தாய்மொழியை நேசிக்கிற அனைவருக்கும், சைவம் தமிழ் எனும் பொருட்பட பெயர்கொண்ட யாவருக்கும் எழுதிக்கொள்ளும் திறந்த மடல் (Audio)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவில் சைவத்திருக்கோயில் ஒன்றியம் இந்த ஆண்டு 30ம் மற்றும் 01ம் திகதிகளில் நடராஜா தத்துவமும் திருமந்திரமும் எனும் சைவமாநாடு நடத்துகிறது, மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் என பிரித்தானியா சைவநெறிக்கூட அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சைவநெறிக்கூடத்தின் தமிழ் அருட்சுனையர் சென்றிருந்தார். அவருடன் சுவிற்சர்லாந்தில் 9வயதில் குடியேறி, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மாணவனாக அருட்சுனையர் பயிற்சி பெறும் அன்பரும் உடன் சென்றிருந்தார். அவர் தொலைபேசியில் இன்று எம்முடன் பகிர்ந்த செய்தியே, இந்த திறந்த மடலை எழுத வைத்திருக்கிறது.

மாநாட்டில் தமிழ் வழிபாடு தொடர்பாக ஐரோப்பாவின் முன்னணித் தொலைக்காட்சி ஒன்று செவ்வியின்போது வசந்தன் ஐயர் என்பவரிடம் தமிழ் வழிபாடு தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என வினாவியபோது அவர் கோபங்கொண்டு மாநாட்டு வரவேற்புரையில் ஒன்றியத்தின் தலைவர் ஊடாக, கேள்வி கேட்டவரைக் கண்டித்து, நாம் தமிழில் வழிபாடு நடாத்த மாட்டோம் எனக் கூறியுள்ளார். தமிழ் மொழி வழிபாட்டிற்கு உகந்ததல்ல எனப் பொதுவாகக் கண்டித்தாராம். அடுத்து 15.55 மணிக்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையரை தனியாக அழைத்த விழா ஏற்பாட்டாளர்கள் ஐயா, தயவுசெய்து தமிழ் வழிபாடு தொடர்பாக மேடையில் எதுவும் பேசாதீர்கள் என வேண்டிக் கேட்டுக்கொண்டார்களாம். மேலும் நிகழ்வுகள் யாவும் ஆங்கிலத்தில் நடாத்தப்பட்டதாம். திருமூலரின் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் தமிழர்கள் சிலாகித்துப்பேசி, தமிழ் வழிபாடு தொடர்பாக பேசாதே எனக் கண்டித்து பிரித்தானியாவில் சைவமாநாடு நடாத்தப்பட்ட இவ்விந்தை நிகழ்வை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?

அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன். அவன் மொழி, இனம் என அனைத்து அடையாளங்களுக்கும் அப்பாற்பட்டவன். இதில் எமக்கும் கேள்வி இல்லை.

ஆனால் எம் தாய்மொழியில் நாம் பேச, சிந்திக்க, வழிபட யார் எமக்கு உரிமை வழங்க வேண்டும்?

தமிழின் பக்தி இலக்கியமும் நாயன்மார்கள் அற்புதங்களும், தெய்வத் தமிழ் அருளும் பல தொன்மைத் தமிழ்ப் படைப்புக்களில் இறைவன் தமிழின்பம் நுகர்ந்தார் என்றும் தமிழை ஆய்ந்தார் என்றும் விளக்குகின்றன. இத் திறந்த மடலில் இங்கு இதை நாம் விவாதிக்க – விளக்கத் தேவையில்லை. ஆனால் எந்தக் கடவுளும் எந்த மொழிக்கும் கழகம் காணவில்லை. எம் தாய் மொழிக்கே முழுமுதற்கடவுள் சிவபெருமான் கழகம் கண்டார். கடவுளே தலைவனாகக் கொண்டு கழகம் கண்டதும் எம் தமிழ்தான்.

