ஏழாண்டு போனாலும் எழுபிறவிகள் ஆனாலும்…..

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆறாண்டு கழிந்து ஏழாண்டு ஆச்சுது ஆண்டாண்டுதோறும்

நினைவுகள் வந்து வந்து இதயம் துளைக்குது
மாவீரங்களும் வெற்றித் தோள்களும்
புதிய புறநானூற்று வீரங்களைப் பிரசவித்த
என் தேசத்து மக்களுமான ஆண்டவர் நினைவுகள்
கண்முன்னே நிழற்படமாய் நீண்டு விரிகிறது
கல்லெறிந்த குளம் போல் கண்களும் நெஞ்சமும்
கலங்கித் ததும்புகிறன.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முடிவில்லாமல்
ஆண்டுகள் தள்ளி;த் தள்ளி நீண்டு கொண்டே செல்கிறது
காலங்கள் சுழலக் காட்சிகள் மாறுகிறது
ஆட்சி மாறினாலும் அதிகாரங்கள் அப்படியே தான்
முள்ளிவாய்க்கால் படுகொலையே முடிவில்லாமல் சென்றால்
இனப்பிரச்சினை தீர இன்னும் ஈரைம்பது வருடமாகுமோ?
அதைக்காண நாம் இருக்க மாட்டோம்!

அடக்கு முறை, வண்புணர்வு எல்லைகளைத் தாண்டுது
சுட்டுவிரல் நீளசைவு அன்று தட்டி அடக்கியது
கட்டுக் கோப்பாயிருந்த தமிழினக் கட்சிகளுக்குள்ளும்
சலசலப்பு! அவர்களுக்குள்ளும் இல்லை ஒற்றுமை உணர்வு!
புலம் பெயர்ந்து வாழும் இளையோரே! இளைய புத்தி ஜீவிகளே!
உங்களை நம்பித்தான் இந்த அஞ்சலோட்டத்தின் கம்பு
2008இல் தரபட்டாயிற்று. எம் இனம் காக்கும் இராஜதந்திரிகள்
நீங்களே! பன்மொழியாளர்களே! அச்சமின்றி ஓடி வெற்றி வாகை சூடுங்கள்

தேர்க்காலில் தெரியாமல் நசிபட்டு பசுக்கன்று
ஒன்று இறந்தற்கே தன் மகனையும் அதே போலப்
பலியிட்டு பசுவிற்குக்கூட நீதி பகன்ற சோழர்
பரம்பரையில் வந்தது ஈழத்தமிழினம். ஊர் உலகெல்லாம்
ஒன்று கூடி லெட்சம் தமிழரைக் கொன்று விட்டு
முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது எத்தனை நாளைக்கு?

முத்து முத்தான குழந்தைகள் கூட கொத்துக்
கொத்தாய் கொல்லப்பட்டுப் பிணமாய் விழும் வரை
பார்த்திருந்த ஜ.நா. மன்றமே! உன்னிடம் நீதி கேட்பது
காட்டுப் புலியைக் கூட்டி வந்து எமது வீட்டுக்கு
காவல் வைப்பதற்கு ஒப்பானது

பாதுகாப்பான இடம் வாருங்கள் என அழைத்து விட்டு
சகதிச் சேற்றுக்குள் தள்ளிக் கொன்ற கொடூரர்கள்
எறிகணைகளை அள்ளிக் கொட்டிய நீசர்கள்
ஆலங்கட்டி மழை விழுந்தாலே உயிர் வாதைப்படும்
ஆளைக் கொல்லும் எறிகணையை மழையாய்ப் பொழிந்து
சின்னா பின்னமாக்கிய படுபாவிகளைக் கொண்ட
உள்நாட்டிலேயே விசாரணை என்பது வேடிக்கையாக இல்லையா?

ஐ.நா.மன்றமே! உன் நீலக்கண்ணாடிக்
கட்டடத்தின் மீது கடுகெடுத்து எறிந்தாலே
கடுகதியில் நடவடிக்கை எடுப்பாயே!
நீ பார்த்துக் கொண்டிருக்கத்தானே ஈழமெனும்
எங்கள் கண்ணாடிப் பளிங்கு மாளிகை மீது
வெடி குண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும்
அடித்து நொறுக்கி எமது மாளிகைத் தூண்களைச்
துவம்சம் செய்தார்கள். நீங்கள் செய்தது மாபெரும் தவறு

கூட்டாகச் சேர்ந்து இனப்படுகொலை நடாத்தி விட்டு
கூட்டம் கூட்டமாய் வந்து குசலம் விசாரித்தால்
செய்த குற்றம் இல்லையென்றாகி விடுமா?
தாய்க்கோழி பார்த்திருக்க குஞ்சுகளை வெருகுப்
பூனைகள் தூக்கிச் செல்லத் துடிதுடித்தாரே
அந்த ரணவலி இன்னும் ஆறவில்லை. அதை
ஆற்ற யாரும் முன்வரவில்லை.

தெற்கில் இயங்கும் அரசியல் கட்சிகளான பொதுபலசேனா
மக்கள் முன்னணி போன்றன வடக்கிலும் கிழக்கிலும்
அலுவலகங்கள் திறப்பதற்கு முன், போரினால் பாதிப்புற்ற
பொதுசனங்களின் உள்ளங்களைத் திறந்து பாருங்கள்
ஆண்டுகள் ஏழாச்சு! ஆண்ட இனம் பாழாச்சு! ஆற்றொணாத்
துயர் சுமந்து ஆற்றுவாரின்றித் தேற்றுவாரின்றி மக்கள்
உள்ளமெல்லாம் புண்ணாச்சு! அதை விடுத்து உங்கள்
அலுவலகங்கள் எங்கள் மண்ணில் எதற்கு?

போர் மரபு அறியாது யார் வலியும் புரியாது
நடத்தப்பட்ட மரபை மீறிய போர் ஒரு நாட்டின் மீது
படையெடுக்கு முன் அந்நாட்டலுள்ள அறவோர்கள்
பிணியாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை பாதுகாப்புத்
தேடுமாறு முன்னறிவிப்புச் செய்ய வேண்டும்.
பாதுகாப்பான இடம் வாருங்கள் என்று நம்பி
வந்தவர் மீது வெந்தணலை அள்ளிக் கொட்டிய
போர் மரபு தெரியாத படுபாவிகள்

அந்த அறிவிப்பை விளங்கி வெளிச் செல்லாத
ஆநிரைகளை இரவோடிரவாக வலிந்து வெளியேற்றுதல்
செய்தீர்களா? இல்லை. எட்டு வகைச் செல்வங்களில்
ஒன்றல்லவா ஆநிரைகள். எத்தனை ஆநிரைகள்
வன்னியில் பலியாகின. ஆநிரைகளைக் கூறிட்டுக்
கொன்ற ஓநாய்க் கூட்டங்களே! தமிழ் மண்ணில்
ஆநிரைகளும் பயங்கவாதிகளா சொல்லுங்கள்?

வீடு மனை காணி நிலமென வசதியாய்
வாழ்ந்த இனம் காடு மேடு கரம்பையெல்லாம்
ஓடியோடி அலைந்தாரே! செல் விருந்தோம்பி
வருவிருந்து பார்த்திருந்தவர் ஒரு வாய் பருக்கைக்காய்
கொட்டும் எறிகணை மழைக்குள்ளும் நீண்ட வரிசையில்
தவித்ததை இந்த உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்ததே!

இன்றும் முள்ளிவாய்க்கால் மரங்கள் தோறும் மணல்
துகள்களிலும் பற்றைக் காடுகளிலும்
மரண ஓலம் அல்லவா கேட்கிறது. கால் நீட்டிக் கிடந்த
கைவீசி நடந்த இடங்கள் தோறும் ஒப்பாரி அல்லவா கேட்கிறது
ஓப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தவர்
நாளையை எண்ணிக் கலங்குவது யாரால்?

புலம் பெயர் தேசமெங்கணும் புயலென
எழுந்து போரிட்டோம். கெஞ்சினோம் குளறினோம்
மன்றாடினோம் யுத்தத்தை நிறுத்தெனக் கூக்குரலிட்டோம்
எம் மக்களைக் காப்பாற்றென இருகையேந்தினோம்
எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலானது

பாம்புகள் போல இரட்டை நாக்குக் கொண்டவர்கள்
சொல்வதொன்று செய்வதொன்று, நாங்கள் கேட்பது
இனப்படுகொலை புரிந்தவனுக்குத் தண்டனை
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி. நீங்கள் நினைத்தது
நடந்து விட்டது நாங்கள் கேட்டது ஏழாண்டாகியும்
முடங்கிக் கிடக்கிறது.

காலம் கடந்தென்றாலும் அது நடக்கும்
எறும்பூரவே கற்குழியுமென்றால் நிலமும்
புலமும் தமிழகமும் ஒன்றாகத் திரண்டால்
எல்லாமே கனியும்! இடரினும் தளரினும்
இலக்குகள் அடையும் வரை போராடுவோம்

எங்கள் இளையோர்கள் நாளை உங்கள்
மொழியில் பேசுவார்கள்! அப்பொழுது நீங்கள்
பதில் கூறியே ஆகவேண்டும். கூர்த்த மதியுடனும்
நுணுக்கரிய நுண்ணுணர்வுடனும் இலக்குத் தவறாத
நோக்குடனும் உமை நோக்கி எழுவார்கள்
அன்று நாணிக் கோணி முகம் வேர்ப்பீர்! எங்கள்
இளையோர்கள் எம்மண்ணின் எம்மக்களின் துயர் தீர்ப்பார்கள்

ஏழாண்டு போனாலும் எழு பிறவிகள் ஆனாலும்
மறப்போமா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை
காலம் சுழற்றி விடும்! மீண்டும் மறுபடியும் பிறப்போம்
ஞாலம் புகழ சிறப்பொடு எமை நாமே ஆள்வோம்

கவிஞர். மதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*