இரும்பைக் கண்டுபிடித்தது தமிழர்களே!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ir

உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக இருப்பவை, இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தங்க நாணயங்களோ, ஆபரணங்களோ, வெண் கலச் சிலைகளோ, முதுமக்கள் தாழிகளோ, ஓலைச்சுவடிகளோ அல்ல.

மண்ணுக்குள் புதைந்து கிடந்து, ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் இரும்புப் பொருட்கள் தான், தமிழ் இனத்தின் அந்தப் பெருமையை உலகுக்கே உயர்த்திக் காட்டும் அடையாளச் சின்னங் களாகத் திகழ்கின்றன.

ஆதிகால மக்கள், முதலில் தங்கள் ஆயுதமாக கற்களைப் பயன்படுத்தியதால், அவர்களது காலம் பழைய கற்காலம் எனவும், பின்னர் அந்தக் கற்களையே சீராக்கி பயன்படுத்தியதால், புதிய கற்காலத்திற்கு அவர்கள் முன்னேறியதாகவும் காலச்சுவட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய கற்கால மனிதன் மேலும் முன்னேறி, இயற்கையாகக் கிடைத்த கனிமங்களை உருக்கி, அதன் மூலம் உலோகத்தைக் கண்டுபிடித்ததே, நாகரிக உலகில் அவன் எடுத்து வைத்த முக்கியமான அடி என வரலாற்று ஆசிரியர்கள் போற்றுகிறார்கள்.

புதிய கற்காலத்தில் இருந்து, உலோக காலத்திற்கு முன்னேறியது மனித வாழ்வின் மகோன்னதமான மாற்றம் ஆகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது, உலகின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு உலோகமும் ஏதோ ஒரு காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் தங்கம், செம்பு, வெண்கலம், இரும்பு போன்றவை படிப்படியாக மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

ஆபரணங்கள், நாணயங்கள் போன்றவை செய்யப்பட்டதாலும், பொருளாதார பண்டமாற்றுக்கு பயன்பட்டதாலும், இந்த உலோகங்களிலேயே தங்கம் இன்றளவும் முதல் இடம் பிடித்து இருக்கிறது.

மக்களின் அன்றாட தேவைக்கான பண்டபாத்திரங்கள் செய்வதற்கும், கலை ஆர்வத்திற்கான வடிகாலாக, வேலைப்பாடு மிக்க உருவச்சிலைகளை உருவாக்குவதற்கும் செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்கள் பயன்பட்டதால், அவை இரண்டாம் இடம் பிடித்தன.

ஆனால், மனிதன் கண்டுபிடித்த உலோகங்களிலேயே உன்னத
மானதும், நாகரிக முன்னேற்றத்திற்கு அடிகோலியதும் இரும்பு உலோகம் மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

இன்றியமையாத உலோகமாக ஆகிவிட்ட இரும்பைக் கண்டுபிடித்ததன் மூலம், உணவைத் தேடுவதற்கு பயன்படும் வேட்டைக் கருவிகள், எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கான ஆயுதங்கள் ஆகியவற்றை மனிதன் முதலில் உருவாக்கினான்.

பின்னர் விவசாயத்தொழில், நெசவுத்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற முக்கியத் தேவைகளுக்கான கருவிகள் செய்ய இரும்பு பயன்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் இரும்பின் பயன்பாடு மேலும் விரிந்து பரந்துவிட்டது.

இருப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கான கட்டுமானங்கள், பாலங்கள், விவசாயம் செய்வதற்கான கருவிகள், கடல் வாணிபத்திற்கான கப்பல்கள் மற்றும் புகைவண்டிகள், ஆகாய விமானங்கள், பல்வேறு கனரக தொழில்களை மேற்கொள்வதற்கான கருவிகள் என எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவையாக இரும்பு உலோகம் ஆகிவிட்டது.

இரும்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இன்றளவும் அனைத்து துறைகளிலும் இரும்பு அதிக அளவில் பயன்படுவதால், மனிதன் கண்டுபிடித்த உலோகங்களிலேயே இரும்பே பிரதானம் என கொண்டாடப்படுகிறது.

எனவே இரும்பைக் கண்டுபிடித்த இனமே, உலக நாகரிகத்தின் முன்னோடிகள் ஆனார்கள் என்பதில் வியப்பு இல்லை.

அத்தகைய இரும்பை முதன் முதலாகக் கண்டுபிடித்த இனம் தமிழ் இனமே என்பதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூரில் கிடைத்தன.

இரும்பு என்ற உலோகம் பூமிக்கு அடியில் பாளம், பாளமாகக் கிடைக்கும் பொருள் அல்ல. நிலத்தின் மேற்பரப்பிலும், மலைக்குன்றுகளிலும் இரும்பு தனிமங்கள் கிடைக்கின்றன. அவற்றை சேகரித்து அதனுடன் கலந்துள்ள மண் போன்றவற்றை நீக்குவார்கள்.

பின்னர் அதனை கரியுடன் சேர்த்து காய்ச்சும்போது இரும்பு உலோகம் கிடைக்கிறது. இதன் காரணமாக அந்த உலோகத்தில் கரி கலந்து இருக்கும்.