ஆனால் பொதுவாக மேடையில் சிலர் தம் பேச்சை ஆரம்பிக்கும் முன்னர் கல்தோன்றி மண்ணதோன்ற முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி என்று… அப்படிப் பேசுபவர்கள் அதை உண்மையாக நம்புகிறார்களா அல்லது வெறும் மேடைப்பேச்சுக்கு பேசுகிறார்களா எனும் கேள்வி எமக்கு எப்போதும் எழுவதுண்டு. அப்படி அவர்கள் பேசுவது உண்மை என அவர்கள் நம்பிப் பேசினால் முதலில் தோன்றிய மொழியிற்தான் முதல் வழிபாடும் நடந்திருக்க முடியும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. அப்படியானால் முதல் வழிபாட்டு மொழியாக இருந்தது தமிழ் மொழியே. பாரதியார் பாடலில் ஒரு சிறப்பு வரியாக வரும் ‘என்று மடியும் இந்த அடிமையின் மோகம்’ எனும் கூற்றை இங்கு நினைவுகொள்வது சாலப் பொருத்தமானதாக இருக்கும். ஒருவன் அடிமைப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிந்து, அதற்கு எதிராக அவன் போராடி வென்றாலும், தோற்றாலும் அது சிறப்பு.

ஆனால் தான் அடிமையாக இருப்பதே தெரியாமல் ஒருவன் இருப்பதே மோகம். அவன் அந்த அடிமைத்தனத்தை விரும்புகிறான். ஆக இப்படி அடிமைப்பட்டவர்களுக்கு விடுதலையை நோக்கிய மானிடத்தின் நாகரிகங்களின் வளர்ச்சி நோக்கிய வரலாற்றையும் உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது.

உண்மையில் எமது தமிழ் மொழியில் பல கோடி சொற்கள் இருந்தும் 27000 மேற்பட்ட பிறமொழிச் சொற்கள் இரவலாக உள்நுழைந்திருக்கிறது என்று தஞ்சைப் பல்கலைக்கழக நூல் ஆய்வு 40 வருடங்களுக்கு முன் சொல்கிறது. இப்போது இது நூறு ஆயிரத்தையும் தாண்டி இருக்கலாம்.

உலகில் தமது இனத்தின் பெருமையை நிலைநாட்ட ஆட்சி அதிகாரம் உள்ள நாடுகள் எல்லாம், தாங்கள் அந்த நாட்டின் குடிகள் என்றும், பழமை மிக்க பண்பாடு உடையர்கள் என்றும் காட்டிக்கொள்ள பலகோடி செலவு செய்கிறார்கள். நேற்றைக்குத் தோன்றிய கன்னடம் இன்று தமிழ்நாட்டின் காவிரியை தன் கையில் வைத்து தமிழ் மண்ணின் வறட்சிக்குக் காரணமாகத் திகழ்கிறது. சோறு படைத்த சோழ நாடு, வறண்ட பாலை மண்ணாக மாறிவருகிறது.

அரசியல் பேசவில்லை. ஆனால் எங்கும் இன்று பார்க்கக் கூடிய பொதுவான உண்மை என்னவெனில் தமிழனின் அடையாளங்கள் பாரதம், சியாம், கடாரம், ஈழம் என்று எங்கு தலைகாட்டினாலும் அதை முழுவதுமாக புதைத்துவிடுவார்கள். தமிழின் பெருமையை, தமிழினத்தின் அடையாளத்தை, அதன் தொன்மையை வெளியில் கொண்டுவர பிற இனத்தவர், வந்தேறு குடிகள், தமிழ் அல்லாத எவரும் விரும்புவதில்லை. இததைக்கூட ஓரளவுக்கு நாம் புரியலாம். தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிக் குடும்பங்களுக்கே தமிழ் பிடிக்காது இருக்க எவ்வாறு பிறருக்கு அம்மொழி மீது பற்றுதல் ஏற்படும்?

ஆனால் வந்தேறு குடிகள், எம்மை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் எம்மீது திணித்த நடைமுறைகளை ஏற்றுத்தழுவி மோகித்து தன் இனத்திற்கும் மொழிக்கும் புறம்பாக சிந்திக்கும் இழிநிலையை எண்ணும்போது நெஞ்சு கனக்கவே செய்கிறது.

நாங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம். ஒவ்வொருவரது புலப்பெயர்விற்குப் பின்னும் பல கதைகள் இருக்கும். நாங்கள் இங்கு எம்முடன் எடுத்து வந்தது எமது இன, மொழி, சமய அடையாளங்களைத்தான். ஆனால் இந்த நாட்டில் தஞ்சம் வழங்கிய அரசுகள் முதலில் விதித்த விதி, இந்த நாட்டுப் பண்பாட்டுடன் ஒத்திசைவாக வாழுங்கள், வாழப்படும் நாட்டின் மொழியைப் பண்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள், சட்டவிதிகளையும் இந்நாட்டின் குடிமக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் இணைந்து வாழுங்கள் என்பதாகும்.

