ஐ.நாவில் உரையாற்றும் சந்திரிகா அம்மையாரும் ஓர் இனப்படுகொலையாளியே : நாடுகடந்தமிழீழ அரசாங்கம் !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் மக்கள் மீது நடந்தேறிய , போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் இருந்த சந்திரகா அம்மையாரும் ஓர் இனப்படுகொலையாளிலே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (மே 11) நியூயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் ஐ.நா.மன்ற பொதுப் பேரவையில் சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திரிகா பண்டார நாயகா குமாரதுங்க அவர்கள்உரையாற்ற இருக்கின்ற நிலையிலேயே இக்கருத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக சமூகம் நோக்கி விடுத்துள்ளது.

சந்திரிகா சிறிலங்காவின் ஆட்சி பீடத்தில் இருந்த பொழுது, தமிழினத்தின் மீது கட்டவிழத்த குற்றங்களுக்கு, அவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் செய்த குற்றங்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் எந்த ஒரு தனிநபரும் மேற்கொண்ட குற்ற்ங்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளும் சட்ட பூர்வ கோட்பாட்டிற்கு உட்பட்டவராக இருக்கிறார் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அண்மையில் சர்வதேச ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், நல்லிணக்கம் இல்லை என்றால் சிறீலங்காவில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தோற்றுப் போகும் என்று சந்திரகா குமாரதுங்க அவர்கள் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் ஏற்படுவது முற்றிலும் முக்கியமானது’ என்றும் அவர் கூறியுள்ளார். இவ்விடத்தில், தமிழர்கள் முன்னோக்கி வரவும் நல்லிணக்கம் ஏற்படவும், போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் குறித்த விசாரணையில் நீதி மற்றும் பொறுப்புடைமை பற்றிய பிரச்சனைகளைக் காண்பது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமாகும் என்பதை குமாரதுங்க மெய்யாக உணரவேண்டும்.

தனது தலைமையில் நடந்த குற்றங்களுக்கு சந்திரிகா குமாரதுங்க அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். இந்த ஐ.நா. அமர்வில் அவர் பின்வரும் நேர்வுகளில் அவருக்குள்ள பங்கு குறித்து அவர் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளார்:

-1995 ஜூலை 9 அன்று, நவாலியில் செயின்ட் பீட்டர்ஸ் திருச்சபையில் நிகழ்ந்த பெருந்திரள் கொலைகள். திருச்சபையில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் மீது குறைந்தது எட்டுக் குண்டுகள் வீசப்பட்டன, அதில் 155 குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை நம்பகமான சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

– 1995 மே 22 அன்று நாகர்கோவிலில் உயர்நிலைப் பள்ளி மீது பள்ளி நடந்துகொண்டிருந்த வேளையில் குண்டுகள் வீசப்பட்டன, அப்போது 20 மாணவர்கள் இறந்து போயினர், 42 மாணவர்கள் காயமடைந்தனர்.

– அவரது ‘அமைதிக்கான போர்’ நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் குடிமக்கள் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் செல்கள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டன. அதில் 4,50,000 குடிமக்கள் பாதுகாப்பைத் தேடி ஓடிப்போயினர். ஆயுதப் படையினரால் பல பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர், 700 க்கும் மேற்பட்டோர் காணாமற்போயினர். பின்னர் ஒரு பெருந்திரளான மக்கள் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டது. இப்போது அந்தப் புதைவிடம் காணாமற்போகச் செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது.

– 1996 மே 17 அன்று தம்பிராயில் சந்தை மீது குண்டு வீசப்பட்டது. அதில் 7 குடிமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

– 2000 அக்டோபர் 25 அன்று, சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்துக்குள்ளானவர்கள் பிந்துனுவேவா மறுவாழ்வு மையத்தில் கொல்லப்பட்டனர். அந்த மையத்தில் அதிரடியாகப் புகுந்து அதிலிருந்த 28 பேரை படுகொலை செய்யவும், 48 பேரைப் படுகாயம் அடையச் செய்யவும் ஒரு சிங்களக் கும்பல் அனுமதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த 60 காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

– 1999 நவம்பர் 20 அன்று மதுவில் செயின்ட் மேரி கத்தோலிக்கத் திருச் சபையில் குண்டு வீசப்பட்டு குழந்தைகள் உட்பட 40 பேர் இறந்தனர், 60 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் அவரது காலத்தில் நிறுவப்பட்ட ஆணையங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அல்லது அதன் கண்டுபிடிப்புக்களை ஏன் வெளியிடவில்லை என்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரந்துபட்ட சர்வதேச சமூகத்திற்கும் குமாரதுங்க விளக்கமளிக்க வேண்டும்.

-1978 இல் சிறீலங்கா, அதிபரின் ஒரு சிறப்பு விசாரணை ஆணையச் சட்டத்தை இயற்றியது. விசாரணை அமைப்புக்களை நியமிக்க பரந்த நிர்வாக அதிகாரங்கள் அதற்கு அளிக்கப்பட்டன.

-1998 இலிருந்து காணாமற்போனவர்கள் பற்றிய விசாரணை மேற்கொள்வதற்கும், கடத்திச் செல்லப்பட்டவர்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகக் குற்றச் சாட்டுக்களுக்கு, புவியியல் ரீதியாக மூன்று தனித்தனி ஆணையங்களை குமாரதுங்க நிறுவினார். இருப்பினும், பின்வரும் பட்டியலில் உள்ள முக்கியமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை :

1. காணாமற்போனவர்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தீவிர வழக்கு விசாரணை மேற்கொள்ள ஆணையம் பரிந்துரைத்தது.

2. காணாமற்போவதைத் தடுப்பதற்குப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தவறிய அரசாங்க அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்குநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

3. ஒரு சுதந்திரமான மனித உரிமைகளுக்கான அரசு வழக்கறிஞர் ஒரு நிறுவனமாக நியமிக்கப்பட வேண்டும்.

இதேவேளை தமிழர்கள் மீது பாரிய குற்றங்களைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு, யூன் 7ம் நாளினை சிறிலங்காவின் தேசிய வீரர்கள் நாளாக 2000ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியிருந்தவரும் சந்திரிகா குமரதுங்கா அவர்களே ஆகும்.

ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படத் தொடங்குவதற்கு முன்னதாக, இனப்படுகொலைக் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும், மேலும் அதன்பிறகு தான் நாம் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னோக்கி வருவது பற்றி தமிழர்கள் எண்ணிப்பார்க்கத் தொடங்கமுடியும்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*