அந்த நெய்தல் நிலத்தில் அலைகளின் ஓசை “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்”

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kalaiparithi

அந்த நெய்தல் நிலத்தில்
அலைகளின் ஓசை மெளனித்தது
ஒப்பாரி ஓலங்கள் தான் ஆர்ப்பரித்தது…
கண்ணுக்குத் தெரிந்த திசையெல்லாம்
உருக்குலைந்த சடலங்கள்…
எண்ணவே முடியாத படியாய்
குற்றுயிராய் உடலங்கள்…
உப்புக் காற்றின் கரிசலில் கூட
இரத்த வாடை…
உரிமையை உணர்வாக்கிய
முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்
தமிழரின் உயிர் மேடை…

அந்த அலை கரை மணலில்
எங்கள் நந்திக் கடல் கரையில்
உரிமையின் உணர்வு இரத்தம் சிந்திக் கிடந்தது…
தலை துண்டிக்கிடந்த தாயின்
முலையிலே பால் குடித்தது பிள்ளை
அந்த ரண வலியும் அங்கு தான் நடந்தது…
பிஞ்சுகளும்…
நடை தளர்ந்து தள்ளாடிய
முதுமைகளும்…
தாய்மையும்…
துள்ளித் திரிந்த எங்கள்
விடலைகளும்…

தெருத் தெருவாய்
செத்துக் கிடந்தனவே
அடக்கம் செய்யக்கூடவொரு
அவகாசம் கிடைக்கவில்லை எமக்கு…
எதைக் கொண்டு இதை நாம்
விதியென்று சொல்ல…

கண் மூடிய மனச்சாட்சிகளும்
காட்சிப்படுத்தப்படாத
உண்மை மர்மங்களும்…
இங்கு தான் விழிதெறிந்து விருட்சமானது…
நீதியும்,நேயமும்
மனிதமும், தர்மமும்
இங்கு தான் மரித்துப் போனது…

kalaiparithi

நினைவுகளையே உருக வைக்கும்
நினைவுகள் அவை…
அந்த நினைவுகளை நினைக்கும் போது
கத்தியழுது கதறித் துடித்து
செத்திடலாம் போலிருக்கும்…
இழக்க ஏதுமில்லை என்ற போதும்
எங்கள் உயிர்களை மட்டும்
இழந்து கொண்டே இருந்தோம்…
பதுங்கு குழிகளுக்குள் தான்
எங்கள் வாழ்க்கை சிறைப்பட்டது…
விடியல் என்பது எமக்கு இருக்கவில்லை
சிரிப்பு எங்கள் இதய இருப்பில் இல்லை
பட்டினி கிடந்து பசியாலே இறந்தோம்
காயப்பட்டு மருந்தின்றி இறந்தோம்
உயிரிருந்தும் பிணமாய்த் தான்
நாதியற்று நாம் கிடந்தோம் – ஆனால்
உணர்வை மட்டும் இறக்காமல் பார்த்திருந்தோம்…

எங்கள் குழந்தைகள்
பள்ளிக்கூடம் போகவில்லை
பந்தடித்து விளையாடவில்லை
குண்டுச் சிதறல்களைப் பொறுக்கி
எண் கணிதம் படித்தனர்…
உலகமே அன்னையர் தினம்
கொண்டாடிக்கொண்டிருந்தது…
எங்கள் மண்ணில் அன்னையர்
கொன்றாடப்பட்டுக்கொண்டிருந்தனர்…
சிலுவைகளை சுமந்து சுமந்து
ஒவ்வொரு தமிழனும்
ஒவ்வொரு யேசு பிரானானோம்…
மரணப் படுக்கையில் கிடந்த போதும்
மனசுக்குள் புத்த பிரானை எண்ணி
மாரடித்துக் கொண்டோம்…

கனவுகள் சரிந்து கொண்டிருந்தது
சரிவுகளெல்லாம் வீழ்ச்சிகள் இல்லையென்று
உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தோம்…
ஏகாதிபத்தியங்கள் கூடி நின்று
எம்மைக் கொன்று தின்று ஏப்பம் விட்டது…
இதயத்தைக் கிழித்தெறிந்த அந்தக் கோரம்
இனத்தை இரண்டகம் கொண்டு சுட்டது…
இன்றல்ல…
என்றுமே அது ஆறாத வடு
முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்
ஒவ்வொரு தமிழரின் மூச்சிலும்
கூர் அம்பு பாய்ச்சுகிறது…
ஆண்டுகள் அலை புரண்டாலும்
அழியாத வானமாய்
அந்த நினைவுகள் நீள்கிறது…
உறவுகள் குருதி சிந்திக் கொடுத்த
ஒவ்வொரு உயிரும்
வாழ்வுரிமை எழுதிய
வரலாற்றுக் காவியமாகிறது…

நீரோடு காற்றோடு நீள்கின்ற வானோடு
நினைவோடு கனவோடு மூள்கின்ற நெருப்போடு
யாவோடு யாதுமாய் கலந்து விட்ட
முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்
தமிழீழத் தேசியத்தின் யுகம்…
காலங்கள் நீள்கிறதே என்று
கண்களால் மறந்து போகும்
காட்சியல்ல அது…
தமிழரின் மூச்சோடு கலந்திட்ட
தமிழீழக் காவியம்…
கன்னங்களை நனைக்கின்ற
கண்ணீருக்குள்
கருவாகி உருவாகி
காங்கை நெருப்பாகி
சீறும் சிறப்பாகி சிலிர்க்கிறது
அந்த விடுதலை உணர்வு…

உயிர் விலை கொடுத்து எழுதப்பட்ட
அந்த உன்னத விடுதலைத் தேடல்
தமிழீழத் தேசியப் பாடலால்
தாய்மைக் கரங்கொண்டு அரவணைக்கப்படுகிறது…
இக்காலமல்ல எக்காலமும்
முனை மழுங்காது முள்ளிவாய்க்கால் என்று
முக்தி கொண்ட நிலையோடு
தமிழீழ வேதம் சொல்கிறது…

-கலைப்பரிதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit