என் தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்: தனுஷ் வேண்டுகோள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

dhanush

இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம் என நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்து, பிரபு சாலமன் டைரக்டு செய்துள்ள படம், ‘தொடரி.’ இதில், தனுஷ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவில், நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அவரை பார்த்ததும், ‘‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க’’ என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். விழாவில் பேசிய சிலரும் தனுசை, ‘‘இளைய சூப்பர் ஸ்டார்’’ என்று குறிப்பிட்டார்கள். அதுபற்றி குறிப்பிட்டு தனுஷ் பேசும்போது கூறியதாவது:-

‘‘இங்கே என் தகுதிக்கு மீறி என்னை சிலர் பாராட்டி பேசினார்கள். அப்படி பேச வேண்டாம். எனக்கு கூச்சமாக இருக்கிறது. என் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்கள் அப்படி பேசுவதாக எடுத்துக் கொள்கிறேன். அவர்களின் அன்புக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நான், ‘டூப்’ போடாமல் நடித்திருப்பதாகவும், ஓடும் ரெயிலில் கூரை மீது ஏறி நின்று அதிக ‘ரிஸ்க்’ எடுத்து சண்டை போட்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். அதற்கான பாராட்டுகள் முழுவதும் டைரக்டர் பிரபு சாலமனுக்குத்தான் சேர வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, என் கை எலும்பு முறிந்து விட்டது. அதில் இருந்து உயரமான இடங்களில் ஏறி நின்றால், என் தலை ‘கிர்’ என்று சுற்றும். இந்த படத்தில், ஓடும் ரெயில் கூரை மீது ஏறி நின்று சண்டை போட வேண்டும் என்றதும், தலை சுற்றுமே என்று நினைத்தேன்.

அதை டைரக்டர் பிரபு சாலமன் புரிந்து கொண்டு ரெயிலின் கூரை மீது முதலில் அவர் ஏறி நின்று, அந்த இடம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பார். அதன் பிறகே என்னை மேலே வரச் சொல்வார். என்னை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். எனவே பாராட்டுகள் முழுவதும் அவருக்கும், ஸ்டண்ட் கலைஞர்களுக்கும்தான் பொருந்தும்.

இந்த படத்துக்காக முதன்முதலாக பிரபு சாலமன் என்னை சந்தித்தபோது, அவரிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால், ‘‘எப்ப கால்ஷீட் வேண்டும்?’’ என்று கேட்டேன். இப்போது படம் முடிந்து விட்டது. என் நம்பிக்கையை அவர் காப்பாற்றி விட்டார். படம் நன்றாக வந்திருக்கிறது. அதேபோல் சத்யஜோதி பிலிம்ஸ் எப்போது ‘கால்ஷீட்’ கேட்டாலும், நடித்துக் கொடுப்பேன்.

ரசிகர்கள் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் பெருமைப்படுகிற அளவுக்கு நான் கடுமையாக உழைப்பேன். ரசிகர்களும் நான் பெருமைப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா-அப்பாவுக்கு நல்ல மகனாக, மனைவிக்கு நல்ல கணவராக, குழந்தைக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும். குடும்பம்தான் முக்கியம்.’’

இவ்வாறு தனுஷ் பேசினார்.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், பிலிம்சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர்கள் ‘கில்டு’ செயலாளர் ஜாக்குவார் தங்கம், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வராகவன், பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆர்.கண்ணன், நடிகர்கள் சின்னி ஜெயந்த், தம்பிராமய்யா, ‘கும்கி’ அஸ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக அனைவரையும் பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் வரவேற்று பேசினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit