்மை உள்ள அரசு ஒன்று இருக்குமானால், தமிழர்களுக்கு உலகில் எங்கும் இன்னல் நேராது காக்கப்படுவர் என்று கனத்த உள்ளத்துடன் இங்கு நினைவில் கொள்கிறோம்.

இப்படிக்கு:
சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழ்மக்களின் பெயரால்
சைவத் தமிழ்ச் சங்கம், சூரிச், சுவிற்சர்லாந்து
சைவநெறிக்கூடம், பேர்ன், சுவிற்சர்லாந்து

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*