ஆனால் தமிழர்கள் வரலாற்றில் மட்டும் இது மாறி நடந்துவிட்டது. இந்தத் தவறு நடந்தது 600 அல்லது 700 ஆண்டுகள்தான. ஆனால்; இன்னும் இந்தத் தவறைக் களைய எந்தப் பெரியாராலும் தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லையாம்… வந்தேறு குடி தனது மொழியையும், சமயத்தையும் தமிழன் மீது திணித்து வெற்றி கண்டிருக்கிறது. குடியேறிய இனம் தனது நம்பிக்கை மற்றும் மொழியை ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் இல்லாது, அதிகாரத்தில் இருந்த மன்னனைக்கொண்டு அடிமட்டம் வரை சொடுக்கிச் செருகி இருக்கிறது. இன்றும் இங்கு ஐரோப்பாவில் எவரும் இந்த நாட்டுப் பண்பாட்டை, மொழியைப் பழித்து இழிவுபடுத்தி உயர் பதவிக்கு வரமுடியாது. ஆனால் தமிழ்நாட்டிலும் சரி, வேறு சில வெளிநாட்டிலும் சரி வந்தேறுகுடி தமிழ்க்குடியை இழிவுபடுத்தலாம், வெறுக்கலாம், உரித்துடைய தமிழனைப் புறந்தள்ளி, அவன் மொழியில் அவன் வழிபட இருக்கும் அடிப்படை உரிமையையும் பறிக்கலாம்.

எங்கோ இருந்து புலம்பெயர்ந்து தமிழ் மண்ணில் குடியேறி தம் ஆக்கிரமிப்பு மொழியை வேரூன்றவிட்டு சிறுபான்மை ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பான்மைத் தமிழ்மக்களை தமது மாயைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இன்றும் தமிழ் மண்ணில் குடியேறிய யாவரும் தத்தமது மொழியை நேசிக்கும் மொழிப்பற்றாளர்களாகவே இருக்கின்றார்கள்.

வந்தேறிகள், ஆக்கிரமிப்பாளர்களாக தமது கருத்தை எம்மீது திணித்தபோது அவ்விருண்ட காலத்தில் நாங்களும் புத்திகெட்டு இருந்தோம் என்றால், இன்றும் புலம்பெயர்ந்து அடைக்கலம் வழங்கிய நாடுகளில் அழுத்தங்கள் அற்று, மக்களாட்சியில் மனித உரிமை வழங்கிய சட்ட உரிமையில், தனிமனித சுதந்திரத்துடன் யாரும், எதையும் எப்படியும் வழிபடலாம், எந்த மொழியிலும் வழிபடலாம் என்ற நிலையில் கூட தமிழ் மொழியை தமிழ் அறங்காவல் சபையும், திருக்கோவில் நிர்வாகமும் புறக்கணிக்கணிப்பது என்பது எப்படியானது என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதோர் கேள்வி.

பன்மொழி அறிஞர்களின் தெய்வத் தமிழ் விளக்கம், மொழியில் மற்றும் மானிடவியல் ஆய்வு விளக்கங்கள் ஒருபுறம் இருக்க, எம்மை ஆக்கிரமித்தோர், வந்தேறு குடிகள் சொல்வதுபோல் தமிழ் மொழி கடவுளுக்குப் புரியாது எனும் வாதத்தை எடுத்துக்கொண்டால், எமது மொழி புரியாத இந்தக் கடவுளால் எம் இனத்திற்கு என்ன பயன்? பயன் இல்லாத கடவுள் வழிபாடு பிறகு எதற்கு?

தாய்த் தமிழைப் புறக்கணிக்கும் வந்தேறு குடிகளின் உண்டிகளை நிரப்ப நாம் ஏன் உண்டியலை நிரப்பவேண்டும். தமிழரே தழரை விழித்து தமிழா தமிழில் வழிபடு என்று கெஞ்சிக் கெஞ்சி நாம் ஏன் போராட வேண்டும்? இது அவமானம் இல்லையா?

இன்று 1994ம் பக்தி மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட சைவநெறிக்கூடம், புலம் பெயர்ந்த மண்ணில் அன்பு வழிச் சைவசமயத்தைச் சீர்திருத்தி இருக்கிறது. அதாவது சிந்துவெளி நாகரிகத்தில் போற்றிப் பேணி வழிபடப்பட்ட தமிழ் வழிபாட்டு முறைமையை மீள நடைமுறைக்குக்குக் கொண்டுவந்துள்ளது.

சைவநெறிக்கூடம் செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் வழிபாடு எனும் தமிழ் வழிபாட்டுத் தீர்மானத்தை 2012ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் உறுதிபூண்டு, சுவிசின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் நடுநாயகமாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை தமிழ்த் திருமறை சமயக்குரவர் திருக்கோபுரத்தில் நிமிர்ந்து நிற்க நிறுவி செந்தமிழில் குடமுழுக்கு நடாத்தி இதுவரை நூற்றுக்கணக்கான தமிழ் அருட்சுனையர்களை உருவாக்கி முதல் முயற்சியை வெற்றியுடன் இறையருளால் நிலைநிறுத்தி உள்ளது.

இந்திய இலக்கியங்கள், சமஸ்கிருதம் மற்றும் திராவிட மொழிகள் தொடர்பான மொழியியல் அறிஞரான பேராசிரியர் கமில் சுவெல்பில் (Professor Dr. Kamil Zvelebil) அவர்கள் தமிழ் பக்தி இலக்கியங்கள் குறித்து கூறுகையில் தமிழ் சைவப் பக்தி மார்க்கம் உண்மைப் பொருளைத் தேடிநிற்கும் மானிடத்தின் மிகவும் அற்புதமான இதயத்தைத் தொடும் ஓர் உண்மையான வெளிப்பாடு என வருணிக்கிறார். அதி உச்ச உன்னதமான அழகிய இலக்கியப் படைப்புகளான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றவர்களின் பக்தி இலக்கியங்கள் மற்றும் சைவ சித்தாந்த இலக்கியப் படைப்புகள் மானிட இனத்தின் சிந்தனையின் மிகவும் ஆழமான அழகான வெளிப்பாடு என வியக்கிறார். (Tamil Contribution to World Civilisation, Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture – Vol.V.No.4 October, 1956).

பிற மொழி அறிஞர்கள் வியக்கும் தமிழ் மொழியை தமிழை தாய் மொழியாகக் கொண்டோர் இகழ்தல் கேட்க தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதியாரின் கவி வரிகளே மீள நினைவுக்கு வருகின்றன: „நெஞ்சில் உரனுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி“.

 

நான் என்ற அகமழிந்த தியான நிலையில் இறைவனை உணர்ந்து தம் தாய் மொழியில் இறைவனை வழிபடத் தலைப்பட்டதன் வெளிப்பாடே தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்.

வேத கோசங்கள் குறித்துச் செப்பும் குதம்பைச் சித்தர்:
‘முத்தமிழ் கற்று முயங்கு மெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் எதுக்கடி? குதம்பாய்! சத்தங்கள் எதுக்கடி?’ என்கிறார்.

சைவத் தமிழ் வழிபாட்டு முறைமையும் சைவத் தமிழ் பக்தி இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம், சங்கமருவிய காலங்கள் முதற்கொண்டு தோன்றி வளர்ந்து வந்தன. எனினும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சைவத் தமிழ்ப் பக்திப் பாரம்பரியம் காரைக்கால் அம்மையாரின் பங்களிப்புடன் தென்னிந்தியா முழுமையும் பரவலடைந்தது.

தொடர்ச்சியான வெளிநாட்டுப் படையெடுப்புகள், ஆரிய ஆதிக்கம் ஆகியவற்றால் மறைந்து வழக்கொழிந்து போனது எமது சைவத் தமிழ் வழிபாடு. மறைந்துவிட்ட இச் சைவத் தமிழ் வழிபாட்டு முறைமையையும் சைவத் தமிழ் பக்தி இலக்கியங்களின் மேன்மையையும் மீளவும் நிலைநிறுத்த வேண்டியது ஒவ்வொரு சைவத்தமிழ் மக்களினதும் கடமையாகும்!!!

திருச்சிற்றம்பலம்

உண்மையுடன்:
சிவமகிழி
sivamakili@gmail.com

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*