இரும்பில் கரி எந்த அளவு கலந்து இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுவதன் மூலம் அவை வார்ப்பு இரும்பு, தேனிரும்பு, எக்கு என வகைப்படுத்தப்படுகின்றன.

இந்த அறிவியலை அந்தக்கால தமிழர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள்.

பழங்கால மனிதர்கள், தனியாக அடுப்புகளை பயன்படுத்தவில்லை. மண்ணைக் குவித்து வைத்து அதன் நடுவே குழிபோல செய்து அதில் நெருப்பை உண்டாக்கி, இறைச்சி போன்றவற்றை அவர்கள் சமைத்து இருக்க வேண்டும்.

அவ்வாறு சமையல் செய்தபோது அந்த மண்ணில் கலந்து இருந்த இரும்புத் தாது, வெப்பம் காரணமாக உருகி கெட்டியாகி இருக்கலாம்.

சமையல் முடிந்த பிறகு, அங்கே கிடந்த கட்டியான அந்தப் பொருள் எவ்வாறு ஏற்பட்டு இருக்கும் என்று ஆய்ந்து பார்த்து அதன் வழியாக இரும்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இரும்புக் கனிமங்களை கரியுடன் சேர்த்து காய்ச்சுவதற்கு அதிக வெப்பம் தேவை. தொடக்க காலத்தில் சிறிய உலைகளை பயன்படுத்தியதால், மிகக் குறைந்த அளவிலான இரும்பை மட்டுமே அவர்களால் உருவாக்க முடிந்தது.

பின்னர் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்ட உலைகளை நிறுவி, அதனுடன் தோல் துருத்திகளைப் பொருத்தி, காற்றைச் செலுத்துவதன் மூலம் அதிக வெப்பம் ஏற்படுத்தக் கற்றுக் கொண்டார்கள்.

இத்தகைய உலைகளின் மூலம் அதிக அளவில் இரும்பு தயாரித்தார்கள்.

அவ்வாறு தயாரித்த இரும்பை பின்னர் சூடாக்கி அவற்றை தட்டையாகவோ, கம்பியாகவோ மாற்ற முடியும் என்பதையும் தெரிந்து கொண்ட அவர்கள், அதனைக் கொண்டு தங்களுக்குத் தேவையான கருவிகளைச் செய்தார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தத் தொழில் நுட்பத்தை அறிந்த தமிழர்கள், தாங்கள் செய்த இரும்புக் கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்தார்கள் – பருத்தி சாகுபடி செய்து, பருத்தியை நூலாக்கி துணிகள் செய்யும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்கள் – கப்பல் கட்டும் தொழிலை கற்றுக்கொண்டு கப்பல்களை செய்து கடல் கடந்து வாணிபம் செய்தார்கள்.

ஆனால் அதே காலகட்டத்தில் உலகின் மற்ற பகுதியில் வாழ்ந்த மக்கள், புதிய கற்காலத்தைத் தாண்டி, செம்புக்காலம், வெண்கலக் காலம் ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னேறி இருந்தனர். அவர்களுக்கு இரும்பு என்றால் என்ன என்றே தெரியாத நிலை இருந்தது.

அந்த சமயத்தில் தமிழர்கள், இரும்பைக் கண்டுபிடித்ததன் மூலம், புதிய கற்காலத்தைத் தாண்டி நேரடியாக இரும்புக் காலத்துக்கு வந்து விட்டார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அப்போதைய தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தார்கள். இதன் காரணமாக இரும்பை எவ்வாறு தயாரிப்பது என்ற அறிவியல், இங்கு இருந்து மற்ற நாடுகளுக்கு அறிமுகம் ஆனதாகவும் வரலாறு கூறுகிறது.

1837–ம் ஆண்டு ராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் ஜே.எம். ஹீத் என்ற அறிஞர் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் அவர், ‘தென் இந்தியாவில் செய்யப்பட்ட எக்குப் பொருட்களே எகிப்துக்கும் ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆதிச்சநல்லூரில் முதன் முதலாக ஆய்வு நடத்திய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகர், பின்னர் வந்த பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் லூயிஸ் லாப்பிக் ஆகியோர், இங்கு இருந்து இரும்பினால் செய்யப்பட்ட மண் வெட்டி, கொழு போன்ற முக்கியமான பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள்.

ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தியவர்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா, அங்கு இருந்து மேலும் பல இரும்புப் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்தார்.

அத்துடன் அவர், ஆதிச்சநல்லூரில் இயங்கிய இரும்பு காய்ச்சும் உலைகள்
பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறார்.

இதன் காரணமாகவே, தமிழர்கள் தான் இரும்பை முதலில் கண்டுபிடித்தவர்கள் என்ற மகத்தான உண்மை உலகுக்குத் தெரிய வந்தது.

ஆதிச்சநல்லூருக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உலைகள் இருந்தன என்பதையும் அலெக்சாண்டர் ரியா தெரிவித்து இருக்கிறார்.

அந்த இரும்பு உலைகள் இயங்கிய இடங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்ற ருசிகரமான தகவலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit