அமெரிக்கா – ஒரு உள்நாட்டு யுத்தத்தை நோக்கி? -சண் தவராஜா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

‘அவலத்தைத் தந்தவனுக்கே அவலத்தைத் திருப்பித் தர வேண்டும்” என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகம். வன்முறையை வலியுறுத்தும் வாசகமாக இது உள்ள போதிலும் பாதிக்கப்பட்டவனின் வலியை உணர்த்துகின்ற ஒன்றாக இது இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது தமிழில் உள்ள மிகப் பிரபலமான சொலவடை. ‘குட்டக் குட்டக் குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்” என்பது தமிழில் உள்ள பிரபலமான பழமொழிகளுள் ஒன்று. ‘ஒரு தாக்கத்திற்கு எதிரான மறு தாக்கம் இயல்பானது” என்பது விஞ்ஞானி நியூட்டனின் விதிகளுள் ஒன்று.

எதற்காக இந்தப் பலமான பீடிகை என வாசகர்கள் ஒரு கணம் யோசிக்கக் கூடும். அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடொன்றில் காவல்துறையைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைக்கையில் என் மனதில் இயல்பாக எழுந்தவையே மேற்கூறிய மேற்கோள்கள்.

நவீன அமெரிக்காவை இன்றைய உலக வல்லரசு நிலைக்கு உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் அங்கே வாழும் கறுப்பினத்தவர்கள் எனக் கூறினால் அது மிகையாகாது. சங்கிலியால் பிணைக்கப்பட்டு கப்பல்களில் மிருகங்களைப் போல் ஏற்றப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவிற்குக் கொண்டுவரப் பட்டவர்களாக அவர்கள் இருந்த போதிலும், தாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்டை வளப்படுத்த அவர்கள் தவறவில்லை.

1555 ஆம் ஆண்டில் ஆரம்பமான அடிமை வர்த்தகம் 1865 இல் அடிமை முறைமை சட்ட ரீதியாக ஒழிக்கப்படும் வரை நீடித்தது. மேற்கு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா, கினி பிசு, கினி, சியாரா லியோன், லைபீரியா, கானா, ரோகோ, பெனின், கமருன், கபுன், அங்கோலா மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக், தான்சானியா, மடகாஸ்கர் என்பவற்றில் இருந்து ஆயிரக் கணக்கான கறுப்பினத்தவர்கள் அடிமைகளாகவும், போர்க் கைதிகளாகவும் கொண்டு வரப்பட்டு அமெரிக்கப் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் கூலிகளாக, கொத்தடிமைகளாகப் பயன் படுத்தப்பட்டார்கள்.

எஜமானர்களின் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் மனிதர்களாக நடாத்தப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க அடிமை முறைமை உத்தியோகபூர்வமாக ஒழிக்கப்பட்டு இரண்டரை நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அவர்கள் சக மனிதர்களாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையே அமெரிக்காவில் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் என அழைக்கப்படுபவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை வெளிப்படுத்தி நிற்கிறது.

பிரதான ஊடகங்கள் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல்களை அலட்சியம் செய்துவந்த நிலையில் அண்மைக்கால சமூக ஊடகங்களின் எழுச்சி காரணமாக இத்தகைய அடக்குமுறைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவிலும், அமெரிக்காவிற்கு வெளியிலும் மிகப் பெரிய பேசுபொருளாகவும், மனித உரிமை அமைப்புக்களின் கரிசனைக்கு உரிய விடயமாகவும் மாறியுள்ள இத்தகைய அடக்குமுறை தற்போது பல்வேறு ஊடகங்களாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் பதிவுக்கு இலக்காகி வருகின்றது. அமெரிக்க காவல்துறையிடம் இதுபோன்ற பதிவுகளோ, தரவுகளோ இல்லை என்ற செய்தி அம்பலமாகி உள்ள நிலையில், த கார்டியன் பத்திரிகை காவல்துறையின் அடக்குமுறை தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

Shan

இந்தப் பத்திரிகை திரட்டியுள்ள தகவல்களின் படி 2015 ஆம் ஆண்டில் சட்டத்தை அமுல்படுத்தும் நபர்களின் கரங்களினால் 1,134 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வேறு விதத்தில் பார்த்தால் தினமும் மூவர் வீதம் கொல்லப்படுகின்றனர். இதில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட வெள்ளையின இளைஞர்களோடு ஒப்பிடுகையில் 9 வீதம் அதிகமான கறுப்பின இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

15 முதல் 34 வயதான கறுப்பின இளைஞர்கள் அமெரிக்க மொத்த மக்கட்தொகையில் 2 வீதமாக உள்ள நிலையில் கால்துறையினரால் கொல்லப்படுவோரில் 15 வீதமானோர் கறுப்பின இளைஞர்களாக உள்ளார்கள் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. இறப்பு தொடர்பான அரச புள்ளி விபரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மரணமடையும் 65 கறுப்பர்களில் ஒருவர் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்படுவதும் கண்டறியப் பட்டுள்ளது.

‘கறுப்பர்கள் சோம்பேறிகள், அவர்கள் வேலைகளுக்குச் செல்வதில்லை. அரச உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அவர்கள் சட்டங்களை மதித்து நடப்பதில்லை. குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றில் பெரிதும் ஈடுபடுகிறார்கள்” என ஆயிரம் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டாலும் கூட இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவர்களை இந்த நிலையில் வைத்திருக்கும் அரசாங்கமே அன்றி சம்பந்தப்பட்ட நபர்களல்ல. இத்தனைக்கும் கடந்த எட்டு வருடங்களாக கறுப்பினத்தவர் ஒருவரே அமெரிக்காவின் அரசுத் தலைவராக இருந்து வருகின்ற போதிலும் கறுப்பின மக்களின் வாழ்வியல் மாறாமலேயே இருந்து வருகின்றமை மிகப்பெரிய கொடுமை.

யூலை 9 ஆம் திகதி டல்லாசில் நடைபெற்ற சம்பவம் காவல்துறையின் அடக்குமுறைக்கு தற்காலிகமாகவேனும் முற்றுப்புள்ளி வைக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய ஒரு விடயம். கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் கால்துறை உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி கொண்டு நடாத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதுடன் காவல்துறையைச் சேர்ந்த ஏழு பேரும், இரண்டு பொதுமக்களும் காயங்களுக்கும் இலக்காகினர். இந்தச் சம்பவமானது அமெரிக்காவில் நிலவும் கால்துறையினரின் கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறை களையப்பட வேண்டியதன் அவசியத்தை பாரதூரமான விவாதப் பொருளாக மாற்றியிருக்கிறது.

மரணமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் நினைவு நிகழ்வில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, முன்னாள் அரசுத் தலைவர் ஜோர்ஜ் பு~; ஆகியோர் உட்படப் பல பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுவதைப் போன்று குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியமை பற்றிய கவலை இந்நிகழ்வில் உரையாற்றிய பலரிடமும் வெளிப்பட்டமையைக் காண முடிந்தது.

அடிமை முறைமை ஒழிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட மற்றைய சமூகத்திற்கு நிகராக கறுப்பின மக்களால் வாழ முடியவில்லை என்ற நிதர்சனம் ‘மனித உரிமைகளின் உலகளாவிய காவலனா”கத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்குத் தலைகுனிவான விடயம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதேவேளை, கறுப்பினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களை – அவர்கள் முன்னாள் இராணுவ வீரர்களாக இருந்தாலும் கூட – சுட்டுக் கொன்றே ஆக வேண்டும் என்ற பாணியில் தொடர்ந்தும் விடயங்களை அணுக அமெரிக்கக் காவல்துறை முயலுமாக இருந்தால் அமெரிக்காவின் எதிர்காலம் உள்நாட்டு யுத்தத்தை நோக்கிச் செல்லக் கூடிய ஒன்றாகவே அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*