பொங்குகின்ற அலையாகி!!! “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொங்குகின்ற அலையாகி வங்கக் கடல் தாண்டியும் வரலாறு படைக்கும் என் மங்காத தமிழே உனை வணங்கி,
தரணியிலே தமிழர் நாம் தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே,
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவக்குழந்தை தானைத்தலைவன் தனைப்போற்றி,

தங்கள் முத்தான உயிர்களைத் தமிழீழத்திற்காய்
சொத்தாக்கி வித்தான சூரியப்புத்திரர்களுக்குச் சுடரேற்றி,

இருப்பே இல்லையென்றாலும் அதனை விருப்புடன் ஏற்று
நெருப்போடு நின்று களத்தில் எதிரியைச் செருக்கோடு
கருக்கிய மாவீரர்களை விருப்போடு உருக்கமாய் வணங்கி

அணைக்க எவருமின்றி நாம் அழிந்த வரலாறெண்ணிக்
கனக்கின்ற மனதோடு காத்திருக்கும் என் உறவுகளே
தாய்த்தமிழால் உங்களுக்கு என் வணக்கம்.
முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்
சொந்த மண்ணிலே வளமான வாழ்வமைத்து
வந்த வருமானத்திலே தங்கி நின்று
பந்தம் பாசம் கொண்ட சுற்றத்தோடு
சிந்தனை சிறகடிக்க வாழ்ந்து சீர்கண்டான் தமிழன்.

suganthi moorthi

புத்தர் சொன்ன தத்துவத்தைப் புரட்டியெழுதி
வித்தகராய் வாழும் தமிழரை வேரோடு அழிக்க
சித்தம் கொண்ட சிங்களம் சிரிப்போடு தமிழன்
இரத்தம் குடிக்க இனிதே விரும்பினர்.

தரப்படுத்தல் வந்து தமிழன் கல்விக்கு உலைவைக்க
வரைமுறை இன்றித் தமிழன் வதைபட
கரைகடந்த வெள்ளம் தமிழன் குருதியாய்ப் பாய
இரையாகத் தமிழன் சிங்களத்தின் முன் இயங்காது கிடந்தான்.

விழுந்த தமிழன் எழுந்தான்
எழுந்தவன் தன் எல்லைகளைத் தேடினான்
தொல்லைகள் நீங்கத் தொடுத்தான் போரை
வல்வையில் பிறந்தவன் வழியில் நடந்தான்

கொடும் அரசு சிங்களத்தின் கொட்டமது அடக்கிடவே
கடுங்கோபங் கொண்டே கரிகாலன் எழுந்தான். – தமிழர்
படுந்துயர் களைய படை நடத்தி தமிழர்
படுகொலைக்கு விடை காண விளைந்தான்

அபாரவளர்ச்சி கண்ட தமிழனை அடக்காவிடில்
அபாயம் தனக்கென உணர்ந்து மகிந்த – நாட்டை
அடகு வைத்து உலக நாடுகளின் படை கொண்டு
அரும்பி நின்ற விடுதலையைக் கிள்ளி எறியத் துணிந்திட்டான்.

அள்ளி வந்த கோரக் கொத்துக்குண்டுகளை
முள்ளிவாய்க்கால் மூலைக்குள் எறிய –தமிழனுக்குக்
கொள்ளி வைக்க காத்திருந்ததுபோல் உலகம்
தள்ளி நின்று எள்ளிநகை ஆடியது.

பருகிட விடுதலைத்தாகம் கொண்டு வாழ்ந்தவரைக்
குருதி வழிந்தோடக் கொன்றனரே…..
உருக்குலைந்த உடல்களைஇ உயிரற்ற உயிர்களை
அருகிலே மண்தோண்டி அயலவர் புதைத்தனரே…..

துண்டங்களாய் துடித்த உயிர்களின் முனகல்…
கருகிய உடலிலிருந்து காய்ந்துபோன குருதியின் வடிகால்…
சருகாக எமைச் சாய்த்தனரே என்ற தவிப்பின் தடங்கள்…
83 ல் எழுப்பிய அதே அவலக்குரலா? இல்லை அதன் எதிரொலியா?

பெற்ற பிள்ளைகள் வற்றாத வீரத்துடன் செத்து மடிய…..
உற்ற தவப்பயனால் எமைக்காத்த மறப்புதல்வர் மண்ணில் சரிய….
கொற்றம் பெற்றுத்தருவாரென்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்தோரெல்லாம் மாற்றி உடுக்க உடையின்றி மண்விட்டு நகர்ந்தனரே…..

தோற்றுவிட்டோம் நாமென்று தேம்பி அழக்கூட வழியின்றி
தேற்றுவார் எவருமின்றித் தீந்தமிழன் நந்திக்கடலை நீந்திக்கடந்தான்.
ஆற்றமுடியா அழுகையை அடக்கியபடியே
வேற்றுக்கிரக மனிதன் போல் கூண்டுக்குள் அடைபட்டான்.

தானைக்கு அண்ணனாகித் தமிழனுக்குத் தலைவனாகி
சேனை நடத்திச் செருக்கோடு வந்த
சிங்களவனை அவன் எல்லை எதுவெனக்காட்டிய வீரப்
புதல்வனை நெஞ்சமதில் இருத்தி

எஞ்சி நிற்கும் தமிழன் வாழ்வுக்காய்
தஞ்சம் கொண்ட நாட்டில் வாழும் தமிழர் நாமெல்லாம்
துஞ்சாது பணிபுரிவோம் – எம்மால் அவர்கள்
கொஞ்சமேனும் நன்றே வாழ்ந்திட வழி சமைப்போம்.

இனத்தை அழித்தஇ இருப்பைத் தொலைத்த சிங்களம்
கனத்த எம் பண்பாட்டில் கைவைக்கும் வகைதெரியாமல்
ஆளும் வர்க்கத்தின் அடிமைத்தனத்தில் மாளும் தமிழா!
நாளும் போதையில் உன்னை இழக்காது வாழும்வகை தெரிந்திடு!

மீளும் உன் வாழ்வு மீண்டுமொரு நீட்சியால்
ஆளும் உன் இனமென்று அனுதினமும் எண்ணிடு!
வாளும் கத்தியும் வாய்த்தது கோடரிக்காம்புபோல்….
தாளும் பேனாவும் தாங்கி நீ தரணியில் தக்கபணியாற்றிடு!

வாழ்ந்தது எம் வரலாறாகிப்போகாது
ஆள்வது என்ற எண்ணம் வீணாகிப்போகாது
மழுங்காத முனையுடன் உள்ள விடுதலை எனும் விருட்சத்தின்
விழுதுகளாய் நின்றிடுவோம்…..

-கவிதாயினி.சுகந்தி மூர்த்தி 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*